28

28

“தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே “ஒரு நாடு ஒரு சட்டம்“ செயலணி.” – சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயலணியின் உருவாக்கம் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எனவே இலங்கையிலுள்ள அனைத்து இன மக்களும் இவ்வாறான தான்தோன்றித்தனமான சிங்கள பௌத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோட்டாபாய ராஜபக்சவினால் பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.இந்த செயலணியின் உருவாக்கத்திற்கு  எதிர்கட்சிகள், மற்றும் தமிழ் முஸ்லிம் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

வட மாகாணத் தமிழ் மக்களுக்கு என தேசவழமை சட்டம் டச்சுக் காலத்தில் இருந்து சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறான சூழலில் ‘ஒரு நாடு ஒரு சட்டமானது தற்போது வலுவில் இருக்கும் றோம டச்சுச் சட்டம், ஆங்கிலச் சட்டம், கண்டியச் சட்டம், தேசவழமைச் சட்டம், முஸ்லீம் சட்டம் ஆகியவற்றைப் புறக்கணித்து இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாகக் கணித்து ஒற்றைச் சட்டத்தைக் கொண்டு வர முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.

தமிழ் பேசும் மக்கள் வடகிழக்கு மாகாணத்தில் இருக்கும் அவர்களுக்குரிய சட்டத்தை மாற்றுவது அல்லது தொடர்ந்து வைத்திருப்பது அவர்களின் பொறுப்பு எனவும் அது மத்திய அரசாங்கத்தின் பொறுப்பல்ல எனவும் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

வடகொரியாவில் மிகப்பெரும் பஞ்சம் – குறைவாக சாப்பிடுமாறு கிம் ஜோங் உன் கோரிக்கை !

உணவு நெருக்கடியை எதிர்க்கும் முயற்சியில், 2025ஆம் ஆண்டு வரை குறைவாக சாப்பிடுமாறு வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், தனது நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், ‘விவசாயத் துறை அதன் தானிய உற்பத்தித் திட்டத்தை நிறைவேற்றத் தவறியதால் மக்களின் உணவு நிலைமை இப்போது பதற்றமாக உள்ளது’ என கிம் கூறியுள்ளார்.

பொருளாதாரத் தடைகள், கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் கடந்த ஆண்டு சூறாவளி ஆகியவற்றால் வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. அத்துடன், கொரோனா வைரஸ் பரவுவதற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2020ஆம் ஆண்டு ஜனவரியில் வடகொரியா, அத்தியாவசியத் தேவைகளுக்காக சார்ந்திருந்த சீனாவுடனான தனது எல்லையை மூடியது. இதனால், வடகொரியாவில் உணவுப் பொருட்கள் பற்றாக்குறையால், அந்நாட்டில் வசிக்கும் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.

இதனிடையே 2025ஆம் ஆண்டுக்கு முன்னர் வட கொரியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் சுங்கச்சாவடிகளை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கிடையே அரசாங்கம் தங்களுக்குத் தேவையான தானியங்களை தாங்களே உற்பத்தி செய்யுமாறு ஊக்குவிக்கிறது.

இந்தநிலையில், ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய இராணுவ ஆணையம், கிழக்கு மாகாணமான தெற்கு ஹம்கியோங்கில் ஆபத்தான நிலைமை குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தை நடத்தியது.

அணுசக்தி மற்றும் ஆயுதத் திட்டங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சர்வதேசத் தடைகளால் ஏற்கனவே நலிவடைந்துள்ள தனிமைப் பொருளாதாரத்தின் நெருக்கடி பற்றிய கவலைகளுக்கு மத்தியில், இந்த சந்திப்பு வந்தது.

முன்னதாக, ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாயக் கழகம், ‘வடகொரியா தனது உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யாவிட்டால் ஒகஸ்ட் தொடங்கி ஒக்டோபருக்குள் நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும். இந்த ஆண்டு மட்டும் 860,000 டன் உணவுப் பஞ்சம் ஏற்படும்’ என எச்சரித்திருந்தது.

