20

20

இன்று ஹைட்டியில் மீண்டும் நிலநடுக்கம்

haitibuidling-pd.jpgநில நடுக்கத்தால் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களை பலி கொண்ட ஹைட்டி தீவில், இன்று 6.1 ரிக்டர் அளவிலான பின்அதிர்வு ஏற்பட்டுள்ளது.  இதுதொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தியில், இன்று மாலை 4.33 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி காலை 6.03) தலைநகர் போர்ட்-அ-பிரின்ஸில் இருந்து வடமேற்கே 35 மைல் தொலைவில், பூமிக்கடியில் 13.7 கி.மீ ஆழத்தில் பின்அதிர்வு மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

haitibuidling-pd.jpgஅதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் இதனால் பீதியடைந்து தெருக்கள், சமவெளிப் பகுதிகளுக்கு வந்ததாகவும், பாதி இடிந்த நிலையில் இருந்த கட்டிடங்கள் முற்றிலுமாக சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 13ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் ஹைட்டியில் உயிரிழந்தனர். உலகளவில் 2வது மிக மோசமான நிலநடுக்கமாக இது கருதப்படுகிறது. உலக நாடுகள் அனைத்தும் நிதியுதவி அளித்ததுடன், தங்கள் நாட்டு மீட்புக்குழுவினரை ஹைட்டி அனுப்பியுள்ள நிலையில் சக்தி வாய்ந்த பின்அதிர்வு இன்று ஏற்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் நலன் மறந்து டொலர்களின் பின்னால் சம்பந்தன் – ஐ.ம.சு.மு செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித தெரிவிப்பு

sampanthar.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்படாமல் வெளிநாட்டு டொலர்களின் பின்னணியில் செயற்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கஷ்டப்பட்ட தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்காத சம்பந்தன் பிரிவினர் புலிகளின் இறப்பர் முத்திரையாகவே செயற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்றது. கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித மேலும் உரையாற்றுகையில்:-

புலிகளின் பிடியில் அப்பாவித் தமிழ் மக்கள் சிக்கித் தவித்த போதும், அவர்களை அரசாங்கம் பாதுகாப்பாக மீட்டெடுத்த போதும் சம்பந்தன் அந்த மக்களது சுக, துக்கங்களைக் கேட்டறிந்து அவர்களுக்குத் தேவையான எதனையும் செய்து கொடுக்கவில்லை.

கஷ்டப்பட்ட தமிழ் மக்களுக்குத் தேவையான சகலவற்றையும் அரசாங்கமே செய்து கொடுத்தது. அந்தக் காலகட்டத்தில் அந்த மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியின் ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் போன்றவர்களை தவிர வேறு எவரையும் தெரியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். சம்பந்தனும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இந்தியாவின் பின்னணியில் செயல்படவில்லை. மாறாக வெளிநாடுகளின் டொலர்களின் பின்னணியில் செயற்படுகி ன்றனர்.

இந்தியாவுக்கு சென்று வரும் சம்பந்தன் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அறிவித்தல்களை விடுத்து இந்தியா தமது பின்னணியில் இருப்பது போன்று காண்பிக்க முயல்கின்றார். அதில் எந்தவித உண்மையுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

30 வருடங்களுக்கு பின்னர் நாட்டில் பாரிய மாற்றங்களை குறுகிய காலத்தில் ஏற்படுத்தியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. இன்று மாபெ ரும் மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் சமாதான மாக வாழும் சூழல் காணப் படுகின்றது.

இந்த நாட்டிற்குத் தேவையான சகல மாற்றங்களையும் ஜனாதிபதி ஏற்கனவே ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் மக்கள் மீண்டும் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி?

election_box.jpgஎதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பாகத் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க வாக்காளர்களுக்கு விரிவான அறிவுறுத்தலை வெளியிட்டிருக்கின்றார்.இந்தத் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்குச்சீட்டு மிக நீளமானதாகிக் காணப்படலாம். வாக்காளர்கள் தமது வாக்குச்சீட்டைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அவசரப்படாமல் வாக்குச்சீட்டை நன்கு வாசித்த பின்னர் தாம் தெரிவு செய்யும் வேட்பாளருக்குத் தமது புள்ளடியை அல்லது ஒன்று (1) இலக்கமிடலாம். ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதால் தாம் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களிப்பதோடு அவசியமெனக் கருதுமிடத்து இரண்டாவது, மூன்றாவது தெரிவையும் அடையாளமிட முடியும்.

ஒருவரை மட்டும் தெரிவு செய்வதானால் X புள்ளடியை இடமுடியும்.

