08

08

“சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து பரிசீலிக்கப்படும்.“- ஜனாதிபதி கோட்டாபய

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையை போக்குவதற்கு உரிய பிரேரணைகள் அரசியலமைப்பின் பிரகாரம் பரிசீலிக்கப்படும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று சபையுடன் இன்று (08) கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் அவசர நிலை பிரகடனம் தொடர்பில் ஹனா சிங்கர் அதிருப்தி !

இலங்கை மக்கள், அமைதியான முறையில் எதிர்ப்பை வௌிப்படுத்துவது அவசர நிலைமையல்ல.” என  இவ்வாறு இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்துக்குக் காரணமான விடயங்களைத் தீர்க்க முயல வேண்டும் எனவும் அவர் ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் பதவியை ஏற்குமாறு சஜித்திடம் ஜனாதிபதி கோரிக்கை – சஜித்பிரேமதாஸ பதில் என்ன.?

பிரதமர் பதவியை ஏற்று இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார்.

இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போதைய நெருக்கடி மத்தியில் பிரதமர் பதவியை ஏற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற விஷேட அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து, தொலைபேசி அழைப்பு மூலம் ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்திருந்தார்.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தை நடாத்தினார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது உட்பட சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என இதன்போது முடிவு செய்யப்பட்டது.

அதன்பிரகாரம் சட்டத்தரணிகள் சங்கத்தின் பரிந்துரைகளின் படி நெருக்கடிக்கு தீர்வு காண இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிக்க தயார் என ஐக்கிய மக்கள் சக்தி நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தெற்கில் ஹோ ஹோம் கோட்டா – வடக்கில் முனைப்படையும் விகாரை கட்டுமானம் !

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் சிங்கள -தமிழ்-முஸ்லீம் இளைஞர்கள் என பலரும் இணைந்து தென்னிலங்கையில்  ஹோ ஹோம் கோட்ட என்ற சுலோகங்களை தாங்கியவாறு போராடிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை – தேசிய ஐக்கியம் என்பன மிக முக்கியமான பேசு பொருளாக இலங்கை இளைஞர்களுக்கிடையே மாறியிருக்கின்ற சூழலில் சில இனவாத முகங்களும் வெளிப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. அண்மையில் திருகோணமலை கோவில் ஒன்றுக்கு சென்ற மக்களை பௌத்த பிக்குகள் விரட்டியமை, குருந்தூர் மலை விவகாரம் என இது நீள்கின்றது. இந்த விவகாரங்கள் வேகமாக இளந்தலைமுறையினரிடையே ஏற்பட்டு வருகின்ற ஒற்றுமை தன்மையை சீர்குழைத்து விடும் என்ற அச்சமே காணப்படுகின்றது.

 

இந்த நிலையில் யாழில் வலி. வடக்கு தையிட்டியிலுள்ள தனியார் காணியொன்றில் அமைக்கப்பட்ட திஸ்ஸ ரஜமஹா விகாரைக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று விஜயம் செய்துள்ள விவகாரம் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவு அப்பகுதி மக்களுடைய கடும் எதிர்ப்பையும் மீறி காங்கேசன்துறை திஸ்ஸ ரஜமஹா விகாரை அமைக்க  இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் அடிக்கல் நாட்டப்பட்டது. விகாரை கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

இந்த விகாரையை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு கட்டுமானப் பணிகளை அனுமதிப்பதில்லை என வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், பலாலியில் அமைந்துள்ள யாழ்பாணம் படைத் தலைமையகத்துக்கு இன்று காலை வருகை இராணுவத் தளபதி, விகாரைக்குச் சென்று கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்துள்ளார்.

இந்நிலையில் விகாரையின் கட்டுமானப் பணிகள் தொடர்பில் இராணுவத் தளபதி இன்று கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.