15

15

ததேகூ கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா நகரசபை தொடர்ந்தும் ஸ்தம்பிதம் – தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்முரண்பாடுகளே காரணமா? : விஸ்வா & த ஜெயபாலன்

Linganathan_giving_speechவவுனியா நகரசபையின் மாதாந்த கூட்டத்தை அதன் தலைவர் தலைவர் எஸ் என் ஜி நாதன் நேற்று (14 செப்ரம்பர் 2010) செவ்வாய் கிழமை இடை நிறுத்தியதைக் கண்டித்து நகரசபை உறுப்பினர்கள் பத்துப்பேரும் இணைந்து நகரசபைத் தலைவருக்கு எதிராக போராட்டத்திலீடுபட்டனர். வவுனியா நகரசபைத் தலைவர் எஸ் என் ஜி நாதன் இன் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். நகரசபை மைதானத்தில் கடும் வெயிலில் இரண்டு மணிநேரம் இப்போராட்டம் நடைபெற்றது.

வவுனியா நகரசபை தொடர்பான முன்னைய பதிவுகள்:

”ஈழம்(தமிழ்) என்ற அடையாளத்தை இல்லாமல் பண்ணவே முயற்சிக்கிறார்கள். ” ஜி ரீ லிங்கநாதன் வவுனியா நகரசபை உறுப்பினர். – நேர்காணல் : ரி சோதிலிங்கம்

”வெளியே போங்கடா சக்கிளிய நாயலே” வவுனியா நகரசபைத் தலைவரின் கூற்றும் இன்னமும் வீச்சுடன் இருக்கும் சாதிய மனோநிலையும்

ரிஎன்ஏ யின் வவுனியா நகரசபையின் தலைமை மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு – எட்டு நகரசபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அறிக்கை

இது பற்றி தேசம்நெற் இணையத்திற்கு கருத்துத் தெரிவித்த நகரசபை உறுப்பினர் ஜி ரீ லிங்கநாதன் குறைந்தபட்ச ஜனநாயக நடைமுறையைக் கூடப் பின்பற்ற நகரசபைத் தலைவர் தலைவர் எஸ் என் ஜி நாதன் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில் விசேட நகரசபைக் கூட்டத்தை கூட்டும்படி தாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவர் தன்மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டதும் கூட்டத்தை இடைநிறுத்திவிட்டு வெளியேறியதாகத் தெரிவித்தார்.

மேலும் நகரசபை உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டிவிட்டு அதற்கு முன்னதாகவே ஆயுதம் தாங்கிய பொலிசாரையும் அங்கு வரவழைத்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு அங்கமாகச் செயற்படும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த நகரசபைத் தலைவர் தலைவர் எஸ் என் ஜி நாதன் ஜனநாயக விரோதப் போக்கை கடைப்பிடிப்பதுமல்லாமல் ஆயுதம் தாங்கிய பொலிஸாரை வரவழைத்து நகரசபை உறுப்பினர்களை அச்சுறுத்தவும் முற்பட்டு உள்ளார். அதுவே நகரசபை உறுப்பினர்கள் சீற்றமடைவதற்குக் காரணமானது. இவ்வாறான ஜனநாயக விரோதப் போக்குகளைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என்பதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர்கள் 10 பேரும் போராட்டத்தில் குதித்தனர்.

செப்ரம்பர் 14 கூட்டத்தில் நகரசபைத் தலைவர் மீது நகரசபை உறுப்பினர்கள் வைத்த குற்றச்சாட்டுகள் பற்றி விவாதிப்பதாகவும் நகரசபைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதாகவும் இருந்தது. தன்மீதான குற்றச்சாட்டுகளை முற்றாகப் புறக்கணித்த நகரசபைத் தலைவர் எஸ் என் ஜி நாதன் 72 நிமிடங்களாக தன்னைப் பற்றிய சுயபுராணத்தில் ஈடுபட்டதாகவும் இது கூட்டத்தைக் கூட்டுவதற்கு கோரிக்கை வைத்த நகரசபை உறுப்பினர்களை ஏமாற்றுவதாக அமைந்ததாகவும் தெரியவருகிறது.

இந்நிலையில் இடையே குறுக்கிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நகரசபை உறுப்பினர் செ சுரேந்திரன் நகரசபைத் தலைவர் எஸ் என் ஜி நாதனுக்கு எதிராக நம்பிக்கையிலாப் பிரேரணையைக் கொண்டு வந்துள்ளார்.  இந்நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர் இ சிவகுமாரன் வழிமொழிந்தார். இதனைப் பொறுக்காத நகரசபைத் தலைவர் எஸ் என் ஜி நாதன் கூட்டத்தை இடைநிறுத்திவிட்டு வெளியேறினார்.

