19

19

“இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.3 சதவீதத்தினால் அதிகரிக்கும்.” – உலக வங்கி அறிக்கை !

இலங்கையில் பாடசாலைகள் நீண்டகாலமாகத் திறக்கப்படாமையினால் கல்வி இழப்பு, மனித மூலதன வீழ்ச்சி, சமூகம்சார் வளர்ச்சியில் பின்னடைவு உள்ளடங்கலாக நீண்டகால அடிப்படையில் பல்வேறு தாக்கங்கள் ஏற்படும் என்று உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது.

அத்தோடு தமது மதிப்பீடுகளின்படி இவ்வாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.3 சதவீதத்தினால் அதிகரிக்கும் என்றும் வறுமையானது 10.9 சதவீதமாக அமையும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள ‘இலங்கையின் வறுமை தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையிலேயே’ இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றினால் மக்களின் நாளாந்த வாழ்க்கை மற்றும் வறுமை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் பற்றியும் குறித்த அவ்வறிக்கையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு முக்கியத்துவம் வழங்கவேண்டிய 4 விடயங்கள் தொடர்பாகவும் உலக வங்கி அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி முதலாவதாக விவசாய உற்பத்திகளையும் அதன்மூலமான வருமானங்களையும் அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். தற்போது கட்டமைப்பு ரீதியான நிலைமாற்றமொன்று இடம்பெற்றுவருகின்ற போதிலும், அது துரிதமானதாக இல்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.

அதேவேளை ஏற்றுமதியை மையப்படுத்திய வாய்ப்புக்கள் உள்ளடங்கலாக விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இரண்டாவதாக பின்தங்கிய பிரதேசங்களில் பயிர்ச்செய்கையல்லாத இன்னபிற தொழில் வாய்ப்புக்களை விரிவுபடுத்துவதற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் அவை மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன என்றும் தெரிவித்துள்ளது.

மூன்றாவதாக நாடளாவிய ரீதியில் தொழிற்படையின் செயற்திறனை விரிவாக்குவதற்கும் தொழிலின் தரத்தை மேம்படுத்தக்கூடியவாறான புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்று உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

நான்காவதாக ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படவேண்டும் என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் சுகாதாரம், கல்வி மற்றும் சமூக பாதுகாப்பு உள்ளடங்கலாக மனித மூலதனம்சார் காரணிகளில் முதலீடுசெய்வதன் ஊடாக இலங்கைச் சிறுவர்களின் செயற்திறனை மேம்படுத்த முடியும் என்றும் அதன்மூலம் பொறுளாதார வளர்ச்சியை நோக்கி நகரமுடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

“அரசு ஆசிரியர்களை புலனாய்வாளர்களை கொண்டு அச்சுறுத்துகின்றது.” – எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டு !

“அதிபர்கள், ஆசிரியர்களின் நியாயமான போராட்டத்தைப் புலனாய்வாளர்களைக் கொண்டு அரசு அச்சுறுத்துவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்த மோசமான செயலை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நேற்றிரவு இலங்கைக் கடலில் உயிர்நீத்த இந்திய மீனவர் ராஜ்கீரனின் உறவுகளுக்கு எமது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு வன்முறையற்ற வகையிலேயே தீர்வைக் காண நாம் முயற்சிக்கின்றோம்.

மீன்பிடி அமைச்சர் வன்முறையைப் பயன்படுத்தி இந்திய மீனவர்களை இழுத்து வருமாறு கோரியிருந்தார். ஆனால், நாம் கடலில் இறங்கிப் போராடியபோதும் சட்டத்தை அமுல்படுத்துமாறே கோரினோம்.

அரசு சட்டத்தைத் தெளிவாக நடைமுறைப்படுத்தினால் இவ்வாறான உயிர்ச் சேதங்களையும் தடுக்கலாம்.

