29

29

நாட்டை கட்டியெழுப்ப தமிழ், முஸ்லிம் சமூகங்கள் அரசுடன் கைகோர்க்க வேண்டும் – முன்னாள் எம்.பி. சுஹைர்

suha.jpgநாட்டைக் கட்டியெழுப்புவதற்காக எம்முடன் கைகோருங்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்திருக்கும் அழைப்பை தமிழ், முஸ்லிம் சமூகத்தினர் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் எம்.பி.யான எம். எம். சுஹைர் தெரித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அமோக வெற்றி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,

ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமோக வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியைத் தொடர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக எம்முடன் கைகோர்க்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.  இது நல்லதொரு சந்தர்ப்பம். இந்த சந்தர்ப்பத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் முஸ்லிம்கள் ஜனாதிபதியுடனும், ஆளும் கட்சியுடனும் இணைந்து செயற்படுவது மிகவும் அவசியம்.

வெகுவிரைவில் பொதுத் தேர்தல் நடைபெறவி ருக்கின்றது. அந்தத் தேர்தலிலும் ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கட்சியே அமோக வெற்றி பெறும். இந்த வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளர்களாக இணைந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக வும் ஸ்திரத்தன்மைக்காகவும், முஸ்லிம்கள் அரசுடன் இணைந்து செயற்படுவது அவசியம். முஸ்லிம்கள் எதிர்க்கட்சி சமூகமாக இருக்க முடியாது. முஸ்லிம் சமூகத்திற்கு பல தேவைகளும், பிரச்சினைகளும் உள்ளன. ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்படும் போதே அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். கடந்த தேர்தலில் ஸ்ரீல. மு. கா. முஸ்லிம்களை பிழையாக வழி நடாத்தி விட்டது. இனிமேலும் முஸ்லிம்கள் ஸ்ரீல. மு கா.வின் பசப்பு வார்த்தைகளில் மயங்கிவிடாது ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

தேர்தல் முடிவு திருப்தி அளிக்கிறது – ஐ. நா. செயலாளர் நாயகம்

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் வன்முறைகள் அற்ற நிலையில் நடந்து முடிந்திருப்பது திருப்தி அளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியுள்ளார். அத்துடன் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளை அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் முடிவுகள் தொடர்பான அக்கறைகள் இருப்பின் அவற்றை சமாதானமான முறையில் முன்னெடுத்துச் செல்லுமாறும் அவர் கூறியுள்ளார்.

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே செயலாளர் நாயகம் இவ்வாறு குறிப்பிட்டார். தேர்தல் பிரசாரத்தின் போது வன்முறைகள் அதிகரித்திருந்த தையிட்டு நான் கவலையடைந்தேன். எனினும் தேர்தல் தினத்தன்று ஒரு சில வன்முறை சம்பவங் களைத் தவிர அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்தது நிவாரணம் அளிக்கிறது என்று செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தைக் கலைக்க ஏற்பாடு: ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும் – அமைச்சர் மைத்திரி

pr-con.jpgபாராளு மன்றம் வெகு விரைவில் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான அறிவித்தல் இன்னும் ஓரிரு வாரங்களில் விடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெற்ற 60 வீத வாக்குகளை தக்கவைத்துக்கொண்டு எதிர்க் கட்சிக்கு வழங்கப்பட்ட 40 வீத வாக்குகளையும் வெற்றிகொள்ளும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொதுத் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுப்பதற்கு தேவையான நடவடிக் கைகளை உடனடியாக ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதை அடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த விஷேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை நடைபெற்றது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம் ஜயந்த், அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், ரிஷாத் பதியுதீன், சம்பிக ரணவக்க, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச ஆகியோர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் அமைச்சர் மைத்திரிபால மேலும் கூறுகையில்:-

