30

30

நாடு கடந்த தமிழீழ அரச உருவாக்கம் குறித்த அனைத்துலக மாநாடு

இலங்கை எதிர்நோக்கும் சிக்கல்களுக்கும், வாய்ப்புகளுக்கும், மக்களாட்சிக்கும், அமைதிக்குமான தேடலையொட்டிய அனைத்துலக மாநாடு 2010, ஜனவரி, 21ம் தேதி வியாழக்கிழமை காலை 9.00 மணி தொடங்கி மாலை 4.30 மணி வரை Hotel Radisson  மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் கனடியத் தமிழர் அமைப்பகத்தால் (Canadian Tamils Forum) ஏற்பாடு செய்யப்பட்டது.
 
தமிழரின் வாழ்வியல் பாதுகாப்பு பற்றி வரலாற்று அடிப்படையில் ரொறொன்ரோ பல்கலைக்கழகப் பேராசிரியர், அருட்தந்தை யோசப் சந்திரகாந்தன் உரை நிகழ்த்தினார். அவரது உரையில் 1920களிலிருந்து தமிழர்கள் சிங்களவர்களால் ஏமாற்றப்படுவதை எதிர்த்து சேர். பொன். இராமநாதனும் அவரது தம்பி சேர். பொன். அருணாசலமும் ஓங்கிக் குரலெழுப்பினார்கள் என்பதைக் குறிப்பிட்டிருந்தார். இவர் கூற்றுக்கு வலுவூட்டுகின்ற வகையில் அருணாசலம் தமிழ் பேரவையை உருவாக்கியதையும் அவரின் அண்ணா இராமநாதன் டொனமூர் எனின் இனிமேல் தமிழர் இல்லையென்று எச்சரித்ததைப் புள்ளிவிபரங்களுடன் ஈழவேந்தன் கேள்வி நேரத்தின் போது சுட்டிக்காட்டினார்.
பெண்களும் குழந்தைகளும் சிங்கள இராணுவத்தினால் துன்புறுத்தப்பட்ட நிகழ்ச்சிகளை சுவீடன் நாட்டுப் பேராசிரியர் பீற்றர் சால்க் விளக்கினார். படிப்படியாக இலங்கையில் சட்ட ஒழுங்கு முறைமை சீரழிந்ததை  கனடா நாட்டின் பழமைவாதக் கடசியைச் சேர்ந்த சங் கொங்கல் நுணுக்கமாக விளக்கினார்.
 
கனடியச் சட்டத்தரணி ஜோன் லீகே கனடாவில் சட்ட ஒழுங்குகள் எவ்வாறு கனடாவின் பூர்வீகக்குடிகளை முன்பு கையாண்டிருந்தது என்றும் பின்பு அவ்வாறான அணுகுமுறைகள் எவ்வாறு மாற்றம் பெற்றன என்பதை விளக்கினார். அத்துடன் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கனடா எவ்விதம் தீர்மானகரமான  பங்கை வழங்க முடியும் என்பதைப் பற்றியும் பேசினார். அரச அதரவோடு நடைபெறும் அடக்குமுறையை மக்களாட்சிக் கிளர்ச்சியூடாக எவ்விதம் எதிர்கொள்ளலாம் என்பதைப் பற்றி ஆராய்ந்தார் அமெரிக்கப் பேராசிரியர் றோபேட் ஓபேஸ்ற்.
நாடு கடந்த தமிழீழ அரசின் நடைமுறைச் சாத்தியம் மற்றும் பொறுப்புகள் பற்றி பேராசிரியரும், கவிஞருமான சேரன் பல கோணங்களிலிருந்து ஆராய்ந்து அவையோரை ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து   ஜேர்மன் நாட்டுப் பேராசிரியர் ஜோன். நீல்சன் நிகழ்த்திய உரை நடைமுறையில் இவ்வாறான அரச உருவாக்கம், அதற்கான சொல்லாடல்கள் எச்சரிக்கையாகக் கையாளப்பட வேண்டியதன் அவசியங்களை முன் நிபந்தனைகளாகத் தர்க்கித்தது சுவையான விவாதத்தைக் கிளப்பியது.
 
