காணாமற்போனோர் விவகாரதத்திற்கு தீர்வை காணும் வகையில் கலந்துரையாடலை நடத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உறவுகளுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யுமாறு கோரியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது ஜனாதிபதியினால் மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனோரின் விவகாரத்திற்கு தீர்வு காணப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுவந்த நிலையில், உறவுகளை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதனடிப்படையில் கடந்த சில மாதஙகளுக்கு முன்னர் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கொரோனா தொற்று பரவல் ஏற்படுத்திய அசாதாரண நிலைமையினால் குறித்த சந்திப்பிற்கான திகதி தீர்மானிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், நேற்றைய சந்திப்பில், காணாமல் போனோரின் உறவினர்களின் விவகாரத்தினை தீர்த்து வைக்கும் வகையிலான கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்தார்.
உறவுகள் காணாமல் போனதினால் ஏற்பட்டுள்ள வாழ்வாதார பிரச்சினைகளை கவனத்தில் எடுத்து அவற்றினை தீர்ப்பதற்கும், தேவையான தீர்வை வழங்குவதற்கும் தயாராக இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ, உறுதியளித்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.
ஒவ்வொரு தடவையும் காணாமலாக்கப்பட்டோர்களின் உறவினர்களின் போராட்டம் உக்கிரமடையும் போதெல்லாம் அரசு தரப்பிலிருந்து இது போல் ஒரு தமிழ்பிரதிநிதி இதுபோலவே ஒரு அறிக்கையை வெளியிடுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த வருடத்தில் முன்பொரு முறையும் இரண்டு கிழமைகளுக்குள் காணாமலாக்கப்பட்டோருக்கான தீர்வை வழங்குவோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமையும் நினைவில் கொள்ளத்தக்கது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வருட ஐ.நா தொடரிலும் காணாமல் போனவர்களுக்கு மரணசான்றிதழ் கொடுக்கவுள்ளதாக கூறியதும் குறிப்பிடத்தக்கது.