2010

2010

சுனாமியில் உயிரிழந்தோருக்கு நாளை இரு நிமிடம் மௌன அஞ்சலி.

141009tsunami.jpgநாளை 26ஆம் திகதி சுனாமியினால் உயிரிழந்தோர் நினைவு கூரப்படுகின்றனர். சுனாமியால் உயிரிழந்தோருக்கு நாடு முழுவதும் உள்ள மக்கள் இரு நிமிடம் மௌனம் கடைப்பிடிக்குமாறு இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது. காலை 9.25 முதல் 9.27 வரை மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, சுனாமி அனர்த்தத்தை நினைவு கூரும் முகமாக தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. பிரதமர் டி.எம்.ஜயரட்ண தலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Dec 22 2010
அம்பாறையில் சுனாமி நினைவு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

Tsunami_Rememberanceஎதிர்வரும் 26ஆம் திகதி அம்பாறை கரையோரப் பகுதிகளில் சுனாமி அழிவுகளை நினைவு கூரும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. சுனாமி ஏற்பட்ட ஆறாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் மக்களால் மேற்கொள்ளப்படவுள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளிலுள்ள தமிழ், முஸ்லிம் கிராமங்களில் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அன்றைய தினம் சுனாமியால் உயிரிழந்த உறவுகளுக்கு மக்கள் அஞ்சலி, பிரார்த்தனை ஆகியவற்றில் ஈடுபடுவர்.

அம்பாறை மாவட்டத்தின் கரையோரக் கிராமங்களான மருதமுனை, நீலாவணை. பெரிய நீலாவணை, பாண்டிருப்பு, கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தாவூர், தம்பட்டை, தம்பிலுவில், திருக்கோவில், பொத்துவில் ஆகிய கிராமங்களில் சுனாமியால் அதிகளவு மக்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட ஏனைய கரையோரப் பகுதிகளிலும் சுனாமியினால் உயிரிழந்த மக்களை நினைவு கூரும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். வாக்காளர் பட்டியலிலிருந்து 3லட்சம் பேர் நீக்கம்.

யாழ்.மாவட்ட வாக்காளர் பட்டியலிலிருந்து 3லட்சம் பேரின் பெயர்கள் தேர்தல் அதிகாரிகளால் நீக்கப்பட்டுள்ளது. 2010 ஆண்டிற்கான வாக்களர் பட்டியலிலிருந்தே இவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கடந்த யுத்த காலங்களில் பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதால் 3லட்சம் பேரின் பெயர்கள் வாக்களாளர் பட்டியிலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய மதிப்பீட்டின் படி யாழ்.மாவட்ட வாக்காளர்களின் தொகை ஐந்து இலட்சமாக இருக்கலாம் எனவும், அண்மையில் யாழ்.மாவட்டத்தில் மீள்குடியமர்ந்த முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் தொடர்ந்தும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு.

வடக்கில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் அதிகளவு மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பித்துள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்.குடா நாட்டிலும் வன்னிப் பகுதிகளிலும் தாழ்வான நிலப்பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்த நிலையிலுள்ளனர். வடக்கில் பல வீதிகளும் வெள்ளத்தால் மூழ்கியிருப்பதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நகைக்கடை வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து யாழ்.நகைக்கடைகள் நேற்று மூடப்பட்டன.

யாழ்ப்பாணத்திலுள்ள இரு நகைக்கடை உரிமையாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.நகைக் கடை உரிமையாளர்கள் கடையடைப்புச் செய்தனர்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை வவுனியாவிலிருந்து சிவில் உடையில் வான் ஒன்றில் யாழப்பாணம் வந்த பொலிஸ் குழுவினர் நகைத் திருடன் ஒருவனை அழைத்து வந்து பலவந்தமாக குறித்த இரு நகைக்கடை உரிமையாளர்களையும் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரால் அழைத்து வரப்பட்ட நகைத் திருடன் குறித்த நகைக் கடையில் விற்றதாக கூறிய நகைகளை விடவும் அதிகளவு நகைகளை திருப்பித் தருமாறு பொலிஸார் வற்புறுத்தியதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். திருட்டு நபரிடம் நகைகளை கொள்வனவு செய்யும் போது அவர் திருடன் என்று குறித்த நகைக்கடை உரிமையாளர்கள் அறிந்திருக்க வில்லை எனவும், முறைப்படி தேசிய அமையாள அட்டை பதிவு செய்யப்பட்டு, நகை கொள்வனவு செய்யப்பட்டது எனவும், பற்றுச்சீட்டும் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடையடைப்பைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் வணிகர் கழக்திற்கும் நகைக்கடை உரிமையாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்று நகைக் கடைகள் மீளவும் திறக்கப்பட்டன. வணிகர் கழகத்தின் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள் ஆகியோர் யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நேவின் பத்மதேவாவைச் சந்தித்து வவுனியா பொலிஸ் குழுவினரால் ஏற்படுத்தப்பட்ட சிக்கல்கள் குறித்து தெரிவித்தனர். இதனை எழுத்தில் முறைப்பாடாக தருமாறும் தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். இதேவேளை, நேற்று வெள்ளிகிழமை வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள் வவுனியா நீதிமன்றினால் பிற்பகல் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்திய வீடமைப்புத் திட்டம் தொடர்பாக இந்தியத்தூதரகம் அறிக்கை.

