யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட மக்களுக்கு நஷ்டஈடாக நேற்று 249 இலட்ச ரூபாவை வழங்கியதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை அபிவிருத்தி பிரதியமைச்சர் விஜித விஜய முனிசொய்சா தெரிவித்தார்.
வவுனியா, முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வுகள் நேற்றுக்காலை வவுனியாவிலும் பிற்பகல் முல்லைத்தீவிலும் நடைபெற்றன. மேற்படி நிகழ்வுகளில் நேரடியாகக் கலந்து கொண்ட அமைச்சர் டியூ குணசேகர, பிரதியமைச்சர் விஜித விஜயமுனிசொய்சா ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேற்று நஷ்ட ஈட்டுக்கான காசோலைகளை கையளித்துள்ளனர்.
பிரதியமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மக்கள் கடந்த முப்பது வருட கால யுத்தம் காரணமாக பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவது மட்டுமன்றி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.