21

21

மஸ்ஜிதுகளை வாக்கு கேட்கும் மேடைகளாக்க வேண்டாம் – நியாஸ் மெளலவி

niyas.jpg‘மஸ்ஜி துகளை தேர்தல் வாக்குக் கேட்கும் மேடைகளாக ஆக்க வேண்டாம்’ என  நியாஸ் மெளலவி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-

மஸ்ஜிதுகள் புனிதமானவை. அது இறை இல்லம். தேர்தல் காலங்களில் தான் விரும்பிய கட்சிகளை தெரிவு செய்து வாக்களிப்பது ஜனநாயக உரிமை. விரும்பிய அபேட்சகர் ஒருவருக்கு எமது ஒத்துழைப்பை வழங்குவதும் ஜனநாயக உரிமை மாத்திரமல்ல அது மனித உரிமையும் கூட. ‘மஸ்ஜிதுகளை தேர்தல் வாக்குக் கேட்கும் மேடைகளாக ஆக்க வேண்டாம்’ என ஜனாதிபதியின் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளர் நியாஸ் மெளலவி தெரிவித்தார்.

2010 ஜனவரி 27ல் இலங்கையின் 6வது ஜனாதிபதி ஜெனரல் சரத் பொன்சேகாவா? : த ஜெயபாலன்

MR_Postersஜனவரி 26ல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இரு பிரதான வேட்பாளர்களில் எவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார் என்பது பல லட்ச ரூபாய்களுக்கான கேள்வியாக உள்ளது. இரு வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவது தற்போது ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.  2005 நவம்பர் தேர்தலுக்குப் பின்னான சில மாதங்களுக்கு உள்ளாகவே மாவிலாறு அணையைத் தடுத்து வலிந்த யுத்தத்திற்கு அழைப்பு விட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் 2009 நடுப்பகுதியில் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் 2010 தேர்தல் இடம்பெறுகின்றது. 1982 முதல் 2005 வரை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் மக்கள் வாக்களித்த முறையைப் பார்க்கும் போது பின்வரும் விடயங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.

1982_P_Election_SL , 1988_P_Election_SL , 1994_P_Election_SL , 1999_P_Election_SL , 2005_P_Election_SL

1. யாழ்ப்பாண மக்கள் பெரும்பாலும் ஜனாதிபதித் தேர்தலில் மிகக்குறைந்த வீதமாகவே வாக்களித்து உள்ளனர். 1982 தேர்தலிலேயே ஆகக் கூடுதலாக 50 வீதத்திற்கும் சற்றுக் குறைவாக வாக்களித்து உள்ளனர். அதன் பின்னர் இடம்பெற்ற தேர்தல்களில் 1988, 1999 தேர்தல்களில் 20 வீதமானவர்களே வாக்களித்து உள்ளனர். 1994ல் இடம்பெற்ற தேர்தலில் 3 வீதமும் 2005 தேர்தலில் ஒரு வீதமானவர்களுமே வாக்களித்துள்ளனர்.

1982  தேர்தல் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றை நிர்ணயித்த மிக முக்கியமான காலத்தில் நடந்த மிக முக்கியமான ஜனாதிபதித் தேர்தல். மிக மோசமான இனவாதத்தை கக்கிக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அளிக்கப்பட்ட வாக்குகளில் 20 வீதத்தை தக்க வைத்துக் கொண்டது. 35 வீதமான வாக்குகள் சிறிலங்கா சுதத்திரக் கட்சிக்கும் 40 வீதமான வாக்குகள் தமிழ் கொங்கிரஸிற்கும் கிடைத்தது.

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இலங்கையில் திட்டமிட்ட முறையில் இன ஒடுக்குமுறையை ஸ்தாபனமயப்படுத்தியது ஐக்கிய தேசியக் கட்சி. சிங்களவனின் முதுகுத் தோலில் செருப்புத் தைப்போம் போன்ற வீர வசனங்களைக் கக்கிக் கொண்டிருந்த தமிழீழக் கோரிக்கையை முன் வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணி அன்றும் ஐக்கிய தேசியக் கட்சியை நிராகரிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்ளவில்லை. மாறாகத் தேர்தல் முடிவுவரை மௌனமாக இருந்துவிட்டு தேர்தலுக்கு அண்மையாக விடுமுறையில் வெளிநாடு சென்றனர். தேர்தலுக்கு முதல் நாள் வெளியான பத்திரிகைச் செய்தி தமிழர் விடுதலைக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பதாக தெரிவித்தது. தேர்தலுக்குப் பின் நாடு திரும்பியவர்கள் அத்தவறான செய்திக்கு எதிராக சட்டநடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எடுக்கவும் முடியவில்லை. ஏனென்றால் அதுவொரு திட்டமிட்ட தவறு.

