05

05

தேசம்நெற் இணைய வலையில் இருந்து காணாமற் போனது ஏன்? : தேசம்நெற்

தேசம்நெற் இணைய வலையில் இருந்து காணாமற் போனது ஏன்?
தேசம்நெற் இற்கான இணையச்சேவையை (server)  வழங்கும் நிறுவனம் தேசம்நெற் இன் பதிவுக்கோவையினை (database) தேசம்நெற் இன் இணைப்பில் இருந்து பிரதான இணைப்பிற்கு (root directory)  இடம்மாற்றியது. அதனால் தேசம்நெற் இணையம் இணைய வலையில் காணாமல் போனது. தேசம்நெற் இணையத்திற்கு 500MB கொள்ளவு சேமிப்புத் திறனே வழங்கப்பட்டதாகவும் தேசம்நெற் இன் பாவனை 738 MB க்கு அதிகமாகியதால் இணையச்சேவையை வழங்குபவர்கள் மேற்படி நடவடிக்கையை எடுத்தனர்.

தேசம்நெற் நிர்வாகத்திற்கு இது பற்றி அறிவுறுத்தப்படவில்லையா?
இவ்வாறான அறிவுறுத்தல்கள் மின் அஞ்சலூடாக அனுப்பி வைக்கப்படும் என தேசம்நெற் நிர்வாகம் கருதி இருந்தது. ஆனால் இணைய சேவையை வழங்குபவர்கள் தமது தொடர்புகளை தமது இணையசேவையின் இணையத்தில் உள்ள தேசம்நெற் இற்கான பகுதியில் மட்டும் அவற்றை குறிப்பிட்டு இருந்தனர். வேறு எவ்வித தொடர்புகளும் மேற்கொள்ளப்படவில்லை. தேசம்நெற் இணைய வலையில் காணாமல் போனபோது தேசம்நெற் நிர்வாகமும் ஒரு வாசகனின் நிலையிலேயே இருந்தது.

அதனைச் சரி செய்வதற்கு ஏன் இவ்வளவு காலதாமதம் ஏற்பட்டது?
தேசம்நெற் ஒரு லாபமீட்டும் ஊடகமல்ல. தேசம்நெற் இல் பணிபுரிபவர்கள் அனைவரும் ஒரு நல்ல ஊடகத்தை நடாத்த வேண்டும் என்றதன் அடிப்படையில் எவ்வித பலனையும் எதிர்பாராமலே தங்கள் நேரத்தை சேமித்து தேசம்நெற் இல் பணிபுரிகின்றனர். குறிப்பிட்ட தொழில்நுட்பத் தவறு நடைபெற்ற போது எமக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்குபவர்களை உடனடியாகத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்களைத் தொடர்புகொண்டு விடயத்தை ஆராயும் போது இரவு ஆகிவிட்டது.

மேலும் இணைச்சேவையை வழங்குபவர்களுடன் மின் அஞ்சலூடாக மட்டுமே தொடர்பு கொள்ள முடியும் ஒவ்வொரு மின் அஞ்சல் அனுப்பும் போதும் அவர்களிடம் இருந்து பதில் வருவதற்கு குறைந்தது அரைமணிநேரம் ஆவது ஆகும். தவறைச் சரி செய்வதற்கு தேசம்நெற் கோவையை மீளப் பதிவிறக்கம் செய்துகொள்ள மட்டும் இரு மணிநேரம் எடுத்துக் கொண்டது.

இவ்வாறான காரணங்களால் தேசம்நெற் யை உடனடியாக மீண்டும் இணைய வலைக்குள் கொண்டுவர முடியவில்லை.

தற்போது தேசம்நெற் இல் என்ன மாற்றம் செய்யப்பட்டு உள்ளது?
தேசம்நெற் இல் 2007 முதல் 2008 டிசம்பர் 31 வரையான சகல பதிவுகளும் கருத்தாளர்களின் பின்னூட்டங்களும் நீக்கப்பட்டு உள்ளது. இவற்றின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது. தேசம்நெற் இல் இருந்த இணைப்புகள் சிலவும் நீக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தேசம்நெற் இற்கு ஒதுக்கப்பட்ட 500MB கொள்ளளவிற்கு தேசம்நெற் இன் பதிவுக்கோவை கொண்டுவரப்பட்டு உள்ளது.