நகரசபை உறுப்பினர்கள் நகரசபை மைதானத்தில் தங்க போராட்டத்தை ஆரம்பித்ததும் ஊடகங்களில் செய்தி பரவியது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்திஆனந்தன் வினோநோகராதலிங்கம் ஆகியோர் நகரசபை உறுப்பினர்களைச் சந்தித்து சமரசம் செய்ய முற்பட்டனர். அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக தங்களது கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்காவிட்டால் 10 நகரசபை உறுப்பினர்களுக்குப் 10 000 மக்களைக் கொண்டு வந்து போராடுவோம் என நகரசபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

தாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் சந்தித்து இதனை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதாக சிவசக்தி ஆனந்தனும் வினோதரலிங்கமும் நகரசபை உறுப்பினர்களுக்கு உறுதி அளித்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை ஒரு மாதத்திற்குள் அதனைச் செய்யத் தவறினால் தாங்களும் நகரசபை உறுப்பினர்களுடன் சேர்ந்து போராடுவோம் என சிவசக்திஆனந்தன் தெரிவித்ததாக ஜி ரி லிங்கநாதன் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

நகரசபை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்தில் உள்ளது. அதன் தலைவர் எஸ் என் ஜி நாதன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர். மேலும் தமிழரசுக் கட்சியின் மாவை சேனாதிராஜாவுக்கு நெருக்கமானவர். எஸ் என் ஜி நாதனை மாற்றாக இன்னுமொருவரை நியமிக்க தமிழரசுக் கட்சியின் பெயர் வரிசையில் குறிப்பிடத்தக்கவர்கள் எவரும் இல்லை. அப்பதவியை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ரெலோவிற்கோ ஈபிஆர்எல்எப் சுரோஸ் அணிக்கோ விட்டுக்கொடுக்கவும் தயாராக இல்லை.

வவுனியா நகரசபை கடந்த 10 மாதங்களாக செயற்படாமல் இருப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள உள்முரண்பாடுகள் காரணமா என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டு உள்ளது. அண்மைய போராட்டமும் அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நகரசபை உறுப்பினர்களே தமது கட்சியைச் சேர்ந்த நகரசபைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து போராட்டத்திலும் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரசபை உறுப்பினர்கள் விபரம்:
தமிழ் தேசியக் கூட்டமைப்பு (ரிஎன்ஏ) : எஸ். என். ஜி. நாதன் (நகரசபைத் தலைவர்), மு. முகுந்தரதன் (உப தலைவர்),  இ. சிவகுமாரன் செ. சுரேந்திரன், ஐ. கனகசபை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (எஸ்எல்எம்சி) : அப்துல் லத்தீப் முனவ்பர்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எப்) : ஜி.ரி.லிங்கநாதன், சு.குமாரசாமி, க.பார்த்தீபன்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (யுபிஎப்ஏ) : எம் எஸ் அப்துல்பாரி, ஜெ.ஏ.டி லலித்ஜெயசேகர

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியசேன வின் நேர்காணலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பற்றி மிகக் காட்டமான விமர்சனத்தை வைத்திருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்கள் அதிலிருந்து வெளியேறினால் அரசியல் அநாதைகளாக்கப்பட்டு விடுவார்கள் என்றும் அவர்களுக்கு என்று அரசியல் அந்தஸ்தோ கெளரவமோ இல்லையென்றும் பியசேன குற்றம்சாட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தக் காரணம் ஒன்றே பல்வேறு முரண்பாடுகள் இருந்த போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை குலையாமல் வைத்துள்ளது. ஆனால் இந்த முரண்பாடுகளால் வவுனியா நகரசபை போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஒரு இடைஞ்சலாகவே ஆகியுள்ளது.