இந்தியாவினால் வடக்கில் இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிர்மாணித்து கொடுப்பதாக வாக்குறுதியளிக்கப்பட்ட 50 ஆயிரம் வீடமைப்புத் திட்டம் தொடர்பாக கடந்த சில தினங்களாக வெளியான செய்திகளுக்கு இந்தியத் தூதரகம் விளக்கமளித்துள்ளது.

வடமாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டே இத்திட்டம் முன்வைக்கபட்டது. கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களைச் சேர்ந்த மக்களின் தேவைகளையும் இது ஓரளவு உள்ளடக்குகின்றது. தளநிலைமையைக் கருத்தில் கொண்டு பெரும் எண்ணிக்கையான வீடுகளை புதிதாக நிர்மாணித்துக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. எனினும் தங்கள் வீடுகளைப் புனரமைக்க விரும்பும் குறைந்த எண்ணிக்கையினருக்கும் உதவி வழங்கப்படும்.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இப்பணிகள் முன்னெடுக்கப்படும். முதற்கட்டப் பணிகளின் அனுபவத்தை அடிப்படையாக வைத்து அடுத்த கட்டப் பணிகள் விஸ்தரிக்கப்படும். இடம்பெயர்ந்த மக்களுக்கு இருப்பிடங்களை அமைத்துக் கொடுக்கும் இத்திட்டத்தின் மூலம் குறித்த மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவதும் இந்திய அரசின் விருப்பமாகும் என கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இந்திய நிதியுதவியில் வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்காக நிர்மாணிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்ட ஐம்பதாயிரம் வீடுகளுக்கு பதிலாக ஐயாயிரம் வீடுகள் மட்டுமே புதிதாக கட்டப்படும் எனவும், மிகுதி 45ஆயிரம் வீடுகள் புனரமைப்பு செய்து கொடுக்கப்படும் எனவும் வெளியான ஊடகச் செய்திகளுக்கு விளக்கமளிக்கும் விதமாகவே இந்தியத் தூதரகத்தினால் இந்த அறிக்கை விடுக்கபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 100 முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுதலை.

தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருந்த 100 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இன்று சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். இன்று காலை வவுனியாவில் வைத்து பெற்றோர் உறவினர்களிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு இவர்கள் விடுதலை செய்யப்படுவதாக புனர்வாழ்வு மற்றும், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.

தேசம்நெற் இன் நல்லதொரு நண்பன் தமிழ் சமூகத்தை நேசித்த நல்லதொரு மனிதன் பேரின்பநாதன் காலமானார்!

Perinpanathan_EROSஈரோஸ் அமைப்பின் செயற்பாட்டாளரும் அரசியல் ஆர்வலருமான பேரி என அறியப்பட்ட பேரின்பநாதன் இன்று அதிகாலை காலமானார். தேசம்நெற் ஏற்பாடு செய்த பல சந்திப்புக்களுக்கு தலைமை தாங்கிய பேரின்பநாதன் முரண்பட்ட கருத்துக்களை உடையவர்களுடனும் நட்புடன் தனது கருத்துக்களை பரிமாறும் தன்மையால் அனைவராலும் நேசிக்கப்பட்டவர்.

இவருடைய மைத்துனர் பிரிஎப் இன் தலைவராக இருந்த சுரேன் சுரேந்திரன். அதுமட்டுமல்ல மற்றைய உறவுகளும் அவ்வாறான கருத்தையே கொண்டிருந்தனர். ஆனால் பேரின்பநாதன் மாற்றுக் கருத்தைக் கொண்டிருந்தவர். எப்போதும் தனது கருத்துக்களுக்காக உறுதியுடன் இறுதிவரை நின்றவர்.

யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான பேரின்பநாதன் லண்டனில் யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிளவுபட்ட போது அவற்றை மீண்டும் இணைப்பதற்கு கடும் முயற்சி எடுத்தவர். ஆயினும் அவை இணைந்து கொள்ளவில்லையானாலும் முரண்பாடுகளைத் தணிப்பதில் அவரது முயற்சி உதவியது.

