வே பிரபாகரனின் தந்தையின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று (டிசம்பர் 20) இடம்பெற்று அவரது பூதவுடல் ஊறணி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் சகோதரர் அவருக்கு கொள்ளியிட்டார். மரணச் சடங்குகள் திரு வேலுப்பிள்ளையின் மகள் வினோதினி ராஜேந்திரனின் வீட்டில் (வேலுப்பிள்ளையின் வீட்டிலிருந்து 150 யார் தூரத்தில் உள்ளது) நடைபெற்றது. இந்த சடங்குகளுக்கு முன்பு இவரது உடல் வல்வெட்டித்துறை ரீமலில் – குமரப்பா – புலேந்திரன் தூபிகள் உள்ள மாவீரர் சதுக்கத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
மரணச் சடங்கில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பம் முதல் பரம எதிரி அமைப்பாக இருந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் புளொட் தலைவர் சித்தார்த்தனும் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு தனது அஞ்சலியைச் செலுத்தினார்.
இறுதி அஞ்சலியில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தினாவின் புதிய இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் சமல், பத்திரகையாளர் தர்மசிறி ஆகியோரும் கலந்து கொண்டனர். இங்கே தர்மசிறி இலங்கையில் இரண்டு முக்கிய கொலைகாரர்கள் தேர்தலில் நிற்கிறார்கள் என்று பேசத் தொடங்கியதும் வல்வெட்டித்துறைப் பொலிசார் ஒலிபெருக்கியை நிறுத்தி தர்மசிறியை கைது செய்ததாக எம் கெ சிவாஜிலிங்கம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் பொலிசார் ஒலிபெருக்கி உரிமையாளரையும் ஓட்டோ சாரதியையும் கைது செய்ததாகவும் தான் பொலீஸ் நிலையம் சென்று தலையிட்டதின் காரணமாக தர்மசிறி விடுவிக்கப்பட்டதாகவும் மற்றைய இருவரும் நாளை நீதிமன்றில் ஆஜராகும்படி கேட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடலை ஏற்றுக்கொண்ட நேரம் முதல் திரு ஜிவாஜிலிங்கமும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இறுதிவரையில் மரணச்சடங்கில் இருந்துள்ளனர். இன்று (டிசம்பர் 10) காலை ரிஎன்ஏ பா உ பத்மினி சிதம்பரநாதன் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டார். நேற்று மாலை (டிசம்பர் 9) ரிஎன்ஏ பா உ க்களான சிறீகாந்தா, சம்பந்தர், துரைரட்ணசிங்கம், வில்லியம் தோமஸ், அரியநேந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சிறில், சுரேஸ் பிரேமச்சந்திரன், சேனாதிராஜா மற்றும் கல்முனை நகரசபை உறுப்பினர் கென்றி மகேந்திரன் போன்றோர்கள் உட்பட 15 முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டதாகவும் அறியப்படுகிறது.
பருத்தித்துறையிலிருந்து வல்வெட்டித்துறைக்கு ஓடுகின்ற 751 ம் இலக்க பஸ் சேவையிலீடுபடவில்லை என்றும் அதனால் இறுதிநிகழ்வில் மக்கள் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் எம் கெ சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழப்பாணத்தில் பெருமளவு பஸ்கள் மகிந்த ராஜபக்சவின் பொதுக் கூட்டத்திற்காகத் திசை திருப்ப்பட்டு இருந்ததாகவும் ஏம் கெ சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டினார்.