பத்தரமுல்லை-பொல்துவை சந்தியில் நாடாளுமன்ற வளாக நுழைவாயில் வீதியை இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடுவெல நீதவான் நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்ற நுழைவு வீதிக்கு அருகில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் காவல்துறையினரால் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.
நாடாளுமன்ற நுழைவு வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரையே காவல்துறையினர் கைது செய்தனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்டவர்கள் மஹரகம காவல்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர் கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பில் கட்டணம் அறவிடாமல் பெருமளவிலான சட்டத்தரணிகள் கடுவலை நீதிமன்ற வளாகத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான அரச தலைவர் சட்டத்தரணி சரத் ஜயமான்ன, நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான கடிதத்தை சபாநாயகரிடம் கையளிக்க சென்றவர்களை காவல்துறையினர் கைது செய்தமை அடிப்படை உரிமை மீறலாகும் என தெரிவித்தார்.
இந்நிலையில், குறித்த 13 பேரும் தற்பொழுது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.