04
04
“தேசிய வளங்களை விற்கும் கொள்கை அரசாங்கத்திற்கு கிடையாது.” என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இலங்கை வருகை தொடர்பில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர்,
எமது அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்படுகிறது. ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் அனைத்து நாடுகளுடனும் ஒன்றினைந்து செயற்படுகிறோம். இந்தியா இலங்கைக்கு அயல்நாடு, இரு நாட்டுக்குமிடையில் வரலாற்று ரீதியில் நல்லுறவு காணப்படுகிறது.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் மத அடிப்படையில் நல்லுறவு காணப்படுகிறது. இந்தியாவின் ஒத்துழைப்புடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பல அபிவிருத்தி பணிகள் காணப்படுகின்றன. அவற்றை இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பார்வையிடுவார்.
பல நாடுகளை சேர்ந்தோர் தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள். இதன் போது கிசுக்கிசுக்களை தேடி அலைபவர்களும் உள்ளனர். ஆகவே இவ்வாறான காரணத்திற்காக இவர் நாட்டுக்கு வரவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை பலப்படுத்தும்வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரது வருகை காணப்படுகிறது.
நாட்டின் சுயாதீனத்தன்மையை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் அனைத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து செயற்படும். எக்காரணிகளுக்காகவும் சுயாதீனத்தன்மையை விட்டுக்கொடுக்கமாட்டோம். தேசிய வளங்களை விற்கும் கொள்கை அரசாங்கத்திற்கு கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை மாவட்ட நீதிபதி பயணித்த காருக்கு கைகளைக் காண்பித்து வார்த்தைப் பிரயோகம் செய்ததன் மூலம் நீதிபதியை அவமதித்தனர் என்ற குற்றச்சாட்டில் மூவர் நெல்லியடிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (04) மாலை 4.20 மணி அளவில் வடமராட்சி குஞ்சர்கடைப் பகுதியில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இணுவில், வவுனியா மற்றும் நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 31,33 மற்றும் 36 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டனர். பருத்தித்துறை மாவட்ட நீதிபதி காரில் யாழ்ப்பாணம் – பருத்தித்துகை முதன்மை வீதியில் பயணித்துள்ளார்.
அவ்வேளை முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர், நீதிபதியை அவமதிக்கும் வகையில் கைகளைக் காண்பித்து வார்த்தைப் பிரயோகம் செய்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அருகில் இருந்த வீதித் தடையில் கடையிலிருந்த பொலிஸார் மூவரையும் கைது செய்தனர்.
மூவரும் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் பிற்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.சந்தேக நபர்கள் மூவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
2021ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஜூலியஸ், ஆர்டம் பட்டாஹவுடியன் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நோர்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.
BREAKING NEWS:
The 2021 #NobelPrize in Physiology or Medicine has been awarded jointly to David Julius and Ardem Patapoutian “for their discoveries of receptors for temperature and touch.” pic.twitter.com/gB2eL37IV7— The Nobel Prize (@NobelPrize) October 4, 2021
வழக்கமாக நோபல் பரிசுகள் அக்டோபர் மாதத்திலிருந்து அறிவிக்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகளான டேவிட் ஜூலியஸ், ஆர்டம் பட்டாஹவுடியன் ஆகிய இருவருக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
உடலில் உள்ள வெப்பம், குளிர், உடல் வலியைத் தொடாமல் கண்டறியும் ஆய்வுக்காக மருத்துவத்துக்கானநோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்படுகிறது. அற்புதமான கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு குழு பாராட்டு தெரிவித்துள்ளது.
வரும் 11ஆம் திகதி வரை நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட உள்ளன.
“எந்த நாடும் எம்மை அச்சுறுத்த முடியாது. அதேபோல் எந்த நாட்டுக்கும் நாம் அடிபணியவும் மாட்டோம்.” இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அமெரிக்காவில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாம் பல சர்வதேச நாடுகளின் தலைவர்களையும், அந்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களையும் தனித்தனியாகச் சந்தித்தோம். இதன்போது எமது அரசின் வெளிநாட்டுக் கொள்கையைத் தெளிவுபடுத்தியுள்ளோம். வெளிநாடுகளைப் பகைத்துக்கொண்டு செயற்படும் நோக்கம் எமது அரசுக்கு இல்லை. எதிரணியினர் கூறுவது போல் வெளிநாட்டுக் கொள்கையை நாம் இலங்கைக்கு எதிராக மாற்றியமைக்கவில்லை. அவர்கள் கூறுவதுபோல் நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்குத் தாரைவார்க்கும் நோக்கமும் எமக்கு இல்லை.
