18

18

பிரதியமைச்சர் வீடு மீது கிரனேட் தாக்குதல் : சாரதி பலி.

இன்று மாலை 7.00 மணியளவில் குருநாகல், வேகெர பிரதேசத்திலுள்ள பிரதி அமைச்சர் ஜெயரத்தின ஹேரத்தின்  வீட்டுடன் இணைந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அலுவலகத்தின் மீது கிரனேட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் அமைச்சரின் சாரதி டி.எம் சுரங்க இந்திரஜித் (27) உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.  நேற்றிரவு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் இரும்புக் கம்பிகளால் அடித்தும் துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டதன் எதிரொலியாகவே இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது.

புலிகளுடைய அரசியலில் இருந்து புலிகளற்ற அரசியலை நோக்கி : பேரின்பம் பரமானந்தம்

Paranthaman_Perinpam._._._._._. 

கட்டுரையாளர் பேரின்பம் பரமானந்தம் – பரமன் என அறியப்பட்டவர். திருகோணமலை மாவட்டம் மூதூரைச் சேர்ந்தவர். தற்போது லண்டனில் வதிகின்றார். ‘திருகோணமலை மாவட்ட பிரஜைகள் குழு – பிரித்தானியா’ வின் தலைவராக உள்ளார். இவர் முன்னாள் ஈபிஆர்எல்எப் திருகோணமலை மாவட்ட மக்கள் தொடர்பாளர்.

._._._._._.

இலங்கை சுதந்திரமடைந்து 62 வருடங்களைக் கடந்தும் தமிழர்கள் இனரீதியாக ஒடுக்கப்பட்டு வந்தார்கள். இதனால் சீற்றமடைந்த தமிழ் மிதவாத தலைவர்கள் சத்தியாக்கிரக வழிகளில் அகிம்சை ரீதியாக இதற்கு எதிராக போராடி வந்தனர். இருந்தும் பேரினவாதம் எந்தவிதமான சம உரிமைகளையும் மறுத்து வந்ததுடன் காலத்துக்குக் காலம் இன வன்முறைகளையும் கட்டவிழ்த்து விட்டது.

இதன் உச்சக் கட்டமாக 1983ம் ஆண்டு, இன அழிப்பின் உச்சக் கட்டத்தை அடைந்தது. விளைவு ஆயுதம் ஏந்திப் போராடுவதன் மூலம் தமிழர்களின் நிம்மதியான வாழ்வை சிங்கள ஏகாதிபத்தியத்திடம் பெற முடியுமென தமிழ் மக்கள் நம்பினார்கள். இதனால் பல ஆயுதக்குழுக்கள் ஆயுதம் ஏந்திப் போராடினர். புலிகளின் ஏகப்பிரதிநிதித்து வமானது 1986ம் ஆண்டு புலிகள் தவிர்ந்த மற்ற ஆயதக்குழுக்கள் அனைத்ததையும் முற்று முழுதாக தடைசெய்து, கொலை செய்ததன் மூலம் ஆரம்பிக்கப்பட்டது. இன்றுவரை நடைபெறும் தமிழர்களின் அழிவை புலிகள் அன்றே தொடக்கிவிட்டனர். ஏககாலத்தில் தங்களுடன் சேர்ந்து போராடிய அனைத்து மிதவாத தலைவர்கள் உட்பட அனைவரும் புலிகளால் கொலை செய்யப்பட்டும், இவ்வளவு தூரம் இந்த மாற்று இயக்கங்கள் புலிகளுக்கு தோல்வியை ஏற்படுத்துவார்கள் என்று புலிகள் அப்போது அறியவில்லை. அந்த அளவுக்கு சகோரத இயக்க கொலை வெறி ஏறியிருந்தது.

இந்த நிலையில் சுயநிர்ணய உரிமை கேட்டுப்போராடிய தமிழ் மக்களுக்கு ஆசியாவின் வல்லரசான இந்தியா ஏற்கனவே பக்கத்து நாடான பாக்கிஸ்தான், பங்களாதேஸ், மாலைதீவு போன்ற நாடுகளின் பிரச்சினைகள் தீர செயற்பட்ட அதே பாணியில் செயற்பட்டது. இலங்கையில் இந்திய அரசின் நேரடித்தலையீட்டின் இந்தியத்தாய்க்கும் இலங்கை தகப்பனுக்கும் பிறந்த குழந்தையே வடக்கு கிழக்கு மாகாண அரசு. உண்மையில் இது தமிழீழம் அல்ல ஈழஅரசியலுக்கு கிடைத்த அங்கிகாரம் என்பது உண்மையே. புலிகளின் தவறான அல்லது தூர நோக்கற்ற அரசியலால் அதையும் இல்லாது ஒழித்துவிட்டனர்.

அன்று புலிகள் ஏற்றிருந்தால் அல்லது ஏற்றுசெயற்பட்ட ஈபிஆர்எல்எப் இயக்கத்தை விட்டிருந்தால் இன்றுவரை சுமார் இருபது வருடம் கழிந்தும் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் மாகாண அரசுக்கு தராவிட்டிருந்தால் இதையே காரணம் காட்டி சர்வதேச சமூகத்திடம் நீதிகேட்டு நாம் தனியாக பிரிந்து செல்லப் போகிறோம் என்ற ஈழ அங்கீகாரத்தை பெற்றிருக்க முடியும். அதையும் புலிகள் செய்வதற்கு, சுட்டுக்கொலை செய்ய தெரிந்த அளவுக்கு அரசியல் தெரியவில்லை.

