10

10

கிளிநொச்சி வைத்தியசாலைக்குள் புகுந்து சத்திரசிகிச்சைக்காக காத்திருந்தவரை வாளால் வெட்டிய வன்முறைக்கும்பல் !

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடத்தின் வாசலில் இடம்பெற்ற வாள் வெட்டில் ஏற்கனவே வாள்வெட்டில் காயமடைந்து சிகிச்சைக்காக காத்திருந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று (09) மாலை 5.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலையினர் தெரிவித்துள்ளனர்.

மாலை 5.30 மணி அளவில் வைத்தியசாலைக்குள் உள்நுழைந்த மூவர் பார்வையாளர்கள் போன்று சென்று குறித்த நோயாளியின் பெயரை குறிப்பிட்டு விசாரித்துள்ளனர்.

இதன் போது அங்கு கடமையிலிருந்த உத்தியோகத்தர் நோயாளி தியட்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர்கள் வைத்தியசாலையின் முதலாவது மாடியில் உள்ள சத்திர கிசிச்சை கூடத்தின் வாசலுக்குள் சென்றவர்கள் அங்கு சிகிச்சைக்காக காத்திருந்த தாம் தேடிச் சென்ற நபரை வாசலில் வைத்து வெட்டியுள்ளனர்.

வெட்டுக் காயங்களுக்குள் உள்ளானவர் குருதி வடியவடிய சத்திர கிசிச்சை கூடத்திற்குள் ஓடியுள்ளார். வெட்டிய நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர்.

உடனடியாக அருகில் உள்ள கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கிய போதும் அரை மணித்தியாலயங்களுக்கு பின் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.

12 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை !

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 12 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் இன்றைய தினம் மொனராகலை நீதவான் நீதிமன்றால் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை அக்கரைப்பற்று, சின்னப்பனங்காட்டை சேர்ந்த கதிரவேலு கபிலன்,வயது 29 என்பவரே மேற்படி விடுதலைசெய்யப்பட்டவராவார்.

கொழும்பு – புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் பீ.சி.ஆர் பரிசோதனைகளை அடுத்து இன்று (10) மதியம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டு உறவுகளுடன் இணைந்துள்ளதாக, குடும்பத்தினர் குரலற்றவர்களின் குரல் அமைப்பிற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இவர் கடந்த 20.05.2009 யுத்த நிறைவுக்குப் பின் விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகத்தின் பெயரில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சுமார் ஒன்றரை வருட காலம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 15.02.2011 அன்று மொனராகலை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

கடந்த 12 ஆண்டுகளாக அவருக்கெதிராக குற்றச்சாட்டுப் பத்திரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், சிரேஸ்ட சட்டத்தரணி பஞ்சாட்சரம் அவர்கள் நீதிமன்றில் தர்க்க நியாயங்களை சுட்டிக்காட்டி கபிலனின் விடுதலையை உறுதி செய்யுமாறு மன்றில் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், குறித்த தமிழ் அரசியல் கைதிக்கெதிராக குற்றத்தை ஒப்புவிக்க போதிய சாட்சியதாரங்கள் காணப்படாத காரணத்தைக்கூறி அவரை நிரபராதி என விடுதலை செய்துள்ளது.

‘கெவரலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் எந்தவொரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை.” – அமைச்சர் ஜீ.எல். பீரிஸ்

கெவரலப்பிட்டிய யுகதனவிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்கு அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்காக இதுவரை  என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கெரகலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பங்கை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கெவரலப்பிட்டிய யுகதனவிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்கு அமெரிக்க நிறுவனம்  ஒன்றுக்கு வழங்குவது தொடர்பாக இதுவரை இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் அது தொடர்பில் இரு தரப்பிக்கிடையில் கலந்துரையாடல் இடம் பெற்று வருவதாகவே தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பாக அனைத்து தரப்பினரதும் கருத்துக்களையும் பெற்றுக் கொண்டு நாட்டுக்கு பொருத்தமான, ஆரோக்கியமான தீர்மானத்தையே அரசாங்கம் இறுதியில் முன்னெடுக்கும். அத்துடன் இந்திய வெளிவிவகார செயலாளர் கடந்த வாரம்  உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாட்டுக்கு  வந்து சென்று விட்டார். அவரின் விஜயம் தொடர்பாக பல்வேறு பொய் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

