கந்தகக்காற்று ஊர்கோலம் போனது
யார் யாரோ அரக்கர்களால் – எம்தேசம்
கேவலம்…போர் கோலமானது.
பட்டாசு வெடிக்க
சட்டமில்லை என்று
பாதுகாப்புச் சட்டம் போட்டது
சமாதான நாடு.
சங்காரம் செய்யும் அழிவாயுதப்படையலின்
பிரமாக்கள் என்று
அகிலச்சான்றிதழ் பெற்றது- எம்
நோர்வேயிய நாடு.
யாகம்…விஸ்வாமித்திர யாகம்
விஸ்வமான மித்துருக்களால்;
சத்துருக்க போர் யாகம்.
யாகம் போகம் மாறியும்
தாகம் தாகமென
தியாகம் தியாகமாக -காகம்
கல்லுச் சேர்த்ததே தியாகமானது
வேள்வி…கேலியாகி…கேள்வியானது போ.
அன்று…யாகம் காக்க இராம இலக்குவர்
இன்று எம்மைக்காக்க….யார் சிக்குவர்?
இலங்கையில் இராமாயணம்
இறப்பதே இல்லையோ?
துப்பாக்கிகளுடன் தூங்கி எழுந்து
குண்டுகளிடையே குறுக்கே விழுந்து
ஊரைக்காத்த உத்தம உயிர்கள்
வன்னிமக்களாய்
வனத்தினுள் வதங்கிப் போவதோ?
வெட்டிய தலைகள் மண்ணில் வீழவுமில்லை
வேட்டுவிழுந்து உடலிலுயிர் பிரியுமில்லை
உதிரம் சொட்டும் வாளுடன் வந்து
வோட்டுக்கேட்டு வருடம் பிறக்குதே!
மனிதம் மறந்து வாழ்வு சிறக்குமோ?
தமிழன்…தமிழன் என வேதம் ஓதி
ஈழம்…ஈழம் என்று எண்ணை ஊற்றி
வேளம் வந்து வேவுபார்க்க
சிம்மம் சினந்து சிம்மாசனம் போட்டது.
மிருகம் தூக்கிய மிருகத்தியாகம்
போகமின்றி மிருகமாய் போனது போ…!
தாகம்…தாகம் எனத்தண்ணீர்தேடி
காகம் கல்லைச் சேர்த்ததே மிச்சம்.
இனியும் வேண்டாம் பகைமையின் எச்சம்.
மனிதம் வாழ்ந்தால் அமைதி நிச்சயம்.
பிறக்கும் வருடம் சிறப்பாய் பிறக்க
வீழ்ந்தவை எல்லாம் மிருகமாய் போக
எழுவது எல்லாம் மனிதராய் எழுக
மிருகம் கொண்டு மிருகமானது போதும்.
வாய்மை கொண்ட மனிதவாழுமை வேண்டும்
சாதி சாதியென்று சாய்த்து
சாதித்தது என்ன?
மனிதசாதி ஒன்றே போதும்
மதமும் வேண்டாம்
மார்க்கமும் வேண்டாம் -எமக்கு
மனித மார்க்கமே போதும் போதும்.
வாழும் காலம் மனிதராய் வாழ
புத்தாண்டுப் பெண்ணே
புதுச்சேலை கட்டிவா!!!
நோர்வே நக்கீரா
01 01 2010