இந்தோனேசியாவின் தனஜங் பினாங் துறைமுகத்தில் ஓஷியானிக் வைக்கிங் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 78 பேரில் 13 பேரை ஏற்றுக் கொள்வது பற்றி ஆராய நியூசிலாந்து அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்து குடியேற்ற அமைச்சர் ஜொனாத்தன் கோலமனின் செயலகம் இதை உறுதிசெய்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவுஸ்திரேலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஓஷியானிக் வைக்கிங் கப்பலை இந்தோனேசியா வழிமறித்தது.
இந்தக் கப்பலில் இருந்த 78 இலங்கை தமிழ் அகதிகளில் 28 பேரை அமெரிக்காவும், 13 பேரை கனடாவும் 3 பேரை நோர்வேயும் ஏற்பதற்கு இணங்கியிருந்தன. அவுஸ்திரேலியா 22 பேரை அகதிகளாக தமது நாட்டில் குடியமர அனுமதிக்கவுள்ளது. இந்த நிலையில் எஞ்சியிருந்த 13 பேரையும் ஏற்றுக் கொள்வது பற்றி ஆராய நியூசிலாந்து முடிவு செய்துள்ளது.
இன்று இந்த 13 பேரும் நியூசிலாந்தில் குடியேறுவது பற்றிய விசாரணைகளுக்கு முகம் கொடுப்பதற்காக பிலிப்பைன்ஸ் புறப்படவுள்ளதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.