சர்வதேச நாடுகளுடன் ஒன்றிணைந்து பயணிக்கவே இலங்கை அரசு விரும்புகின்றது. இலங்கையின் இறையாண்மைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் வெளிநாடுகளுடன் உறவை வளர்ப்போம். எந்த நாடும் எம்மை அச்சுறுத்த முடியாது. அதேபோல் எந்த நாட்டுக்கும் நாம் அடிபணியவும் மாட்டோம்.
இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகள் தொடர்பில் எமது அரசின் நிலைப்பாட்டை ஜெனிவாக் கூட்ட அமர்வில் தெரிவித்துவிட்டோம். வெளியகப் பொறிமுறையை நாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம்” என்றார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லாவிட்டால் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சாட்சியங்கள் இருந்தால் அவற்றை முன்வைத்து, வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தடுத்து வைத்திருப்பதென்றால், அவருக்கு எதிராக குற்றச்சாட்டு இருக்க வேண்டும். இது ரிஷாத் பதியுதீன் பிரச்சினை மாத்திரமன்றி நாடாளுமன்றத்தின் பிரச்சினையாகும்.
ரிஷாத் மீதான சாட்சியங்களை முன்வைக்க முடியுமா? இல்லையா? என்பதை சபாநாயகர், சட்டமா அதிபருக்குக் கடிதமொன்றை அனுப்பிக் கேட்க வேண்டும். தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக சாட்சியங்கள் இருக்குமாயின் அதனை முன்வைத்து வழக்கைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லுங்கள். சாட்சி இல்லையென்றால் உடனடியாக அவரை விடுவிக்கவும்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் உறுப்பினர், இப்போது வழக்கொன்றின் விசாரணையில் தலையீடு செய்தது தொடர்பிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அதற்கான சாட்சி இருந்தால், அதனையும் முன்வைக்க வேண்டும்.
எம்.பி. ஒருவர் வழக்கொன்றில் தலையிட்டால் அது பிரதான பிரச்சினையாகும். எனினும், குறித்த வழக்கு தொடர்பான சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் எம்.பி. தடுப்புக் காவலில் இருந்துள்ளார். அப்படி அவர் தொடர்பில் சாட்சியங்கள் இருந்தால், அவற்றையும் முன்வைக்க வேண்டும்” என்றார்.
இலங்கையில் ஆசிரியர் தினம் எதிர்வரும் ஐப்பசி மாதம் ஆறாம் திகதி கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் அன்றைய தினத்தை நாம் தேசிய கறுப்பு எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி இருக்கின்றோம். என இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தின் வடக்கு கிழக்கு மாகாண செயலாளர் ஜீவராசா ருபேஷன் தெரிவித்தார்.
இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தின் வடக்கு கிழக்கு மாகாண செயலாளர் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
இருளை நீக்கும் தலைமுறையை இருளில் தள்ளுவதற்கு எதிராக எதிர்வரும் 6 திகதி பாடசாலைகள் , ஆசிரியர் இல்லங்கள் மற்றும் ஏனைய இல்லங்கள் தோறும் கறுப்புக் கொடியை ஏற்றி ஆசிரியர் தினம் ‘தேசிய கறுப்பு எதிர்ப்பு தினமாக’ அனுஸ்டிக்கப்படும் எனவும்.
ஆசிரியர் தினத்தன்று பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து கட்சிகளின் தலைமையையும் ஒருமித்து சந்தித்து அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு பற்றி கலந்தாலோசித்து அதுதொடர்பான விரைவான தீர்விற்கு செல்வதாகவும் என ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டிற்கு எதிரான தேசிய ஒற்றுமை அமைப்பு தீர்மானித்துள்ளது.
எனவே எமது நிலையை வெளிப்படுத்த இலங்கையில் ஆசிரியர் தினமான 6 ம் திகதியான அன்றைய தினத்தை நாம் தேசிய கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தி இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனது பேர்த்தியை முதன்முறையாக நான் தொட்டுத் தூக்கி அணைத்த அந்த தருணம் – கோட்டாபய ராஜபக்ச நெகிழ்ச்சி !