அவர் எந்தவித அழுத்தத்தையும் இலங்கை அரசாங்கத்துக்கு பிரயோகிக்கவில்லை.  குறிப்பாக 13ஆம் திருத்தம் தொடர்பாகவோ திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பாகவோ எந்தவித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை.

அத்துடன் அவரது விஜயம் குறிப்பிட்ட ஒரு விடயத்துக்காக மேற்கொள்ளப்பட்டதொன்று அல்ல. இரண்டு நாடுகளுக்கிடையில் பூரண இணக்கப்பாடுகள் இருக்கின்றன.

அவரின் விஜயத்தின் அடிப்படையாக இருந்தது பெளத்த தர்மமாகும். எமது கலாசாரம், பொருளாதாரம் என பல விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருத்திருந்தன.

அவ்வாறு இல்லாமல் இந்திய வெளிவிவகார செயலாளரின் விஜயம் எமது ஏதாவது வேலைத்திடம் அல்லது வேறு ஏதாவது விடயத்துக்கு எமக்கு அழுத்தம் பிரயோகிக்க வரவில்லை என்பதை நான் உறுதியாக தெரிவிக்கின்றேன் என்றார்.

“நல்லாட்சி அரசு மீட்டெடுத்த நாட்டை ஜனாதிபதி கோட்டாபய இரண்டு வருடங்களுக்குள் நாசமாக்கிவிட்டார்.” – சஜித் பிரேமதாஸ

“நல்லாட்சி அரசு மீட்டெடுத்த நாட்டை ஜனாதிபதி கோட்டாபய இரண்டு வருடங்களுக்குள் நாசமாக்கிவிட்டார்.” என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேசத்தின் பிடியிலிருந்தும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்தும் எமது நல்லாட்சி அரசு மீட்டெடுத்த நாட்டை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாசமாக்கியுள்ளார். அவர் பதவிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். அரசு நாட்டை இருளை நோக்கிக் கொண்டு செல்கின்றதே அன்றி, வெளிச்சத்தை நோக்கிக் கொண்டு செல்லும் அடையாளத்தைக் காண முடியவில்லை.

சௌபாக்கியத்துக்குப் பதிலாக அரசு அசௌபாக்கியத்தை மாத்திரமே நாட்டுக்கு மீதம் வைத்துள்ளது. ஒரு புறம் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தொழில் வாய்ப்புகள் இன்றி இளைஞர், யுவதிகள் கஷ்டத்தில் உள்ளனர். மறுபுறம் உழவர்கள் செய்வதறியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

முழு நாட்டு மக்களும் வாழ்க்கை தொடர்பான பாரதூரமான பல நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலைமையை மாற்றக் கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே – என்றார்.

“எமது ஆட்சி தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளமையை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.” – ஜனாதிபதி கோட்டாபய உறுதி !

“எமது ஆட்சி தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளமையை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற 72ஆவது இராணுவ வருட பூர்த்தி நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர்,

“நாமும் நமது அரசாங்கமும் எதிர்பார்த்ததை போன்று செயற்படவில்லை என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளமையை நாம் ம் ஏற்றுக் கொள்கிறோம். இருந்த போதும் புதிய உத்வேகத்துடன் நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்வதை உறுதிப்படுத்துகிறோம்.

