அரசியல்வாதிகளின் வீடுகளில் காணப்பட்ட யூரியா உர மூடைகள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு தேசிய உர செயலகத்திற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர உத்தரவிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு இரசாயன உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் சில அரசியல்வாதிகள் தமது வீடுகளில் உரங்களை சேமித்து வைத்திருந்தமை தமக்கு ஆச்சரியத்தை அளிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த இரசாயன உரங்கள் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்பட உள்ளதா அல்லது உரிய அரசியல்வாதிகளால் தனியார் வர்த்தகர்களிடம் நிலவும் விலைக்கு உரங்கள் கொள்வனவு செய்யப்பட்டதா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறிக்கை கிடைத்த பின்னர், இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட அமைச்சர் தீர்மானித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பல அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைத்த போது அவர்களின் பல வீடுகளில் நூற்றுக்கணக்கான உர மூடைகள் காணப்பட்டதாக ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டிருந்தன.
முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் ஆகியோரின் வீடுகளில் இந்த உர மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.