1983 ஆண்டு பிறந்த இலங்கை தமிழ் பிள்ளைக்கு சுமார் இருபது வருடம் பிரபாகரன் காட்டியது யுத்தமும், மாவீரர் துயிலும் தமிழ் இளையவர்களின் கல்லறைகளும் மட்டுமே. புலிகளில் 30ஆயிரம் பேரும் மற்றக் குழுக்களில் 10 ஆயிரம் பேரும் அண்ணளவாக புலிகளால் பலிகளாக்கப்பட்டனர். கிழக்கில் மட்டும் 40 000 தமிழ் இனம் 20க்கும்30க்கும் இடைப்பட்ட வயது விதவைகளையும் வடக்கில் 35 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட விதவைகளையும் உருவாக்கியது. இதுவே புலிகளின் போராட்டத்திற்கு தமிழர்கள் பெற்ற தமிழீழமா?. புலி ஒரு கணம் சிந்தித்து அன்று அனைவரும் ஒன்றுபட்டு போராடியிருந்தால் ஏன் இந்த நிலை.

1989ம்ஆண்டு இந்தியப்படை கொஞ்சம் கொஞ்சமாக இலங்கையை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த நேரம் புலிகளுக்கும் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவுக்கும் தேன் நிலவு ஆரம்பித்தது. அந்நேரத்திலும் புலிகள் மிகப்பெரியதொரு சகோதர இயக்கப் படுகொலையை செய்திருந்தார்கள். அப்போது புலிகள் துண்டுப்பிரசுரம் ஒன்றை அடித்து வெளியிட்டிருந்தார்கள். அதில் இருந்த வாசகம் ‘இந்திய இராணுவத்துடன் சேர்ந்து செயற்பட்ட அனைத்துமட்ட போராளிகளுக்கும் எமது தலைவர் பிரபாகரன் பொதுமன்னிப்பு தருகிறார். எம்மிடம் சரணடைந்தவர்களை பாதுகாப்பாக நாம் சுதந்திரமாக செல்ல அனுமதிப்போம்’ என்பதே.

இதை நம்பிய மாகாண அரசில் பங்கெடுத்த ஈபிஆரஎல்எப், ஈஎன்டிஎல்எப், ரெலோ இயக்க போராளிகள் இன்று இராணுவத்தின் வசம் உள்ள திருகோணமலை- சம்பூரை நோக்கி வந்து கையில் அகப்பட்டதை எடுத்துக்கொண்டு மூதூரை நோக்கி ஓடினார்கள். அப்படி ஓடிய முதலாவது குழுவினரை புலிகள் சுதந்திரமாக நடமாட அனுமதித்துவிட்டு அதிலும் ஒரு தந்திரம் கடைப்பிடித்தார்கள். இரண்டாம்முறை அதிகமான ஈபிஆர்எல்எப் போராளிகள் ஓடினார்கள். இப்படியாக அனைவரையும் ஒன்று சேர்த்த புலிகள் மூதூரில் உள்ள மறைச்சேனை சித்திவிநாயகர் ஆலய கோயில் முன்றலில் அனைத்து மதபெரியார்கள் முன்னிலையில் கூட்டம் போட்டு இவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கிவிட்டதாக கூறி கலைந்து செல்ல உத்தரவு இட்டனர். பின்னர் ஒரு கிழமைக்குப் பிறகு சிறிய ரக லான்மாஸ்டர் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றிக்கொண்டு எமது தலைவர் உங்களுடன் பேச விரும்புகிறார் வாருங்கள் என்று சொல்லி அழைத்துச்சென்று ஈச்சலம் பற்றைக்காடுகளில் சுமார் 1500 மேற்ப்பட்டோரை வரிசையில் நிற்க வைத்து கொலை செய்து விட்டார்கள்.

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் வைத்து மாகாண அரசக்கு சேர்க்கப்பட்ட CDF பிரஜைகள் தொண்டர் படையினரை இதே அளவு சுட்டுக்கொன்றது அனைவரும் அறிந்ததே. அதேபோன்று எனது குடும்பத்தில் மாத்திரம் புலிகளால் ஆறு பேரும் அரசபடைகளால் ஒருவரும் என ஏழுபேர் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கிறார்கள். சிலர் கடத்திக் கொல்லப்பட்டார்கள். சிலர் நேரடியாக வீடுகளில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அப்படி கொல்லப்பட்ட சிலருக்கு மட்டுமே அக்காலத்தில் மரண அத்தாட்சிப்பத்திரம் பெறக்கூடிய சூழல் இருந்தது. இது இதை உறுதிப்படுத்துவதற்காக இணைக்கப்படுகிறது.

1. முத்துக்குமார் கணேசகுமார். பெரியவெளி மூதூர் – மாமா
2. அல்பேட் ரொன்சன். பொடிமாத்தளை பத்தமுடிச்சேனை மூதூர் – மாமா
3. ஆதிருகட்டிராஜா. மணற்சேனை -மல்லிகைத்தீவு மூதூர் -மாமா
4. நாகலிங்கம் சந்திரன். மணற்சேனை மல்லிகைத்தீவு- மூதூர் – தம்பி
5. விக்டர் சொய்சா முரளீதரன். பெரியவெளி- மூதூர் – மச்சான்
6. முத்துலிங்கம் தங்கவேல். பெரியவெளி மூதூர் -மாமா
7. ஆதிருகட்டி அமரசேன. பெரிய வெளி மூதூர்- (இராணுவம் சுட்டது) – மாமா

இப்படி என் குடும்பத்தினர்போல் பல தமிழ் குடும்பங்கள் அனைத்துப் பகுதிகளாலும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இலங்கை அரசால் கொல்லப்பட்ட தமிழர்களை விட புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்களே அதிகம் என்பது உண்மையே. இன்று தமிழர்களுக்கு தேவை குறைந்த பட்சம் நிம்மதியாக வாழக்கூடிய ஒரு சமாதானத்தீர்வு. அதைத்தான் இன்று சாதாரணமான தமிழ் மக்கள் கையேந்துகிறார்கள். இலங்கை அரசிடம் பேரம்பேசும் அரசியல் சமநிலையை தமிழ் அரசியல் மிகவும் பலவீனமான நிலையில்கேட்க முடியாத தயக்கமான நிலைதான் காணப்படுகிறது. இவை அனைத்தும் புலிகளின் தூரநோக்கற்ற அரசியல், தமிழ் மக்களுக்கு அநீதிகள் என்றால் அது மிகையாகாது.

யானை தன் கையினால் தனக்கு மண்அள்ளிப் போட்டதுபோல் புலிகள் தங்களுக்கு தாங்களே மண் அள்ளி தங்களின் அழிவைத் தேடிக் கொண்டார்கள். மகிந்தாவை ஜனாதிபதி ஆக்கினால் அவர் கடும்போக்காளர் சண்டைக்கு வருவார். நாம் தமிழீழத்தை வென்று விடலாம். ரனில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்தால் முழுப்புலிகளையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடுவார் என்று புலிகள் தங்களது பலத்தை மிதமிஞ்சி பீற்றிக் கொண்டது மட்டுமன்றி வடபகுதி தமிழர்களை வாக்களிக்காது தடுத்து பெரிய ஜனநாயக விரோதப் போக்கையும் செய்து, மகிந்தவை ஜனாதிபதியாக்கி இன்று இந்த கடும்தோல்வியைப் பெற்றிருக்கிறார்கள்.

இத்தனை தோல்விகளுக்கும் அடிப்படைக் காரணம் – புலிகளால் உயிர்பறிக்கப்பட்ட சிறந்த ஜனநாயகத் தலைவர்கள் அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம் சரோஜினி, சிவபாலன் போன்ற பல மிதவாத தலைவர்கள் உட்பட ஈபிஆர்எல்எப் பத்மநாபா, ரெலோ சிறீசபாரத்தினம் போன்ற ஆயுதக்குழுக்களின் தலைவர்களையும் தங்களது தலைமை வெறிக்கு இரையாக்கினார்கள்.

இணைக்கப்பட்ட வட கிழக்கு மாகாண அரசுக்கு ஈபிஆர்எல்எப் பலாத்காரமாக மாகாண அரசை பாதுகாப்பதற்கு உருவாக்கப்பட்டது தமிழ் தேசிய இராணுவம். இதுவும் ரிஎன்ஏ 1990 பிரேமதாஸா அரசு பேச்சுவார்த்தைக்கு வந்த புலிகள் இலங்கை இராணுவத்துடன் இணைந்து கிழக்கில் பெரும் இராணுவ தாக்குதலை நடாத்தினார்கள். இதனால் அச்சமடைந்த பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களை புலிகள் பகிரங்கமாக மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் வைத்துச் சுட்டுக்கொலை செய்தார்கள்.

உண்மையில் புலிகள் இவர்களை மன்னித்து இருக்க வேண்டும் ஏனெனில் இவர்கள் விரும்பிச் சேரவில்லை. ஈபிஆர்எல்எப் இனால் பிடிக்கப்பட்டவர்கள் என்பதால் அதனை பல தடவை பேட்டிகளின் போது கருணா அம்மான் – இன்றைய தேசிய நல்லிணக்க அமைச்சர் சுட்டிக்காட்டியதும் நினைவுக்கு எடுக்கலாம்.

உண்மையில் புலிகள் மற்ற ஏககால ஆயுதப்போராட்ட இயக்கங்களை தடைசெய்து தாக்குதல் நடாத்தியவேளை கிழக்கில் கட்டுக்கடங்காது தமிழ் இளைஞர்கள் புலிகளால் வேட்டையாடப்பட்டார்கள். ஆனால் அந்த அளவுக்கு பெருந்தொகையான தோழர்கள் யாழ்ப்பாணத்தில் கொல்லப்படவில்லை. அங்கும் நடந்தது தான், ஆனால் ஒப்பீட்டளவில் கிழக்கில் தான் அதிகம். அதற்குக் காரணம் புலிகளின் தலைமை யாழில் இருந்தது. கிழக்கில் அப்படி அல்ல, எல்லாம் முடித்துவிட்டு தொலை தூரக்கருவி மூலம் அறிவிப்பது மட்டும் வழக்கம். அதனால்த்தான் விரும்பியபடி பலரை கொலை செய்தார்கள்.

அநுராதபுர தாக்குதலில் கொல்லப்பட்ட புலிகளின் ஆடையின்றிய உடலை மனிதாபிமானம் கொண்ட எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நானும் அதை சரி என்று சொல்லவில்லை. ஆனால் தங்களிடம் சரணடைந்தவர்களை மன்னிப்பு என்று சொல்லி அழைத்துவிட்டு அனைவரையும் ஒன்று சேர்த்து ஊர்வலமாக அழைத்துச் சென்று ஒவ்வொரு சந்திக்குச் சந்தி பொதுமக்கள் முன்னிலையில் நிறுத்தப்பட்டு சிலர் துப்பியும், சிலர் தும்புத்தடிகளால் தாக்கியும் தங்கள் வஞ்சகத்தைத் தீர்த்துக்கொண்ட பின்பு கொலை செய்ப்பட்டார்கள்.

இந்திய இராணுவத்திற்கு தமிழ் ஆங்கில மொழி பெயர்ப்பாளராக என்னுடன் செயற்பட்ட மூதூரைச் சேர்ந்த கணித ஆசிரியர் ஜெகதீசன் குரூஸ். இப்போது அவர் ஒரு கல்விப்பணிப்பாளர் என நினைக்கிறேன். அவரை முட்டுக்காலில் புலிகள் தவழ விட்டு தண்டனை வழங்கினார்கள். இது எந்த நாகரீகம். இதேபோல் மூதூர் மணற்சேனையை சேர்ந்த ஜீவரட்ணம் தங்கரத்தினம் குடும்பத்தில் புலிகள் அவரது 8 குழந்தைகளின் தந்தையான அண்ணண் முத்துக்குமார் அவரது தம்பி அருள் அவரது ஒரே ஒரு மகன் சசிகுமார் 2008ல் புலிகள் கொலை செய்து விட்டு, அவரை அவருடைய ஊருக்கே வரக்கூடாது என்று உத்தரவிட்டு அவர் இப்போது திருகோணமலையிலேயே தஞ்சமடைந்து இருக்கிறார்கள். புலிகளின் நீதித்துறை இதுதானா? இந்த தங்கரத்தினம் உள்ளுராட்சி மன்ற செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று உலகம் முழுவதும் புரட்சிகள் ஜனநாயக வழிக்கு வந்து கொண்டிருக்கையில் தமிழர்கள் மட்டும் கொல்ப்பட்டு வருவது மிகவும் வேதனை அழிக்கிறது.

1983 பிறந்த ஒரு குழந்தை இன்று 26 வயது பெரிய பிள்ளை. அதற்கு கொழும்பு தெரியாது. ரெயின் தெரியாத குழந்தைகளும் இருக்கிறார்கள். தமிழீழத்தின் பெயரால் இவர்களுக்குத் தெரிந்தது சண்டையும் உயிர்க்கொலைகளும் செல்தாக்குதல்களும் தான். குறைந்தபட்சம் அவர்களுக்கு ரெயின் பஸ் மட்டுமன்றி கொழும்பு போன்ற இடங்களையாவது பார்ப்பதற்கு குறைந்தபட்ச தீர்வுக்கு தமிழ் தலைமைகள் முன்வருவது காலத்தின் தேவை.

கல்வி கலாச்சாரம் பொருளாதாரம் இனவிருத்தி போன்றவற்றிலும் நிலம் போன்ற அனைத்திலுமே கிட்டத்தட்ட 30 வருடம் நமது சமூகம் மூன்றாம் தரப்பு நிலைக்கு பின்நோக்கி தள்ளிவிடப்பட்டிருக்கிறது. இப்போதாவது தீர்வு ஒன்றை பெறாவிட்டால் நமது சமூகம் – இன்னும் வரலாற்றில் தமிழினம் நம்மை மன்னிக்காது கல்லறைகளை உடைத்தெறிவார்கள், விரைந்து செயற்படுங்கள். எனவே அனைத்து தரப்பும் நியாயமான தீர்வினைப்பெற்று தமிர்கள் நிம்மதியாக வாழ இந்த தருணத்தில் முன்வர வேண்டும்.

குறுகியகால சந்தர்ப்பவாதக் கூட்டுக்களைவிட்டு, பழிவாங்கும் அரசியலைவிட்டு தமிழ் முஸ்லீம் சிங்கள மக்கள் அனைவருமே இலங்கையர் என்ற எண்ணத்தக்க ஆட்சியை வழங்கக் கூடியஒரு அரசியல் தலைவருக்கு இலங்கை மக்கள் தங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.

முஸம்மிலுக்கு பணம் வழங்கியமைக்கு எதிராக இன்று சட்ட நடவடிக்கை -ஒலிப்பதிவு ஆவணங்களும் ஊடகங்களுக்கு விநியோகம்

mohomad-muzzammil.gifசரத் பொன்சேக்காவை ஆதரித்து அவரது ஊழல் மோசடிகளை மூடிமறைக்கக் கோரியும் முஸம்மில் எம்.பி.க்கு மில்லியன் கணக்கில் பணத்தை வழங்க முற்பட்ட சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்  பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்தார்.

உரிய சட்ட நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்  இன்று முதல் இதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் மாநாடு பத்தரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்றது. இலஞ்சமாக கொடுக்கப்பட்ட பணம் கைமாறியமை தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டதைப் போன்று சம்பவத்துடன் தொடர்புடைய பேச்சுக்கள் இடம்பெற்ற ஒலி நாடாக்கள் நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் ஒலிபரப்பிக் காண்பிக்கப்பட்டது.

சரத் பொன்சேகாவுக்கு முஸம்மில் எம்.பி.யின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கான இடைத்தரகராக செயற்பட்ட மயோன் முஸ்தபா எம்.பி. முஸம்மில் எம். பி.யுடன் பேரம் பேசுவதை அதில் கேட்கக் கூடியதாக இருந்தது.

அதேபோன்று, கடந்த 14ம் திகதி இராஜகிரியவிலுள்ள ஐ. தே. க. அலுவலகம் ஒன்றில் வைத்து ஐ. தே. க. முக்கியஸ்தரான மலிக் சமரவிக்ரம முஸம்மில் எம்.பி.யுடன் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளார்.

மயோன் முஸ்தபா ஹாபிஸ் நஸீர் அஹமட் (துஆ தலைவர்) மற்றும் சரத் என்று அழைக்கப்படும் ஐ. தே. க.வின் மற்றுமொரு முக்கியஸ்தர் ஆகியோர் இணைந்து நடத்திய இந்தப் பேச்சுவார்த்தையை முஸம்மில் எம்.பி. மிகவும் இரகசியமான முறையில் தனது உடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நவீன ஒலிப்பதிவு இயந்திரம் மூலம் பதிவுசெய்துள்ளார். இந்த உரையாடலையும் இங்கு அவர் ஒலிபரப்பிக் காண்பித்தார்.

சரத் பொன்சேகாவின் ஆயுத ஊழல் மோசடிகளை மூடிமறைக்கவும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவுக்கு எதிராகவும், சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதற்கான அறிவித்தலை முஸம்மில் எம்.பி. ஊடாக வெளியிடுவது தொடர்பாக இங்கு கலந்துரையாடியதை கேட்கக்கூடியதாக இருந்தது.

இதற்கான செய்தியாளர் மாநாட்டை நடத்தும் இடம் தொடர்பான முரண்பாடுகள் வந்ததையடுத்து அதனை எங்கு நடத்துவது என்பது தொடர்பாக ஐ. தே. க. முக்கியஸ்தர் மலிக் சமரவிக்ரம அந்த இடத்திலிருந்தவாறே ரவி கருணாநாயக்க எம்.பி.யுடன் தொலைபேசி மூலம் பேசுவதையும், மருதானை டீன்ஸ் வீதியிலுள்ள ஒரு இடத்தில் இந்த செய்தியாளர் மாநாட்டை நடத்த ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தமையையும் அந்த ஒலி நடாவிலிருந்து கேட்கக் கூடியதாக இருந்தது. ஒலிபரப்பி காண்பிக்கப்பட்ட உரையாடல்கள் சி.டி.க்களில் பதிவு செய்யப்பட்டு ஊடகங்களுக்கு இந்த செய்தியாளர் மாநாட்டில் வழங்கப்பட்டது.

இந்த மாநாட்டில் விமல் வீரவன்ச எம்.பி. தகவல் தருகையில் :-

மிகவும் பொறுப்புடனும், ஆதாரபூர்வமாகவும் இந்த தகவல்களையும் இதனுடன் சம்பந்தப்பட்ட ஒளி, ஒலி நாடாக்களையும் நாங்கள் வெளியிடுகின்றோம். சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குமாறு தனக்கு தொடர்ந்து அழுத்தங்கள் தொலைபேசி அழைப்புக்கள் வருவதாக முஸம்மில் என்னிடம் தெரிவித்தார். அதனையடுத்து நாங்கள் திட்டமிட்ட சில செயற்பாடுகளை முன்னெடுத்தோம்.

இந்த நாட்டிலுள்ள மக்கள் பிரதிநிதிகளை வாங்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் எனது ஆலோசனைக்கமைய நாட்டுக்காக முஸம்மில் எம்.பி. மிகவும் போராட்டத்திற்கு மத்தியில் காட்சிகளையும் பேச்சுக்களையும் ஒளி, ஒலிப்பதிவுகளை செய்துள்ளார்.

இவற்றில் உண்மையில்லை என்று கூறும் எவரும் இதனை உறுதிப்படுத்த முடியும். நாங்கள் தயாராக உள்ளோம். உண்மையானதும், தகுந்த ஆதாரங்களும் இருப்பதால் எந்தவித தயக்கமும் இன்றி சட்டத்தின் முன் இதனை முன்வைக்கவுள்ளோம். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இதற்கான சகல சட்ட நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.