இழுவை மடி மீன்பிடித் தடையானது இரு நாட்டு அரசுகளும் இணங்கிய விடயம். உள்ளூர் ரோலர் தொழில் செய்யும் குருநகர் மீனவர்கள் 6 வருடங்களுக்கு முன்பு என்னோடு பேசியபோது 6 மாத கால அவகாசமே கோரினர். இதேபோன்று இந்திய மீனவ அமைப்புக்களுக்கும் இது பாதிப்பு என்று தெரியும். ஆனாலும் அனுமதியுங்கள் என்கின்றனர். எனவே, இதனை முழுமையாக தடை செய்யுமாறே கோருகின்றோம்.

இதேநேரம் எம்மால் கடலில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தைச் சிலர் இந்தியாவுக்கு எதிரான போராட்டமாகக் காட்டி போராட்டத்தை வலுவிலக்கச் செய்ய முயற்சிக்கின்றனர். உண்மையில் இழுவை மடி மீன்பிடி முறைமையைத் தடுக்க வேண்டும் என்பதில் இந்திய அரசும் இணங்கியமையால் இது இந்தியாவுக்கு எதிரான போராட்டம் அல்ல.

இதேவேளை, அதிபர்கள், ஆசிரியர்களின் போராட்டத்தில் புலனாய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு அச்சுறுத்தப்படுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அதிபர்கள், ஆசிரியர்களை அரசு தனது ஏவல் நாய்களைப் பயன்படுத்தி அச்சுறுத்துகின்றது. தொழிற்சங்கப் போராட்டமானது அவர்களின் உரிமை. எனவே, அதிபர்கள், ஆசிரியர்களின் போராட்டம் நியாயமானவை. அவர்களின் போராட்டத்துக்கு எமது ஆதரவை நாம் வழங்குவோம் நாம் துணை நிற்போம்” என்றார்.

“தமிழ் மக்களுக்குரிய காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்படுகிறது.” – துரைராசா ரவிகரன்

“தமிழ் மக்களுக்குரிய காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்படுகிறது.” என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

உரப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநலசேவைகள் திணைக்களத்தின் முன்பு இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தற்போது விவசாயிகள் உரப்பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள நிலையில், அப் பிரச்சினைக்குத் தீர்வாக அரசு உரங்களை இறக்குமதிசெய்து விவசாயிகளுக்கு வழங்குவதுடன், மகாவலி (எல்), வனஜீவராசிகள் திணைக்களம், வனவளத் திணைக்களம் என பலதரப்புக்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுடைய பயிர்ச்செய்கை நிலங்களையும் அரசு விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நாங்கள் விவசாயிகளுக்கான உரத்தினை வழங்குங்கள் என்றுதான் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்கின்றோம்.

முல்லைத்தீவு மாவட்டத்திலே கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளிலுள்ள ஆறு கிராம அலுவலர் பிரிவுளிலும் எங்களுடைய தமிழ் மக்களின் பல்லாயிரக் கணக்கான காணிகளை அரசாங்கம் அபகரித்து சிங்கள மக்களுக்கு வழங்கியிருக்கின்றது.

குறிப்பாக தமிழ் மக்களுக்குரிய ஆமையன்குளம், முந்திரிகைக்குளம், சாம்பான் குளம் போன்ற குளங்களும், அதன்கீழுள்ள நீர்ப்பாசனக் காணிகளும் அபகரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அரசால் அபகரிக்கப்பட்ட காணிகளுக்குரிய உறுதிகள் தமிழ் மக்களிடம் ஏற்கனவே உள்ளன. இவ்வாறிருக்கும்போது அந்தக்காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதோடு மாத்திரமின்றி, சிங்கள மக்களுக்கு புதிய உறுதிகளும் அரசால் வழங்கப்பட்டுள்ளது. இது மிக மோசமான செயலாகும்.

அத்தோடு இங்குள்ள எமது தமிழ் மக்கள் எஞ்சியிருக்கின்ற தமது மானாவாரி விவசாயநிலங்களில், பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளும்போது, அந்தப் பயிர்ச்செய்கைகளுக்குரிய உரங்களை வழங்காமல் இந்த அரசு எமது மக்களை வாட்டி வதைக்கின்றது.

