தமிழ் பேசும் மக்களே!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாம் புத்திபூர்வமாகவும் தீர்க்கதரிசனமாகவும் நடந்துகொள்ள வேண்டும். மேலும் மேலும் துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகாதவாறும் எமது வாழ்வில் ஒளியை ஏற்றி வைக்குமாறும் நாம் செயற்பட வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் நிதானமான சிந்தனையுடனும் எதிர்காலம் பற்றிய கரிசனையுடனும் வாக்களிக்க வேண்டுமென்ற அபிப்பிராயத்தையே தமிழ் புத்திஜீவிகளும் ஆன்மீக தலைவர்களும் ஆசிரியர்களும் உயர் கல்வி மாணவர்களும் கொண்டிருக்கிறார்கள். அதனையே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினராகிய நாமும் தமிழ் வாக்காளர்களுக்கு வலியுறுத்த விரும்புகிறோம்.
தேர்தலைப் பகிஷ்கரிப்பதோ அல்லது தமிழ் வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பதோ தமிழர்களுக்க உரிய புத்திபூர்வமான நடவடிக்கையாகாது என்பதே தமிழ் அறிவார்ந்தோரில் பெரும்பாலானோரின் கருத்தாகும். அதுவே எமது கருத்துமாகும்.
விபரிக்க முடியாத துன்பங்களையும் வேதனைகளையும், இழப்புக்களையும் சுமந்து நிற்கும் எம் மக்கள் எழுந்து நிற்பதற்கு, எம் மக்களின் வாழ்வில் விடியல் பிறப்பதற்கு நாம் செயற்பட வேண்டும் என்று இவர்கள் கேட்டிருந்தார்கள்.
பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பொறுப்புணர்ச்சி உள்ள அரசியல் கட்சி என்ற வகையில் மக்களின் உடனடித் தேவைகளுடனும் நீண்டகால அபிலாஷைகளுடன் இணைந்து செல்லவே விரும்புகிறது.
எமது மக்களுக்கு நன்மை பயக்கும் ஜனநாயக சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அரசியல் அதிகாரப்பகிர்வும், சமூக பொருளாதார அபிவிருத்தியும் ஆகிய விடயங்களை கருத்திற்கெடுத்தே செயற்பட வேண்டியிருக்கிறது.
பொறுப்பற்ற நிராகரிப்பு அரசியலை நாம் மேற்கொள்ள முடியாது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை பொறுத்தவரை அவர் 40 வருடம் அரசியல்வாதியாக செயற்பட்டிருக்கிறார்.
1980 களின் இறுதிப் பகுதியில் இலங்கையில் மோசமான மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்த போது உள்ளுரிலும், சர்வதேச அரங்கிலும் மனித உரிமைகளுக்காக உறுதியுடன் குரல் கொடுத்தவர்.
எமது பிரதேசங்களையும் இந்த நாட்டையும் பீடித்திருந்த வன்முறைக் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவர்.
அனைத்துக் கட்சிகளையும் இணைத்து அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு இலங்கையை பல்லினங்களின் நாடாக நிர்மாணிப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டவர்.
எனினும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தால் இணைக்கப்பட்டு 20 வருடங்கள் நடைமுறையில் இருந்த இணைந்த வடக்கு கிழக்கை ஜே.வி.பி நீதிமன்றம் வரை சென்று பிரிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டது. அவசரகாலச் சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு நீதி மன்றத்தால் பிரிக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் ஊடாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் மாத்திரமே அதனை மேற்கொள்ள முடியும்.
கிழக்கு மாகாணசபை செயற்படுவதாக இருப்பினும் 13வது திருத்தத்தின் கீழான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. குறிப்பாக பொலிஸ் அதிகாரம், நிலத்தின் மீதான அதிகாரங்கள், நிதி அதிகாரங்கள் இன்றுவரை வழங்கப்படவில்லை என்பதே யதார்த்தம். 13வது திருத்தச்சட்டத்திற்கும் கூடுதலான அதிகாரப்பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் அதிகாரப்பகிர்வினூடாக ஜனநாயகத்தை விரும்பும் சிங்கள மக்கள் மத்தியிலும் அந்த நிலைப்பாடே காணப்படுகிறது. எமது பிராந்தியத்தின் பிரதான ஜனநாயக நாடும் இலங்கையின் நண்பனுமான இந்தியாவும் அதனையே வலியுறுத்துகிறது.
எதிர்க்கட்சி கூட்டணியின் வேட்பாளர் சரத் பொன்சேகா அவர்கள் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இராணுவ ஜெனராலாக இருந்து மிகத் திறமையாகச் செயலாற்றியவர். இப்போது வடக்கு கிழக்கு இணைப்பு, உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கி அங்கு மீண்டும் தமிழ் மக்கள் குடியேறி வாழச் செய்வார் எனவும் வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பார் எனவும் தமக்கு வாக்குறுதி அளித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு பிரிவினர் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது அவர் அவ்வாறு கூறவில்லை என்றும் கிழக்கை கைப்பற்றி வடக்கு கிழக்கை பிரிப்பதற்கு வழிவகுத்தது தானே என்றும் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் அதிகாரப் பகிர்வு பற்றியோ, உயர்பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீளக்குடியமர்த்தல் பற்றியோ, சிறுபான்மை சமூகங்கள் பற்றியோ தமிழ் பேசும் மக்கள் பற்றியோ ஒரு வார்த்தையும் இடம்பெறவில்லை. இன்று இதனை பகிரங்கமாக தெரிவிக்காத நிலையில் நாளை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பாக உறுதியாக செயற்படுவார் என நாம் எதனையும் உறுதியாக கூறிவிட முடியாதுள்ளது.
இப்போது அரசாங்கம் உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்கி அங்கிருந்த மக்கள் மீள அவ்விடங்களில் குடியேறும் வழி வகைகளைச் செய்ய ஆரம்பித்திருக்கிறது. அவ்வேலைத்திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டு முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டுமென்று கோருகின்றோம்.
அதிகாரப்பகிர்வுக்கு எதிராகவும், எமது அண்டை நாடான இந்தியாவுக்கு விரோதமாகவும் செயற்பட்டுவரும் ஜே.வி.பி எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பிரதான பங்குதாரர் என்பதையும் நாம் மனம் கொள்ள வேண்டியுள்ளது. அத்துடன் ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் பொன்சேகாவின் முதுகில் ஏறி தான் அதிகாரத்தைப் பிடிக்கும் எண்ணத்துடனேயே அவருக்கு ஆதரவளிக்கிறார். சரத் பொன்சேகாவுக்கு என்று ஒரு அரசியற் பின்னணியோ அல்லது ஒரு கட்சிப்பின்னணியோ இல்லாதிருக்கிறார். இந்நிலையில் பொன்சேகா அவர்கள் தமது வாக்குறுதிப்படி எவ்வளவு தூரம் செயல்படுவார் என்பதே எமது கேள்வி. இது ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி பின்னர் நீ யாரோ நான் யாரோ என அவர் ஆக்கி விடுவாரோ என்பதே எமது கவலை.
இப்போது பலதும் பத்தும் கூறும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களும் எல்லாம் பிழைத்ததன் பின்னர் எல்லா சிங்களத் தலைவர்களும் இப்படித்தான் என்று சுலபமாகக் கூறி தாம் மக்களை பிழையாக வழி நடத்தியதற்கான பொறுப்பைக் கை கழுவி விட்டு அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் எப்படி வெல்வது என்பதை நோக்கி மக்களுக்கு உணர்ச்சி ஊசி அடிக்கத் தொடங்கி விடுவார்கள்.
புலிகளை ஏக பிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொண்டே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போது அரசாங்கம்தான் அவர்களை ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியது. நாங்கள் அவ்வாறு கூறவில்லையென்று திரு.சம்பந்தன் அவர்கள் தெரிவிக்கின்றார்.
புலிகளால் உருவாக்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பு இப்போது பல்வேறு பிரிவுகளாக உள்ளது.. சிவநாதன் கிஷோர் தலைமையில் ஒரு பிரிவினர் ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கின்றனர். பொன்னம்பலத்தின் பேரன் கஜேந்திர குமார் தலைமையில் ஒரு பிரிவினர் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டுமென்கின்றனர். சிவாஜிலிங்கம் தன்னை வேட்பாளராக நிறுத்தியுள்ளார். சிறீகாந்தா, செல்வம் ஆகியோர் அவருக்கு ஆதரவளிக்கின்றனர். சம்பந்தன் சேனாதிராஜா மற்றம் சுரேஷ் பிரிவினர் சரத் பொன்சேகா தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் பொன்சேகாவும், ஜே.வி.பி யும் ஊடகங்களுக்கு தெரிவித்துவரும் கருத்துக்கள் எதிர்மாறானவையாக இருக்கின்றன. பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணப்படும் பத்து விடயங்களைத் தவிர வேறு எதுவும் கூட்டமைப்பினருடன் பேசப்படவில்லையென ஜே.வி.பி யின் பேச்சாளர் அனுரகுமார திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.
கடந்த ஏழு எட்டு மாதங்களாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் வைக்கப்பட்டிருந்த 3,50,000 இற்கு மேற்பட்ட மக்களின் பிரச்சினைகளே கவலை அளிப்பதாக அமைந்திருந்தன. இந்த மக்கள் எல்லாவற்றையும் இழந்தவர்கள். உறவுகளை இழந்தவர்கள், பிள்ளைகள், இரண்டுவருட கல்வியை இழந்தவர்கள். தற்போது அவர்கள் படிப்படியாக தமது சொந்த ஊர்களுக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். 2,50,000 இற்கு மேற்பட்ட மக்கள் வரை ஊர்திரும்பியிருக்கிறார்கள். அவர்களுக்குரிய வீட்டுவசதிகள், வீதிகள், தொழில்வசதிகள், கல்வி, போன்ற விடயங்களில் அரசாங்கம் கூடுதலான அக்கறை செலுத்த வேண்டும் என்றே கோருகின்றோம்.
பாதுகாப்பு வலயங்களால் ஒரு லட்சத்துக்க மேற்பட்டோர் பத்தாண்டுகளுக்கு மேலாக அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம் மக்கள் ஒரு லட்சம் பேரளவில் உள்ளனர். இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்தோர் ஒரு லட்சத்துக்கு மேல் உள்ளனர். இருபத்தைந்து வருட யுத்தத்தால் வருமானம் உழைப்போரை இழந்து விதவைகளையும் அனாதைகளையும் கொண்டு நிற்கும் குடும்பங்கள் பல்லாயிரம். இவர்கள் அனைவருக்கும் உரிய பொருளாதார சமூக வாழ்வை மீளளிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் அனைத்தும் போதிய அளவில் அளிக்கப்பட வேண்டும். இந்த மக்களின் வாழ்வில் புதிய வெளிச்சம் வருவதற்கான அரசியல் பொருளாதாரக் கதவுகள் பல முனைகளிலும் திறக்கப்பட வேண்டும்.
இடம்பெயர்ந்த மக்களின் பிள்ளைகளில் பலர் சிறப்பு முகாம்களில் வாழ்வது அவர்களின் பரவலான கவலையாகும். பலாத்காரமாக யுத்தப் பயிற்சிக்கு பிடித்துச் செல்லப்பட்டவர்களே இதில் அதிகமானோர். அவர்களை துரிதமாக விடுவிப்பதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ள போதிலும் இன்னும் வேகமாக அவை நடைபெற வேண்டும். பிள்ளைகளை பெற்றோரிடம் நேரடியாக கையளிக்கும் நடவடிக்கையை ஜனாதிபதி ஆரம்பித்துள்ளார். அது இன்னமும் வேகமாகவும் முறையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோருகின்றோம்.
ஏ-9 பாதை தற்போது 24 மணிநேரமும் திறந்திருக்கிறது. எமது வெறிச்சோடிய நகரங்களில் மீண்டும் உயிர்ப்பு, மானிட செயற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ளன். முட்கம்பிகளாகவும், இருளாகவும் காணப்பட்ட எமது நகரங்களில் பஸ்நிலையங்களும், கடைத்தெருக்களும் சினிமாத் தியேட்டர்களும் இரவு நேரங்களிலும் உயிரோட்டம் உடையவையாக காணப்படுகின்றன.
ஊரடங்கு உத்தரவு யாழ்ப்பாணத்தில் முற்றுமுழுதாகவே தளர்த்தப்பட்டு விட்டது.
தென்னிலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு கெடுபிடிகளாக இருந்த பொலிஸ் பதிவு முறைகள், பாஸ் முறைகள் நீக்கப்பட்டுள்ளன.
இன்னும் பல காரியங்கள் நடந்தேறியாக வேண்டியிருக்கின்றன. எல்லாவற்றையும் ஆக்கிரமித்திருந்த ஆயுத வன்முறைக் கலாச்சாரம் முடிவுக்கு வந்திருப்பதால் அவசரகாலச்சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் ஆகியன இனி அவசியமற்றவை. அவை உடனடியாக நீக்கப்பட வேண்டும்
சோதனைச்சாவடிகள், மணல் மூட்டைகள், முட்கம்பி சுருள்கள் இனி எமது வீதிகளில் அவசியமற்றவை. அவை இல்லாத ஒருநிலை விரைவாக வேண்டும்.
தமிழ், முஸ்லீம், மலையக மக்கள் பங்குதாரர்களாக இருக்கக்கூடிய அதிகாரப் பகிர்வு அரசியல் முறைமையொன்றைக் கொண்டதாக இலங்கை அமைய வேண்டும்.
தமிழ், முஸ்லீம், சிங்கள மக்களுக்கு இடையேயான நல்லுறவுகள் பலப்படுத்தப்பட வேண்டும். ஒரு பல்லினங்களின் தேசமாக நாம் அனைவரும் இலங்கையர் என மானசீகமாக உணரக்கூடிய விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தென்னாசியாவின் கண்ணீர்துளி என கடந்த 30 வருடங்களாக அழைக்கப்பட்ட இலங்கை இந்து சமுத்திரத்தின் முத்து என்ற பெயரை மீண்டும் பெற வேண்டும்.
மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பக்கத்தில் இருக்கும் இலங்கை அதனோடு பரஸ்பர நல்லுறவுடன் தனது ஜனநாயக பாராம்பரியங்களை பாதுகாத்துக் கொள்வதோடு அனைத்து மனித உரிமைகளையும் மதிப்பதாக விரிவாக்கப்படவும் வேண்டும்.
வறுமை, பிணி, அச்சம் நீங்கிய சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும். பலமான ஜனநாயக அடித்தளத்தில் எமது சமூக பொருளாதார நிர்மாணம் நடைபெற வேண்டும்.
ஆனால் நாடு பூராவும் இராணுவ உடையுடனும், தொப்பியுடன் எதிர்க்கட்சி பொது வேட்பாளர்pன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதன் பொருள் என்ன? இராணுவ பெருமிதம்தான் நாட்டின் எதிர்காலமா?
பாகிஸ்தான், பங்களாதேசம், மியான்மார் ஆகிய நாடுகளில் நிகழ்ந்த இராணுவ சதிப்புரட்சிகளையும் அந்நாடுகளில் ஜனநாயக சமூகத்தின் அடிப்படை அத்திவாரங்களே ஆட்டம் கண்டு போயிருப்பதை இலங்கையர்கள் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
40 வருடமாக படை அதிகாரியாக இருந்தவர்pன் இராணுவ மனோபாவமே இயல்பாக அவரின் சிந்தனையை தீர்மானிக்கும் என்பது கவனத்துக்குரியதொன்று. அவர் இப்போதும் கூட நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் என்ன நல்லவற்றைச் செய்யப் போகிறார் என்பதைவிட படைத்தரப்பினர், பாதுகாப்பு பற்றியே அதிகம் பேசுகிறார். சம்பள உயர்வு வேலைவாய்ப்புக்ள் பற்றி அவர் கூறுபவைகள் நடைமுறைக்குதவாத வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றன.