போப்பாண்டவரின் பிரித்தானிய வருகையும் – விவாதங்களும். : ரதிவர்மன்

Pope_Benedict_XVI_1945_WorldWar2Pope_Benedict_XVI_1977_ProfessorPope_Benedict_XVI_2009நாளைக்கு (16.09.10) கத்தோலிக்கர்களின் புனிதத்தலமான வத்திக்கன் நகரின் 265வது மதத்தலைவரான கத்தோலிக்க புனித தந்தை போப்பாண்டவர் 16வது பெனடிக்ட் அவர்கள் பிரித்தானியாவுக்கான தனது முதலாவது வருகையை மேற்கொள்கிறார். 1982ம் ஆண்டில் அன்று போப்பாண்டவராகவிருந்த புனித தந்தை, மதிப்புக்குரிய 2வது போல் அவர்கள் இங்கிலாந்துக்கு வருகைதந்தார். அப்போது ஒரு கோடிக்கும் மேலான மக்கள் அவரை மிகவும் உற்சாகமாக வரவேற்றார்கள். உலகின் மனிதத் தொகையில் 17 விழுக்காடு மக்கள் கத்தோலிக்க மதத்தைந் சேர்ந்தவர்கள். இவர்கள் ஆறு பில்லியன் உலக மக்கள் தொகையில் ஒரு பில்லியனுக்கு மேற்பட்டவர்கள்.

இங்கிலாந்தில் 61 கோடி மக்களில், பல தரப்பட்ட  கிறிஸ்தவ (கத்தோலிக்க அங்கிலிக்கன் போன்ற) தேவாலயங்களுக்கும் 4 விழுக்காடு மக்கள் மட்டும்தான் பிரார்த்தனைக்குச் செல்வதாக் கணிப்பீடுகள் சொல்கின்றன. கத்தோலிக்க மத குருமார்கள் 21ம் நூற்றாண்டின் யதார்த்தமான வாழ்க்கை முறையைப்புரிந்து கொண்டு பொது மக்களின் கருத்துக்கு மதிப்புக் கொடுக்காததால் போப்பாண்டவரின் பிரித்தானிய வருகையை ஒட்டிப் பல விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
1982ம் ஆண்டு புனித தந்தைக்குக் கொடுத்த வரவேற்புக்கு எதிர்மாறக, இப்போது, பல தரப்பட்ட குழுக்கள் போப்பாண்டவரின் வருகையை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தப்போவதாக அறிவித்திருக்கின்றன.

2005ம் ஆண்டு போப்பாண்டவராகப் பதவி பெற்ற புனித தந்தை பெனடிக்ட் போப்பாண்டவராக முதலே, தனது பழமையான கத்தோலிக்கக் கருத்துக்களால், பொது மக்கள், அரசியல்வாதிகள், பெண்ணியவாதிகள், மதத் தலைவர்கள் என்ற மட்டங்களில் பல விவாதங்களை உருவாக்கி விட்டவர்.

Pope_Benedict_XVI_1945_WorldWar21927ம் ஆண்டு பவேரியா என்ற இடத்தில் பிறந்த போப்பாண்டவரின் இயற் பெயர் யோசேவ் அலோயிஸ் ரட்சிங்கர் என்பதாகும். இவர் தனது 14வது வயதில் ஹிட்லரின் இளைஞர் படையில் (1941ல்)  சேர்ந்தார். ஹிட்லரின் திட்டத்தின்படி ஆயிரக்கணக்கான ஊனமற்ற மக்கள் கொல்லப்பட்டார்கள் இவர்களின் குடும்பத்தில் உள்ள மூளை வளர்ச்சி குறைந்த ஒருவரும் ஹிட்லரால் கொல்லப்பட்டார். இவரின் தந்தையார் நாஷிகளின் எதிரியென்று குறிப்பிடப்படுகிறது. போப்பாண்டவர் ஹிட்லரின் இளைஞர் படையில் சேர்ந்தாலும் கட்சிக் கூட்டங்களுக்குப் போவதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும் 16வது வயதில் ஹிட்லரின் போர்ப் படையிற் சேர்ந்தார் போர் முடிந்ததும், அமெரிக்க, பிரிட்டிஷ் படைகளுக்குத் தப்பியோடினாலும் அமெரிக்கராற் பிடிக்கப்பட்டுச் சிறைவைக்கப் பட்டார்.

மிகவும் பழைமைவாதக் கருத்துகளுடன் வாழும் போப்பாண்டவர் பூனைகளில் மிகவும் விருப்பம் கொண்டவர். வத்திக்கான் மாளிகையில் மிருகங்கள் வைத்திருக்ககூடாது என்ற சட்டம் இருப்பதால் தனது இரு பூனைகளையும்,  தனது தனிப்பட்ட வீட்டில் வைத்திருக்கிறாராம். இவரது தாய் மரியா ஒரு காலத்தில் செய்து கொடுத்த  பஞ்சடைத்த விளையாட்டுப் பொருளான பூனையை இன்னும் தன்னோடு வைத்திருக்கிறாராம்.  இசையில் மிகவும் மிகவும் பிரியமுள்ள புனித தந்தை பியானோ வாசிப்பாராம் அத்துடன் பேத்தோவன், மோஷார்ட் போன்றோரின் இசையை விரும்பிக்கேட்பாராம். புத்தகங்களில் மிகவும் ஆர்வமுள்ள போப்பாண்டவர் நிறைய வாசிப்பது மட்டுமன்றி நிறையப் புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். புத்தகங்கள் உலகம் பரந்த கத்தோலிக்கரால் கோடிக்கணக்காக வாங்கப்படுகிறது, முற்போக்குச் சமுதாயவாதிகளால் பல விமர்சனங்களுக்கும் உள்ளாகிறது.