2. தமிழ் பகுதிகளில் வாக்களிக்கப்பட்ட முறையைப் பார்க்கையில் யாழ்ப்பாணத்தில் வாக்களிக்கப்பட்ட முறை வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளில் வாக்களிக்கப்பட்ட முறையுடன் ஒத்திருக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தல்களில் யாழ்ப்பாண மக்கள் கூடுதலாக ஆதரவு தெரிவித்த வேட்பாளருக்கு அல்லாமல் அடுத்த வேட்பாளருக்கே வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளில் வாக்களிக்கப்பட்டு உள்ளது.

1991 வரை யாழ்ப்பாணம், வன்னி தேர்தல் தொகுதிகள் சிறுதொகையான முஸ்லீம் மக்களைக் கொண்டிருந்தாலும் அவற்றை ஒற்றையினச் சமூகமாகவே பார்க்க முடியும். மட்டக்களப்பு தமிழ் – முஸ்லீம் சமூகங்களைக் கொண்ட ஒரு தேர்தல் தொகுதியாக உள்ளது. திருகோணமலை பெரும்பாலும் தமிழ் – முஸ்லீம் – சிங்கள இனங்கள் வாழுகின்ற மூவினங்களின் தேர்தல் தொகுதியாக உள்ளது. திகாமடுல்ல சிங்கள – முஸ்லீம் சமூகங்களைக் கொண்ட தேர்தல் தொகுதியாக உள்ளது. இவ்வகையான இனப்பரம்பலின் பின்னணியிலேயே ஜனாதிபதித் தேர்தல் நோக்கப்படும்.

யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கு, கிழக்கின் ஏனைய பகுதிகளில் மக்கள் வேறுபட்ட முறையில் வாக்களித்து இருப்பது ஓரளவு அப்பகுதிகளின் இனப்பரம்பலுடன் தொடர்புபட்டு இருந்தாலும் குறிப்பாக வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்கள் யாழ்ப்பாணத்தைப் போன்ற தமிழ் மக்கள் செல்வாக்குள்ள தேர்தல் தொகுதிகள். அப்படி இருந்தும் யாழ்ப்பாணத்தில் வாக்களிக்கப்பட்ட முறையில் இருந்து வன்னி மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளில் வாக்களிக்கப்பட்ட முறை வேறுபட்டு இருப்பது மாறுபட்ட அரசியல் பார்வையை வெளிப்படுத்தி உள்ளது.

1982, 1988, 1999 ஆகிய மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் 20 வீதத்திற்கும் அதிகமாக தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தில் மட்டும் 1999ல் 19.18 வீதமான மக்களே வாக்களித்து இருந்தனர். 1994, 2005 ஜனாதிபதித் தேர்தல்களின் போது யாழ்ப்பாணத்தில் முறையே 2.97 வீதமும் 1.21 வீதமும் ஆனவர்களே வாக்களித்து இருந்ததால் அத்தரவுகளை ஒப்பீட்டுக்கு பயன்படுத்துவதைத் தவிர்த்து உள்ளேன்.

1982, 1988 ஜனாதிபதித் தேர்தல்களின் போது யாழ்ப்பாணத்தில் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியைவிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கூடுதலான வாக்குகளைச் செலுத்தி இருந்தனர்.

1982ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியைவிட யாழ்ப்பாணத்தில் 15 வீதமான வாக்குகளை அதிகம் பெற்றிருந்தது. ஆனால் வடக்கு கிழக்கின் ஏனைய தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைவிட 15 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தது.

1988ல் இந்த முரண்பாடு இன்னும் அதிகமானதாகக் காணப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியைவிட 8 வீதமான வாக்குகளை அதிகம் பெற்றுக் கொள்ள வன்னி, மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைவிட 30 வீதமான வாக்குகளை அதிகம் பெற்றுக்கொண்டது.

1999ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியைவிட 3 வீதம் அதிக வாக்குகளை யாழ்ப்பாணத்தில் பெற்றுக் கொண்டது. ஆனால் வன்னி மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைவிட முறையே 45 வீதமும் 25 வீதமும் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுதந்திரமாக இடம்பெற்ற இத்தேர்தல்கள் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தெரிவில் இருந்த வேற்றுமையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

3. யாழ்ப்பாண வாக்காளர்களுக்கும் தென்னிலங்கை வாக்காளர்களுக்கும் இடையேயும் ஒரு முரண்நகையான உறவுள்ளது. யாழ்பாண வாக்காளர்களின் தெரிவுக்கு மாறாகவே இலங்கையின் அரசுத் தலைவர் தெரிவு செய்யப்பட்டு உள்ளார். 1982, 1988 ஜனாதிபதித் தேர்தலின் போது யாழ்ப்பாண வாக்காளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரை ஆதரித்த போது ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஆனால் 1994இல் யாழ்ப்பாணத்தில் குறைந்தளவு வீதத்தினரே வாக்களித்திருந்த போதும் சமாதானத்தின் பெயரில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளருக்கு 95 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சந்திரிகா குமாரதுங்க யாழ் வாக்காளர்களாலும் தென்னிலங்கை வாக்காளர்களாலும் சமாதானப் புறாவாகத் தெரிவு செய்யப்பட்டார்.