அமெரிக்கச் சட்டத்தரணி ஜெயலிங்கம் ஜெயப்பிரகாஸ் நாடு கடந்த தமிழீழ அரச கட்டுமானத்தை உருவாக்குது பற்றிய ஆளுகைத் திட்டம் கொண்டுள்ள விதி முறைகள் குறித்துப் பேசினார். வேறு கூட்டங்களுக்குச் செல்ல வேண்டியிருந்ததனால் மாநாட்டின் இடைநடுவின் போது பேசிய NDP கட்சியின் தலைவர் ஜாக் லேற்றன் தனது உரையின் போது இம்மாநாடு எடுக்கும் முடிவுகள் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியினை வென்றெடுக்க உறுதுணை புரியும் என்று கூறினார். கனடிய பழமைவாதக்கட்சியின் மத்திய அரசாங்கத்துக்கான அமைச்சர் யேசன் கனி மாநாட்டில் கலந்து கொள்ள முடியாத காரணத்தால் அவருடைய செயலாளர் ஒருவரை மாநாட்டுக்கு அனுப்பித் தனது வாழ்த்தினைத் தெரிவித்திருந்தார். மாநாட்டுக்கு வருகை தந்திருந்த மக்களில் பலர் மாநாட்டில் இடம்பெற்ற உரைகள், கலந்துரையாடல்கள் குறித்துப் பெரிதும் திருப்தி கொண்டிருந்ததை  அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

டக்ளஸ் ராஜினாமா? : “வேண்டாம்…” – மக்கள் ஹர்த்தால்

douglas.jpgநடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கில் பெரும்பான்மையான வாக்குகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்குக் கிடைக்கவில்லை. அதனால் ஜனாதிபதிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதவி விலகுவதாக தீர்மானித்திருந்தார். இதனைக் கண்டிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தின் சமூக அமைப்புகள் இணைந்து இன்று காலை முதல் ஹர்த்தால் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. ஜனாதிபதியிடம் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே நாம் ஆதரவு வழங்கினோம். எனினும் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். ஜெனரல் சரத் பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் பாரிய மாற்றம் எதனையும் தமிழ் மக்கள் காணப்போவதில்லை. இந்நிலையை சிந்தித்தே நான் ராஜிநாமா செய்வதற்குத் தீர்மானித்தேன். அரச துறையில் ஈடுபட்டுவந்த என் சார்ந்த ஏனையோரும் ராஜிநாமா செய்யத் தீர்மானித்தனர்.
 
இதனை ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தியதும், அவசர முடிவு எடுக்க வேண்டாம் என்றும் தன்னை நேரில் வந்து சந்திக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்” ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் அமைச்சர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வது தொடர்பாக மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

லங்கா பத்திரிகைக்கு சீல்

lankairida.jpgஜேவிபியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான ‘லங்கா” சிங்கள வாரப் பத்திரிகை காரியாலயம் சற்று முன் குற்றவியல் தடுப்பு பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நேற்று மாலை பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சந்தன சிறிமல்வத்த  குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்பத்திரிகையின் கடந்த வார இதழில் வெளியாகியிருந்த கட்டுரையொன்று தொடர்பில் விசாரணை நடத்தும் பொருட்டே அவர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை வெளியான லங்கா பத்திரிகையில் சத்மெத லங்கா (உண்மைக்கு மத்தியில் இலங்கை) என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் அரசாங்கத்தின் உயரதிகாரி ஒருவர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து விளக்கமளிக்குமாறு அதன் ஆசிரியர் சிறிமல்வத்தவை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்றுக் காலை அறிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே பத்திரிகை ஆசிரியர் நேற்று மாலை கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மஹிந்த சிந்தனையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன்

Suresh_Piremachandranமஹிந்த சிந்தனையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியுள்ளன என்று பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை முடிவை ஏற்று, அதற்கு ஆதரவாக வாக்களித்த அனைத்துத் தமிழ் மக்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை முடிவை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்ற கூட்டமைப்பு நண்பர்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் கடுமையாக உழைத்த இளைஞர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது நன்றியை அறிவித்துக் கொள்கின்றது.

