“ஆளும் கட்சியிலேயே ஆதரவு இல்லாத போது எதிர்க்கட்சிகளிடம் ஆதரவை கேட்கும் பிரதமர் ரணில் தான்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு எதிராக அதிருப்தியை வெளிப்படுத்தும் நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, அதற்கு எதிராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாக்களித்திருந்தார்.
இன்றைய நாடாளுமன்ற சபையில் உரையாற்றிய சுமந்திரன்,
“கோட்டாபய ராஜபக்சவை பாதுகாக்க முயற்சிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பதை நாடு இப்போது அறிந்திருக்கும்.நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு கொண்டு வருவதன் மூலம் அரச தலைவர் தனது பதவியை இழக்கப்போவதில்லை.
உங்கள் பெயர்கள் இன்று பலகையில் காட்சிப்படுத்தப்பட்டன. ஜனாதிபதியை யார் பாதுகாக்கிறார்கள் என்பது இப்போது நாட்டிற்குத் தெரியும். பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் கதிரைகளில் அமர்ந்திருப்பவர்களின் வெட்கக்கேடான நடத்தை இது.
ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை வரைவு செய்யப்பட்ட போது எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அதற்கு இணக்கம் தெரிவித்ததார். ரணில் குறித்த பிரேரணையை பார்க்க வேண்டும் என்று விரும்பினார், நான் அதை அவருக்கு ஏப்ரல் 26 ஆம் திகதி அனுப்பினேன். அவர் அதை ஆய்வு செய்தார். குறித்த பிரேரணையை காலி முகத்திடலுக்கு அனுப்புமாறு அவர் பரிந்துரைத்தார்.
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இந்த வரைவு அனுப்பப்பட்டு அவர்களின் சம்மதமும் பெறப்பட்டது. அரச தலைவர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக பிரதமர் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டிருந்ததார்.
ரணில் விக்ரமசிங்க தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது ஏன்? பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கத் தவறியது ஏன்? அன்றைக்கும் இன்றைக்கும் ஒன்று தான் மாறியுள்ளது அன்று எதிர்க்கட்சியில் இருந்தார். இன்று பிரதமராக இருக்கிறார்.
பிரதமர் பதவிக்காக ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டுக்கு பகிரங்கமாக கூறிய கொள்கைகளை வியாபாரம் செய்துள்ளார். அவர் நமது நாட்டு பிரதமர். உட்காருகிறாரா, நிற்கிறாரா, நடப்பாரா என்று தெரியாத ஒருவரை பிரதமராகப் பெற்றிருப்பது நமக்கு வெட்கமாக இருக்கிறது.
அவருக்கே அவரது கொள்கைகள் என்னவென்று தெரியவில்லை. அவர் சொல்வது ஒன்று, செய்வது வேறு. ஆளும் கட்சியிலேயே ஆதரவு இல்லாத போது எதிர்க்கட்சிகளிடம் ஆதரவை கேட்கும் பிரதமர் இவர்தான்.” எனக் குறிப்பிட்டார்,