26

26

ஜனாதிபதித் தேர்தல் முடிவதற்கு இன்னும் இரண்டு மணி நேரங்கள் மாத்திரம். – இன்னும் சரத் பொன்சேக்கா வாக்களிக்கவில்லை?

sarath.jpgஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட  ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் முடிவதற்கு இன்னும் இரண்டு மணி நேரங்கள் மாத்திரமே உள்ளன. இந்நிலையில்  சரத் பொன்சேக்கா இதுவரை வாக்களிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரம் இதுவரை பாரிய தேர்தல் வன்முறைகள் எதுவும் நடைபெறவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.  இதுவரை 50 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியுள்ளன. 

தேர்தல் வன்முறைகளில் ஈடுபடத் திட்டம் – 20 முன்னாள் கொமாண்டோக்கள் கொக்கரெல்லயில் கைது

தேர்தல் தினமான இன்று வன்முறைகளில் ஈடுபடுவதற்கென தயாராகவிருந்த 20 முன்னாள் இராணுவ கொமாண்டோக்கள் ஆயுதங்களுடன் நேற்று கைது செய்யப்பட்டிருப்பதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

காலி, கொக்கரெல்ல பிரதேசத்தில் வைத்தே இவர்கள் கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தலின் போது வன்முறைகளை முன்னெடுப்பதற்காக பாரிய திட்டங்களை இவர்கள் தீட்டி வருவதாக கிடைத்த தகவலையடுத்து கொழும்பிலிருந்து சென்ற விசேட இராணுவக் குழுவினரே மேற்படி இருபது முன்னாள் கொமாண்டோக்களை ஆயுதங்களுடன் கைது செய்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள 20 பேரும் இராணுவ பொலிஸார் மற்றும் சி. ஐ. டி.யினரால் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.

இவர்கள் முன்னாள் இராணுவ கொமாண்டோ பிரிவினரென தெரியவந்த போதும், இவர்கள் ஒவ்வொருவரும் என்னென்ன தரங்களைச் சேர்ந்தவர்களென்ற விவரம் பூரண விசாரணகளுக்குப் பின்னரே தெரியவருமெனவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

வாக்கு மோசடி முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ள விசேட பிரிவு – அழையுங்கள்: 0112-877629-31

election_box.jpgஇடம்பெறும் வாக்கு மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளவென தேர்தல் திணைக்களத்தினால் விசேட பிரிவொன்று ஆரம்பிக்கப் பட்டுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எந்தப் பிரதேசத்திலும் வாக்கு மோசடிகள் இடம்பெறுவது தொடர்பாக அறிவிக்கும் பட்சத்தில் அதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க முடியுமென்று தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.

0112-877629, 0112-877630, 0112-877631 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும்.

இன்று காலை 7.00 மணி தொடக்கம் மாலை வரை இந்த பிரிவு செயற்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

எத்தியோப்பிய விமானம் கடலில் வீழ்ந்து விபத்து – 85 பயணிகள் பலி

85 பயணிகளுடன் சென்ற எதியோப்பிய விமானம் விபத்துக்குள்ளானது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்து எதியோபியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் நேற்றுக் காலையில் எதியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு புறப்பட்டது.

விமானம் புறப்பட்டு சென்ற 45 நிமிடங்களுக்குப் பிறகு விமானத்துக்கும், விமான கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விமானம் மத்திய தரைகடல் மேல் பறந்த போது விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. விமானத்தில் இருந்தவர்களில் 54 பேர் லெபனானை சேர்ந்தவர்கள், எஞ்சியவர்களில் பெரும்பாலானோர் 22 பேர் எதியோபியாவை சேர்ந்தவர்கள். ஒருவர் ஈராக்கியர், பிரான்ஸ், சிரியா நாட்டை சேர்ந்த தலா ஒருவரும் உள்ளனர். இவர்களைத்தவிர விமான பைலட்டு உட்பட சிப்பந்திகள் 7 பேர் மொத்தம் 92 பேர் விமானத்தில் இருந்தனர்.

விமானம் நடுவானில் திடீரென தீ பிடித்து எரிந்து விழுந்ததாக மத்திய தரைக்கடல் பகுதி கடலோர மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர். விமான விபத்து குறித்து செய்தி அறிந்தவுடன் லெபனான் நாட்டு அதிகாரிகள் ரபீக் ஹரிரி, விமான நிலையம் விரைந்துள்ளார். இங்கு இருந்துதான் அந்த விமானம் புறப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகளில் லெபனான் நாட்டின் இராணுவம், கடற்படை மற்றும் ஐ.நா., பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

ஹெய்ட்டியில் மீண்டும் நிலநடுக்கம்

haitibuidling-pd.jpgஹெயிட் டியில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. போர்ட் அப் பிரின்ஸ்  நகருக்கு மேற்கே இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிக்ஸ்டர் அளவில் இது 4.7 ஆகும். சேத விபரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

ஏற்கனவே போர்ட்-அப்-பிரின்ஸ் நகரில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து கிடக்கின்றன. அவற்றை அகற்றும் பணியில் பன்னாட்டு மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து பிணங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.

