சீனாவில் ஒரே நாளில் 31,000 பேருக்கு கொரோனா தொற்று – அச்சத்தில் உலகம் !

சீனாவின் வூகான் நகரில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று, உலக நாடுகளையெல்லாம் பாதித்தது.

 

நேற்று முன்தின நிலவரப்படி உலகமெங்கும் 63 கோடியே 95 லட்சத்து 78 ஆயிரத்து 239 பேரை கொரோனா பாதித்துள்ளது. இந்தத் தொற்றால் 66 லட்சத்து 25 ஆயிரத்து 979 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் அதிகபட்சமாக 9 கோடியே 85 லட்சத்து 3 ஆயிரத்து 462 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அங்கு 10 லட்சத்து 78 ஆயிரத்து 929 பேர் இறந்தனர்.

பல இடங்களில் கொரோனா கட்டுக்குள் வந்தாலும் கூட சீனாவில் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. அங்கு பல நகரங்களில் பொதுமுடக்கம் இருந்தாலும் தொற்று அவ்வப்போது எழுச்சி பெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றுமுன்தினம் அங்கு கொரோனா புதிய எழுச்சி பெற்றது. ஒரே நாளில் 31 ஆயிரத்து 527 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பி.பி.சி. தெரிவித்தது.

 

கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆயிரத்து 444 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார கமிஷன் நேற்று தெரிவித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதம் உச்சம் தொட்டபோது ஏற்பட்ட பாதிப்பை விட (28 ஆயிரம்) அதிகம் என்பது கோடிட்டுக்காட்டத்தக்கது. சீனாவில் ஒருவருக்குக்கூட கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலை வரவேண்டும் என்பது கொள்கை. இதன் காரணமாக அங்கு 140 கோடி மக்களின் உயிர்கள் காக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை சற்றே தளர்த்தினர். குறிப்பாக தொற்று பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அரசு மையத்தில் 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் என்பது 5 நாட்களாக குறைக்கப்பட்டது. வீட்டில் தனிமைப்படுத்துவது 3 நாட்களாக குறைக்கப்பட்டது. இரண்டாம் நிலை தொடர்பில் இருந்தவர்களை பதிவு செய்வதை விட்டு விட்டனர். பொத்தாம்பொதுவாக ஊரடங்குகளை பிறப்பிப்பது தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா அலை எழுச்சி பெற்றுள்ளது. 60 லட்சம் பேர் வசிக்கிற ஜெங்சூவ் நகரில் நேற்று (வியாழக்கிழமை) முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு வாங்கவும், சிகிச்சை பெறவும் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. வைரசுக்கு எதிரான அழிப்புப்போர் என்று அந்த நகர நிர்வாகம் அழைக்கிறது. மேலும் தினமும் பெருந்திரளான மக்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரமாக நடத்தப்படுகிறது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *