09

09

சனல்4 விவகாரத்தால் எழுந்துள்ள சவாலுக்கு முகம் கொடுக்க அரசு தயார் – வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு

lankashootingvideo.jpgவடபகுதி மோதல்களின் இறுதிக்கட்டத்தின் போது பதிவு செய்ததாகக் கூறப்படும் சனல் 4 ஒளிப்பதிவு குறித்து நீதிவிசாரணைக்கு புறம்பான அல்லது தன்னிச்சையான மரணதண்டனை விவகாரங்களைக் கையாளும் ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்ரனின் கருத்துகளை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதுடன், இக்குற்றச்சாட்டுக் குறித்து உள்ளக விசாரணைகளை மேற்கொள்ளவும் தயாரெனவும் அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம சனல் 4 ஒளிப்பதிவு குறித்து பேராசிரியர் அல்ஸ்ரனின் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் இவ்விடயம் குறித்து எத்தகைய சவால்களுக்கும் அரசாங்கம் முகம் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் சுயாதீன அறிக்கையாளர் அல்ஸ்ரனின் குற்றச்சாட்டுக்கள் ஆதார மற்றவையெனவும் அமைச்சர் அங்கு குறிப்பிட்டார். இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ரோகித போகொல்லாகம தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்; இலங்கையில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒளிப்பதிவானது சனல் 4 இல் ஒளிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து அரசு பல்வேறு அழுத்தங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றது. இந்நிலையில் மூன்று சுயாதீன அறிக்கையாளர்களைக் கொண்டு சனல் 4 வீடியோ குறித்த விசாரணைகளை மேற்கொண்ட பேராசிரியர் பிலிப் அல்ஸ்ரன் அது குறித்த தனது இறுதி அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளார்.

ஆனால், இந்த ஒளிப்பதிவுகள் எந்தவிதமான ஆதாரமும் அற்றவை ஆகும். இருந்தாலும் இதுகுறித்து சர்வதேச அளவில் சர்ச்சை நிலவுவதால் இந்த ஒளிப்பதிவு குறித்த உள்ளக விசாரணைகளை நாம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். அதேவேளை, இவ்விடயம் குறித்த சந்திப்பொன்றுக்கு பிலிப் அல்ஸ்ரனிடம் சனல் 4 ஒளிப்பதிவு குறித்து ஆரம்ப சர்ச்சைகள் எழுந்தபோது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவர் அதனை நிராகரித்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவரிற்கு அழைப்பு விடுத்து பதில் கடிதம் அனுப்பியுள்ளோம். சனல் 4 விவகாரத்தினால் தோன்றியுள்ள அனைத்து அழுத்தங்களுக்கும் முகம்கொடுக்க அரசு தயாராக உள்ளது. இதேவேளை, இலங்கை மீது போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருத்தலானது அந்நாட்டின் படையினர் மக்கள் என்ற அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ள பாரதூரமான அவமானமாகும். இதனால், இச்சம்பவத்தின் உண்மைத்தன்மையினைக் கண்டறிவதற்குரிய உள்ளக விசாரணைகள் மேற்கொள்ளப்படும். அதேவேளை, இந்த விசாரணைகளில் ஐ.நா. அதிகாரிகளின் பங்களிப்பு குறித்து ஆராய்ந்து வருகின்றோம். அத்துடன் மனித உரிமை மீறும் செயல்களை அரசு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லையெனவும் தெரிவித்தார்.

நாட்டை காட்டிக் கொடுக்க இடமளியோம் – ஜனாதிபதி

mahinda.jpgஉயிர்களை அர்ப்பணித்து பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டிருக்கும் தாய் நாட்டை திருட்டுத்தனமாக உடன்படிக்கைகளின் ஊடாக மீண்டும் காட்டிக் கொடுக்க இடமளியோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மொனறாகலையில் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மொனறாகலை மாவட்ட ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் மொனறாகலை பிரதேச சபை பொதுமக்கள் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகை யில் :-

கடந்த எல்லா தேர்தல்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அமோக வெற்றியைப் பெற்றுத் தந்த மாவட்டங்களில் மொனறாகலையும் ஒன்றாகும். அந்த வகையில் இந்த சன சமுத்திரம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அமோக வெற்றியைப் பெற்றுத் தரும் என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கின்றது. ஆனால் நாம் இந்த வெற்றியைப் பேணிப் பாதுகாக்கவென உச்ச அளவில் செயற்படுவோம்.

மொனறாகலை மாவட்டத்திற்கு ஒரு பக்கம் கிழக்கு மாகாணம், மறுபக்கம் சப்ரகமுவ , ஊவா மாகாணங்கள் அமைந்திருக்கின்றன. இது வரலாற்றுச் சிறப்பு மிக்க பூமி. இங்கு ஒரு இலட்சம் வயல் நிலங்கள் இருந்துள்ளன என்று வரலாற்றில் பதிவாகியுள்ளது. என்றாலும் கடந்த கால செயற்பாடுகளால் அவை குறைந்துள்ளன. ஆன போதிலும் இப்பகுதி மீண்டும் வளமான விவசாய பூமியாகக் கட்டியெழுப்பப்படும்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து நாட்டை மீட்டுத் தருவேன் என்று வாக்குறுதி வழங்கினேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றி நாட்டை விடுவித்திருக்கின்றேன். மிகவும் அர்ப்பணிப்புடன் விடுவிக்கப்பட்டிருக்கும் நாட்டைப் பாதுகாப்பது எமது பொறுப்பாகும். இரகசிய ஒப்பந்தங்களின் ஊடாக நாட்டை மீண்டும் காட்டிக் கொடுக்க நாம் இடமளியோம்.

முப்படைகளையும் பொலிஸ் துறையையும் சேர்ந்த 27 ஆயிரம் பேர் தங்கள் உயிர்களை அர்ப்பணித்துத் தான் இந்த நாட்டைப் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டெடுத்திருக்கின்றார்கள். இந்த நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. நாட்டில் ஊழல், மோசடிகளை ஒழித்துக்கட்டும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். அதேநேரம் நாட்டைப் பாரியளவில் துரிதமாக அபிவிருத்தி செய்யவும் திட்டமிட்டிருக்கிறோம்.

வீதி, மின்னுற்பத்தி, துறைமுக நிர்மாணங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இவை யுத்தம் ஒரு பக்கம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மறுபக்கம் மேற்கொள்ளப்பட்டன.

உங்களதும், உங்களது எதிர்கால சந்ததியினரதும் நலன்களை கருத்தில் கொண்டுதான் நாட்டை அபிவிருத்தி செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். 2015ம் 2020ம் ஆண்டுகளை இலக்காக வைத்துத்தான் இந்த அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

துப்பாக்கி சூடு வீடியோ உண்மையானதுதான்: ஐ.நா. புலனாய்வாளர்கள்

lankashootingvideo.jpgஇலங் கையின் அரச படையினர் போன்ற சீருடை அணிந்தவர்கள், கைகள் கட்டப்பட்டு நிர்வாணமாக்கப்பட்ட சிலரை சுட்டுக்கொல்வதுபோல சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்த வீடியோ காட்சி உண்மையானவைதான் என ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட புலனாய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஜனநாயகத்துக்கான இலங்கைப் பத்திரிகையாளர்கள் என்னும் அமைப்பினாலேயே இந்தத் துப்பாக்கிச் சூட்டுக் காட்சி முதலில் அனைவருக்கும் அனுப்பட்டிருந்தது.  ஆரம்பம் முதலே இலங்கை அரசாங்கத் தரப்பினர் இந்த வீடியோ போலியானது என்று கூறிவருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்த ஐ.நா.வின் சிறப்பு நிபுணர்கள், இந்த வீடியோ குறித்த அனைத்து சந்தேகங்களையும் களைந்துவிட்டதாக சட்டத்துக்கு புறம்பான, எதேச்சதிகார மற்றும் விசாரணையற்ற கொலைகள் குறித்த ஐ.நா.வின் சிறப்புத் தூதுவர் பிலிப் அல்ஸ்டன் கூறியுள்ளார்.  இலங்கை அரசாங்கத்தால் இந்த வீடியோ குறித்து ஆராயுமாறு நியமிக்கப்பட்ட குழுவின் முடிவுகளில் குறை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டனவா என்பது குறித்து சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ஐ.நா.வின் சிறப்புத் தூதர் தெரிவித்துள்ளார்.  ஆனால் இந்த வீடியோ விடுதலைப் புலிகளின் பிரச்சாரமே என பிரிட்டனுக்கான இலங்கையின் தூதுவர் ஜஸ்டிஸ் நிஹால் ஜயசிங்க கூறியுள்ளார்.

BBC

மீள் குடியேற்றத்துக்கான இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது! அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ

lankaidsleavingcamp.jpgமீள் குடியேற்றத்துக்கான இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது என இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ தெரிவித்தார். தற்போது வவுனியா நலன்புரி முகாம்களில் 79965 பேர் தங்கியுள்ளனர். மேலும் யாழ்ப்பாணத்தில் 1349 பேர் தங்கியள்ளனர். இதேவேளை வைத்தியசாலைகளில் 1626 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன்படி  இன்னும் மீள் குடியேற்றத்துக்கு 82940 பேர் மாத்திரமே உள்ளனர் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை முன்னர் 2 இலட்சத்து 70000 பேராக இருந்ததாகவும் தற்போது அவர்களில் 169891 பேர் மீளக் குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்

யாழ்- கொழும்பு இரவு நேர பஸ்சேவை விரைவில் – இ.போ.ச பொதுமுகாமையாளர் தகவல்

buss.jpgயாழ்ப் பாணத்திலிருந்து கொழும்புக்கான இரவுநேர இ.போ.ச பஸ்சேவை இன்னும் ஓரிரு தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடபிராந்திய இ.போ.ச பொதுமுகாமையாளர் எஸ்.கணேசபிள்ளை தெரிவித்தார்.

ஏ9 வீதி 24 மணித்தியாலமும் பொதுமக்களின் பாவனைக்காகத் திறக்கப்பட்டுள்ளதையடுத்து இவ் இரவுநேர பஸ்சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. 

வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலிருந்து ஏ9 வீதியூடாக இராணுவ வழித்துணையின்றி சாதாரண பஸ்சேவைகள் நேற்று முதல் ஆரம்பாகியுள்ளன.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா, மன்னார், கண்டி,  திருமலை, மட்டக்களப்பு,  கொழும்பு ஆகிய இடங்களை நோக்கிப் புறப்பட்ட பஸ்வண்டிகள் ஏ9 வீதியில் இராணுவ வழித்துணையுடன்,  வாகனத் தொடரணியாகவே நடைபெற்றுவந்தன.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பஸ்கள் வவுனியா தேக்கவத்தையிலிருந்து இராணுவத்தினரின் அனுமதி பெற்றபின்பே பயணிகள் பிரயாணத்தை மேற்கொண்டு வந்தனர். இந்த நடைமுறையும் இப்போது மாற்றப்பட்டுள்ளது.

ஏதிர்வரும் வியாழன் முதல் இந்நடைமுறை மாற்றப்பட்டு, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து பஸ்வண்டிகள் இ.போ.ச நேர அட்டவணைக்கமைய சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொதுமுகாமையாளர் மேலும் தெரிவித்தார். 

விமான தகர்ப்பு முயற்சி எதிரொலி: அமெரிக்காவில் பாதுகாப்பு மறுசீரமைப்புக்கு அதிபர் ஒபாமா உத்தரவு

obama.jpgநத்தார் தினத்தில் டெட்ராய்ட்டுக்கு அருகே விமானம் ஒன்றை குண்டுவைத்து தகர்க்க மேற்கொண்ட முயற்சி பற்றிய அறிக்கை, தொடர்ச்சியான பல தவறுகளை சுட்டிக்காட்டியதை அடுத்து, ஒரு பாதுகாப்பு மறுசீரமமைப்புக்கு அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

மிகவும் கடுமையாக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், உளவுத்தகவல்களை மிகவும் அடிக்கடி பரிமாறிக்கொள்ளுமாறும், அவை குறித்து மிகவும் வேகமாக செயற்படுமாறும், சந்தேகத்துக்குரியவர்களின் பட்டியலை மேலும் செயற்திறனுடன் தயாரித்து, ஆபத்தானவர்களை விமானப் பயணங்களில் இருந்து தள்ளிவைக்குமாறும் தனது உளவுப்பிரிவினருக்கு அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

அல்கயீதாவினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் தோல்வியற்ற தீர்வு என்று எதுவும் கிடையாது என்று ஒப்புக்கொண்டுள்ள அவர், மிகவும் கவனமாக செயற்பட வேண்டும் என்பதில் ஒருபடி அமெரிக்கா முன்னோக்கி செயற்பட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

வத்திக்கான் பிரதிநிதி நாளை வவுனியா விஜயம்

கொழும்பில் உள்ள பாப்பரசரின் வத்திக்கான் பிரதிநிதி அதிவணக்கத்திற்குரிய ஆயர் யோசப் ஸ்பிரெறி ஆண்டகை நாளை வவுனியா வருகின்றார்.

முதல் தடவையாக வவுனியா வரும் இவருக்கு இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தில் அன்று மாலை 4 மணிக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. சிறப்பு ஆராதனை கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

More than 200 political prisoners were on hunger Strike : Tamil Solidarity

More than 200 political prisoners who were detained under the notorious Prevention of Terrorism Act (PTA) are on hunger strike throughout Sri Lanka. In Trincomalee, Batticaloa, Jaffna and many other parts of the country, a number of people have been detained for a long time under the suspicion of terrorism, but without any charge. Today three prisoners in Jaffna were taken to hospital as their health deteriorated.

“As the country prepares for the presidential election it is an outrage that a large number of people are still detained without any reason” said Siritunga Jayasuriya chairman of Civil Monitoring Commission (CMC) and the presidential candidate for the United Socialist Party.

Recently the opposition candidate, Sarath Fonseka, announced that he stood for an amnesty for the over 15,000 people who had been detained under suspicion of being a terrorist. The credibility of Fonseka’s statement has been brought into question as he has completely ignored the plight of these hunger strikers. The UNP and TNA, who support Fonseka, have also been criticised as their hypocrisy is exposed.

Tamil Solidarity demands the immediate release of the prisoners. We also demand that all those who stand for human rights and democratic rights join and support the prisoners’ protests. We condemn the TNA MPs who refuse to lend their support to these suffering people and instead rally behind the JVP and UNP-backed presidential candidate, Fonseka.
._._._._._.

தமிழ்கைதிகள் விரைவில் விடுதலை: நீதி அமைச்சின் செயலாளர் தகவல்!

விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படவிருப்பதாக நீதி அமைச்சின் செயலாளர் சுகத கம்லத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கைதிகளின் விடுதலை தொடர்பாக புலம்பெயர்ந்த தமிழ்ப் புத்தீஜீவிகள் குழு ஒன்று அவரை நேற்று சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடாத்தியபோதே அவர் இத்தகவலைத் தெரிவித்தார். புலம்பெயர்ந்த தமிழ் புத்திஜீவிகள் குழு ஒன்று ஜனாதிபதியை அண்மையில் அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தது.

இச்சந்திப்பின்போது தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இந்த தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தபோது,

“எந்தத் தமிழர்களையும் தேவையில்லாமல் சிறையில் வைத்திருப்பது தமக்கு விருப்பமானதல்ல. சட்டப்படியான விசாரணைகளை துரிதப்படுத்தி அவர்களை விடுதலை செய்யுமாறு ஏற்கனவே தான் நீதி அமைச்சின் செயலாளருக்கு பணித்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இந்த குழுவின் சார்பில் டாக்டர் நொயல் நடேசன் (அவுஸ்திரேலியா), இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (பிரிட்டன்), டாக்டர் இராமநாதன் நரேந்திரநாதன் (அவுஸ்திரேலியா) சபாபதி சுப்பையா குகநாதன் (பிரான்ஸ்) ஆகியோர் நீதி அமைச்சின் செயலாளரை அவரது அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை சந்தித்து இதுதொடர்பாக கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பின்போது, உடனடியாக சட்ட மா அதிபர் மொகான் பீரிஸ் இவர்களுடன் தொடர்புகொண்ட அவர், இந்தக் கைதிகளின் விடுதலை தொடர்பாக சிறப்பு அதிகாரிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டு அவர்கள் கைதிகள் ஒவ்வொருவரினதும் விடயங்கள் தொடர்பாக தனித்தனியாக ஆராயப்பட்டு வருவதாகவும் இவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் ஒரு சில நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