நீக்கப்பட்ட பதிவுக் கோவையை தேசம்நெற்றில் பார்வையிட முடியாதா?
தற்போது நீக்கப்பட்ட பதிவுகள் எதனையும் பார்வையிட முடியாது. ஆனால் அவற்றின் பிரதிகள் தேசம்நெற் இடம் உண்டு.

இதனை வடிவமைப்பின் ஆரம்பத்தில் கவனிக்கவில்லையா?
தேசம்நெற் வடிவமைக்கப்பட்ட போது அதனை குறிப்பிட்ட காலத்திற்குப் பின் மீள் வடிவமைப்பு செய்யத் திட்டமிட்டு இருந்தோம். அத்துடன் இணையச்சேவை வழங்குபவர்களிடம் ஒவ்வொரு விடயத்திலும் மட்டுப்படுத்தப்படாத (unlimited) எல்லைகளைக் கொண்ட ஒரு ஒப்பந்தத்தையே பெற்றுக் கொண்டோம். ஆயினும் அவர்களின் வர்த்தகச் சொல்லாடலில் இணையத்தின் கோவைகளுக்கான பதிவில் மட்டுப்படுத்தப்படாத கோவைப் பதிவு என்பது குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. நாங்களும் அதனை அடையாளம் காணத் தவறிவிட்டோம்.

எதிர்காலத்தில் இவ்வாறான தவறு ஏற்படமாட்டாதா?
இவ்வாறான தவறு ஏற்படாத வகையில் தேசம்நெற்றை மீள்வடிவமைப்பு செய்ய உள்ளோம். மீள்வடிவமைப்பு வேலைகள் இன்னும் சில வாரங்களில் இடம்பெறும். மீள் வடிவமைப்பு செய்யும் போது நீக்கப்பட்ட பதிவுகள் மீளவும் தேசம்நெற்றுடன் இணைக்கப்படும். அனைத்துப் பதிவுகளையும் ஆண்டு வரிசையில் மீள்பதிவிடத் திட்டமிட்டு உள்ளோம்.

தேசம்நெற் மீள்வடிவமைக்கப்படுவதாயின் வாசகர்களின் கருத்தாளர்களின் ஆலோசனைகள் பரிசீலிக்கப்படுமா?
நிச்சயமாக! தேசம்நெற் இல் எவ்வாறான அம்சங்கள் தற்போது பிரச்சினையாக உள்ளதென்பதையும் எவ்வாறான அம்சங்கள் இணைக்கப்பட வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும் என்பதையும் இங்கு பதிவு செய்தால் தொழில்நுட்பக்குழு அவற்றைப் பரிசீலித்து அதற்கேற்ப தங்கள் வடிவமைப்பை மேற்கொள்வார்கள்.

இறுதியாக இத்தடங்கள் ஏற்பட்டதை அடுத்து எம்முடன் தொலைபேசியூடாகவும் மின் அஞ்சலூடாகவும் தொடர்பு கொண்டு தங்கள் ஆதங்கத்தையும் ஆதரவையும் வழங்கிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தேசம்நெற்.

வேட்டும் வோட்டும்! : ஈழமாறன்

Mahinda_and_Fonsekaகேட்டவன் ஒருவன்
கேட்டுக் கொண்டதால் – பார்த்துப் பாராமல்
வேட்டு வைத்தவன் ஒருவன் – வைத்துவிட்டு
தமிழன் ஓரமாய் இருப்பதாயின் இருக்கட்டும்
அன்றி உரிமை கேட்கின்
உரிவோம் கோவணத்தையும் – என்று
அமெரிக்கா சென்று அறிக்கை விட்டவன் ஒருவன்
அந்த அறிக்கை தவறென்று
மறுக்க மறுத்தவன் ஒருவன்.

அள்ளிக் கொண்டுபோய் துலைவார்
முள்ளிவாய்க்காலில் வைத்து
கொள்ளி வைத்தது போக
முள்ளுவேலிக்குள் அடைத்து வைத்து
வெள்ளத்துக்கு ஒதுங்க
வீடில்லாமல்
பிள்ளைக்கு கொடுக்க மருந்துமில்லாமல்
கூனிக் குறுகி எம்மினம் டெங்குக்
காச்சலில் செத்து மடிகையில்
நாடுகடந்த தமிழீழம் அமைக்க
ஒரு கூட்டம்
போடச் சொன்னவனுக்கு போடுவதா – இல்லை
போட்டுத் தள்ளினவனுக்குப் போடுவதா
ஏன்று வியன்னா சென்று
விவாதம் செய்தனர்
முகாமில் அப்போது டெங்கு பிடித்து
செத்தவர் தொகை நாற்பதைத் தாண்டிற்று
சம்பந்தன் ஜயாவோ
சாகாமல் இருப்பவர்கள் சாரவேண்டியது
யார் பக்கம் என்று
கரிகாலன் பாணியில் கணக்கு விடுகிறார்.

வன்னி மன்னன் வெள்ளைக் கொடியுடன்
பிணமாய் கிடக்க
குரு திசை மாறியது
திரு சம்பந்தன் ஜயாவுக்கு.
பெடறல் தொடங்கி தமிழீழமாகி – பின்
வடக்கு கிழக்காகி
அதுவும் இப்ப இல்லையென்றான பின்னே
சம்பந்தம் ஜயா
தமிழ் மக்களின் பிரச்சனைக்கு
சம்பந்தம் பேசுறார்.
பதின் மூன்றோ கூடவோ இல்லைக் குறையவோ
என்றெல்லாம் போய்
வட்டமேசை போட்டு வடையும் தேனீரும்
பானமும் பருகிய கூட்டணிக் கூட்டத்தின்
மிஞ்சிய ஆடு – வன்னி
நரி செத்தபின் சிங்கமாய் மாறி
கோரிககை ஏட்டுடன்
கூட்டடமைப்பின் புறோக்கறாய்
தமிழர் மானத்தை விபச்சாரம் செய்ய
ஏறிறார் பொன்சேகா வீட்டுப் படி
இறங்கிறார் மகிந்த கூற்றுப்படி.
ஜரோப்பவிலோ வட்டுக்கொட்டை
மன்னிக்க கோட்டை தீர்மானத்துக்கு
வாக்கு போட வரிசைல் புலன்பெயர் மாக்கள்.

தமிழருக்காய் இணைய மறுத்தது ஒரு புலி
புள்ளையானைப் போட்டுத் தள்ள
அமைச்சராய் ஆனது இன்னொரு புலி
அறிக்கை வந்தது.
மகிந்த வெல்வதற்கு நான் அம்மானோடும்
இணைவேன்
அம்மணமாயும் அலைவேன் என்று.
கிழக்கின் உதயம் குலுங்கி குலுங்கி அழுதது.

வன்னிப்போரில் விழுவது மாடாய் இருந்தாலும்
மனுசனாய் இருந்தாலும்
சுடுவதை நிறுத்தாதே என்று
கட்டளை போட்டவனும்
சுட்டதை நிறுவியவனும்
வாக்குக் கேட்டு வருவது யாரியடம்?
புலி சுட்டு புருசனை இளந்தவள்
கெலிசுட்டு தனையனை தொலைத்தவள்
பிறந்திரு நாட்களில் தலை வெடித்து
பிணமாய்ப் போன தன்
பிஞ்சுக் குழந்தையின் இரத்தம் காயாது
தினம் வெம்பி அழுபவள்
முறிந்த கால் இன்னும்
ரணமாய்க் கொதிக்க
பிணமாய் கிடப்பவள்
சுpதைந்த மார்பிலிருந்து
சீழ் வடிய கதறித் தவிப்பவள்
பட்ட காயங்கள் தீர சிறு கட்டு
மருந்துகூட இல்லாத
அப்பாவி மக்கள் இவர்கள்
ஈனரே எப்படிக் கேப்பீர் வாக்கு
ஏப்படிப் பாப்பீர் அவர் முகம்.

நாசமாய் போவார்
துலைவார் கூட்டமெல்லாம்
தலைமை எனச்சொல்லி
வாக்குக் கேட்டு வந்தால் – ஒரு பிடி மண்ணள்ளி
துலைவாரே நீவிரெல்லாம்
நாசமாய் போக என்று சபித்துவிடுங்கள்
அதைவிட உங்களிடம் வேறென்ன
வலு மிஞ்சியிருக்கிறது.