இருந்தும் இடிபாடுகளில் பிணங்கள் கருகி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், வீடுகளை இழந்த இலட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போதிய சுகாதார வசதி அங்கு இல்லை எனவே ஹெய்டியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களில் பலர் கண்களை இழந்துள்ளனர். கால், கைகளையும் இழந்து தவிர்க்கின்றனர் தலைக் காயங்களால் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்கள் முகாம்களிலும் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கண்டி, வத்தேகம கல்வி வலயம்: 68 பாடசாலைகள் பெப்ரவரி 15 வரை பூட்டு

கண்டி மாநகர சபை வட்டாரம் உட்பட கண்டி, வத்தேகம ஆகிய கல்வி வலயங்களைச் சேர்ந்த 68 பாடசாலைகள் நேற்று மூடப்பட்டன. பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும்.

இத்தகவலை மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் உட்பட 62 ஆவது சுதந்திர கொண்டாட்டங்கள் இம்முறை பள்ளேகலையில் நடைபெற இருப்பதால், முன்கூட்டியே இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு இவ்வாறு 68 பாடசாலைகளும் மூடப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“தெயட்ட கிருல” என்ற கண்காட்சிகள் இதில் முக்கிய இடம் பெறுவதால் அங்கே கடமை புரியும் பொலிஸாருக்கும் ஏனைய ஊழியர்களுக்கும் தங்குமிடம் வசதியாகவே இவை மூடப்படுகின்றன. ஜீ. ஸி. ஈ. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் கண்டி புஷ்பதான மகளிர் பாடசாலை தவிர நகரில் உள்ள ஏனைய பாடசாலைகளும் இதன் காரணமாக மூடிவிட தீர்மானிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மூடப்படும் பாடசாலைகளின் லீவு நாட்களுக்குப் பதிலாக பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியின் பின்னர் இடம்பெறும் சனிக்கிழமை நாட்களில் வகுப்புகளை நடத்தவும் திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் ஊடகங்களுக்கு எடுத்துரைத்தார்.

ஜனாதிபதித் தேர்தல் இன்று

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 8வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஆறாவது ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது. சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெறும் தேர்தல் இதுவாகும்.

இதற்கமைய, வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள 11 ஆயிரத்து 98 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவற்றில் 17 கட்சிகளின் சார்பில் 17 பேரும், சுயேச்சை வேட்பாளர்கள் ஐவரும் அடங்குவர்.

சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல் ஒன்றை நடத்தி முடிப்பதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் நேர காலத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தலில் ஒரு கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

இதேவேளை, அமைதியானதும், வன்முறையற்றதுமான தேர்தல் ஒன்றை நடத்தி முடிப்பதற்குத் தேவையான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளை திட்டமிட்ட அடிப்படையில் பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டுள்ளதென பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் தேர்தல் பாதுகாப்பு கடமையில் 68,800 பொலிஸாரும் அவர்களுக்கு உதவியாக முப்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக பொலிஸாரும், முப்படையினரும் உள்ளடக்கப்பட்ட 2523 நடமாடும் சேவைகள் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் பொலிஸ் அதிகாரி ஒருவர், இரண்டு பொலிஸார், முப்படை வீரர்கள் இருவர் என்றடிப்படையில் ஐவர் இந்தக் குழுவில் அடங்குவர்.

பொலிஸாரும், முப்படையினரும் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் இனங்காணப்பட்ட பிரதேசங்களில் பொலிஸாரும் முப்படையினரும் கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தெரிவத்தாட்சி உத்தியோகத்தர் காரியாலயத்திற்கான பாதுகாப்பு, வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லுதல், வாக்கெண்ணும் நிலையங்களைப் பாதுகாத்தல், தேர்தலுக்குப் பிந்திய பாதுகாப்பு ஒழுங்கு போன்ற நடவடிக்கைகளுக்காக இவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் கடமைகளில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குகள் எண்ணும் நிலையங்கள்

வாக்களிக்கும் நடவடிக்கைகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி 4 மணிக்கு முடிவடைவதை அடுத்து வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புகளுடன் எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இம்முறை, நாடு முழுவதும் வாக்குகளை எண்ணுவதற்கென 888 நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சாதாரண வாக்குகளை எண்ணுவதற்கென 737 நிலையங்களும், தபால் மூல வாக்குகளை எண்ணுவதற்கென 139 நிலையங்களும், இடம்பெயர்ந்தவர்களின் வாக்குகளை எண்ணுவதற்கென 12 நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் முடிவுகள்

வாக்குப்பெட்டிகள் வாக்குகள் எண்ணும் நிலையங்களைச் சென்றடைந்தவுடன் இன்று இரவு 7 மணியளவில் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