இன்று அதிகாலை பேரின்பநாதனின் மறைவு அவரை அறிந்தவர்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

பேரின்பநாதன் பிரித்தானியாவில் உருவான ஈரோஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர். கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக லண்டனில் வாழ்ந்த இவர் தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்த போதும் அம்மக்களின் அரசியலுடன் தன்னை தொடர்ந்தும் ஒன்றிணைத்தவர். லண்டனில் உருவாக்கப்பட்ட ‘ஆவணி 02 புரிந்துணர்வுக் குழு’ வில் முன்நின்று அக்கூட்டங்களுக்கு தலைமை தாங்கியவர் பேரின்பநாதன்.

தேசம்நெற் நல்லதொரு நண்பனை தமிழ் சமூகத்தை நேசித்த நல்லதொரு மனிதனை இழந்துள்ளது. தேசம்நெற் நிர்வாகமும் ஆசிரியர் குழுவும் பேரின்பநாதனின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ் கட்சிகளின் அரங்கமும், கூட்டமைப்பும் இணந்து அமைத்துள்ள குழு மார்ச் மாதம் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை முன்வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்காக தமிழ் கட்சிகளின் அரங்கமும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் இணைந்து நியமித்த அறுவர் கொண்ட குழு எதிர்வரும் மார்ச் மாதம் தீர்வு யோசனை ஒன்றை முன்வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பிலுமிருந்து நியமிக்கப்பட்ட இக்குழுவினர் தீர்வுத்திட்டம் ஒன்றை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் மற்றும், மலையக கட்சிகளை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இணைத்துக் கொள்வது குறித்து ஆராயவேண்டியுள்ளதாலும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் தற்போது சுகவீனமுற்றிருப்பதாலும் எதிர்வரும் மார்ச் மாதத்திலேயே தீர்வுத்திட்டம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் என தமிழ் கட்சிகளின் அரங்கப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை காண்பதற்காக கடந்த 12ஆம் திகதி தமிழ் கட்சிகளின் அரங்கமும், தமிழ்தேசியக் கூட்டமைப்பும் இணைந்து இரு தரப்பிலுமாக ஆறு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதை விடவும் குற்றங்களுக்கான காரணிகள் களையப்பட வேண்டும் என யாழ்.அரச அதிபர் தெரிவிப்பு.

“தற்போது யாழ்.குடாநாட்டில் பல குற்றச்செயல்கள் இடம்பெற்று வருகின்றன. இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்படுவதை விடவும் அவர்கள் ஏன் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என ஆராய வேண்டும். இதற்கான காரணிகள் களையப்பட வேண்டும்” இவ்வாறு யாழ்.அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை யாழ்.திருமறைக் கலாமன்றத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ்.அலுவலகம் நடத்திய விருது வழங்கும் வைபவத்தில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னர் ஆயுதப் போராட்டத்திற்குள் வாழ்ந்தவர்கள் இப்போது ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து கொள்ள முடியாமலுள்ளனர். ஒவ்வொரு இளைஞனுக்கும் பொறுப்புகள் அதிகமுள்ளன. அவர்கள் தொழிலில்லாமல் இருக்கின்றனர். அவர்களின் வறுமை நீக்கப்பட வேண்டும். தற்போது யாழ்ப்பாணத்தில் 60 அரசசார்பற்ற நிறுவனங்கள் இயங்குகின்றன. வருடமொன்றிற்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் 100 இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்க முன்வரவேண்டும். பட்டதாரிகளாக பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறும் இளைஞர்கள் பலர் மாவட்டச் செயலகத்தில் சிற்றூழியர் நியமனமாவது கிடைக்க வேண்டும் எனக்கோரி கடிதங்களை அனுப்புகின்றனர். யாழ்.குடாநாட்டின் இளைஞர்களின் தொழில்வாய்ப்பின்மை இவ்வாறு தான் உள்ளது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

க.பொ.த பரீட்சையில் தோற்றியுள்ள 175 முன்னாள் புலி உறுப்பினர்கள் ஜனவரியில் விடுவிக்கப்படவுள்ளனர்.

தடுப்பு முகாம்களிலிருந்து தற்போது க.பொ.த.சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றியுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 175 பேர் எதிர்வரும் ஜனவரி மாதம் விடுவிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 13ஆம் திகதி ஆரம்பமான க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள 175 முன்னாள் புலி உறுப்பினர்கள் தோற்றியுள்ளனர். இவர்களில் 45பேர் பெண்களாவர். இவர்களை எதிர்வரும் ஜனவரி மாதம் முற்பகுதியில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ட்டு வருவதாக பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.