Pope_Benedict_XVI_1977_Professorஇரண்டாவது உலக யுத்தத்தின்பின் சமயப் படிப்பில் இறங்கிய ரட்சிங்கர் அவர்கள் தனது கலாநிதி பட்டத்திற்கான மேற்படிப்புக்களை முடித்தபின் சமயப் பேராசிரியராகப் பல பல்கலைக்கழகங்களிற் பணியாற்றினார். இவரது பழைமைசார்ந்த சமயக் கருத்துக்களைப் போகுமிடம் எல்லாம் போதித்தார். முற்போக்கு கொள்கைளை எதிர்த்தார். உதாரணமாக 1968ம் ஆண்டுகளில் பாரிஸில் மாணவர் நடத்திய சமுதாயப் போராட்டங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.

எயிட்ஸ் நோய் பரவியபோது அதைத் தடுக்கப் பாலுறவின்போது ஆணுறையைப் பாவிக்க வேண்டும் என்று அகில உலக சுகாதார சபை அறிக்கை விட்டபோது அதை எதிர்த்தார். எயிட்சைத் தடுக்க ஒரேயோரு வழி பொதுமக்கள் பாலியல் உறவுகளை வைத்திருக்காமற் தடுப்பது என்பது இவரது வாதம். அத்துடன் உலகில் இன்று பெருகிவரும் சனத்தொகைகையைக் கட்டுப்படுத்தவும் வறுமையைத் தடுக்கவும் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள் தேவை என்பதையும் புனிதத் தந்தை எதிர்த்துப் பலரை விரோதித்துக் கொள்கிறார். அவரின் கருத்துப்படி ‘படைத்த கடவுள் உணவு கொடுப்பான், இயற்கை விதிகளை மீறக் கூடாது’ என்பதாகும். வளர்ந்து கொண்டுபோகும் மனிதப் பெருந்தொகைக்குத் தேவையான வாழ்க்கை முறைக்கு உலகத்தினில் போதிய உணவோ, நிலமோ கிடைக்காது என்ற வாதத்தை இவர் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை.

இவரின் இப்படியான கருத்துக்களுக்கு உலகப் பொருளாதார நிபுணர்கள் ஆதரவு கொடுக்கவில்லை. அத்துடன், ‘குழந்தை பெற்றுக்கொள்வது என்பது பெண்களின் தீர்மானத்தில் தங்கியிருக்கிறது, எங்கள் சொந்த விடயங்களில் தலையிடப் போப்பாண்டவருக்கு எந்த உரிமையும் கிடையாது’ என்று பெண்ணியவாதிகள் புனித தந்தைக்கு எதிரான பதாகைகளுடன் புறப்படுகிறார்கள்.

அத்துடன், போப்பாண்டவர் ஓரினச் சேர்க்கை உறவுக்கு எதிரானவர். இந்த மாதிரியான ‘இயற்கைக்கு உதவாத’ உறவுகள் வளராமல் கத்தோலிக்க மதம் போராட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இங்கிலாந்து, அமெரிக்கா, பெரும்பாலான மேற்கு நாடுகளில் ஓரினபாலுறவு சட்டமயமாக்கப் பட்டிருக்கிறது. ஆண்கள் ஆண்களையும், பெண்கள் பெண்களையும் திருமணம் செய்து கொள்ளலாம், அன்பு என்பதற்கு சமயம் வரைவிலக்கணம் கொடுத்து கட்டுப்படுத்த முடியாது என்று ஓரினச்சேர்க்கையாளர்கள் போராடுகிறார்கள். போப்பாண்டவரின் இங்கிலாந்து வருகையின்போது ஓரினச்சேர்க்கையாளரின் போப்பாண்டவர் எதிர்ப்பு பதாதைகள் உயர்த்தப்படும் என்று ஓரினச்சேர்க்கையாளர்களின் அமைப்பாளர் குறிப்பிட்டார்.

பல ஆண்டுகளாகக் கத்தோலிக்க பாதிரிமார்கள், தங்களின் தேவாலயங்களுக்கு பிரார்த்தனைக்கு வந்த அறியாப் பருவத்திலுள்ள சிறுவயது ஆண் பெண் குழந்தைகளுக்குச் செய்த பாலியற் கொடுமைகளை புனித தந்தை பெனடிக்ட் அவர்கள்  சரியாக விசாரிக்கவில்லை, குறிப்பிட்ட பாதிரிகைளைப் பதவிகளிலிருந்து உடனடியாக நிறுத்தவில்லை, இந்தக் கொடிய பாலியல் வன்முறைச் செய்திகளைப் பொலிசாருக்கு அறிவிக்கவில்லை என்ற பல தரப்பட்ட  கோபங்களில் பலர் போப்பாண்டவர் வரவை எதிர்ப்பதாக பிபிசி ‘பனராமா’ டொக்குயுமென்றரி 13.09.10 இரவு எடுத்துக்காட்டியது.

அத்துடன், பெண்களைக் கத்தோலிக்க ஆலயங்களில் பாதிரியார்கள் போன்ற மேற்பதவிகளில் வைக்கவும் புனித தந்தை எதிர்க்கிறார் என்பதும் அவருக்கு எதிராக வைக்கப்படும் பல குற்றச்சாட்டுகளில் ஒரு குற்றச்சாட்டாகும்.

இவைக்கும் மேலாகச் சமய ரீதியிலும் போப்பாண்டவர் மற்ற சமய மக்களின் மனதைத் துன்பப் படுத்தியிருக்கிறர் என்றும் சொல்லப்படுகிறது.

ஹிட்லரால் ஆறு கோடி மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். இடதுசாரிகள், ஜிப்ஸிகள், ஊனமுற்றோர், ஹிட்லருக்கு எதிராக எழுதிய பத்திரிகையாளர்கள என்று பல தரப்பட்டோர் கொல்லப்பட்டார்கள். முக்கியமாகக் கொல்லப்பட்டவர்கள் – இன அழிப்பு செய்யப்பட்டவர்கள் யூத மக்களாகும். ஆனால், ஹிட்லரின் படையிலிருந்த போப்பாண்டவர் இதுவரையும் ஹிட்லரால் யூத மக்களுக்குச் செய்யப்பட்ட கொடுமையை எதிர்த்து எதுவும் சொல்லவில்லை. மன்னிப்பும் கேட்கவில்லை என்று யூதமக்கள் பொருமுகிறார்கள்.

யூத மக்களால் மட்டுமல்ல முஸ்லிம் மக்களுக்கும், துருக்கிய முஸ்லிம் மன்னர்கள் பற்றிப் போப்பாண்டவர் சொன்ன கருத்துக்கள் கோபத்தை உண்டாக்கியிருக்கின்றன. 12.09.2006ம் ஆண்டு, அவர் பேசும் போது கிறிஸ்தவ மன்னரான மானுவல் 2வது பாலுலாக்கஸ்ஸைத் துருக்கிய மனனர் 1391ல் கொன்ஸ்ரான்ரினோப்பிளில் வெற்றி கொண்ட பின்  கிறிஸ்தவ மக்களைத் மிகக் கொடுமையாகத் துன்புறுத்தி மதம் மாறச்செய்தார் ஏன்று குறிப்பிட்டதும் முஸ்லிம் அதிகாரம் வன்முறையானது என்றதொனியில் பேசியதும் பல முஸ்லிம் மக்களைக் கோபப்படுத்தியிருக்கிறது.

போப்பாண்டவர் அவர்கள் பொதுவுடமை நாடான சைனாவின் பரம எதிரியான தலாய்லாமாமைச் சந்தித்ததால் 2007ல் சீனாவின் கண்டிப்புக்கும் ஆளாகினார்.

கொலப்பஸ் தென்னமெரிக்க நாடுகளுக்கு வந்தபின்தான் மனிதப் பண்பாட்டை மேன்படுத்தும் கிறிஸ்ரியானிட்டியால் மக்கள் நன்மையடைந்தார்கள் என்று சொன்னதால், தங்களது ஆதிகால வணக்க முறைகளைப் போப்பாண்டவர் அவமதித்ததாக வெனிசுவேலாவின் அதிபர் சவாவோசின் கண்டனத்துக்கம் ஆளானார் புனித தந்தை.