நள்ளிரவுக்குப் பின்னர் முதலாவது தேர்தல் முடிவை வெளியிட முடியும் என்று தேர்தல் திணைக்கள உயர் அதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை, அவசரத் தேவைகளுக்கு ஹெலிகொப்டர்களை பயன்படுத்துவதற்கும் தேர்தல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வேட்பாளர்கள்

இந்த ஜனாதிபதித் தேர்தலில் 17 கட்சிகளின் சார்பில் 17 பேரும் சுயேச்சை வேட்பாளர்கள் ஐவருமாக 22 பேர் போட்டியிடுகிறார்கள். எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக போட்டியிடும் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் -ஸிஷி(யிt போட்டியாக இந்தத் தேர்தல் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

பதவியிலிருக்கும் ஜனாதிபதி ஒருவருடன் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் போட்டிக்கு களமிறங்கியிருப்பது இதுவே இலங்கையில் முதல் தடவையாகும். அதேநேரம், ஜனாதிபதி பதவியில் இருப்பவர் பதவிக் காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னதாக தேர்தல் நடைபெறுவதும் இதுவே முதல் தடவையாகும்.

அடையாளத்தை உறுதிப்படுத்தல், வாக்களித்தல்

மக்கள் வாக்களிப்பதற்கு ஆளடை யாளத்தை நிரூபிப்பதற்காக தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல்கள் ஆணையாளரால் அங்கீகரி க்கப்பட்ட ஏதாவதொரு ஆளடையாள அட்டையைக் காண்பித்து வாக்களிக்க முடியும். வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள் ஆளடையாளத்தை நிரூபித்து வாக்களிக்க முடியும் என்றும் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் மூன்று வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியும். ஒரு வேட்பாளருக்கு வாக்கை அளிப்பதாயின் வாக்காளரின் பெயருக்கும் சின்னத்திற்கும் எதிரே புள்ளடியிடலாம். மூன்று வேட்பாளருக்கும் அளிப்பதாயின் முதலாமவருக்கு ‘1’ என்றும் இரண் டாமவருக்கு ‘2’ என்றும் மூன்றாமவருக்கு ‘3’ என்றும் அடையாளமிடலாம்.

முதலாவது வேட்பாளரைத் தெரிவு செய்யாமல் இரண்டாம் மூன்றாம் விருப்பு வாக்கு அளிக்கப்பட்டிருக்குமாயின் அந்த வாக்கு செல்லுபடியற்றதாகும்.

மீறினால் துப்பாக்கிச் சூடு

தேர்தலின் போது எந்தவொரு தனிநபரோ குழுக்களோ சட்டத்தைப் புறக்கணித்து வன்முறைகளைத் தூண்டும் நடவடிக்கைக ளில் ஈடுபட்டால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளும் நிலை ஏற்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வன்முறைகளைத் தூண்டும் நடவடி க்கைகளில் எவராவது ஈடுபட்டால் முதலில் பொலிஸார் எச்சரிக்கை அறிவு றுத்தல்களை விடுப்பார்கள். வாக்களிப்பு நிலையத்தில் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் மற்றும் வன்முறைகளைத் தூண்ட எவராவது முயற்சித்தால் பொலிஸார் முதலில் எச்சரிக்கை விடுப்பார்கள்.

எச்சரிக்கைக்கு மதிப்பளிக்காவிடின் சுடுமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.

கண்காணிப்பு பணிகள்

இம்முறை தேர்தலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு ள்ளனர்.

பொதுநலவாய மற்றும் தெற்காசிய பிராந்திய நாடுகளிலிருந்து இலங்கை வந்திருக்கும் 85க்கு மேற்பட்ட வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்காக சுமார் ஆயிரம் வாகனங்களும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

முறைகேடு நடந்தால் வாக்கெடுப்பு ரத்து

வாக்களிப்பு நிலையங்கள் அமையப் பெற்றுள்ள இடத்திலிருந்து ஐநூறு மீற்றர் தூரம் வாக்கெடுப்பு நிலையத்திற்குச் சொந்தமான பிரதேசமாகக் கருதப்படும். இந்தப் பிரதேசங்களிலோ அல்லது தேர்தல் சட்டங்களை மீறும் வகையிலோ எங்கேனும் எவரேனும் செயற்பட்டால் குறித்த வாக்கெடுப்பு நிலையத்தின் வாக்கெடுப்பு இரத்துச் செய்யப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

இன்றைய தினம் குறித்த பிரதேசத்திற்குள் கூட்டம் கூட்டுவது, ஒருவருக்கு ஆதரவாக பிரசுரங்கள் விநியோகிப்பது, அழுத்தம் கொடுப்பது சட்ட விரோதமாகும் என்று தெரிவித்த பொலிஸார் பிடியாணை இன்றி இவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டனர்.