பணம் தருவதாக பேரம் பேசப்பட்டுள்ள போதிலும் ஒரு தொகைப் பணத்தையே முற்பணமாக கொடுத்துள்ளனர். இதற்காக வெள்ளவத்தையிலுள்ள சபயார் ஹோட்டலில் இரண்டு அறைகள் எடுக்கப்பட்டுள்ளன. 105ம் இலக்க அறை முஸம்மில் எம்.பி.க்காகவும், 102ம் இலக்க அறை அவரது மெய்பாது காவலர்களுக்காகவும் எடுக்கப்பட்டுள்ளது. மயோன் முஸ்தபா, தனது பெயர், அடையான அட்டை இலக்கம் ஆகிய தகவல்களை வழங்கி இந்த இரு அறைகளை பதிவு செய்துள்ளமை ஹோட்டல் பதிவு மூலம் தெளிவாக உறுதியாகின்றது.

எம்.பி.க்களை பணம் கொடுத்து வாங்கும் விடயம் மிகவும் பாரதூரமான விடயமாகும். சரத் பொன்சேகா தான் ஊழல் அற்றவர் என்றும் தன்னுடன் இருப்பவர்களும் நேர்மையானவர்கள் என்றும் கூறித் திரிகின்றார். இலஞ்சம் கொடுத்து எம்.பி.க்களை வாங்குபவர்களிடமிருந்து எவ்வாறு நல்லாட்சியை எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஏகாதிபத்தியவாதிகள் தங்களுக்குத் தேவையானதை இந்த நாட்டில் நிலைநாட்ட முயற்சிக்கின்றனர். மேற்கத்திய நாடுகளின் பணங்கள் மூலம் இந்த நாட்டு மக்களின் தீர்மானத்தை ஒருபோதும் மாற்ற முடியாது. எனவே, மக்கள் ஒருபோதும் இதனை அனுமதிக்கப் போவதில்லை என்றார்.

முஸம்மில் எம். பி.

சில ஊடகங்கள் கூறுவது போன்று பணத்தைப் பெறும் நோக்கம் இருந்தால் அந்த காட்சிகளையும், பேச்சுவார்த்தைகளையும் ஒளி, ஒலிப்பதிவு செய்ய வேண்டிய தேவையில்லை என்று முஸம்மில் எம்.பி. தெரிவித்தார்.  இது போன்ற இலஞ்சம் கொடுக்கும் திட்டங்களை அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டுச் சென்றேன் என்று அவர் குறிப்பிட்டார்.

எமது திட்டத்தை சரியான முறையில் நிறைவேற்றுவதற்காக அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நடிக்க வேண்டி ஏற்பட்டது.  இதற்காக பொன்சேகாவுக்கு ஆதரவாக சில பொய்களை சொல்ல நேர்ந்ததாக முஸம்மில் தெரிவித்தார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு; ‘கொமான்டோ படையினர் வேண்டுமா? அல்லது என்னிடம் பாதுகாப்பு ஆட்கள் உள்ளனர். எது வேண்டும் என்று ரவி கருணாநாயக்க எம்.பி. கேட்டுள்ளார்.

மயோன் முஸ்தபாவுடனான ஒலி நாடா உரையிலும் இதனை கேட்கக்கூடியதாக இருந்தது.

கடந்த 5ம் திகதி பாராளுமன்றத்தில் வைத்து இந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவித்த முஸம்மில், உங்களைப் பற்றி தலைவரிடம் சொல்லியுள்ளேன். இன்னும் சில முக்கியஸ்தர்கள் வரவுள்ளனர். சகலருக்கும் பணம் கொடுக்க தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்தார். சரத் பொன்சேகா, ரணில், ஜே. வி. பி. மற்றும் முக்கியஸ்தருக்கு இந்த விடயங்கள் தொடர்பாக தெரியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டுக்கு எதிரான முதலாவது ஒப்பந்தத்தை நிறைவேற்று ஜனாதிபதியாகவிருந்து ஒழித்தேன் 2வது ஒப்பந்தத்தை ஒழிக்கும் பொறுப்பு மக்களுடையது – ஜனாதிபதி

mahinda.jpgதாய் நாட்டுக்கெதிரான முதலாவது ஒப்பந்தத்தை நான் நிறைவேற்று ஜனாதிபதியாகவிருந்து இல்லாதொழித்தேன். இரண்டாவது ஒப்பந்தத்தை இல்லாதொழிக்க வேண்டிய பொறுப்பு நாட்டு மக்களுடையதெனவும் அதனை எதிர்வரும் 26ம் திகதி மக்கள் நிறைவேற்றுவரெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வன்முறைக்கும் விரோத அரசியலுக்கும் இனி இந்த நாட்டில் இடமில்லையென தெரிவித்த ஜனாதிபதி, பயங்கரவாதத்திலிருந்து மீட்டு ஒன்றிணைந்துள்ள நாட்டைப் பாதுகாத்து ஜனநாயகத்தையும் பாதுகாப்பது மக்களின் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று குருநாகல் நகரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.  ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-

மதுரங்குழி பகுதியில் எமது ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் ஐயர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மீண்டும் வன்முறை யுகம் கட்ட விழ்க்கப்பட்டுள்ளது.

இதனை முடிவுக்குக் கொண்டுவரவும் இரகசிய ஒப்பந்தங்களுக்கு முடிவு கட்டவும் எதிர்வரும் 26ம் திகதி மக்கள் ஒன்றிணைய வேண்டும்.