கையூட்டல் மற்றும் மோசடி ஆகியனவற்றுக்கு இடமளிக்காது சகல அரச அதிகாரிகளும் பொதுமக்களுக்குச் சேவையாற்ற வேண்டும். முப்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் மன உறுதியை அதிகரிக்கச் செய்து, அவர்களுக்கான உத்தியோகபூர்வ அதிகாரங்களை முறையாக வழங்கி, தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்க, கடந்த இரண்டு வருடக்காலப்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள், பொதுமக்களுக்காகப் பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கு உறுதியளித்தவாறு, புதிய அரசியலமைப்பு மற்றும் புதிய தேர்தல் முறைமையை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

முப்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் மன உறுதியை அதிகரிக்கச் செய்து, அவர்களுக்கான உத்தியோகபூர்வ அதிகாரங்களை முறையாக வழங்கி, தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்க, கடந்த இரண்டு வருடக் காலப்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மீண்டும் நாட்டுக்குள் பயங்கரவாதமோ அல்லது மதத் தீவிரவாதச் செயற்பாடுகளோ ஏற்படாத வகையில் நாட்டைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, அவர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றனர்” என்று கூறினார்.

 

“மாகாணசபை தேர்தல் உடனடியாக நடத்தப்படவேண்டும்.” – எம்.ஏ.சுமந்திரன்

மாகாணசபை தேர்தல் உடனடியாக நடத்தப்படவேண்டும் எனவும் நான் சமர்ப்பித்த சட்டமூலத்தை உபயோகித்து, சட்ட திருத்தத்தினூடாக மாகாணசபை தேர்தலை நடத்த முடியும் எனவும்  யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது,

“நாடாளுமன்ற தெரிவுக்குழு தேர்தல் முறை மறுசீரமைப்பு பற்றிய கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. குறித்த தெரிவுக்குழுவிற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.

இவ்வாறு இந்த குழு சந்திக்க ஆரம்பித்ததிலிருந்து மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதனையே நாங்கள் வலியுறுத்தி வந்திருக்கின்றோம். அதனை நகர்த்துவதில் உள்ள சட்ட சிக்கல்கள் சம்பந்தமாக ஒவ்வொரு தடவையும் பிரஸ்தாபிக்கப்படும். ஆனாலும், ஒரு சிறிய சட்ட திருத்தத்தின் ஊடாக முன்னர் இருந்த தேர்தல் முறைமையை பின்பற்றி, தேர்தல் நடத்த முடியும் என்ற கருத்தை நான் வெளிப்படுத்தியிருந்தேன்.

அதற்கான ஒரு சட்ட மூலமும் 2019 ஆம் ஆண்டு, நான் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தேன். இந்நிலையிலேயே, கூட்டத்திற்கு வருகை தந்திருந்த பசில் ராஜபக்ஷ வெகு விரைவாக மாகாண சபை தேர்தலை நடத்துவதென்று அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக அறிவித்தார்.
தங்களுக்கும் மாகாண சபை தேர்தல் நடத்த வேண்டும் என்ற தேவையும் அழுத்தங்களும் இருப்பதாக கூறினார்.

அதாவது, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வந்து சென்றதன் பின்னர் இதை கூறியுள்ளார். இது எப்படியாக இருந்தாலும் மாகாணசபை தேர்தல் உடனடியாக நடத்தப்படவேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடாக தொடர்ச்சியாக இருந்து வந்து கொண்டிருக்கின்றது.

ஆகையினாலே என்னுடைய சட்டமூலத்தை உபயோகித்து ஒரு சட்ட திருத்தத்தை உடனடியாக செய்து, மாகாண சபை தேர்தலை நடத்தலாம் என்ற கருத்தை பல உறுப்பினர்கள் வெளிப்படுத்தியிருந்தார்கள். நான் தயாரித்திருந்த சட்ட மூலத்தை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயலாளரிடம் நான் கொடுத்திருக்கின்றேன்.

இந்நிலையில் அமைச்சரவை இது குறித்து ஆலோசித்து ஒரு முடிவெடுத்து, அப்படி செய்வதாக இருந்தால் எதிர்வருகின்ற நாட்களில் அதனை வர்த்தமானியில் பிரசுரித்து, ஒரு அரசாங்க வரைபாக சட்டமூலமாக அதனை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.