மூவருக்கு அடையாளமிட விரும்பினால் முதலாவது தெரிவுக்கு (1) என்று அடையாளமிட்ட பின்னர் இரண்டாவது, மூன்றாவது தெரிவுகளுக்கு முறையே 2,3 என அடையாளமிடமுடியும்.ஒரு வாக்குச்சீட்டில் ஒருவரைத் தெரிவு செய்து X புள்ளடி அல்லது (1) ஒன்று என அடையாளமிடப்பட்டிருப்பின் அந்த வாக்குச்சீட்டு செல்லுபடியானதாகும்.

முதலாவது தெரிவைத் தேர்ந்தெடுக்காமல் 2,3 என மட்டும் அடையாளமிடப்பட்டிருப்பின் அந்த வாக்குச்சீட்டு நிராகரிக்கப்படும்.

வாக்குச்சீட்டொன்றை அடையாளமிட வேண்டிய நடைமுறை ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

3:1) “1” என்ற இலக்கத்தை அடையாளமிடுவதன் மூலம் ஒரு வேட்பாளருக்குத் தமது வாக்கை அளிக்க முடியும்.

3:2 )”2”என்ற இலக்கத்தை அடையாளமிடுவதன் மூலம் தமது இரண்டாவது விருப்பத்தை அளிக்க முடியும்.

3:3 ) “3” என்ற இலக்கத்தை அடையாளமிடுவதன் மூலம் தமது மூன்றாவது விருப்பத்தை அளிக்க முடியும்.

04: வாக்காளர் ஒருவர் தமது வாக்கை ஒரு வேட்பாளருக்கு மட்டும் அளிக்க விரும்பினால். “1”  என்பதற்குப் பதிலாக “புள்ளடி X இடப்பட்டிருந்தாலும் அந்த வாக்குச் சீட்டு செல்லுபடியாகும்.

04:1 முதலாவது தெரிவுக்குப் பின்னர் 2,3 அடையாளமிட்டு இரண்டாம், மூன்றாம் தெரிவை அடையாளமிட்டாலும் அது ஏற்றுக்கொள்ளப்படும்.

04:2 எவருக்கும் வாக்களிக்கப்படாத வாக்குச்சீட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட X புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டும் முதலாவது தெரிவில்லாத 2 ஆம் 3 ஆம் தெரிவை அடையாளமிடப்பட்ட வாக்குச்சீட்டும் முற்றாக நிராகரிக்கப்படும்.

எனவே வாக்காளர்கள் முதலாவது தெரிவை அறிவித்த பின்னர் தாம் விரும்பினால் 2 ஆம், 3 ஆம் தெரிவை அடையாளமிடமுடியும். அது கட்டாயமாக 2,3 என்று குறிப்பிடப்படவேண்டும் எனவும் தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தியிருக்கின்றார்.

ஓஷியானிக் கப்பல் அகதிகள்; 13 இலங்கையரை ஏற்க நியூசிலாந்து இணக்கம்

இந்தோனேசியாவின் தனஜங் பினாங் துறைமுகத்தில் ஓஷியானிக் வைக்கிங் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 78 பேரில் 13 பேரை ஏற்றுக் கொள்வது பற்றி ஆராய நியூசிலாந்து அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து குடியேற்ற அமைச்சர் ஜொனாத்தன் கோலமனின் செயலகம் இதை உறுதிசெய்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவுஸ்திரேலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஓஷியானிக் வைக்கிங் கப்பலை இந்தோனேசியா வழிமறித்தது.

இந்தக் கப்பலில் இருந்த 78 இலங்கை தமிழ் அகதிகளில் 28 பேரை அமெரிக்காவும், 13 பேரை கனடாவும் 3 பேரை நோர்வேயும் ஏற்பதற்கு இணங்கியிருந்தன. அவுஸ்திரேலியா 22 பேரை அகதிகளாக தமது நாட்டில் குடியமர அனுமதிக்கவுள்ளது. இந்த நிலையில் எஞ்சியிருந்த 13 பேரையும் ஏற்றுக் கொள்வது பற்றி ஆராய நியூசிலாந்து முடிவு செய்துள்ளது.

இன்று இந்த 13 பேரும் நியூசிலாந்தில் குடியேறுவது பற்றிய விசாரணைகளுக்கு முகம் கொடுப்பதற்காக பிலிப்பைன்ஸ் புறப்படவுள்ளதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் எதுவும் கிழக்கில் மேற்கொள்ளப்படவில்லை – சம்பந்தன் கூற்று உண்மைக்குப் புறம்பானது என்கிறார் கிழக்கு ஆளுநர்

கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை கிழக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் மொஹான் விஜேவிக்கிரம முழுமையாக நிராகரித்தார். அரசியல் லாபம் பெறுவதற்காக இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் பரப்பி வருவதாகவும் தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளில் வேறு எவரும் குடியேற்றப்படமாட்டார்கள் எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கிழக்கு மாகாணத்தில் முற்றிலும் பெரும்பான்மையினரிடம் பறிபோகும் எனவும் அம்பாறை – அரந்தலாவை முதல் மட்டக்களப்பு வரை திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுவதாகவும் மட்டக்களப்பில் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இது அரசியல் லாபம் கருதி மக்களைத் திசை திருப்புவதற்காகத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டாகும். இதில் எதுவித உண்மையும் கிடையாது.

போர்ச் சூழல் காரணமாக கிழக்கில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வருகின்றனர். இவர்கள் அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்களின் புள்ளி விபரங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படு கின்றனர். இந்தச் செயற்பாட்டில் எதுவித அரசியல் தலையீடும் கிடையாது.

இதற்கு முன்னரும் சம்பந்தன் எம். பி. இவ்வாறு சிங்களக் குடியேற்றம் குறித்து குற்றஞ் சுமத்தியிருந்தார். அவரின் தலையீட்டினால் வேறு நபர்களின் இடங்களில் முறைகேடான மீள்குடியேற்றங் கள் இடம்பெற்றுள்ளன.

வேறு பகுதிகளில் இருந்து சிங்கள மக்கள் அழைத்து வரப் பட்டு கிழக்கிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளில் ஒருபோதும் குடியேற்றப்படவில்லை. 20 வருடங்களுக்கு முன்னர் வெளியேறிய மக்களும் இன்று தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

1981 இல் திருகோணமலையில் அதிகமான சிங்கள மக்கள் தமிழ், முஸ்லிம் மக்களுடன் இணைந்து ஒற்றுமையாக வாழ்ந்தனர். போர்ச் சூழல் காரணமாக இடம் பெயர்ந்து சிங்கள மக்களில் குறிப்பிட்டளவானவர்கள் திரும்பி வந்துள்ளனர். சட்ட விரோதமான மீள்குடியேற்றங்கள் இடம் பெற்றிருந்தால் அது குறித்து அந்தப் பிரதேச அரச அதிபரிடமோ பிரதேச செயலாளரிடமோ முறையிடலாம். தேர்தல் நெருங்கியுள்ளதால் பொய் வதந்திகளை சில தரப்பினர் மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.

யாருக்குப் போடலாம் வாக்கு : ஈழமாறன்

Sarath_Fonseka_Posterதமிழ் பேசும் மக்களின் போராட்ட வரலாற்றில் நாசமாய்ப் போன காலகட்டமாக கடந்த 35 ஆண்டுகள் கடந்தோடியது நாங்கள் அறிந்தது. தமிழரசுக் கட்சியும் தலைவர் செல்வநாயகமும் பொறுப்பில்லாமல் தமிழீழம் என்று சொல்லி விட்டு மேலுலகம் சென்றதும், அதைத் தூக்கி வைச்சு குறுக்கால போன கூட்டணி புலுடா விட்டதும் தம்பிமாரை உசுப்பி விட்டதும் கடந்தகால கசப்பான  விடயங்கள்.

ஒரு தலைமை என்பது தனது கட்சிக்கும், இருப்புக்கும் எது சாதகமாய் இருக்கும் என்று முடிவெடுப்பதல்ல. தான் எடுக்கப் போகும் முடிவால் உடனடியாகவும் எதிர்காலத்திலும் எப்படிப்பட்ட விளைவுகளை அது உண்டு பண்ணும், இது தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களை என்ன பாடுபடுத்தும் என்று சிந்தித்து, ஆய்வு செய்து முடிவெடுப்பதே ஒரு நல்ல தலைமைக்கு உரிய பண்பியில் இயல்பு. இதன் அடிப்படையில் பார்த்தால் “இனி கடவுள்தான் தமிழ் மக்களைக் காப்பாத்த வேணும்” என்று சொல்வதற்கு எதுக்கு ஒரு தலைவர். அட இழவு விழுவாரே கடவுள்தான் காப்பாத்த வேணுமெண்டால் அது எந்தக் கடவுள் எண்டு சொல்லி விட்டு செத்திருந்தால் தமிழ் மக்கள் தேசியத் தலைவருக்கு அபிசேகம் செய்தது போலவோ அல்லது பிறந்த நாள் பூசை புனர்த்தானங்கள் செய்தது போலவோ அந்தக் கோயிலுக்குச் சென்று ஆண்டவா எங்களைக் காப்பாத்து. எங்களுக்கு உரிமை பெற்றுக் கொடு என்று ஒரு அபிசேகம் செய்திருப்பார்கள். வேணுமென்றால் சில நூறு பலிகளும் கொடுதத்திருக்கலாம். இத்தனை ஆயிரம் அப்பாவி மக்களைப் பலிகொடுத்திருக்கத் தேவையில்லை.