சிறுபான்மை சமூகங்கள் பெரும்பான்மை சமூகத்தை அண்டிப்பிழைக்க வேண்டும் என்று அவர் இராணுவ கமாண்டராக இருக்கும் போதே கூறியவர். இலங்கையின் சனத்தொகை பொருளாதாரம் இவற்றை கரிசனையில் கொள்ளாமல் படையினரின் தொகையை மூன்று லட்சமாக அதிகரிக்க வேண்டுமென்று கூறியவர். இப்போதும் அதே நிலைப்பாடுகளையே கொண்டுள்ளார்.
ஜனநாயக உணர்வு கொண்டவர்களுக்கு குடிமக்களின் ஆட்சி பற்றி நம்பிக்கை கொண்டவர்களுக்கு இது மிகவும் நெருடலான விடயமாகும்.
தமிழ் பேசும் மக்களின் தலைமைகள் மக்களின் எதிர்காலம் பற்றி தீர்க்க தரிசனத்துடன் சிந்திக்க வேண்டும்.
வரலாற்றில் தூரதிருஷ்டியும் சமூகப் பொறுப்புணர்வும் இல்லாமல் போனதன் விளைவு எத்தகைய விபரீதங்களை நாம் சந்திக்க வேண்டி நேர்ந்தது. மொத்த சமூகமுமே அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட வில்லையா? இழந்தவற்றைத்தான் ஈடு செய்ய முடியுமா?
இத்தனைக்கும் எமக்கு எத்தகைய சந்தர்ப்பங்கள் எல்லாம் வந்தன.
இந்தியாவின் அனுசரணையுடன் வடக்கு கிழக்கு இணைந்த அதிகாரப்பகிர்வு முறைமை
1990 களின் நடுப்பகுதியில் சந்திரிகா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சமஷ்டி முறையிலான தீர்வு
2002 இல் ஒஸ்லோவில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளால் பரிந்துரைக்கப்பட்ட கூட்டாட்சி முறை
தமிழ் மக்களால் நம்பப்பட்டவர்கள் எல்லாவற்றையும் நிராகரித்தார்கள்.
இந்த நிராகரிப்பு அரசியலே எமது சமூகத்திற்கு துன்பக் குழிகளையும் துயரக் குழிகளையம் தோண்டியது. தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் புத்திசாலித்தனமாகவும், தீர்க்க தரிசனத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.
எமது மக்களுக்கு அச்சமில்லாத சுதந்திரமான அரசியல் பொருளாதார வாழ்வு வேண்டும்: இலங்கையில் ஆட்சி முறையில் தமிழர்களும் சகோதரமான பங்காளர்கள் என இருக்கும் நிலை ஏற்பட வேண்டும்: தமிழ் மக்கள் தமக்கான சுபிட்சமான வாழ்வை தமது உழைப்பால் அடைவதற்கு இனவாத அரசியற் தடைகளற்ற ஓர் ஏற்பாடு உருவாக வேண்டும். இவற்றை சாத்தியமாக்க மஹிந்த ராஜபக்ஸவே தமிழ் மக்களின் தெரிவாக வேண்டும்
தமிழ் மக்களின் சுதந்திரமான வாழ்வுக்கும்,
தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார உரிமைகளுக்கும்
இன, மத, சாதி பேதங்களற்ற ஒரு சமதர்ம இலங்கைக்கும்
மக்கள் பங்களிப்புடன் தொடர்ந்து போராடுவோம்.
பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ்) ஜனவரி 2010, யாழ்ப்பாணம்