இன்று (31) காலை கொழும்பு பிரதேசத்தில் பலத்த மழை பெய்ததையடுத்து சி. டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர வித்தியாலயம் வெள்ளத்தில் மூழ்கியதால் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
அனர்த்த முகாமைத்துவ நிலையம், கொழும்பு மாநகர சபையின் மாவட்ட 3 அலுவலகம் மற்றும் தீயணைப்புப் பிரிவினர் இணைந்து சுமார் இரண்டு மணித்தியாலங்களில் பரீட்சையை நடத்துவதற்கு கடுமையாக உழைத்ததாக பாடசாலை அதிபர் சம்பிக்க வீரதுங்க தெரிவித்தார்.
பாடசாலையின் பிரதான வாசலில் இருந்து பரீட்சை நிலையத்துக்குச் செல்ல தீயணைப்புப் படைக்குச் சொந்தமான வாகனம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
கொழும்பு கல்விப் பணிப்பாளர் ஜி. என். சில்வாவின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள் ளப்பட்ட இந்த நடவடிக்கையின் காரணமாக, தாமதமின்றி பரீட்சையை ஆரம்பிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததாக அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
………………………………………………………………………………………………………………….
இது போல பல சிரமங்களுக்கு மத்தியிலேயே மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். ஒரு பக்கத்தில் எரிபொருள் நெருக்கடி – கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மின்சார தடை என பல தடைகளால் மாணவர்களின் இயல்பான கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மழைக்காலமும் சேர்த்து மாணவர்களை இன்னமும் வாட்யுள்ளது.
தென்னாசியாவின் மிகப்பெரிய தாமரைக்கோபுரத்தை அமைத்ததாக கொண்டாடித்தீர்க்கும் நமது நாட்டில் தான் மழகை்கு ஒழுக்கு இல்லாத – வெள்ளம் நிரம்பாத பாடசாலை கட்டிடங்களை அமைக்க முடிவதில்லை. நகர்ப்புற பாடசாலைகளிலும் இதே நிலை தான். கிராமப்புற பாடசாலைகளிலும் இதே நிலைதான்.
சண்டையே இல்லாத நிலையில் பாதுகாப்பு – இராணுவ ஒதுக்கீடு – தேவையற்ற பாரிய பாதை அமைப்பு என்பனவற்றை விடுத்து பாடசாலைகளில் மாணவர்கள் காலநிலை மாற்றங்களில் இருந்து பாதுகாப்பாக கற்பதற்கான – பரீட்சை எழுதுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி்கொடுக்க இனிவரும் காலங்களில் சரி கல்வி அமைச்சும் – அரசாங்கமும் முயற்சிகளை மேற்கொண்டு இலங்கை இலவச கல்வியின் தரத்தை உறுதிப்படுத்த முன்வர வேண்டும.