கடந்த நான்கு வருடத்திற்கு முன்னர் இந்த நாட்டை மீட்டு ஐக்கியப்படு த்துவதற்காக மக்கள் இந்த நாட்டைப் பாரம்கொடுத்தார்கள். அதனை நான் முழுமையாக நிறைவேற்றியுள்ளேன்.

தனி நிர்வாக அதிகாரத்துடன் அடையாள அட்டையிலிருந்து சகலதையும் தமக்கென தனியாக வைத்திருந்த பயங்கரவாதியிடமிருந்து நாட்டை மீட்டு தற்போது ஒரு கொடியின் கீழ் அனைத்தையும் கொண்டுவர முடிந்துள்ளது. வெளிநாடுகளுக்கு அடிபணிந்து முதுகெலும்பில்லாமல் எம் தலைவர்கள் செயற்பட்ட யுகத்துக்கும் முடிவு காணப்பட்டுள்ளது.

நாம் யுத்தத்தை மாத்திரம் முன்னெடுக்கவில்லை. நாட்டில் அபிவிருத்தியையும் மேற்கொண்டோம். அத்துடன் அரச துறையை மேம்படுத்தும் வகையில் ஆறு இலட்சமாகவிருந்த அரச ஊழியர்களின் எண்ணிக்கையை 12 இலட்சமாக அதிகரிக்க எம்மால் முடிந்துள்ளது. நாம் இந்த நாட்டை ஆசிய பிராந்தியத்திலேயே பெறுமதிமிக்க நாடாக மாற்ற பின்புலத்தைக் கட்டியெழுப்பியுள்ளோம். வடக்கு கிழக்கு உட்பட சகல பிரதேசங்களையும் அபிவிரு த்தியில் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

எம்மைப் பற்றி பல அவதூறுகள், சேறு பூசுதல்கள் இடம்பெறுகின்றன. எம்முடனுள்ள விமல் வீரவன்ச, ஜோன்சன் பெர்னாண்டோ போன்றவர்களுக்கும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. எந்தவித சவால்களையும் ஏற்க நாம் தயார். வைராக்கியமும் குரோதமும் நிறைந்த அரசியலுக்கு இந்த நாட்டில் இனி இடமில்லை. நாமும் நாட்டு மக்களும் அதற்கு இனி ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

பணத்திற்கு விலைபோகும் அரசியல்வாதிகள் எம்மிடமில்லை.  முஸம்மிலை விலைபேசியுள்ள விடயம் அம்பலமாகியுள்ளது.

மாகாண சபை தேர்தல்களுக்கு விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டைகளை ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்த முடியும்

election_box.jpgமாகாண சபைத் தேர்தல்களுக்காக விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டைகளை மீள வழங்காது வைத்திருக்கும் வாக்காளர்கள் அவற்றை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் பயன்படுத்த முடி யும் எனத் தேர்தல்கள் தலைமையகம் அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு ள்ளது.

2007 ஆம் ஆண்டு முதல் மாகாண சபைத் தேர்தல்களுக்காகத் தேர்தல்கள் தலைமையகம் தற்காலிக அடையாள அட்டைகளை வாக்காளர்களுக்கு விநியோகித்தது. எனினும் அந்த அடையாள அட்டைகளைத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம்

மீள ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான வாக்காளர்கள் அந்தத் தற்காலிக அட்டைகளை மீள ஒப்படைக்காது தம்மிடமே வைத்துள்ளனர்.

இந்நிலையில், கிழக்கு மாகாணத்தைத் தவிர்ந்த வாக்காளர்கள் மீள ஒப்படைக்காமல் வைத்திருக்கும் தற்காலிக அடையாள அட்டைகளை இந்த ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்த தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலதிக ஆணையாளர்கள் உதவி ஆணையாளர்கள் ஆகியோர் பங்குபற்றிய கூட்டத்தில் தேர்தல்கள் ஆணையாளர் இந்த முடிவை அறிவித்ததாக மேலதிக ஆணையாளர் டபிள்யூ. பீ. சுமணசிறி தெரிவித்தார்.

தேர்தல்கள் தலைமையகம் விநியோகிக்கும் தற்காலிக அட்டைகளைப் பெற்றுக்கொள்வத ற்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் கடந்த 15 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. எனினும் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் வழங்கும் தற்காலிக அட்டைகளைப் பெறுவதற்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விண்ணபிக்க முடியும் என்று மேலதிக ஆணையாளர் சுமணசிறி தெரிவித்தார்.

தேர்தல்கள் தலைமையகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதால் ஜனாதிபதித் தேர்தலில் அடையாள அட்டையின்றி வாக்களிக்க முடியாது என எந்த வாக்காளரும் ஆதங்கப்பட வேண்டியதில்லை என்றும் மேலதிக ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர்கள் தமது ஆளடையாளத்தை நிரூபிப்பதற்காக தேசிய அடையாள அட்டையைத் தம்முடன் கொண்டு செல்ல வேண்டும். அது இல்லாதவர்கள், காலாவதியாகாத கடவுச் சீட்டு, காலாவதியாகாத சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, ஆட்பதிவுத் திணைக்களம் வழங்கும் மத குருமார்களுக்கான அடையாள அட்டை, தற்காலிக அட்டை அல்லது தேர்தல்கள் தலைமையகம் வழங்கும் தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவதொன்றைப் பயன்படுத்தி வாக்களிக்க முடியும் என்றும் தேர்தல்கள் தலைமையகம் அறிவித்துள்ளது.