இனவாத அரசுகளிடம் இருந்து உரிமைகளைப் பெறுவதற்காக அதுகாறும் நாம் மேற்கொண்ட செயற்பாடுகள் எதுவும் பலனளிக்காது போனதால் மாற்றுத்திட்டங்களை தீட்டி போராட்டத்தை வேறுவழியில் பொறுப்புடன் எடுத்துச் செல்ல வேண்டும் என மாற்று வழியை அல்லவா சொல்லியிருக்க வேண்டும். கடவுள்தான் காப்பாத்த வேண்டும் என்று சொல்ல என்னத்துக்கு தலைவர். ஒரு கட்சி. அதுக்கு வக்காலத்து வாங்க அடங்காமண் புடுங்கா மண் என்று சாதிவெறி பிடித்த ஒத்தூதிகள்.
 
அதை விடுத்து தமிழீழம், பெடரல், கிடறல் என்று சா வாக்கு மூலம் கொடுப்பது எதிர்காலத்தில் தமிழ் மக்களை எங்கே கொண்டுபோய் விடும் என்று கொஞ்சமாவது யோசித்திருக்க வேண்டாமா? சரி வயது போன நேரத்திலை மனுசன் அறளை பேந்து போய் கதைச்சிட்டாக்கும் என்று விட்டு விட்டு சற்று பிரக்ஞை பூர்வமாக இந்தக் கூட்டணி சிந்தித்திருந்தால் நாம் பாரிய அழிவை நிறுத்தியிருக்கலாம். இந்த கூட்டணி நாடகக் குழு போட்டு முடித்த நாடகங்களின் விளைவாக நாம் புது மாத்தளன் வரை கொடுத்த விலை மானிடமே மௌனித்துபோன வரலாறு. ஆனால் என்ன நடந்தது.

ஒரு தொழிற் சங்கம் வேலை பகிஸ்கரிப்பு பற்றி முடிவெடுக்க நினைக்கிறபோது அந்த முடிவு தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தப் போகும் சாதக பாதகங்களை ஆய்வு செய்து விவாதங்கள் நடாத்தி பெரும்பாலானவர்களின் ஒப்புதலை ஏற்ற பின்னரே முடிவெடுப்பார்கள். இங்கு தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு பாரிய முடிவைப் பற்றி கிஞ்சிற்றேனும் சிந்திக்காமல் தமிழீழம் என்று முழங்கிய துலைவார் கூட்டணியின் முடிவைக் கேட்டு கோதாரி விழுவாருக்கு கீறி வைச்ச பொட்டு இண்டைக்கு யாருக்கு வோட்டுப் போடுறது என்ற நிலைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது.

தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழத்தை அறிவிக்கும் போது இது சாத்தியமா? அவ்வாறு சாத்தியம் எனின் மாங்காய் புடுங்குவது போல் சுலபமாக புடுங்கி எடுக்கலாமா இல்லை பனங்கிழங்கு கிண்டுவது போல கொஞ்சம் கொஞ்சமாய் கிண்டி எடுக்கலாமா, இல்லையா என்று சுடலையிலை போவார் குறைஞ்சது ஒரு பத்து நிமிசமாவது யோசித்திருக்க வேணும். அப்படி சிந்தித்திருந்தால் இப்பிடி நாம் ஆகியிருக்கத் தேவையில்லை என்பதை நடிகர் விவேக் பாணியிலை நான் எழுத வேண்டி வந்திருக்காது. வெளவால் வரும். துவக்கோடை வரும். தமிழனுக்கு எருமை மாட்டுத் தோல். சுட்டமண்ணும் பச்சமண்ணும் இனி ஒட்டாது என்று விட்டதெல்லாத்தையும் நம்பி அப்பாவி இளைஞர்கள் கொதிச்சு எழ குளிர்காய்ந்த இந்தக் கூட்டணி தமிழ் மக்கள் யாருக்கு வாக்குப் போட வேணும் என்று முடிவெடுத்திருக்கிறர்களாம்.

இவர்கள் கடந்த காலங்களில் எடுத்த எந்த முடிவுகள் சரியாக இருந்திருக்கின்றன? தமிழீழம் முடிந்த முடிவு என்ற இந்த நரிக் கூட்டம் முடிவெடுக்கும் போது இவர்களுக்கே இதன் பொருள் விளங்கியிருக்கவில்லை. அதற்கான திட்டமோ அன்றி அந்த இலக்கை அடைவதற்கான குறைந்தபட்ச வரைபடம் கூட இல்லாத இந்தக் காவாலிக் கூட்டணி பின்னர், வட்டமேசை மாநாடு போட்டபோது கூட கிட்டத் தட்ட என்ன வேணும் என்றதில் ஒரு வீதமேனும் தெளிவிருக்கவில்லை. அதன்பின் புலிக்கு வக்காலத்து வாங்குவதற்கு இவர்கள் எடுத்த முடிவென்று அடிக்கிக் கொண்டே போகலாம்.

ஒரு தலைமையின் முடிவு என்ன என்று எதிர்பாப்பதும் அந்தத் தலைமை என்ன சொல்கிறது என்பதை கேட்டு மக்கள் முடிவெடுப்பதும் சாதாரணமாக நடக்கிற ஒரு விசயம் தான். அதற்கான காரணங்களும் இருக்கின்றன. ரோனிபிளயர் என்கிற முன்னாள் பிரித்தானியப் பிரதம மந்திரி மக்களுக்கு ஈராக் தொடர்பாக ஒரு முடிவை அறிவிக்க வேண்டி இருந்தது. அது பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருந்த முடிவாக இருந்தபோதிலும் ரோனிபிளயருக்கு இதை நிரூபிக்க வேண்டிய தேவை இருந்தது. அதற்காகவே அவர் யாரோ எழுதிய கட்டுரையை எடுத்து ஒரு சொல்லைக் கூட மாத்தாமல் பிரித்தானிய மக்களுக்கு பெருப்பிச்சுக் காட்டினார். நாட்டின் தலைமை மக்களின் நலன் கருதி முடிவெடுக்கும் என்று நம்பிய பிரித்தானிய மக்களும் சடாம் குசையின் மீது படையெடுப்பதை ஒப்புக் கொண்டார்கள். அதற்காக பிரித்தானிய மக்கள் கொடுத்திருக்கும் விலையும் அளப்பரியது.
 
நாமும் துப்பாக்கி தூக்கி போரடுவதற்கு தயாராகினோம். இதே கூட்டணிதான் துரையப்பாவை சுட்டிக் காட்டி சுட்டுக்காட்டுங்கள் என்று பிரபாகரனிடம் கேட்டதும் அன்றைய அப்பாவிப் பிரபாகரங்கள் சுட்டுத் தள்ளியதும் நடந்தேறின. இதன் பின் போராளிக் குழுக்கள். எந்தத் தலைமையும் தகுதி மட்டும் இல்லாத தலைமையாகவே உருவெடுத்தன. புரட்சி வெடிக்கிறபோது நாம் மக்களைப் பாதுகாப்பதற்கு ஒரு பொருளாதாரத் திட்டம் வைத்திருக்க வேண்டும் என்று தோழர்கள் உமா மகேஸ்வரனிடம் கேட்டபோது கீரை தின்னலாம் என்ற அளவுக்கு அவருக்கு தலைமை தாங்கும் தகுதி இருந்திருக்கிறது.

கிளின்ற் ஈஸ்ற்வூட்டின் படத்தைப் பார்த்துதான் திட்டங்கள் தீட்டுவேன் என்று சொன்ன மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையும் என்று ஒவ்வொரு இயக்கமும் தாம் மேற்கொள்ளப் போகும் நடவடிக்கையினால் எத்தினை ஆயிரம் இளைஞர்கள், யுவதிகள் பாதிப்படையப் போகிறார்கள். வளங்கள் சொத்துக்கள் உயிர்கள் என்று எவ்வளவு நாசகாரம் நடக்கப் போகிறது என்று சிந்திக்காத, சிந்திக்க முடியாத, திராணியற்ற 50க்கு மேற்பட்ட இயக்கங்களும் இதனின்றும் முளையெடுத்த பாராளுமன்றக் கட்சிகளும் எங்கே, எப்போது தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தியிருக்கிறார்கள்? அப்படியாயின் தமிழ் பேசும் மக்கள் என்ன செய்ய வேண்டும். அவர்களுக்கு நிஜத்தைச் சொல்லி அதனால் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் சாதக பாதகங்களை புரிய வைப்பதற்காக அரசியல் வேலையை செய்து விட்டு மக்களை முடிவெடுக்கத் தூண்டியிருக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத் தேர்தல் முடிந்து இவ்வளவு காலம் ஆகியும் ஒரு மண்ணாங்கட்டியும் நடக்கேல்லை. ரோட்டுப் போடுவதும் இடிந்த கட்டடங்களைக் கட்டுவதும் அபிவிருத்தி கிடையாது. அவை மீள் கட்டுமானப் பணிகளே. மகிந்தவுடனேயே நின்று ஒன்றும் செய்ய முடியாத பிள்ளையான் தலைமை எடுத்திருக்கும் முடிவுக்கும் கிழக்கு மாகாண மக்களின் எதிர் காலத்திற்கும் என்ன தொடர்பு இருக்கப் போகிறது. அம்மானின் கூத்து அதைவிடக் கேலியானது.
 