எனவே எமது விவசாயிகளின் பயிர்ச்செய்கைகளுக்குரிய உரங்களை வழங்குவதுடன், அபகரித்துள்ள எமது தமிழ் மக்களின் பயிர்ச்செய்கைக் காணிகளையும் விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

“தமிழ்தேசிய கூட்டமைப்பின் கடல்வழிப்போராட்டம் தோல்வி.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தமிழரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அவர்களின் ஆதரவாளர்களும் இணைந்து முல்லைத் தீவில் இருந்து பருத்திதுறை வரை மேற்கொண்ட கடற் பயணம் தொடர்பாக அலட்டிக் கொள்ளவில்லை எனவும் அது தோல்வியில் முடிவடைந்திருப்பதாகவும்  என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தியக் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற எல்லை தாண்டிய அத்துமீறிய சட்ட விரோத தொழில்முறைக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இழுவை வலை தடைச் சட்டம் பயன்படுத்தப்படாமையினாலேயே இந்தியக் கடற்றொழிலாளர் அதிகளவில் எல்லை தாண்டி வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த கடற்றொழில் அமைச்சர்,

குறித்த சட்டத்தினை உருவாக்கியபோது, மூன்றிலிரண்டு பெரும்பாண்மையை பெற்றுக் கொள்வதற்காக ஈ.பி.டி.பி. கடசியும் ஆதரவளித்திருந்தமையை சுட்டிக்காட்டினார்.

மேலும், தம்மால் உருவாக்கப்பட்ட ஆட்சிக் காலத்தில் குறித்த சட்டம் இயற்றப்பட்டதாக தெரிவிக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றவர்கள், தமது ஆட்சிக் காலத்தில் இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு எதிராக குறித்த சட்டத்தினை பிரயோகிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் இழுவை வலைச் சட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் சுமார் 100 இற்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்ட போதிலும், அவைக்கு எதிராக இழுவை வலைத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

எனினும், தற்போது குறித்த சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அண்மையில், தமிழரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அவர்களின் ஆதரவாளர்களும் இணைந்து முல்லைத் தீவில் இருந்து பருத்திதுறை வரை மேற்கொண்ட கடற் பயணம் தொடர்பாக அலட்டிக் கொள்ளவில்லை எனவும் அது தோல்வியில் முடிவடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

அந்தோடு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஒரு நம்பிக்கை அற்றவர் எனவும் அவர் கடந்த காலங்களில் எங்கு இருந்தார், தற்போது எங்கு இருக்கிறார், நாளை எங்கு செல்வார் என்பது  அனைவருக்கும் தெரியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்

ஆபாசப் பேச்சுக்களைத் தடை செய்யும் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் !

ஆபாசப் பேச்சுக்களைத் தடை செய்யும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

குறித்த புதிய சட்டம் அறிமுகப்படுத்துவதற்கு இணையாக தண்டனைச் சட்டக் கோவையின் 285, 286 மற்றும் 289(அ) உறுப்புரைகளை முடிவுறுத்துவதற்காக சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்ட மூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

குறித்த சட்ட மூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

“கொழும்பு பணத்தில் தமிழர்களை வாங்க, சிங்கள தலைமைகளுக்கான தரகராக சுமந்திரன் செயற்படுகிறார்.” – கோ.ராஜ்குமார்

“தமிழர்களின் விடுதலைக்கான கொள்கையில் சுமந்திரன் இல்லை என்பதில் தமிழர்கள் கவனமாக இருக்க வேண்டும். கொழும்பு பணத்தில் தமிழர்களை வாங்க, சிங்கள தலைமைக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இடையில் தரகராக அவர் செயல்படுகிறார்.” என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார்.

வவுனியாவில் காணாமல் போன உறவினர்களினால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 21 வது ஆண்டு நினைவு நாளான இன்று (19) தொடர் போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட பந்தலில் அஞ்சலி செலுத்திவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நிமலராஜனை வணங்குகிறோம், சுமந்திரனை நிராகரிக்கிறோம் .காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்கான 1706 வது நாள் போராட்டம் இன்றும் தொடர்கிறது. தமிழ் பத்திரிகையாளர் நிமலராஜனின் 21 வது ஆண்டு படுகொலை நினைவு நாள் இன்று. நிமலராஜன் படுகொலை தமிழ் ஜனநாயகத்தை கொன்றது. தமிழரின் ஜனநாயகம் தமிழ்தேசியத்தை உயிர் மூச்சாக கொண்டது.