1999ல் யாழ் வாக்காளர்கள் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களுக்கு தெளிவான சமிஞ்சையை வழங்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி 43 வீதமான வாக்குகளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 46 வீத வாக்குகளையும் பெற்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சந்திரிகா குமாரதுங்க இரண்டாவது தடவையாக ஜனாதிபதியானார்.

2005 தேர்தலில் யாழ்ப்பாண வாக்காளர்களுடைய விருப்பத்திற்கு மாறாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானார். இத்தேர்தலில் தமிழ் மக்களுடைய வாக்களிக்கும் உரிமையை தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமாகத் தடுத்தமையினால் தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. அவர்கள் சுதந்திரமாக தங்கள் வாக்குகளை அளிக்க அனுமதிக்கப்பட்டு இருந்தால் அன்று மகிந்த ராஜபக்ச தோல்வி அடைந்திருக்கலாம்.

மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரத்துடன் யாழ்  – சிங்கள வாக்காளர்களுக்கு பொதுவாக இல்லாத தேர்தல் விஞ்ஞாபனத்துடன் நடத்தப்பட்ட முதல் இரு ஜனாதிபதித் தேர்தல்களும் யாழ்  – சிங்கள வாக்காளர்களின் தெரிவில் பாரிய வேறுபாட்டைக் காட்டி நிற்கின்றன. யாழ் வாக்காளர்களுடைய தெரிவுக்கு மாறாகவே இலங்கையின் ஜனாதிபதியை இலங்கையர்கள் தெரிவு செய்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் பகுதிகளைப் பொறுத்தவரை 2010 தேர்தலுடன் ஓரளவு ஒப்பிடக் கூடிய தேர்தலாக 1982 ஜனாதிபதித் தேர்தலை எடுத்துக் கொள்ள முடியும். பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழ் பகுதிகளுக்கு விஜயம் செய்வது, தமிழ் மக்களுடைய நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக வெளியிடப்படும் அறிக்கைகள், தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட தமிழ் ஆயுதக் குழுக்கள் பலவீனப்பட்டு உள்ள நிலைமை, தமிழ் வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவது என்பன இத்தேர்தலை 1982 தேர்தலுடன் ஒப்பிடக் கூடிய நிலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 1982ல் தமிழர் விடுதலைக் கூட்டணி ஜிஜி பொன்னம்பலத்தை ஆதரிக்கவில்லை. அதே போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம் கெ சிவாஜிலிங்கத்தை ஆதரிக்கவில்லை. 1982 ஜனாதிபதித் தேர்தல் போன்று மும்முனைகளில் தமிழ் பகுதிகளின் வாக்கு பதியப்படும். ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக் கூட்டு, தமிழ் வேட்பாளர் என வாக்குகள் செலுத்தப்படும்.

இந்தப் பின்னணியிலும் கடந்த கால தேர்தல் முடிவுகளில் இருந்தும் பின்வரும் முடிவுக்கு வர முடியும். ஆனால் இது முடிந்த முடிவாக அமைய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
1. 1982 தேர்தலைப் போன்று 2010 தேர்தலிலும் தமிழ் மக்களுடைய வாக்குகள் மும்முனைகளில் செலுத்தப்படும்.
2. தமிழ் வேட்பாளரான எம் கெ சிவாஜிலிங்கம் கணிசமான தமிழ் வாக்குகளைப் பெறுவார். ஆனால் அவரது வாக்குகள் ஜனாதிபதித் தெரிவுக்காக மற்றுமொரு வாக்குக் கணக்கெடுப்பை ஏற்படுத்தும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே.
3. இரு பிரதான வேட்பாளர்களில் யாழ்ப்பாணத்தவர்கள் மத்தியில் பொன்சேகா விருப்பத்திற்கு உரியவராக உள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அவரை வெளிப்படையாக ஆதரிக்கின்றது.
4. யாழ்ப்பாணத்தவர்களின் அரசியல் தெரிவில் இருந்து மாறுபட்ட தெரிவையே வடக்கு கிழக்கின் ஏனைய பாகங்களில் உள்ளவர்கள் மேற்கொள்வதால் வடக்கு கிழக்கின் ஏனைய பாகங்களில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான நிலை இருக்கும்.
5. யாழ்ப்பாணத்தவர்களின் தெரிவுக்கு மாறாகவே இலங்கையின் ஜனாதிபதி வெற்றி பெற்றிருப்பதால் 2010 ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மை வாக்குகள் ஜெனரல் பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்டால் அவர் நாட்டின் ஜனாதிபதியாவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.

கடந்தகால தேர்தல்களில் தமிழ் மக்கள் வாக்களித்த முறையைக் கீழுள்ள இணைப்புகளில் காணலாம்:

1982_P_Election_SL

1988_P_Election_SL

1994_P_Election_SL

1999_P_Election_SL

2005_P_Election_SL