த.தே.கூட்டமைப்பு நா. உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் காயம்

chandrakanth-chandranehru.jpgதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன், இன்று தமது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததன் காரணமாக காயமடைந்து அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் திருக்கோவிலில் உள்ள அவரது வீட்டில் இடம்பெற்றுள்ளது.
 
பாதுகாப்புக்காக அவர் தம்வசம் வைத்திருந்த கைத்துப்பாக்கி வெடித்தமையால் அவரது தொடையில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

கிங்ஸ் லெவன் அணியின் தலைவராக சங்கக்கார

kumar.jpgஐ.பி.எல்., அணிகளுள் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து இந்தி யாவின் யுவராஜ் சிங் நீக்கப்பட்டார்.

புதிய தலைவராக இலங்கையின் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தியன் பிரிமியர் லீக் சார்பில் (ஐ.பி.எல்.) 3 வது “டுவென்டி-20” கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 12 முதல் ஏப். 25 ஆம் திகதி வரை இந்தியாவில் நடக்க உள்ளது.  இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகளுள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஒன்று. கடந்த 2 தொடர்களில் இந்த அணியின் தலைவராக யுவராஜ் சிங் செயல்பட்டார்.

ஆனால் இந்த முறை தலைமைப் பொறுப்பிலிருந்து யுவராஜ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அணியின் புதிய தலைவராக இலங்கை அணி வீரர் சங்கக்கார தெரிவு செய்யப் பட்டுள்ளார். இது குறித்து அணியின் தலைமை நிர்வாக அதிகாரி அனில் ஸ்ரீவத்சவா கூறுகையில்,

“யுவராஜ் சிங்கிற்கு பதில் 3 வது ஐ.பி.எல். தொடரில் சங்கக்கார அணியை வழிநடத்துவார். இதன் மூலம் அணியின் பலம் அதிகரிக்கும் என நம்புகிறோம். கடந்த இரண்டு தொடர்களில் அணியின் தலைவராக யுவராஜ் சிங் சிறப்பாக செயல்பட்டார். அவரது தலைமையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலாவது முறை அரையிறுதி வரை முன்னேறி அசத்தியது.

அணியின் தலைமைப் பதவியிலிருந்து அவரை நீக்குவதால், அவர் மீது நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் இல்லை. அணியில் அவருக்கு என தனி இடம் உண்டு” என்றார். இது குறித்து சங்கக்கார கூறியதாவது, கடந்த இரண்டு தொடர்களில் யுவராஜ் சிங்கின் தலைமையில் விளையாடியது மகிழ்ச்சி அளித்தது.

அவர் மிகச் சிறந்த தலைவர் தவிர எனது நல்ல நண்பர். அணி நிர்வாகத்தின் புதிய முடிவு குறித்து அவரிடம் பேசினேன். அதற்குப் பின் தான் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக முடிவு செய்தேன்.

இதனால் எந்தப் பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பில்லை. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முக்கிய வீரர் யுவராஜ். ஆட்டத்தின் போக்கை அவரால் எந்த சமயத் திலும் மாற்ற முடியும் இவ்வாறு சங்கக்கார கூறினார்.

தலைமைப் பொறுப்பிலிருந்து யுவராஜ் நீக்கப்பட்டது குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி கூறுகையில்,

“யுவராஜ் துடுப்பாட்டத்தில் முழுக் கவனம் செலுத்த வேண்டும் என அணி நிர்வாகம் விரும்புகிறது. தலைமைப் பொறுப்பு அவரது செயல்பாடுகளுக்குப் பாதிப்பாக அமைந்துவிடக் கூடாது.

வீரர்களுக்கும் அணி நிர்வாகத்துக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அனைவரும் இணைந்து சிறப்பாக தயாராகி வருகிறோம். அணி நிர்வாகத்தின் முடிவை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளார் யுவராஜ்” என்றார்.

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் இன்று

sania-mirza.jpgஅவுஸ் திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்று இந்தியாவின் சானியா மிர்சாவுக்கு சவாலானதாக அமைந்துள்ளது. ஆண்டின் முதல் கிராண்ஸ்லாம் தொடரான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் இன்று மெல்போர்னில் நடக்கிறது. இதில் உலகின் முன்னணி வீரர்கள் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ராபெல் நடால் மற்றும் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், டினரா சபினா (ரஷ்யா), இவானோவிச் (செர்பியா) போன்ற வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, கடந்த ஆண்டு இரண்டாம் சுற்று வரை முன்னேறினார்.

இம்முறை இவருக்கு முதல் சுற்று போட்டி, கடினமானதாக இருக்கும் என தெரிகிறது. தர வரிசையில் 56வது இடத்தில் இருக்கும் இவர், 26வது இடத்தில் உள்ள பிரான்சின் அரவானே ரேசாயை சந்திக்கிறார். இதற்கு முன் இருவரும் மூன்று முறை மோதியுள்ளனர். இதில் இருவரும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளனர்.