யாழ்ப்பாணத்திலுள்ள இரு நகைக்கடை உரிமையாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.நகைக் கடை உரிமையாளர்கள் கடையடைப்புச் செய்தனர்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை வவுனியாவிலிருந்து சிவில் உடையில் வான் ஒன்றில் யாழப்பாணம் வந்த பொலிஸ் குழுவினர் நகைத் திருடன் ஒருவனை அழைத்து வந்து பலவந்தமாக குறித்த இரு நகைக்கடை உரிமையாளர்களையும் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரால் அழைத்து வரப்பட்ட நகைத் திருடன் குறித்த நகைக் கடையில் விற்றதாக கூறிய நகைகளை விடவும் அதிகளவு நகைகளை திருப்பித் தருமாறு பொலிஸார் வற்புறுத்தியதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். திருட்டு நபரிடம் நகைகளை கொள்வனவு செய்யும் போது அவர் திருடன் என்று குறித்த நகைக்கடை உரிமையாளர்கள் அறிந்திருக்க வில்லை எனவும், முறைப்படி தேசிய அமையாள அட்டை பதிவு செய்யப்பட்டு, நகை கொள்வனவு செய்யப்பட்டது எனவும், பற்றுச்சீட்டும் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கடையடைப்பைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் வணிகர் கழக்திற்கும் நகைக்கடை உரிமையாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்று நகைக் கடைகள் மீளவும் திறக்கப்பட்டன. வணிகர் கழகத்தின் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள் ஆகியோர் யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நேவின் பத்மதேவாவைச் சந்தித்து வவுனியா பொலிஸ் குழுவினரால் ஏற்படுத்தப்பட்ட சிக்கல்கள் குறித்து தெரிவித்தனர். இதனை எழுத்தில் முறைப்பாடாக தருமாறும் தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். இதேவேளை, நேற்று வெள்ளிகிழமை வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள் வவுனியா நீதிமன்றினால் பிற்பகல் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.