மக்களின் வாழ்வாதார குடியிருப்புக் காணிகளை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் எல்லைக் கற்களை போட்டு தன்னகப்படுத்துவதற்கு முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பதுளை வீதியில் பெரிய புல்லுமலை தொடக்கம் கொடுவாமடு, படுவான்கரை வரை உள்ள மக்களுக்கு சொந்தமான நிலப்பகுதிகள் வனத்துறை பாதுகாப்பு திணைக்களத்தினூடாக எல்லைக் கற்களை போடும் வேலை முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பில் உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்காக சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே, இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வாறான அத்துமீறல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சந்தர்ப்பத்திலும் நாங்கள் தலையிட்டு வனத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அவற்றை தடுத்து வந்திருக்கின்றோம்.
தற்போதும் மக்களின் வாழ்வாதார குடியிருப்புக் காணிகளை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் எல்லைக் கற்களை போட்டு தன்னகபடுத்துவதற்கு முயற்சி செய்து வருகின்றன.
நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து இவ் வேலைத்திட்டங்களை தடுத்து நிறுத்துவதுடன் மக்கள் வாழ்ந்த இடங்களை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.
இன்று வனத்துறை பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக எல்லைக் கற்கள் இடப்படும் பிரதேசங்களில் மக்கள் குடியிருப்புகளும் மற்றும் வாழ்வாதார காணிகளும் காணப்படுகின்றது.
இவர்கள் இங்கு பல வருட காலமாக வாழ்ந்ததற்கான ஆவணங்கள் வைத்திருப்பதுடன் பல வருட காலமாக விவசாய நடவடிக்கைகள் மேற்கொண்டதற்கான ஆதாரங்களும் குடியிருப்புகள் காணப்பட்டமைக்கான ஆதாரங்களும் காணப்படுகின்றன.
ஒரு சிலரிடம் ஆவணங்கள் இல்லாமைக்கான காரணம் கடந்த யுத்தகாலத்தில் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.
இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் இவற்றை கருத்திற்கொண்டு தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களம் செயற்படவேண்டும்.
எதிர்வரும் காலங்களில் நாங்கள் வனத்துறை பாதுகாப்பு திணைக்களத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு மக்களின் வாழ்வாதார காணிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்” என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மேலும் தெரிவித்தார்.