எவரும் தமக்குத் தேவையான வகையில் தன்னிச்சையாக செயல்பட முடியாது. வடக்கில் வாள் வெட்டு கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும் என அண்மையில் வட மாகாணத்தின் ஆளுநராக பதவியேற்ற ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
“வடக்கில் வாள் வெட்டு கலாசாரம் கடந்த பல வருடங்களாக தொடர்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அது பெரும் பிரச்சினையாக அமைந்துள்ளது. பொலிசார் மற்றும் இராணுவத்தினர் தலையிட்டும் அதனை முற்றாக தீர்க்க முடியாமல் உள்ளது மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அது தொடர்பில் நீங்கள் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை என்ன?” என ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், நாட்டில் ஒரே சட்டமே நடைமுறையிலுள்ளது. மாகாணத்திற்கு மாகாணம் அல்லது நகரத்துக்கு நகரம் அது வேறுபட முடியாது.
எவரும் தமக்குத் தேவையான வகையில் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அந்தவகையில் அவ்வாறானவர்கள் தமது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்.
அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட வேண்டும். தொடர்ந்தும் அவர்கள் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களானால் தொடர்ச்சியான சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றார்.