உலகின் பல நாடுகளிலுமுள்ள பல கிறிஸ்தவ ஆலயங்களிற் பணி புரிந்த போதகர்களால்  பாலியற் கொடுமை செய்யப்பட்ட குழந்தைகள்; இருக்கிறார்கள். குற்றப் பத்திரிகைகளைத் தாக்கல் செய்கிறார்கள். ஆண்களும் பெண்களும் பல ஊடகத்துறைகள் மூலம், கத்தோலிக்கப் பாதிரிமார் தங்களுக்குச் செய்த பாலியல் கொடுமைகளை விபரிக்கிறார்கள். ஜேர்மனியில் ரடசிங்கர் ஆர்ச் பிஷப்பாக இருந்தபோது (1977) பீட்டர் குலமன் என்ற பாதிரி செய்த கொடுமையைப் போப்பாண்டவர் சரியாக விசாரிக்கவில்லை என்றும், அமெரிக்காவின் ஓக்லாண்ட் கத்தோலிக்கப் பாதிரிகளின் நடத்தையை, அக்கால கட்டத்தில் (1998) வத்திக்கானில் கார்டினலாகவிருந்த ரடசிங்கரிடம் அறிவித்தும் அவர் எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் பிபிசி பனராமா செய்தியிற் சொன்னார்கள்.

Pope_Benedict_XVI_2009புனித தந்தை அவுஸ்திரேலியா சென்றிருந்து போதும், அமெரிக்கா சென்றிருந்த போதும் கிறிஸ்தவ பாதிரிகளாற் பாலியற் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து உரையாடினார். இதை எழுதிக்கொண்டிருக்கும் போது, பெல்ஜிய நாட்டில் உள்ள கிறிஸ்தவ பாதிரிகளால் பாலியற் கொடுமைகளுக்காளாளவர்களின் வாக்கு மூலங்கள் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.

மக்கள் தங்களுக்க நன்மை செய்யும் மதத்தைத் தழுவுவது என்றும் நடந்து கொண்டிருக்கிறது அத்துடன் அரசியல் காரணங்களால் பலர் பலவந்தமாக மதம் மாற்றப்பட்டார்கள் என்று சரித்திரங்கள் சொல்கின்றன. இந்தியாவில் இந்து மத அடிப்படையின் சாதிக் கொடுமையால் துன்புறுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட ஏழை மக்கள் மதம் மாறுகிறார்கள். வெளிநாட்டிலும் இலங்கையிலும், இலங்கைத் தமிழர்களில் சிலர் இன்று தங்களின் பழைய வாழ்க்கை பிடிக்காமல் புதிய சமயங்களைத் தேடுகிறார்கள். கிறிஸ்தவர்களாகி வெளிநாட்டுக் கலாச்சாரத்துடன் ஒன்றிப்போவதால் இவர்கள் மேற்கத்திய நாகரிகத்தைத் தழுவிக்கொண்டு தாங்கள் புலம் பெயர் நாடுகளின் அங்கிகாரத்தையும் உதவிகளையும் பெற்றுக்கொள்ள கத்தோலிக்கர்களாக மாறுவதாகவும் சொல்லப்படுகிறது. ஆசிய நாடுகள் ஆபிரிக்க நாடுகளிலிருந்த கத்தோலிக்க மதத்திற்கு மாறுபவர்களின் எண்ணிக்கை கூடுகிறது. மிகவும் பண வசதியுள்ள சமயம் கத்தோலிக்க மதமாகும். உலகில் மிகவும் செல்வாக்கான மனிதர்களில் ஒருத்தராகப் போப்பாண்டவர் கருதப்படுகிறார். வளரும் நாடுகளில் பாதிரிமாரின் செல்வாக்கு அளப்பரியது. அவர்களால் தேவாலயங்களில் பாலியற்கொடுமைகள் நடந்தாலும் யாரும் வாய் திறக்க மாட்டார்கள்.