1990ஆம் ஆண்டுகளில் சோவியத் ஒன்றியம் பிரிந்தது. அதுவரையில் சோவியத் ஒன்றியத்திடம் இறக்குமதி பொருட்களுக்காக பெருமளவில் நம்பியிருந்த வடகொரியா பெரும் பஞ்சத்தை சந்தித்தது. இந்த பஞ்சத்தின்போது மக்கள் எலிகளையும் புல்லின் சாரையும் உண்டனர்.அத்துடன், சுமார் 3 மில்லியன் வட கொரியர்கள் உயிரிழந்தனர்.

இனவெறிக்கு ஆதரவானவரா தென்ஆப்பிரிக்கா அணி விக்கெட் கீப்பர் ? – சர்ச்சைகளுக்கு டி கொக் பதில் !

உலகக்கோப்பையில் விளையாடும் அணிகள் இனவெறிக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழங்காலிட்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என ஐ.சி.சி. தெரிவித்திருந்தது. இதற்கு அனைத்து கிரிக்கெட் சபைகளும் ஆதரவு தெரிவித்தன. இதனால் ஒவ்வொரு போட்டிகள் தொடங்குவதற்கும் முன்பாக, இரு அணி வீரர்களும் முழங்காலிட்டு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
தென்ஆப்பிரிக்கா அணி முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடியது. அப்போது தென்ஆப்பிரிக்கா அணி விக்கெட் கீப்பர் டி கொக் முழங்காலிட்டு ஆதரவு தெரிவிக்க மறுத்துவிட்டார். இதனால் சர்ச்சை வெடித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது போட்டிக்கு முன் அவர் அணியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் அடுத்த போட்டியில் இருந்து டி காக் விளையாடுவார் என தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து டி காக் விளக்கம் அளித்துள்ளார்.
டி காக் அளித்துள்ள விளக்கத்தில் ‘‘நான் ஒரு கலப்பு இன குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதை அறியாதவர்களுக்காக என்னுடைய சக வீரர்கள் மற்றும் நாட்டு ரசிகர்களிடம் வருத்தம் சொல்வதுடன் ஆரம்பிக்க  விரும்புகிறேன். என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரிகள் வெள்ளை நிறத்தை சேர்ந்தவர்கள். என்னுடைய வளர்ப்பு தாயார் கருப்பு இனத்தை சேர்ந்தவர். என்னை பொறுத்த வரைக்கும் பிறந்தததில் இருந்து இனவெறிக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என விவகாரம் இருந்து வருகிறது.
நம் அனைவருக்கும் உரிமைகள் உள்ளன. அவை முக்கியமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன். அவர்கள் உரிமைக்காக, இந்த வழியில் நாம் இவ்வாறு செய்ய வேண்டும் என்று என்னிடம் சொல்லும்போது,  என்னுடைய உரிமை பறிக்கப்படுவதாக உணர்கிறேன்.’’ என்றார்.

இலங்கை தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவுக்கான அரசாணை வெளியீடு.!

இலங்கை தமிழர் நலனுக்கான ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த சூழலில், அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை தமிழர் நலனுக்கான ஆலோசனைக் குழுவில் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இலங்கை தமிழர் நலனுக்கான ஆலோசனைக் குழுவில் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமியை நியமித்துள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்..

இலங்கை தமிழர் நலனுக்கான ஆலோசனைக் குழுவில்  வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்  தலைமையில் 20 பேர் கொண்ட குழுவை நியமிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் துணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதோடு அந்த குழுவில் மூத்த பத்திரிகையாளர் கோவி லெனின், வழக்கறிஞர் மனு  உள்ளிட்டோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

“தனிநாட்டை கொண்டு நடத்த நாங்கள் ஆயத்தமாகவே இருக்கின்றோம்.” – எம்.கே.சிவாஜிலிங்கம்

“ஒரு நாடு ஒரு சட்டம் என்று கூறும் முறையை அரச தலைவர் உடனடியாக மீளப்பெற வேண்டும். எனவும் தனிநாட்டை உருவாக்கிச் செல்லுங்கள் என அரசாங்கம் கூறினால், நாங்கள் அதற்கும் ஆயத்தமாகவே இருக்கின்றோம் என தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது “ஒரு நாடு ஒரு சட்டம்” என்ற அரச தலைவரது செயலணி குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“இலங்கையினுடைய அரச தலைவர் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒரு நாடு ஒரு சட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு குழுவை நியமித்து அதிலே ஞானசார தேரரை தலைவராக நியமித்திருக்கிறார். ஞானசார தேரர் ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்புக் காரணமாக தண்டிக்கப்பட்டு, பொது மன்னிப்பு வழங்கப்பட்டு வெளியில் வந்தவர். எத்தனையோ சர்ச்சைகளில் சிக்கியவர். அப்படிப்பட்ட ஒருவரை ஒரு நாடு ஒரு சட்டம் என்கிற செயலணிக்கு தலைவராக நியமித்துள்ளார். அதிலே பெயருக்குக் கூட ஒரு தமிழர் இல்லை.