இலங்கை ஜனநாயகம் என்பது சிங்களவரின் ஜனநாயகம், அது தமிழர்களை ஒடுக்குவதற்கு மாத்திரமே. தமிழர்களின் ஜனநாயகம் என்பது, பாதுகாப்பான, பாதுகாக்கப்பட்ட தமிழர் தாயகம் வரும் போது தான் தமிழர் ஜனநாயகத்துக்கு உயிர் வரும்.

சிவாஜிலிங்கத்தின் ஒரு சில கொள்கையுடன் நாங்கள் ஒத்துப்போகவில்லை. ஆனால் ஊழல் சுமந்திரனால் சிவாஜிக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய சிவாஜி விடுத்த கோரிக்கையை வரவேற்கிறோம். சுமந்திரன் தனது ஊழல் நடவடிக்கைகளை கேட்டபோது அனைவரையும் அச்சுறுத்தினார், ஆனால் சுமந்திரன் சிவாஜிலிங்கம் மீது அவதூறு வழக்கு தொடர மறுக்கிறார். அவர் ஒரு வழக்கைத் தாக்கல் செய்யத் தவறினால், சிவாஜிலிங்கம் ஊடகங்களுக்கு சொன்ன ஊழல் குற்றச்சாட்டை சுமந்திரன் ஏற்று கொள்கிறார்.

சுமந்திரன் இந்த ஊழல் குற்றச்சாட்டை மறைக்க, அவர் வயலை உழத் தொடங்கினார், பின்னர் படகோட்டம் மற்றும் உரத்தைப் பற்றி பேசினார். தமிழ்நாடு தமிழர்களுக்கு எதிரான எந்த ஆர்ப்பாட்டத்தையும் நாங்கள் எதிர்க்கிறோம். ஜேஆர் ஜெயவர்த்தன தமிழர் தாயகத்தை முற்றுகையிட்டபோது அவர்கள்தான் 1987 ல் தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்தைக் கொண்டு வந்தனர்.

ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் இடையிலான பிணைப்பை முறிப்பதற்கு சுமந்திரனின் சதி இது. போரின் போது, ​​தமிழ் மீனவர்கள் எங்களுக்கு மருந்து, எரிபொருள், உணவு, உடைகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை கொண்டு வந்து உதவினர் . ஈழத் தமிழர்களாகிய நாம் அவர்கள் செய்ததை மறக்கக் கூடாது. தமிழக மீனவர்களுக்கு எதிராக யாரேனும் ஆர்ப்பாட்டம் செய்தால் கண்டிக்க வேண்டும்.

நாங்கள் தெற்கே மீன் பிடிக்க செல்லாததால் முதலில் சிங்கள மீனவர்கள் எங்கள் பகுதியில் மீன் பிடிப்பதைத் எதிர்க்கிறோம். பாதுகாப்பான, பாதுகாக்கப்பட்ட, மீளப்பெற முடியாத தமிழர் தாயகம் கிடைத்தவுடன், தமிழக மீனவர்களுடன் நாங்கள் சுமுகமான தீர்வுக்கு வருவோம்.

நமது வடக்கு மற்றும் கிழக்கை ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு கடல் கடற்கரையுடன் எங்கள் பொதுவான மீன்பிடி பகுதியாக கூட இருக்கலாம். ஈழத் தமிழர்களையும் தமிழ்நாட்டுத் தமிழர் ஒற்றுமையையும் அழிக்க சுமந்திரன் கொழும்பு சிங்களவர்களை சமாதானப்படுத்த கடலில் படகை ஓட்டினார்.

தமிழர்களின் விடுதலைக்கான கொள்கையில் சுமந்திரன் இல்லை என்பதில் தமிழர்கள் கவனமாக இருக்க வேண்டும். கொழும்பு பணத்தில் தமிழர்களை வாங்க, சிங்கள தலைமைக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இடையில் தரகராக அவர் செயல்படுகிறார் என்றார்.

“எமது இனம் சார்ந்த குழந்தைகள் ஏற்கனவே பலவற்றை இழந்துள்ளனர்.” – போராட்டத்தை கைவிட்ட இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் !