தற்போதைய பாராளுமன்றத்தின் காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடையவுள்ளது. இந்நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் பொதுத் தேர்தல் ஒன்றுக்கான அறிவிப்பு வெகு விரைவில் விடுக்கப்படும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள் இன்னும் ஓரிரு தினங்களில் நடைபெறவுள்ளது.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் தகவல்களை திரட்டி பெயர்ப்பட்டியலை தயாரிக்கும் நடவடிக்கைகள் நேற்று (இன்று) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் இதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளேன் என்றார். மக்கள் எதிர்பார்க்கும் வளமான எதிர்காலம் நிச்சயம் உருவாக்கப்படும். மஹிந்த சிந்தனையில் கூறப்பட்டமை நிறைவேற்றப்படும். உலகிலேயே வளமான நாடாக மாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எம்மீது நம்பிக்கை வைத்துள்ள மக்கள் 60 வீத வாக்குகளையும் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு 40 வீத வாக்குகளையும் வழங்கியுள்ளனர். எஞ்சிய 40 வீதத்தை பெற முடியாமல் போன காரணங்கள் ஆராயப்பட்டு அந்த குறைகளை நிவர்த்தி செய்துகொண்டு ஜனநாயக முறையிலான அரசியலின் மூலம் எஞ்சிய 40 வீத வாக்குகளையும் எமது வெற்றிக்காக பெற்றுக்கொள்ள முயற்சிப்போம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த நாட்டை முன்னேற்ற எதிர்க்கட்சியின் 40 வீத வாக்காளர்களும் எம்முடன் கைக்கோர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார். சரத் பொன்சேக்கா தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி வருகிறார். அவருக்கு நாங்கள் ஒன்றும் செய்யப்போவதில்லை, இதற்கான தேவையில்லை.

எமது கூட்டங்களில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டனர். ஆனால் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது. இது நீதியான தேர்தல் இல்லை என்று சரத் பொன்சேகா தெரிவித்தார். இதன் மூலம் அரசியல் தெரியாதவர் என்பதை தெளிவாக காண்பிக்கின்றது என்றார். மக்கள் விடுதலை முன்னணி இம்முறை தவறான முடிவுகளை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஊர்வலம், கூட்டம் ஒரு வாரத்துக்கு தடை; வன்முறைகளை தடுக்க பொலிஸார் உஷார் நிலையில்

தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகளை தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் பொலிஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டு ள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணாரத்ன தெரிவித்தார்.

தேர்தலுக்குப்பின் ஓரிரு சிறு அசம்பாவிதங்களே நடைபெற்றதாகவும், வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிரான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் தினத்தில் இருந்து ஒருவாரத்துக்கு ஊர்வலங்கள் செல்வது, கூட்டங்கள் நடத்துவது, வரவேற்பு நிகழச்சிகள் நடத்துவது தேர்தல் சட்டத்தின் பிரகாரம் முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளது. நாடு பூராகவும் அமைதியான நிலை காணப் படுவதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நாட்டில் தொடர்ந்து அமைதி நிலையை பேண சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கோரினார்.

தேர்தலுக்குப் பிந்திய வன்முறைகளைத் தடுப்பது தொடர்பாக சகல பொலிஸாருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. வன்முறைகள் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை. தேர்தலுக்குப் பின்னர் இடம்பெற்ற ஓரிரு சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடு க்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஹெயிட்டியில் உணவுக்காக மக்கள் மோதல்

haitibuidling-pd.jpgமத்திய அமெரிக்காவில் உள்ள ஹெயிட்டி நாட்டில் கடந்த 12ம் திகதி பூகம்பம் ஏற்பட்டது. இதில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். தலைநகர் போர்ட் ஆப் பிரின்ஸ் நகரில் பெரும்பாலான வீடுகள், கடைகள், கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

வீடுகளை இழந்த லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வெளிநாடுகள் உணவு பொருட்களை வழங்கி வருகின்றன. அவற்றை பெறுவதில் மக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மோதலை கட்டுப்படுத்த முடியாததால், பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஐ.நா. அமைதிப்படையினர், கண்ணீர் புகைக்குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதைத் தொடர்ந்து கூட்டம் கலைந்து சென்றது.