யுத்தத்தில் வென்றதற்குப் பரிசாக சிங்கள மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்திருக்கலாம். அல்லது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது போலத் தேர்தல் முடிவுகள் மோசடி செய்யப்பட்டதாகவும் இருக்கலாம். ஆனால் மஹிந்த ராஜபக்ஷவின் நான்கு வருட ஆட்சியில் தலைவிரித்தாடிய தமிழின விரோத நடவடிக்கைகளையும் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைத் தமது வாக்குகளின் மூலம் தெட்டத் தெளிவாகத் தெரியப்படுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களையும் இந்நாட்டுக் குடிமக்களாகக் கருதி அவர்களையும் அணைத்துச் செல்ல விரும்பினால் அவரது சிந்தனையில் மாற்றம் வேண்டும் என்பதைத் தமது வாக்குகளால் உணர்த்தியுள்ளார்கள். அது மாத்திரமல்லாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் என்பதையும் வடகிழக்கு என்பது தமிழ் மக்களின் பிரிக்கப்பட முடியாத தாயகம் என்பதையும் தமிழ் மக்கள் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.

சிங்கள மக்கள் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்திருந்தால் இலங்கைத் தீவில் ஒரு மாற்றத்தை உருவாக்கியிருக்க முடியும். ஆனால் மாற்றம் என்பதை விடவும் யுத்த வெற்றி குறித்த பிரமையே சிங்கள மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது. இதையிட்டு தமிழ் மக்கள் சோர்வடைய வேண்டியதில்லை. சரத் பொன்சேகா தோல்வியடைந்து விட்டார் என்ற காரணத்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவு தவறானது எனக் கருத வேண்டியதுமில்லை. அப்படிச் சிலர் தெரிவிப்பதானது, அவர்களது அரசியல் முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடே தவிர வேறல்ல.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை முடிவிற்கு மாறாக, ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட வேட்பாளரையும் தமிழ் மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர். இதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைச் சீர்குலைக்க முயலும் சுயநல சக்திகளுக்குத் தமிழ் மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர். வாக்களிப்புக் கடமையைச் சரிவர நிறைவேற்றிய தமிழ் மக்களுக்கு நெஞ்சார நன்றி கூறும் அதேசமயம் தமிழ் மக்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்யவும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக உழைக்கும் எனவும் தெரிவித்துக் கொள்கின்றது.

பஹ்ரைன் தீ விபத்தில் இலங்கைப் பெண்கள் மூவர் பலி!

பஹ்ரெய்னில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவமொன்றில் இலங்கைப் பெண்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையாளர் எல்.கே. ரு{ஹணகே தெரிவித்துள்ளதாக இணையத் தளம் ஒன்று செய்தி வெளியொட்டுள்ளது. பிலியந்தல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண்களே இவ்வாறு உயிரிழந்திருப்பதாகவும்,  இவர்கள் மூவரும் உறவினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மின்சார ஒழுக்கினால் தீ விபத்து ஏற்பட்டதாகவும்,  சுவாசப் பிரச்சினை காரணமாக இவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்களை இலங்கைக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

62 வது சுதந்திர தின வைபவம் கண்டியில்

flag.jpgபெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி இலங்கையின் 62 ஆவது சுதந்திர தின வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை பிரதேசத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏகநாயக்க தெரிவித்தார்.

பொலிஸாரினதும் முப்படையினர்களதும் கண் காட்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் விசேடமாக இடம் பெறவுள்ளன. இதேவேளை “தேசத்தின் மகுடம்” கண்காட்சியும் கண்டி பள்ளேகலையில் அன்றைய தினம் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