பல நாடுகளில் கிறிஸ்தவ சமயக் குருமார்கள் பணத்தில் மட்டுமல்லாமல் அரசியல் சமூக செல்வாக்கிலும் முன்னிலையில் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதை மக்கள் மட்டுமல்லாது அரசியற் தலைவர்களும் கேட்டுப்பணிகிறார்கள். அவர்களின் சமயப்பணிகள் பிரச்சினை நடக்கும் நாடுகளில் அதிவேகமாகப் பரவுகிறது. இலங்கையில் தொடர்ந்த போரின் கடைசிக் கால கட்டத்தில் ‘தேசியத் தலைவர்’ பிரபாகரனும், கத்தோலிக்க பாதிரிகளின் தூண்டுதலால் கிறிஸ்தவ சமயத்திற்கு மாறினார் என்ற வதந்திகள் பரவின.  மேற்கத்திய கிறிஸ்தவ தலைவர்களைச் (ஜோர்ஜ் புஷ், ரோனி பிளேயர்?) சந்தோசப்படுத்தவும் போப்பாண்டவர், கார்டினல்ஸ், போன்ற கிறிஸ்தவத் தலைமையின் உதவியை நாடவும், அத்துடன் இன்று வேகமாகக் கிறிஸ்தவ சமயம் பரவும் ஆபிரிக்க நாடுகளின் மூலம் ‘ஈழத்தமிழகத்திற்கு’ ஆதரவு பெறவும் அவர் சமயம் மாறியிருக்கலாம் என்ற அபிப்பிராயமும் அடிபட்டது. இன்று இலங்கையிலும் வெளிநாட்டிலும் பெரும்பாலான தமிழர்கள் சமயம் மாறுவதற்கு, ‘தேசியத் தலைவர்’ சமயம் மாறியது ஒரு காரணமா அல்லது வெளிநாடு வந்த தமிழர்கள் கத்தோலிக்கர்களாக மாறி வசதியாக வாழ்வதால் அவர்களைத் திருப்திப்படுத்தத் ‘தேசியத் தலைவர்’ சமயம் மாறினாரா? என்பது போன்ற பல கேள்விகள் கேட்கப்படலாம். ஆனாலும்,  லண்டனில் நடக்கும் போப்பாண்டவர் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் புதிதாகச் சமயம் தழுவிய தமிழர்கள் தொகை பெரிதாகவிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிளிநொச்சி கமக்காரர் அமைப்புகளுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

இன்று கிளிநொச்சி கமக்காரர் அமைப்புகளுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்களும், விதை நெல்லும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பொருளாதார அமைச்சர் பசில்ராஜபக்சவினால் இவை வழங்கப்பட்டன. இன்று காலை இந்நிகழ்வு நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட கமக்காரர் அமைப்புகளுக்கு 101 இரு சக்கர உழவு இயந்திரங்கள் மற்றும். விதைநெல் ஆகியவை வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் அமைச்சா டக்ளஸ் தேவானந்தா மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வினையடுத்து யாழ்ப்பாணம் சென்ற அமைச்சர் பசில் ராஜபக்ச யாழ். அபிவிருத்தித்திட்ட மீளாய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

வடமாகாண தமிழ் இலக்கிய விழா திட்டமிட்டபடி கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.

வடமாகாண தமிழ் இலக்கிய விழா ஏற்கனவே திட்டமிட்டபடி ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து மூன்று தினங்களுக்கு கிளிநொச்சியில்  நடைபெறும் என யாழ்.மாவட்ட கலாசார உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

இவ்விலக்கிய விழாவுக்கான நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்திலிருந்து திருமறைக்கலாமன்றமும், யாழ்.மத்தியகல்லூரியும் சில நிகழ்ச்சிகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.  இவ்விழாவில் ஆளுநர் விருதுகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகை தரும் பேராளர்களுக்கு தங்குமிட வசதிகள் உட்பட ஏனைய வசதிகளும் வழங்கப்படவுள்ளதாகவும் மேலதிக விபரங்களை வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தொலைபேசி இலக்கமான 0213266990 என்ற எண்ணுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் திருவிழாவிற்குச் சென்று கொழும்பு திரும்பிக்கொண்டிருந்த குடும்பத்தினர் விபத்தில் சிக்கினர். இருவர் பலி!

நல்லூர் திருவிழாவிற்கு வந்து விட்டு வானொன்றில் கொழும்பு திரும்பிக் கொண்டிருந்வர்கள் விபத்தில் சிக்கியதில் இருவர் உயிரிழந்தனர். ஆறு பேர் படுகாயமடைந்தனர். கடந்த சனிக்pகிழமை (Sep 11 2010) அதிகாலையில் சிலாபம் மாரவில பகுதியில் இவ்விபத்து இடமபெற்றுள்ளது.

யாழ். சங்கிலியன் வீதியை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி கமலராசன் என்பவரின் குடும்பமே இவ்விபத்தில் சிக்கியது.

இதல் கமலராசனின் மகன் சந்தோஸ் (வயது 05) அவரின் மாமனார் மாணிக்கம் தம்புலிங்கம் ஆகியோரே உயிரிழந்தவர்களாவர். காயமடைந்த மூவர் மாரவில வைத்தியசாலையிலும், ஏனைய மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கபட்டுள்ளனர்.