எனது பேர்த்தியை முதன்முறையாக நான் தொட்டுத் தூக்கி அணைத்த அந்த தருணம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான ஒளிப்படத்தை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அந்தப் பதிவில்,
அண்மையில், ஐ. நா. பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நான் அமெரிக்கா சென்றபோது தான் எமது பேத்தியை முதன்முறையாக நேரில் பார்க்கும் பேருவகை தந்த பாக்கியத்தை நாம் பெற்றோம்.
எமது மகன் மனோஜ் மற்றும் மருமகள் செவ்வந்தி ஆகியோர் பெற்றோர் என்ற மாண்பினை அடைந்தமைக்கு அவர்களை வாழ்த்தியதோடு தாத்தா என்ற பெருமைமிகு மேன்மையை எனக்குத் தந்தமைக்கு எனது நன்றிகளையும் கூறினேன் என அவர் பதிவிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டுக்குச் சென்று இன்றுக் காலை நாடுதிரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆறு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஏவுகணை சோதனையை தொடங்கியுள்ள வடகொரியா ஒரே மாதத்தில் 4 ஏவுகணைகளை சோதித்து உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.இந்த சூழலில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. அந்த கூட்டத்தில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து கவலை தெரிவித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கு தடைவிதிக்கும் கவுன்சிலின் தீர்மானங்களை முழுமையாக செயல்படுத்த வடகொரியாவுக்கு அழைப்பு விடுத்தது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வடகொரியா வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரியான ஜோ சோல் சூ கூறுகையில் ‘‘அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் இதேபோன்ற ஆயுத சோதனைகளில் சமமாக பிரச்சினை எடுக்காததால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இரட்டை கையாளும் தரநிலை கொண்டது என்பது தெரிகிறது. வடகொரியாவின் இறையாண்மையை ஆக்கிரமிக்க முயன்றால் எதிர்காலத்தில் அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சிந்தித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் செயல்பட வேண்டும்’’ என கூறினார்.
உலகளவில் முறைகேடாக வெளிநாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்தவர்கள் பெயர் அடங்கிய ஆவணங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் இலங்கையின் முன்னாள் அமைச்சரான நிருபமா ராஜபக்ஷவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பன்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியான இந்த ஆவணத்தில் 90 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களின் இரகசிய உடைமைகள் குறித்த தகவல் வெளியிட்டப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் 2010 முதல் 2015 வரை நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பின் பிரதி அமைச்சராக பணியாற்றிய நிருபமா ராஜபக்ஷ, ஜனாதிபதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினராவார்.
அவரது கணவர் திருக்குமார் நடேசன், 2016 ஆம் ஆண்டில், ஜனாதிபதியின் குடும்பத்தின் மற்றொரு உறுப்பினர் பசில் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட ஒரு ரியல் எஸ்டேட் ஒப்பந்தம் தொடர்பாக அவர் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இருப்பினும் நடேசன் மற்றும் இலங்கையின் தற்போதைய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நிருபமா ராஜபக்ஷ மற்றும் நடேசன் இருவரும் இணைந்து லண்டன் மற்றும் சிட்னியில் சொகுசு குடியிருப்புகளை வாங்குவதற்கும், முதலீடு செய்வதற்கும் ஷெல் நிறுவனத்தை பயன்படுத்தியதாக அந்த அறிக்கை விரிவாக கூறுகிறது.
மேலும் நடேசனின் நீண்டகால ஆலோசகர், 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, அவரது ஒட்டுமொத்த சொத்தாக 160 மில்லியன் டொலருக்கும் அதிகமாக வைத்திருந்தார் எனஇ ரகசிய மின்னஞ்சல்களை மேற்கோளிட்டு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஏசியாசிட்டி டிரஸ்ட் நடேசனின் சில வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை நிர்வகித்தது என்றும் இதன் சொத்து மதிப்பு சுமார் $ 18 மில்லியன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் குறித்த இரகசிய ஆவணங்கள் குறித்து நிருபமா ராஜபக்சே மற்றும் நடேசன் ஆகியோர் பதிலளிக்க மறுத்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.