தற்போது இலங்கையின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வரும் சூழ்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் கடுமையான மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இக்கடும் மழையினால் பல இடங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்படலாம் எனவும் வளிமண்டலத் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை ஆரம்பிப்பதற்கு முன்பாக இடைமழை பெய்யவிருப்பதாகவும், மலையகத்தில் நுவரெலிய, மற்றும் இரத்தினபுரி பகுதிகளில் அடைமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை, பருவமழைக்கு முன்பாக தற்போது பெய்த வரும் மழையினால் வன்னியில் மீளக்குடியமர்த்தப்பட்டுவரும் பொதுமக்கள் அதிகம் பாதிப்படைந்து வரகின்றனர். தற்காலிகக் கூடாரங்களில் தங்கியிருக்கும் மக்கள் பாதிப்படைந்து வருவதோடு வீடமைப்பிற்கான உதவிகளைப் பெற்று வீடுகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் மக்களின் பணிகளும் பாதிப்படைந்துள்ளது. இவ்வீடமைக்கும் பணிக்கான பணம் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருவதாலும் இரண்டாம் கட்ட பணம் வழங்குவதற்கு தாமதம் ஏற்பட்டதாலும் வீடமைப்புப்பணிகள் பாதிப்படைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டில் பரவலான மழை – மலையக பகுதிகளில் மண்சரிவு
கால நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக நேற்றும் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்ததாக வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளர் ஜயசிங்க ஆராய்ச்சி நேற்றுத் தெரிவித்தார்.நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சிப் பதிவில் ஆகக்கூடிய மழை புத்தளத்தில் 174.5 மி. மீட்டர்கள் அளவில் பெய்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய மழைக்காலநிலை அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்கும் எனவும் அவர் கூறினார்.
இதேவேளை பிற்பகலிலோ, மாலை வேளையிலோ இடி, மின்னலுடன் மழை பெய்ய முடியும். இச்சமயம் கடும் காற்றும் வீசலாம். அதனால் இடி, மின்னல் பாதிப்பிலிருந்து தவிர்ந்து கொள்ளுவதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அவர், இடைப்பருவப் பெயர்ச்சி மழைவீழ்ச்சி கால நிலை அடுத்த வாரம் ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதேவேளை, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வளம் முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் ஜானகி மீகால்தென்ன குறிப்பிடுகையில், நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சிப் பதிவுப்படி ராஜாங்கனைப் பிரதேசத்தில் 101.00 மி. மீ. மழை பெய்துள்ளது. அத்தோடு மகா இலுப்பள்ளமவில் 128.00 மி. மீ, அனுராதபுரத்தில் 88.090 மி.மீ என்றபடி மழை பெய்திருக்கின்றது. இதன் விளைவாக இராஜாங்கனைக்குளம் நிரம்பி வழியும் கட்டத்தை அடைந்தது. அதனால் இக்குளத்தின் ஆறு வான் கதவுகள் நேற்று முதல் திறந்து விடப்பட்டு நீர் வெளியேற்றப்படுகின்றன.
இதேநேரம், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி கூறுகையில், இராஜாங்கனை குளத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டிருப்பதால் எலுவன்குளம் ஊடான மன்னார்- புத்தளம் வீதி நேற்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மன்னார்- புத்தளம் வீதியில் எலுவன்குளம் பிரதேசத்தில் பல இடங்கள் நீரில் மூழ்கி இருப்பதன் விளைவாகவே இப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்றார்.
காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் தாழ் நிலங்களில் நேற்று முன்தினம் ஏற்பட்டிருந்த வெள்ள நீர் வடிந்து வருவதாக அம் மாவட்டங்களின் அனர்த்த முகாமைத்துவ நிலைய இணைப்பாளர்கள் கூறினர்.