நாட்டு மக்களின் நன்றியுணர்வை உலகுக்கு எடுத்துக்காட்டிய வெற்றி – மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் ஜனாதிபதி

mahindaநாட்டு மக்களின் நன்றி மனப்பான்மையை உலகுக்கு எடுத்துக் காட்டும் வெற்றி இதுவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மீண்டுமொருமுறை தம்மீது நம்பிக்கை வைத்து மகத்தான வெற்றியைப் பெற்றுத்தந்த நாட்டு மக்களுக்கு தமது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததன் பின்னர் தேசிய ரீதியில் நடைபெற்ற முதலாவது தேர்தல் இதுவெனக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி வடக்கு, கிழக்கு உட்பட நாட்டு மக்கள் சகலரும் இவ்வெற்றியில் பங்கேற்றுள்ளனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தேர்தல் வெற்றியின் பின்னர் நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

இத்தேர்தலை நீதியும் சுதந்திரமானதாகவும் நடத்த முடிந்துள்ளமையையிட்டு நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன். இதனால் இத் தேர்தல் முடிவை எவரும் மாசுபடுத்த முடியாது. தற்போது நாம் வெற்றியடைந்தாயிற்று. இவ்வெற்றியினூடாக நாட்டு மக்கள் தமது நன்றி மனப்பான்மையை உலகுக்குக் காட்டியுள்ளனர்.

தோல்வியில்லாத இடத்திலிருந்தே உண்மையான வெற்றி உருவாகிறது. இதனடிப்படையில், இவ்வெற்றி நம் அனைவரினதும் வெற்றியாகும். இதனை அமைதியாகக் கொண்டாடுமாறு நான் நாட்டு மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். சட்டம் சகலருக்கும் சமமானது. சட்டம் சட்டத்தினால் பாதுகாக்கப்படுகிறது. சட்டத்தை மதிக்கின்ற அபிவிருத்தியில் முன்னேற்றமடைந்த நாடொன்றை நாம் எதிர்கால சந்ததிக்காக உருவாக்குவோம். இத் தேர்தலில் வாக்களித்த சகலருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் எத்தகைய எதிர்பார்ப்புகளுடன் வாக்களித்தார்களோ அதனை நான் இனங்கண்டுள்ளேன்.

தேர்தல் ஆணையாளர் மற்றும் செயலக அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த அரச அதிகாரிகள், பொலிஸார் மற்றும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்தோர், சகல ஊடக நிறுவனங்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டெங்கு மீண்டும் தீவிரம்: ஜன. 25 வரை 2592 பேர் பாதிப்பு விழிப்புடன் இருக்குமாறு சுகாதார அமைச்சு எச்சரிக்கை

நாட்டின் சில பிரதேசங்களில் டெங்கு காய்ச்சல் மீண்டும் தீவிரமடைய ஆரம்பித்திருப்பதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.

ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 25ம் திகதி வரையும் 2592 பேர் இக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களாகப் பதிவாகியுள்ளனர் எனவும் அவ்வட்டாரங்கள் கூறின. இருந்தபோதிலும் கடந்த வருடம் டெங்கு காய்ச்சலுக்கு 34 ஆயிரத்து 896 பேர் உள்ளாகியுள்ளனர். இவர்களில் 345 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டன.

இது தொடர்பாக அவ்வட்டாரங்கள் மேலும் கூறுகையில்,

நாட்டின் சில பிரதேசங்களில் டெங்கு காய்ச்சல் மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ளது. அவற்றில் கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களிலும் இந்நோய் வேகமடைந்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் 25ம் திகதி வரையும் கொழும்பு மாவட்டத்தில் 339 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 381 பேரும், யாழ். மாவட்டத்தில் 351 பேரும், வவுனியா மாவட்டத்தில் 259 பேரும் இக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களாகப் பதிவாகியுள்ளனர்.

ஆகவே சுற்றாடலை சுத்தமாகவும், நீர்தேங்க முடியாதபடி உலர் நிலையிலும் வைத்திருப்பதில் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். டெங்கு காய்ச்சல் நுளம்புகளால்தான் பரப்பப்படுகின்றது. அதனால் நுளம்புகள் பல்கி பெருக முடியாதபடி கழிவுப் பொருட்களை முறையாக அகற்றி சுற்றாடலை சுத்தமாகவும் உலர் நிலையிலும் வைத்திருப்பது அவசியம் என்றார்.