இந்தியாவின் செல்வந்த வர்த்தகர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் கௌதம் அதானி உள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவரும் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அதானி குழுமம் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்திக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், அவர் இங்கு வருகை தந்துள்ளார். கெளதம் அதானியும் அவரின் குடும்பத்தின் சிலரும், இரண்டு தனியார் விமானங்களில் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
கௌதம் அதானியின் மகன், பிரதம நிறைவேற்றதிகாரி, அதானி பசுமை எரிசக்தி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் உள்ளிட்டோரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.
துறைமுகம், எரிசக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி செயற்றிட்டம் தொடர்பில் இலங்கையின் உயர் அதிகாரிகளுடன் கௌதம் அதானி கலந்துரையாடவுள்ளார். அவர், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்திய வர்த்தகர்கள் சிலர் இன்று மாலை மன்னாருக்கு சென்றுள்ளனர். இராஜாங்க அமைச்சர் சானக்க, இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் சஞ்சய மொஹொட்டால ஆகியோரும் அவர்களுடன் அங்கு சென்றிருந்தார்.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்கை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கை கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. புதிய கூட்டு நிறுவனமொன்றினூடாக, இந்த மேற்கு முனையத்தின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்கு முன்னர், இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையில் கூட்டுத் திட்டமாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு பிரேரிக்கப்பட்டிருந்ததுடன், தற்போதைய அரசாங்கம் அந்தத் திட்டத்தை நிறுத்தி, மேற்கு முனையத்தை அதானி குழுமம் தலைமையிலான கூட்டுத் திட்டத்திற்கு வழங்கியது.
இதனிடையே, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்து அபிவிருத்தி செய்யும் கொழும்பு துறைமுகத்தின் நுழைவாயிலின் முதலாவது கான்கிரீட் பாலத்தை பொருத்தும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. புதிய களனி பாலத்திலிருந்து காலி முகத்திடல் வரை தூண்களில் நிர்மாணிக்கப்படும் இந்த வீதியில், முன்னரே பொருத்தப்பட்ட கான்கிரீட் பாலத்தின் 3,279 பகுதிகள் பொருத்தப்படவுள்ளன.
நான்கு வழிச்சாலைகளையும், 5.3 கிலோமீட்டர் நீளத்தையும் கொண்டதாக இது அமையவுள்ளது. துறைமுக நுழைவாயிலின் அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தினால் துறைமுக வளாகத்தில் இடித்து அகற்றப்பட்ட கட்டடங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒதுக்கீட்டில் 17 மாடிகளைக் கொண்ட கடல்சார் வசதி நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.