அனைத்து அதிபர்களும், ஆசிரியர்களும் வரும் 21ஆம் திகதி பணிக்குச் சென்று கடமையில் ஈடுபட வேண்டும் எனவும் எமது இனம் சார்ந்த குழந்தைகள் ஏற்கனவே பலவற்றை இழந்துள்ளனர். அவர்கள் இன்னும் பின்னிலைக்குச் செல்ல நாம் காரணமாக இருக்க மாட்டோம். ஆகையால் பாடசாலைகள் ஆரம்பமானதும் எமது அதிபர், ஆசிரியர்கள் முழுமையாக பணி செய்வார்கள் எனவும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா. புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வரும் 21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன. ஒரு சில அதிபர், ஆசிரிய தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டத்தில் உள்ளன. இதன் மூலம் மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் முற்றாக தடைப்பட்டுள்ளன. ஆனால் பிரத்தியேகமாக பல ஆசிரியர்கள் பணம் பெற்று கற்பித்தலில் ஈடுபட்டுள்ளனர். முதலில் போராட்டம் தொடங்கியது சம்பள உயர்ச்சிக்காக அல்ல. கொத்தலாவல பல்கலைக்கழகத்திற்கு எதிராக தனி ஒரு மனிதனாக ஒரு ஆசிரிய தொழிற் சங்கத்தின் செயலாளர் தொடக்கிய போராட்டம். இவ்விடயம் தொடர்பில் அவரது சங்கத்தினருக்கே அது தெரியாது.

அவரை தனிமைப்படுத்தலுக்கு கொண்டு சென்று விடுவிக்கப்பட்ட பின்னரே சம்பள முரண்பாடு தொடர்பான விடயம் பேசப்பட்டது. இந்த விடயங்கள் தொடர்பாக எவரும் எம்முடன் பேசவும் இல்லை. கலந்துரையாடவும் இல்லை. நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கும் போது இலங்கையில் உள்ள அனைத்துச் சங்கங்களுடனும் பேச வேண்டும். 2 அரசியல் கட்சி சார்ந்த சங்கங்கள் தமது அரசியல் நலனுக்காக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தமை இப்போது வெளிப்படுகின்றது.

இதைவிட இந்தப் போராட்டம் முன்னெடுத்த காலம் தவறானது. உலகில் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டு மரணங்கள் தொடராக நடைபெறும் நேரத்தில் இதனை முன்னெடுக்க முடியாது. சம்பள அதிகரிப்பு அல்லது முரண்பாடு தீர்த்தல் தொடர்பாக முன்னைய ஆட்சிக்காலத்தில் ஏன் வாய்திறக்கவில்லை. ஏன் இதுபோன்ற போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. இப்போராட்டம் தொடர்பில் கல்வித்துறை சார்ந்த புத்திஜீவிகள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் அதிருப்தி வெளியிட்டனர்.

இப்போது ஊடகங்களே வெளிப்படையாக மாணவர் நலன்சார்ந்து அதிபர்கள், ஆசிரியர்களை தொழிற்சங்கங்களை விமர்சிக்கத் தொடங்கிவிட்ட காரணம் நாற்பது ஆண்டுகால யுத்தத் சூழ்நிலையில் நாம் ஒருபோதும் கற்பித்தல் செயற்பாடுகளை இடைநிறுத்தியது கிடையாது. போரட்டம் நடைபெற்றபோது பதுங்குகுழிகளுக்குள்ளே எமது ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை மேற்கொண்டனர். பிள்ளைகளின் கல்வியை பணயம் வைப்பது தெய்வகுற்றமாகும்.

இப்போதும் கற்பித்தல் பணியை இடைநிறுத்தியது தவறானது என்றுதான் நாம் சொல்கின்றோம். இவ்விடயம் தொடர்பில் பெற்றோர் மத்தியில் கடும் அதிருப்தி நிலை உருவாகியுள்ளது. தற்போது சமூக மட்டத்திலும் பலவிதமான கருத்துக்கள் உருவாகியுள்ளன.