அப்படி என்றால் இந்த நாடு தமிழர்களுக்கு சொந்தம் இல்லையா? இந்த நாட்டிலே தமிழர்களுக்கு வாழ்வதற்கான உரிமை இல்லையா? அவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் இல்லை என்று சொல்கிறீர்களா, என்று அரச தலைவரை நாங்கள் கேட்கின்றோம்.

நாங்கள் இந்தச் செயலணி மூலம் இந்த நாட்டின் பிரஜைகள் இல்லை என்று அறிவிக்க என்ன தடை இருக்கிறது. ஒரு நாடு ஒரு சட்டம் என்று கூறும் முறையை அரச தலைவர் உடனடியாக மீளப்பெற வேண்டும்.

இந்தக் குழுவைக் கலைக்க வேண்டும். புதிய அரசியலமைப்பை உருவாக்க முன்னரே இவ்வாறான அவசரமான வேலைகளை ஏன் செய்கின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது” என்றார்.

1696 ஆவது நாளாகவும் தொடரும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் !

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் இன்று (28) காலை 10.15 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 1696 ஆவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் உறவுகள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தி வரும் முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அலுவலகத்துக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

யுத்தம் முடிவுக்கு வந்து பல ஆண்டுகளாகியும் இன்று வரை எந்த தீர்வுகளும் தமக்கு கிடைக்கவில்லை என்றும், சர்வதேச சமூகமே தமக்கான தீர்வினை பெற்றுத்தர வேண்டும் எனவும் தமது அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் பிள்ளைகளை தேடி தேடி பெற்றோர்கள் பலர் உயிரிழந்து வருவதாகவும், இந்நிலையில் தமக்கு விரைவில் தீர்வை பெற்றுத் தர சர்வதேச சமூகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“ஜனாதிபதியின் நிலைப்பாட்டினை என்னால் விமர்சிக்க முடியாது.” – ஊடகவியலாளர்களுக்கு பிள்ளையான் பதில் !

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயலணிக்கு ஜனாதிபதியால் ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.

மேலும் பதிலளித்த அவர்,

அரசியல் ரீதியான கருத்துக்களை அதிகமாக கதைக்க விரும்பவில்லை இது ஜனாதிபதியின் முடிவின் பெயரிலேயே நியமிக்கப்பட்டுள்ளார். ஒரே நாடு ஒரே சட்டம் என்கின்ற உட்பொருளை நான் ஊடகங்கள் வாயிலாக விமர்சிக்க முடியாது அதனுடைய நோக்கம் என்னவென்று உங்களுக்கு தெரியும் தானே.

நானும் வர்த்தமானி மூலம் ஜனாதிபதியின் முடிவினை பார்த்திருந்தேன் அவர் எந்த நோக்கத்திற்காக இவரை நியமித்தார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஜனாதிபதியின் நிலைப்பாட்டினை என்னால் விமர்சிக்க முடியாது என்னுடைய நிலைப்பாடு அரசாங்கத்துடன் சேர்ந்து மக்களுக்கான நியாயத்துடன் சேவை செய்வது.

ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை பற்றி கதைப்பதாக இருந்தால் விரிவாக கதைக்க வேண்டும் இது பல விமர்சனங்களை கொண்டு வரலாம் அதனால் நான் கதைக்க விரும்பவில்லை. ஞானசார தேரர் பற்றி என்னைவிட ஊடகவியலாளர் உங்களுக்கு தெரியும் தானே இதில் என்ன இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“ராஜபக்ஷக்கள் இலங்கையை குட்டிச்சுவராகிக்கியுள்ளார்கள்.” – சிறிதரன் காட்டம் !