கொழும்பு சிறையில் 359 பேரும், மகசின் சிறையில் 120 பேரும், மட்டக்களப்பு சிறையில் 9 பேரும், அனுராதபுரம் சிறையில் 45 பேரும், போகம்பரை சிறையில் 56 பேரும் திருகோணமலை 66 பேரும், தங்காலை 2 பேரும், நீர்கொழும்பு 13 பேரும் தற்போது தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் இவர்களில் பெரும்பான்மை யானவர்களே விடுதலை செய்யப்படவிருப்பதாகவும் நீதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 713 பேர் இன்று வவுனியாவில் விடுதலை – ஏனையவர்களை கட்டம் கட்டமாக விடுவிக்க நடவடிக்கை

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 713 பேர் இன்று (09) சனிக்கிழமை வவுனியா செட்டிக்குளத்தில் நடைபெறும் வைபவமொன்றில் வைத்து விடுவிக்கப்பட உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பணியகம் தெரிவித்தது. பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்பு இல்லாதவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயாரத்னாயக்க தெரிவித்தார்.

வவுனியா, பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த இவர்களிடையே 18 வயதுக்குக் குறைவானவர்கள் சுமார் 100 பேரும் அடங்குவர்.  ஏனையவர்கள் தொடர்பான தகவல்களும் திரட்டப்பட்டு வருவதோடு பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்பற்ற வர்கள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். ஏனையவர்கள் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட உள்ளனர்.

படையினரிடம் சரணடைந்துள்ள சுமார் 11,544 புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 18 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்பு அற்றவர்கள் ஒரு மாதத்திற்கும் குறைவான காலம் இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டவர்கள், பங்கர் வெட்டுதல் போன்ற பணிகளில் பலாத்காரமாக ஈடுபடுத்தப்பட்டவர்கள் போன்றோர் விடுவிக்கப்படுபவர்களிடையே அடங்குவதாக புனர்வாழ்வு ஆணையாளர் பணியகம் தெரிவித்தது.

புனர்வாழ்வு அளிக்கப்படும் புலிகள் இயக்க முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு பயங்கரவாதச் செயற்பாடுகளில் எத்தகைய தொடர்பு இருந்தது என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றது.

இவர்களில் நேரடித் தொடர்பற்றவர்கள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட உள்ளதாகவும் தயாரத்னாயக்க கூறினார்.

புனர்வாழ்வு முகாம்களில் உள்ளவர்களிடையே பட்டதாரிகள் 22 பேரும் பட்டதாரி மாணவர்கள் 148 பேரும் அடங்குவர். இவர்களில் பட்டதாரி மாணவர்களுக்கு யாழ். பல்கலைக் கழகத்தில் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்றோருக்கு தமது முன்னைய தொழிலைத் தொடர்ந்து செய்யவும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிரபாவின் தந்தையின் பூதவுடல் சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைப்பு – பிரிகேடியர் தகவல்

prabakaeans-father.jpgபிரபாகரனின் தந்தையான திரு வேங்கடம் வேலுப்பிள்ளையின் பூத வுடல் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் நேற்று கையளிக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரி வித்தார். இராணுவ பாதுகாப்பில் இருந்த பிரபாவின் தாயாரையும் அவ ரிடம் ஒப்படைத்ததாக அவர் மேலும் தெரி வித்தார்.

பிரபாவின் தந்தையின் இறுதிக் கிரியை யாழ்ப்பாணத்தில் நடை பெறவுள்ளதாக தெரிவித்த அவர், இறுதிக் கிரியைகளுக்கான உதவிகளை அரசாங்கம் வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தனது தந்தையின் பூதவுடலையும் தனது தாயாரையும் சிவாஜிலிங்கம் எம்.பியிடம் ஒப்படைக்குமாறு டென்மார்க்கிலுள்ள பிரபாவின் சகோதரியான வினோதினி ராஜேந்திரன் டென்மார்க்கிலிருந்து அட்டோர்ணி தத்துவத்தை அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்த பிரிகேடியர் அதற்கமைய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட் டதாகவும் சுட்டிக்காட்டினார்.

திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடல் அவரது சொந்த இடமான யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைக்கு தரைமார்க்கமாக கொண்டு செல்ல ஏற்பாடாகியுள்ளதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார்.