ஒரு தனி மனிதனின் அரசியல் சூழ்ச்சியால் பல லட்சம் மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளதாக பேசுகின்றனர். இதை விட ஒன்றரை ஆண்டுகள் கற்பித்தல் பணியில்லாமல் 70 வீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் சித்திபெற்று உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர். பெருமளவான மாணவர்கள் பிரத்தியேக கல்வியை நாடினர் என்பதும், அதிபர், ஆசிரியர்களின் பிள்ளைகள் சிறந்த பெறுபேறுகளை எவ்வாறு பெற்றனர் என்ற கேள்விகளும் சமூக மட்டத்தில் எழுந்துள்ளன. இலவசமாக சேவை செய்த ஆசிரியர்கள் இன்று பணம் வாங்கி கல்வி வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எமது இனம் சார்ந்த குழந்தைகள் ஏற்கனவே பலவற்றை இழந்துள்ளனர். அவர்கள் இன்னும் பின்னிலைக்குச் செல்ல நாம் காரணமாக இருக்க மாட்டோம். ஆகையால் பாடசாலைகள் ஆரம்பமானதும் எமது அதிபர், ஆசிரியர்கள் முழுமையாக பணி செய்வார்கள் என்றார்.

இலங்கையில் கடந்த மூன்று மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 4,743 முறைப்பாடுகள் !

நாளாந்தம் 25 சிறுவர்கள் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இந்த துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்ற சிறுவர்களில், சுமார் 21 வீதமானோர் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பேருவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், “இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலும், 180 நாட்களில் (6 மாதங்களினுள்) சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 4,743 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த முறைப்பாடுகளின் எண்ணிக்கையை 180 ஆல் வகுக்கும்போது, ​​ நாளொன்றிற்கு 25 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்.

அதாவது, ஒரு மணித்தியாலத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளில் பாதிக்கின்ற சிறுவர்களை வயதுக்கு ஏற்ப பிரிந்தால், 21%மானோர் 5 வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள், 17% மானோர் 5 முதல் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் , 38% வீதமானோர் 11 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். 75 வீதமானோர் 15 வயதிற்குட்பட்டவர்களாகவும் பதிவாகியுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 13 வீதமானோரின் பிரதிவாதியாக தந்தை அடுத்ததாக தாய் மற்றும் மதகுருமார்கள் இருக்கின்றனர்” என்றும் அவர் தெரிவித்தார்.

ரி20 உலக கிண்ண தகுதிகாண் போட்டி – நமீபியாவை இலகுவாக வீழ்த்திய இலங்கை !

ரி20 உலக கிண்ண தொடரின் நேற்றையதகுதிகாண் போட்டியில் நமீபியா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியுள்ளது.

ரி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. அதன் அடிப்படையில் இன்றைய தினம் இலங்கை மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் நமீபியா அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பில் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 29 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் மஹீஸ் தீக்சன மூன்று விக்கெட்டுக்களையும், லஹிரு குமார மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதற்கமைய, 97 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 13.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இலங்கை அணி சார்பில் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய பானுக ராஜபக்ஷ 42 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்ணான்டோ 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இந்தியாவின் அதிரடி துடுப்பாட்ட வீரர் யுவராஜ்சிங் கைது !

இந்தியாவின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங். இவர் கடந்த வருடம் இன்ஸ்டாகிராம் லைவ்வில் இந்திய கிரிக்கெட் அணி துணை கேப்டன் ரோகித் சர்மாவுடன் உரையாடினார். அப்போது, பந்து வீச்சாளர் யஷ்வேந்திர சஹாலின் டிக்டாக் வீடியோவை வைத்து சாதிய ரீதியாக யுவராஜ் சிங் விமர்சித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பலரும் அவரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து யுவராஜ் தனது சமூகவலைதள பக்கத்தின் மூலமாக இதற்கு மன்னிப்பு கோரினார். அதேநேரம் வழக்கறிஞர் ஒருவர் அவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், அந்த வழக்கில் யுவராஜ் சிங்கை அரியானா போலீசார் கைது செய்தனர். பின்னர் சில மணி நேர விசாரணைக்கு பின்னர் அவர்  பிணையில் விடுவிக்கப்பட்டார்.