ராஜபக்ஷ  அரசின் குடும்ப ஆட்சி காரணமாக இலங்கை குட்டிச்சுவராகி பொருளாதாரத்தில் தாழ்ந்து போயுள்ளது இதுவே இன்று விவசாயிகளுக்கும் நடந்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

”இன்று ஆசிரியர்களின் கல்வித்தரம் அதிபர்களின் தரம் என்பவற்றுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படாமல் இன்று ஒரு போராட்டத்தை  ஏற்படுத்தியிருக்கின்றது. ராஜபக்ஷ  குடும்ப ஆட்சியின் காரணமாக இலங்கை குட்டிச்சுவராகி பொருளாதாரத்தில் தாழ்ந்து போயுள்ளது இதுதான் இன்று விவசாயிகளுக்கும் நடந்துள்ளது ஒரு இரவிலேயே  அனைத்து விவசாயிகளையும் இயற்கை விவசாயத்துக்கு மாறுங்கள் என்று சொன்னால் அவர்கள் எவ்வாறு மாறமுடியும்.

குறிப்பாக உலகில் இயற்கை விவசாயம்  இயற்கையான உணவு மனிதனுக்கு முக்கியமானது இது உலக அரங்கில் தற்போது வளர்ந்து வருகின்றது இது  இலங்கையிலும் தற்போது வளர்ந்து வருகின்றது அதற்காக நாங்கள் குரல் கொடுத்திருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்-

“மிக மோசமான இனவாதியைக் கொண்டுவந்து ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்கிறார்கள்.” – சுரேஷ் பிரேமச்சந்திரன்

மிக மோசமான இனவாதியைக் கொண்டுவந்து ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லச் சொன்னால் தமிழர்களையும் முஸ்லிம்களையும் இந்த நாட்டில் இருந்து விரட்டுவதும், அவர்களுக்கு எதுவுமே இல்லாமல் செய்வதுதான் இவர்களது நோக்கமா என ஈபிஆர்எல்எப் இன் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பினார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு நாடு ஒரு சட்டம் என்பது தொடர்பாக ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை போன்ற பல மொழிகள் பல மதங்கள் பல கலாச்சாரங்கள் கொண்ட வேறுபட்ட இனங்கள் வாழக்கூடிய நாட்டிலே பல்வேறு விதமான சட்ட திட்டங்கள் இருப்பது என்பது இயல்பானது. உலகத்திலும் பல்வேறுபட்ட சட்டங்கள் இருக்கின்றது. அமெரிக்காவின் சில மாநிலங்களில் மரண தண்டனை சட்டம் இருக்கின்றது சில மாநிலங்களில் இல்லை. இலங்கையிலும் கூட யாழ்ப்பாண தேசவழமைச் சட்டம், கண்டியச் சட்டம், ஷரியாத் சட்டமென ஒவ்வொரு சட்டங்கள் காணப்படுகின்றது. இது இன்று நேற்றல்ல. நீண்டகாலமாக வழிவழியாக வந்த சட்டங்களே அவை. அது இன்றுவரை நடைமுறையில் இருக்கின்றது.

இவ்வாறான சூழ்நிலை தான் ஜனாதிபதியினால் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதன் அடிப்படையிலேயே இலங்கையினுடைய மிக மோசமான இனவாதி எனக் கூறப்படும் ஞானசார தேரரின் தலைமையில் ஒரு செயலணி உருவாக்கப்பட்டிருக்கிறது. பர்மாவில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் கொலைசெய்யப்பட்ட பொழுது அதற்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டவர். இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு எதிராக இனவாத கருத்துக்களை தொடர்ச்சியாக பேசிக் கொள்ளக் கூடியவர். முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கேணியில் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்தவர். நீதிமன்றத்தின் கட்டளைகளை ஏற்க மறுத்ததன் காரணமாக அவரை நீதிமன்றம் தண்டித்து சிறை தண்டனை வழங்கி இருந்தது.அதன் பின்பு பொதுமன்னிப்பில் விடுதலையானார்.

இவ்வாறான ஒருவரது தலைமையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்று பேசுகின்ற பொழுது கேலியாகவும் சிரிப்புக்கிடமாகவே காணப்படுகின்றது. இந்த நாடு எத்தனை முன்னெடுத்துச் செல்கின்றது என்பது பெரிய கேள்வியாக இருக்கின்றது. மிக மோசமான இனவாதியைக் கொண்டுவந்து ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லச் சொன்னால் தமிழர்களையும் முஸ்லிம்களையும் இந்த நாட்டில் இருந்து விரட்டுவதும், அவர்களுக்கு எதுவுமே இல்லாமல் செய்வதுதான் இவர்களது நோக்கமா என்கின்ற கேள்வி எழுகின்றது.