கமலராசன் என்பவர் கட்டாரிலில் தொழில் செய்து விட்டு கடந்தசில மாதங்களுக்கு முன்பு இலங்கை திரும்பியிருந்தார். கடந்த 14ம் திகதி இவரது யாழ்ப்பாணம் சங்கிலியன் வீதியிலுள்ள வீட்டில் தங்கியிருந்த போது இவரின் குடும்பத்தினரது 147 பவண் தங்க நகைகள் கள்வர்களால் கொள்ளையிடப்பட்டன. இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகளும் மேந்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேயே இவ்விபத்தும் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்க்கது.

“இந்தியாவினால் அமைக்கப்படவுள்ள வீடுகள் இடம்பெயர்ந்த மக்களுக்கும் போதுமானவையல்ல, குறைந்த வட்டியுடனான கடனுதவிகள் வழங்கப்படும்” அமைச்சர் டியூ குணசேகர

due-00000.jpgஇந்திய அரசினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும், இவை அனைத்துக் குடும்பங்களுக்கும் போதுமானதல்ல என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் டியூ குணசேகரா தெரிவித்துள்ளார்.  இதே வேளை இவற்றை நிர்மானித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு நீண்ட காலம் எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனைக் கருத்தில் கொண்டு வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை நிர்மாணித்துக்கொள்வதற்கும், சேதமுற்ற வீடுகளை புனரமைத்துக் கொள்வதற்கும் அரசாங்கம் இலங்கை வங்கியுடன் இணைந்து குறைந்த வட்டியுடனான கடன் வசதிகளை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இக்கடன் வழங்கலுக்காக இலங்கை வங்கி 100 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும், 4வீத வருடாந்த வட்டியுடன் 10 வருடங்களில் மீளச்செலுத்துக்கூடியதாக அதிக பட்சக்கடனாக இரண்டரை இலட்சம் ரூபாவை  பெற முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விசுவமடு மேற்கில் 409 குடும்பங்கள் மீள்குடியேற்றம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள விசுவமடு மேற்குப் பகுதிகளில் 409 குடும்பங்கள் நேற்று (14-09-2010) மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

புதுருக்குடியிருப்பு பிரதேசச் செயலர் பிரிவிலுள்ள 19 கிராம சேவையாளர் பிரிவுகளில் ஒன்றான விசுவமடு மேற்கிலேயே இக்குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்படவுள்ளன. 409 குடும்பங்களைச்சேர்ந்த 1301 பேர் இவ்வாறு மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். இவர்கள் வவுனியா செட்டிக்குளம் முகாமில் வசித்து வந்தவர்களாவர்.

வெளிமாவட்டங்களில் உறவினர். நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளவர்கள் எதிர்வரும் 17ம் திகதி குறிப்பிட்ட பிரதேசத்தில் மீள்குடியேற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீள்குடியேற்றப்படுபவர்களில் 445 குடும்பங்களைச் சேர்ந்த  1411 பேர் அடங்குவர் எனவும், இதுவரை முல்லை மாவட்டத்தில் 16ஆயிரத்து 769 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

”அமெரிக்கா தனது சொந்த நாட்டுப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்” அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல

Keheliya_Rambukwella”அமெரிக்கா இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தனது சொந்த நாட்டுப் பிரச்சினைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்” என இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்nவெல காட்டமாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு 18வது அரசமைப்புத் திருத்தம் நிறைவேறியுள்ளதையடுத்து அமெரிக்கா கடுமையாக விமர்சனம் செய்திருந்தது. இவ்விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ”இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தேவையற்ற விதத்தில் தலையிடக்கூடாது. தேவையற்ற, பொறுப்பற்ற விதங்களில் விமர்சனங்களை வெளியிடுவதை அது தவிர்த்துகொண்டு தனது சொந்த நாட்டுப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். அமரிக்கா இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுகின்றது. அத்துடன் எமது நாட்டின் அதியுயர் கட்டமைப்பான உயர் நீதிமன்றத்தையும் அது அவமதித்துள்ளது” எனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

”இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அரசமைப்புத் திருத்தம் அதன் தேவை கருதியே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது சட்டப்படியானது. அதனை விமர்சிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை 18வது அரசமைப்புத் திருத்திருத்தத்தைக் கண்டித்து அமெரிக்கா அதன் விமர்சனத்தைத் வெளியிட்டிருந்தது. இவ்வரசமைப்புத் திருத்தமானது நாட்டின் ஜனநாயகத் தன்மையினைப் பலவீனப்படுத்தும் என அமெரிக்கா கருத்து வெளியிட்டிருந்தது.