மகிந்தவுக்குப் போடுங்கோ என்று பிள்ளையான் கட்சி எடுத்திருக்கும் முடிவுக்கான அடித்தளம் எதுவுமே கிடையாது. 13ம் திருத்தமோ மேலையோ கீழையோ மகிந்த எடுக்கும் முடிவுக்கே கட்டுப்படுகிறேன் என்று சொல்ல  ஒரு தலைமை. அந்தத் தலைமையின் முடிவைக் கேட்டு மக்கள் வாக்குப் போட வேணுமெண்டால் “கடவுள் தான் காப்பாத்தவேணும்” (நானும் ஒரு அரசியல் கட்சி தொடங்கலாம் போல இருக்கு. எனது அரசியல் ஞானத்தைப் பார்க்க தந்தை செல்வாவே பிச்சை வாங்க வேணும் போல இருக்கு.)

புளட் தலைவர் என்ன சொல்கிறார். அவரும் மகிந்த மாத்தையாதான் நல்லவராம். தமிழர்கள் என்ன மாப்பிளையா பாக்கிறார்கள்? அவர் குடும்பம் எப்பிடி? மாப்பிழை சிகரட் குடிப்பாரா? தண்ணி அடிப்பாரா என்று சான்றிதழ் முத்திரை குத்துவதற்கு. சித்தாத்தன் ஜயா சின்னத்திலை இருக்கிற உமாமகேஸ்வரன் அந்த இயக்கப் போராளிகளைத் தூக்கி போரணையில் போட்டு கொலை புரிவதற்க்கு காரணமாக இருந்தவர். பிள்ளைகளைப் பறி கொடுத்த தாய்மாரிடம் ஒரு மன்னிப்புக் கேட்கக் கூட திராணியில்லாத சித்தன் மகிந்தவுக்குச் சேட்டிபிக்கேற் குடுக்கிறார். ஆடு நனையிதெண்டு…. ஏதொ ஒரு மிருகம் அழுதமாதிரி இல்லையா இந்தக் கதை.

மகிந்த ஆட்சிக்கு வந்த இந்த நான்கு ஆண்டுகளில் பிரதமராக இருந்த அமைச்சராக இருந்த பன்னிரண்டு ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார். இனி என்ன செய்வதாக உறுதி கொடுத்துள்ளார்? அதை நிறைவேற்றுவார் என்பதற்கான அத்தாட்சி என்ன எந்த இழவும் சொல்லாமல் முறுகண்டி பிள்ளையார் கோயிலுக்கு கும்பாவிசேகம் செய்யப் போயிருக்கும் சித்தனின் முடிவை தமிழ் மக்கள் ஏற்று வாக்குப் போடலாமா?

டக்கிளசை விட்டிடுங்கோ. கோடி எந்தப் பக்கம் அவர் பாட்டும் அந்தப்பக்கம் என்பது மகிந்த சொல்லித்தான் எங்களுக்கே தெரியும். ஆதலால் அவரால் பெரிய ஆபத்தும் இல்லை. அவர் சொல்லை யாரும் கேட்கப் போவதுமில்லை. என்ன மீறினால் குடும்பத்தோடை சுட்டுப் பொசுக்கிப் போட்டு உத்தரத்திலை தொங்க விடும் உத்தரவாதத்தை மட்டும் அவரால் உறுதியாகக் கொடுக்க முடியும்.

மே 17ம் திகதி 2009ல் பிரபாகரன் ஒரு தீர்க்கதரிசி என்று புகழ்ந்து தள்ளிய சம்பந்தர் ஜயா 19ம் திகதி உந்தக் குறுக்கால போனவன்தான் எல்லா அழிவுக்கும் காரணம் என்று சொல்லும் இந்த ஜயா, பொன்சேகாவுக்குப் போடுங்கோ என்று சொல்லுறார். இதற்கான காரணங்களில் முக்கியமானது என்ன தெரியுமோ? நாலு வருசமா மகிந்த ஒண்டும் செய்யேல்லையாம். உங்கட தேசியத் தலைவரை மண்டியிட வைச்சது. பொன்சேகா தலைமையிலை போட்டுத் தள்ளியது. குறைஞ்சது வன்னிக்குப் போய் கதிர்காமக் கோயில் பூசாரி மாதிரி வாயைப் பொத்திக் கொண்டு சொல்லிற எல்லாத்தையும் செக்கு மாடுகள் மாதிரி கேட்டுக் கொண்டு வந்து வெளிநாடுகளிலை விளையாட்டுக் காட்டின உங்களை அக்கம் பக்கம் பாத்து பாராமல் அறிக்கை விடுற அளவுக்குச் செய்தது மகிந்த எண்டு அவிட்டு விட ஆயிரம் இருக்கய்யா. உங்களை இன்றைக்கு அரசியல்வாதி என்ற நிலைக்கு உயர்த்தி விட்டதே மகிந்த மாத்தையா தானே. இல்லாட்டி உங்களுக்குப் பெயர் பினாமிகள் எல்லோ? அது மட்டுமே வெளிநாடுகளில உள்ள கனபேர் இப்ப ஊருக்குப் போய் பொம்பிளை தேடுகினம். ஏதோ மகிந்தவின்ர புண்ணியத்தில அவர்களுக்கு கலியாணம் காட்சி என்று நடக்குது.