ஒரே நாடு ஒரே சட்டம் மாகாண சபைகளை இல்லாமல் செய்கின்ற, மாகாண சபைகளுக்கு சட்டமியற்றும் உரிமையை இல்லாமல் செய்கின்ற அடிப்படையில் இவ்வாறான ஒரு புதிய முயற்சியை உருவாக்குகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. ஜனாதிபதி பதவிக்கு வந்தபொழுது சிங்கள பௌத்தத்தை பாதுகாப்பதே எனது கடமை என்றார். சிங்கள பௌத்தத்தை பாதுகாத்தல் என்பது வேறு தமிழ் முஸ்லிம் இனங்களை, அவர்களது கலாச்சாரங்களை, சட்டதிட்டங்களை, நடைமுறைகளை இல்லாமல் செய்வதென்பது வேறு.

அரசாங்கம் இப்பொழுது எடுக்கக்கூடிய முயற்சி என்பது தேசிய இனங்களான வடகிழக்கு தமிழர்களாக இருக்கலாம் முஸ்லிம்களாக இருக்கலாம் மலையகத் தமிழர்களாக இருக்கலாம் அவர்களுக்கான பண்பாடு கலாசாரம் என்பதை இல்லாமல் செய்து இது சிங்கள பௌத்த நாடு என்ற அடிப்படையில் இந்த சட்டங்களை கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனவா என்ற சந்தேகம் எல்லோர் மனதிலும் எழுந்திருக்கின்றது.

இவ்வாறான செயலணியில் தமிழர்கள் இல்லை என்று பலரும் கூறுகின்றனர். இவ்வாறு நியமிக்கப்படுபவர்களின் நோக்கம் என்ன? அரசாங்கத்தின் சொல்லுக்கு தலையாட்டுபவர்களே? இதிலே முஸ்லீம்கள் நியமிக்கப்பட்டு இருந்தாலும்கூட முஸ்லிம்களுக்கு இதனால் உபகாரங்கள் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. தங்களுக்கு தலையாட்ட கூடிய சிலரை நியமித்து எதனையும் சாதிக்க போவது கிடையாது.

இது கண்டிக்கப்பட வேண்டியதுடன் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இது வெறுமனே தமிழ் முஸ்லிம்கள் மாத்திரமல்ல சிங்களத் தரப்பில் இருக்கக்கூடிய எதிர்க்கட்சி கூட செயற்படவேண்டும். ஏனைய இனங்களுக்கு இருக்கக்கூடிய அடிப்படை உரிமைகளை மறுதலித்து ஒரு ஜனநாயக விரோத செயற்பாடாக தான் இந்த செயலணி உருவாக்கம் இருக்கின்றது என்பதை நாம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

ஞானசாரதேரரை எவ்வாறு ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ செயலணியின் தலைவராக நியமிப்பீர்கள்..? – சம்பந்தன் அதிருப்தி !

ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்களின் வெறுப்பின் வெளிப்பாட்டைத்தான் காலப்போக்கில் ஜனாதிபதி சந்திப்பார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசின் ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற கொள்கையை நடைமுறைப்படுத்த ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 13 உறுப்பினர்களைக் கொண்ட செயலணியை நியமித்துள்ளார்.

சிறைத்தண்டனை அனுபவித்த – தமிழ்பேசும் மக்களுக்கு எதிராக இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வரும் ஒருவரை ஜனாதிபதி செயலணியின் தலைவராக எந்தவகையில் ஏற்றுக்கொள்ள முடியும்? 13 உறுப்பினர்களைக் கொண்ட இந்த விசேட ஜனாதிபதி செயலணியில் தமிழ்ப் பிரதிநிதி ஒருவரேனும் நியமிக்கப்படவில்லை. இது ஜனாதிபதியின் திட்டமிட்ட செயலா?

ஆனபடியால் ஜனாதிபதி இவ்விதமான கருமங்களைச் செய்கின்றபோது அவற்றை நாட்டு மக்கள் – விசேடமாக தமிழ்பேசும் மக்கள் – தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கக்கூடாது. அதை அவர்கள் வெறுப்பார்கள். அதுதான் நிலைமை” – என்றார்.