25

25

ஈரானின் நட்சத்திர கால்பந்து வீரரான வோரியா கஃபூரி கைது !

ஈரானின் நட்சத்திர கால்பந்து வீரரான வோரியா கஃபூரி, பயிற்சியின் போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளை பரப்பியதால் கத்தார் உலகக் கோப்பைக்கான தேசிய அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

35 வயதான இவரை உலகக் கோப்பைக்கான தேசிய அணியில் இருந்து நீக்கியதுடன், உள்ளூர் கிளப் ஒன்றில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தேசிய அணியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளதுடன், அரசுக்கு எதிராக பிரசாரம் செய்தார் எனவும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஈரான் அரசாங்கத்தால் கலவரக்காரர்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்ததால், கத்தார் உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஈரானின் குர்து சிறுபான்மை மக்களில் கஃபூரியும் ஒருவர், அதனாலையே அரசாங்கத்திற்கு எதிராகவும் தமது இன மக்களுக்கு ஆதரவாகவும் அவர் குரல் கொடுத்திருந்தார்.

2018ல் கால்பந்து உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த கஃபூரி, இந்த முறை தேசிய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான கத்தார் உலகக் கோப்பை போட்டியில் ஈரானிய அணி தேசிய கீதம் பாட மறுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

 

 

 

ஜுன் மாதம் வரையில் இங்கிலாந்தில் குடியேறியவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரமாக அதிகரிப்பு !

இந்த வருடத்தில் கடந்த ஜுன் மாதம் வரையில் இங்கிலாந்தில் குடியேறியவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளிவிபரங்களுக்கான பிரித்தானிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச கற்கைநெறிகளுக்காக பிரித்தானியாவிற்கு வருகை தந்த மாணவர்களின் எண்ணிக்கையும் இந்த அதிகரிப்புக்கு அதிகரித்துள்ளதாக அந்த அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தி விமான சேவையினை வழமைக்கு கொண்டு வந்தமையும் குடியேறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான், ஹொங்கொங் மற்றும் யுக்ரைன் பிரஜைகளுக்கு பிரித்தானியாவில் குடியேறுவதற்கு மூன்று புதிய வீசா திட்டங்களை பிரித்தானியா அறிமுகப்படுத்தியது.

குறித்த திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 38 ஆயிரம் பேர் பிரித்தானிவில் குடியேறியுள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் பிரித்தானியாவிலிருந்து அதிகமாக குடிப்பெயர்ந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் ஒரே நாளில் 31,000 பேருக்கு கொரோனா தொற்று – அச்சத்தில் உலகம் !

சீனாவின் வூகான் நகரில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று, உலக நாடுகளையெல்லாம் பாதித்தது.

 

நேற்று முன்தின நிலவரப்படி உலகமெங்கும் 63 கோடியே 95 லட்சத்து 78 ஆயிரத்து 239 பேரை கொரோனா பாதித்துள்ளது. இந்தத் தொற்றால் 66 லட்சத்து 25 ஆயிரத்து 979 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் அதிகபட்சமாக 9 கோடியே 85 லட்சத்து 3 ஆயிரத்து 462 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அங்கு 10 லட்சத்து 78 ஆயிரத்து 929 பேர் இறந்தனர்.

பல இடங்களில் கொரோனா கட்டுக்குள் வந்தாலும் கூட சீனாவில் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. அங்கு பல நகரங்களில் பொதுமுடக்கம் இருந்தாலும் தொற்று அவ்வப்போது எழுச்சி பெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றுமுன்தினம் அங்கு கொரோனா புதிய எழுச்சி பெற்றது. ஒரே நாளில் 31 ஆயிரத்து 527 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பி.பி.சி. தெரிவித்தது.

 

கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆயிரத்து 444 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார கமிஷன் நேற்று தெரிவித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதம் உச்சம் தொட்டபோது ஏற்பட்ட பாதிப்பை விட (28 ஆயிரம்) அதிகம் என்பது கோடிட்டுக்காட்டத்தக்கது. சீனாவில் ஒருவருக்குக்கூட கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலை வரவேண்டும் என்பது கொள்கை. இதன் காரணமாக அங்கு 140 கோடி மக்களின் உயிர்கள் காக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை சற்றே தளர்த்தினர். குறிப்பாக தொற்று பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அரசு மையத்தில் 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் என்பது 5 நாட்களாக குறைக்கப்பட்டது. வீட்டில் தனிமைப்படுத்துவது 3 நாட்களாக குறைக்கப்பட்டது. இரண்டாம் நிலை தொடர்பில் இருந்தவர்களை பதிவு செய்வதை விட்டு விட்டனர். பொத்தாம்பொதுவாக ஊரடங்குகளை பிறப்பிப்பது தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா அலை எழுச்சி பெற்றுள்ளது. 60 லட்சம் பேர் வசிக்கிற ஜெங்சூவ் நகரில் நேற்று (வியாழக்கிழமை) முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு வாங்கவும், சிகிச்சை பெறவும் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. வைரசுக்கு எதிரான அழிப்புப்போர் என்று அந்த நகர நிர்வாகம் அழைக்கிறது. மேலும் தினமும் பெருந்திரளான மக்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரமாக நடத்தப்படுகிறது.