திருமலை தந்த புலிச் சிங்கமே சம்பந்தர் ஜயா! நாலு வருசமா மகிந்த ஒண்டும் புடுங்கேல்லை எண்டு மட்டுமில்லை இப்ப நீங்கள் வாக்குப் போடச் சொல்லியிருக்கும் பொன்சேகாவை ஆதரிக்கும் ஜக்கிய தேசியக் கட்சியும் ஆதரிக்க வேண்டாம் என்ற சுதந்திரக் கட்சியும் 62 வருசமா எதையும் உமக்கு நட்டு வைக்கேல்லை என்பது தெரியாமல் போச்சுதோ? 62 வருடங்களாக ஒப்பந்தம் இடுவதும், பின்னதைக் கிழிப்பதும் பிறகு வாக்குறுதி அளிப்பதும், நீங்கள் மறப்பதும் என்று நடந்த நாடகத்தில் மகிந்தவின் நாலு வருட ஆட்சியிலை ஒன்றும் நடக்காமல் போனது உங்களுக்கு கோவம் பொத்திக்கொண்டு வரக் காரணம் என்கிறீர்களே இதென்ன விளையாட்டு?

பொன்சேகா யார்? மே 18 வரை விடுதலைப் புலிகளுடன் சேர்த்து நாற்பதாயிரத்திற்கும் மேலான தமிழ் மக்களை கொன்று குவிப்பபதற்கு மகிந்த ராஜபக்சவின் அரசுக்கு பெருந்துணையாக இருந்தவர். புலிகளுடனான யுத்த வெற்றிக்கு பின் தமிழர்கள் தொடர்பாகவும் தழிழ்நாடு தொடர்பாகவும் மிக மோசமான துவேச அறிக்ககைளை விட்டவர். அமெரிக்கா சென்று தமிழர்கள் ஒரு மூலையில் இருக்க வேணும் என்றால் இருக்கட்டும். உரிமைக் கதை கதைக்கக் கூடாது என்று கூறியவர்.

எப்படி தேர்தல் களம் வரை வந்தார்? மகிந்த அரசில் ஏற்பட்ட சிறிய முறுகல் மகிந்தவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்பட்டுவரும் இறுக்கம், யுஎன்பி கட்சிக்குள் முத்தியிருக்கும் தலைமைப் போட்டி, அமெரிக்காவுக்கு தலையாட்டுவதற்கு ஆள் பிடிக்க வேண்டிய கட்டாயம் எல்லாம் ஒன்று சேர்ந்து பொன்சேகாவுக்கு முடி சூட்டியதே, தவிர பொன்சேகா நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் எடுத்த நல்லெண்ணம் கிடையாது. பிரபாகரனை முடித்த கையோடு சீனாவின் பக்கம் கூடுதலாக சாய்ந்து கொண்ட மகிந்தவைக் கொண்டுவருவதில் இந்தியாவுக்கு விருப்பம் குறைந்து விட்டாலும் மேற்குலகுடன் எப்பவும் சாயும் யுஎன்பியை ஆதரிக்கவும் இந்தியா தயங்கியது.

சீனாவுடனான வர்த்தக இராணுவ அரசியல் முறுகல் மோசமடைந்து வருகிற இந்த நேரத்தில் பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவுடன் ஏற்பட்டு வரும் உறவைப் பயன்படுத்தி சீனாவை ஓரம் தள்ளி இந்தியா தன்னை இலங்கையில் முன்னிறுத்தலாம் என்று எடுத்துக் கொண்ட முடிவே பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவு. சம்பந்தனுக்கு உருத்திரகுமார் வியன்னாவிலை வைச்சு சொன்னதும் இதைத்தான். இந்தியா தொலைபேசியில் சம்பந்தனுக்கு சொன்னதும் இதுதான்.

இன்று மக்கள் முன் உள்ள கடமை இதுதான். காலத்துக்காலம் சோரம்போன இந்த அரசியல் கட்சிகள் மக்கள் நன்மை தொடர்பாக என்றுமே சிந்தித்து முடி எடுத்ததில்லை. உண்மையில் சாதாரண மக்களுக்கு இருக்கிற அறிவு கூட இந்த தலைமைகளுக்கு இருந்தது கிடையாது. ஆகவே இந்தக் கட்சிகளின் காசுழைக்கும் விஞ்ஞாபனங்களை எல்லாம் தூக்கி வீசி விட்டு இன்றைய அரசியல் பொருளாதார சூழலைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.

