பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எதிராக மான நஷ்டஈடு வழக்கு தொடுப்பேன் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தயா கமகே தெரிவித்தார்.
கொஹுவல பிரதேசத்தில் அமைந்திருக்கும் அவரது காரியாலயத்தில் வியாழக்கிழமை (26) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
மக்கள் வங்கியில் இருந்து நான் 3 பில்லியன் அல்லது 3 ஆயிரம் மில்லியனுக்கும் அதிக பணம் கடன் பெற்றதாகவும் கடந்த 3 வருடங்களாக ஒரு சதமேனும் செலுத்தவில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இ.ராசமாணிக்கம் குற்றம் சாட்டியிருந்தார். அவர் இந்த குற்றச்சாட்டை பாராளுமன்றத்திலும் தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர் ஊடக சந்திப்பொன்றின் போதும் தெரிவித்திருந்தார். பாராளுமன்றத்தில் தெரிவித்த விடயத்துக்கு என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது. என்றாலும் ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கு எதிராக எனக்கு சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
அத்துடன் சாணக்கியன் எம்.பி. தெரிவித்திருப்பதுபோல் தயா கமகே ஒரு சதமேனும் மக்கள் வங்கியில் இருந்து கடன் பெற்றதில்லை. நாங்கள் வியாபாரம் செய்கின்றவர்கள். வியாபார நடவடிக்கைக்காக தயா சமூக வியாபார நிறுவனம் மக்கள் வங்கியுடன் கடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வருகின்றது. ஆனால் தயா சமூக நிறுனம் பெற்றுக்கொள்ளும் கடனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அதனால் எனது கெளரவத்தை பாதிக்கும் வகையில் என்மீது பொய் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள சாணக்கியன் எம்.பிக்கு எதிராக மான நஷ்டஈடு வழக்கு தொடுப்பேன். மேலும் ரணில் விக்ரமசிங்கவுடன் சாணக்கியன் எம்.பிக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கலாம்.
அதற்காக என்னை திருடர் என தெரிவித்து, ரணில் விக்ரமசிங்கவுடன் இருப்பவர்கள் அனைவரும் திருடர்கள் என தெரிவிப்பதற்கு அவர் முயற்சிக்கின்றார். எனவே இந்த அபாண்டமான குற்றச்சாட்டை அவர் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.