மே 18 2009 வரை ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் உறை குளிரில் உலகமெங்கும் கூக்குரல் இட்டதமிழ் மக்களின் கோரிக்கைகளில் முதன்மையாக ஒலித்தது போர்க் குற்றம் என்பது. இதனை நிரூபிப்பதற்க்கு சனல்4 போன்ற ஊடகங்கள் பாரிய முயற்சியை மேற்கொண்டிருந்தன என்பதும் எல்லோருக்கும் தெரியும். மே 18 வரை போர்க் குற்றம் புரியும்படி கட்டளையிட்டவர் மகிந்த. அதை நிறைவேற்றியவர் பொன்சேகா. இன்று யாரை முதல் எதிரி என்று வாய் கிழியக் கத்தினோமோ அவரை ஆதரியுங்கள் என்று வந்து நிக்கிறது தங்களைத் தமிழ் மக்களின் தலைமை என்று கூறிக்கொள்ளும் இந்தக் கூட்டம். காலா காலமாக தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைத் திட்டமிட்டே நசுக்கிவந்த சிங்களத் தலைமையும் பௌத்த பீடமும் புதுமாத்தளனுக்குப் பின் ஞானம் பிறந்து தமிழ் பேசும் மக்களை காப்பாத்த அவதாரம் எடுத்திருக்கறார்கள் என்று விசுக்கோத்துத் தனமாக சொல்லும் இந்த தமிழ் அரசில் கட்சிகளின் குறிப்பாக கூட்டமைப்பின் முடிவை எண்ணிச் சிரிக்கக் கூட முடியவில்லை.

யுத்தம் நடந்து பேரவலம் கட்டவிழ்த்து விடப்பட்ட அப்பாவி மக்கள் இன்றும் தங்கள் இழப்புக்களில் இருந்து விடுப.டாத நிலையில் ஒரு தேர்தல். அதில் கொன்றவனுக்கும் கொல்லச் சொன்னவனுக்கும் வாக்குப் போடுங்கள் என்று கூட்டம்  போடும் இந்தக் கூட்டமைப்புக்கும் இதர கட்சிகளுக்கும் மக்கள் பாடம் புகட்டவேண்டிய தருணம் இது.

விக்கிரமபாகு என்று ஒரு வேட்பாளர். தமிழர்கள் அழிக்கப் பட்டபோது ஓங்கி குரல் கொடுத்த ஒரு இடதுசாரி அரசியல்வாதி. தமிழர்களின் பிரச்சனை நியாயமானது என்று குரல் கொடுப்பவர். புலி கெலி கொண்டு ஓடும்வரை சம்பந்தர் கூட்டமும் விக்கிரபாகு பற்றி பெரிதாகவே பேசினார். இப்போது என்ன நடக்கிறது. பொன்சேகாவுக்கு மாலை சூட்டுகிறார்.

தமிழர்கள் இந்த இருவரில் யாருக்குப் போடாவிட்டாலும் ஒருவர் வெல்வது உறுதி. ஆனால் எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஒருங்கிணைந்து வெளிக்காட்ட எமக்கு கிடைத்திருக்கும் ஒரு சந்தர்ப்பத்தை நழுவ விடுவதோடு மாத்திரமல்லாமல் இவர்கள் இருவரையும் ஆதரிப்பதன் மூலம் சர்வதேசத்தின் முன்னால் இவர்கள் போர்க் குற்றவாளிகள் அல்ல, மே 18 முன் நடந்ததெல்லாம் வெறும் வாண வேடிக்கை களியாட்டம் என்று நாமே அவர்களுக்காக நிரூபணம் கொடுத்துவிடுவோம். 

இதுவரை காலமும் இந்தத் தமிழ்கட்சிகள் ஒரு முடிவை ஆராய்ந்து சாதக பாதகங்களை கணக்கெடுத்து எமது எதிர்காலம் பற்றிச் சிந்தித்து செயலாற்றியது கிடையாது. இந்தியாவுக்கோ அமெரிக்காவுக்கோ தலையாட்டிப் பிழைத்த கூட்டம் தான் இந்தக் கூட்டமைப்பும் கட்சிகளும். இந்தத் தேர்தலில் இந்த இரண்டு வேட்பாளர்களையும் ஆதரிப்பதா அல்லது நிராகரிப்பதா என்ற முடிவை இம்முறை நீங்களே சிந்தித்து எடுங்கள். விக்கிரமபாகுவுக்கு வாக்களித்தால் குறைந்தபட்சம் இவர்களது போர்க்குற்றத்தையாவது நாம் அறைந்து சொல்ல முடியும்.