2024

2024

வியட்நாமில் கடுமையான புயல் – 87 பேர் பலி !

வியட்நாமின் வடக்கு கடலோர பகுதி மாகாணங்களான குவாங் நின், ஹைபாங் ஆகிய பகுதிகளில் வீசிய கடும் புயல் காரணமாக 87 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யாகி என பெயரிடப்பட்ட இந்த புயல் கடந்த ஞாயிற்றுகிழமை (08) வியட்நாமை தாக்கியது.

புயல் காரணமாக கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், தொடர்ந்து மழை பெய்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் பாதிப்புகளில் சிக்கி இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளதுடன், 70 பேர் காணாமல் போய்யுள்ள நிலையில். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

யாகி புயல் வியட்நாமை தாக்குவதற்கு முன்பு, தெற்கு சீனா மற்றும் பிலிப்பைன்சை  தாக்கியதில் 24 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் 184 தமிழர்கள் படுகொலை நினைவேந்தல் – ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு மகஜர் !

பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலையின் 34ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (09) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

 

படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

 

முன்னதாக படுகொலை ஞாபகார்த்த தூபியானது புனரமைக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு ஜேசுசபை துறவி அருட்தந்தை ஜோசப் மேரியினால் திறந்துவைக்கப்பட்டது.

 

படுகொலைசெய்யப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

 

இதன்போது நினைவுத்தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.

 

கடந்த 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09ஆம் திகதி இராணுவத்தினருடன் இணைந்து ஊர்காவல் படையினரால் சத்துருக்கொண்டான், கொக்குவில், பிள்ளையாரடி கிராமங்களைச் சேர்ந்த கர்பிணித் தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள், அங்கவீனம் அடைந்தவர்கள் என பலர் கொண்டுசெல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

 

இதில் 5 கைக்குழந்தைகள், 42 பத்து வயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

 

இந்த படுகொலை தொடர்பாக விசாரணைகள் நடைபெற்றபோதும் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்தவித தண்டனைகளும் வழங்கப்படவில்லை.

 

இது தொடர்பில் மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டு ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பும் வகையில் அருட்தந்தை க.ஜெகதாஸிடம் வழங்கப்பட்டது.

 

குறித்த நினைவுத்தூபியில் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது அங்குவந்த பொலிஸார் நினைவுக்கல்லை உடைத்தெறிந்து அங்கு பணியிலீடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்திய நிலையில் நேற்றையதினம் நினைவேந்தல் நடைபெற்றது.

இன்று முதல் பெருதோட்டத் தொழிலாளர்களுக்கு 1350 ரூபா அடிப்படை சம்பளம் – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்

பெருதோட்டத் தொழிலாளர்களுக்கு 1350 ரூபா அடிப்படை சம்பளத்தை இன்று முதல் வழங்க கம்பனிகள் இணங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று முதல் கட்டாயமாக 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் வங்கப்பட்டுள்ளது. அதை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு நன்றி.

”முதல் கட்டமாக இன்றைய தினம் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1350 ரூபாய் வழங்கப்படும். மிகுதி 350 ரூபா பேச்சுவார்த்தைகளின் ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் இருந்தும் தலைவர்கள் உருவாக வேண்டும் அதற்கு நான் உதவி செய்வேன் – ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச

எமது அரசாங்கத்தில் அதிவேக வீதிகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் கொண்டுவரப்படும் இதன் மூலம் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்திகள் முன்னேற்றம் அடையும். மட்டக்களப்பில் இருந்தும் தலைவர்கள் உருவாக வேண்டும் அதற்கு நான் உதவி செய்வேன் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

 

மட்டக்களப்பில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார் இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

 

கிழக்கு மாகாணம் எனது தந்தையின் காலத்திலேயே அதிகமான அபிவிருத்திகளை கண்டது தெற்கில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகளைப் போன்று கிழக்கிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். எமது அரசாங்கத்தில் அதிவேக வீதிகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் கொண்டுவரப்படும் என நான் உறுதியளிக்கின்றேன். இதன் மூலம் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்திகள் என்பன முன்னேற்றம் அடையும் இங்குள்ள விவசாயம் மீன்பிடி கைத்தொழில் என்பனவற்றிற்கு ஏற்றுமதி மூலம் உலக சந்தையில் தொழில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

 

எங்களுக்குத் தேவை இந்த நாட்டை அபிவிருத்தியுடைய நாட்டாக மாற்ற வேண்டும் என்பதே இங்குள்ள இளைஞர்களுக்கு பலமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

 

இங்குள்ள அரசியல்வாதிகள் இன மத ரீதியான பணிகளே முன்னெடுத்து வருகின்றனர். ஏற்படவுள்ள மாற்றத்தினை பற்றி பிழையான தகவல்கள் வழங்க முடியாது இவர்களுக்கான நல்ல ஒரு எதிர்காலத்தை என்னால் வழங்க முடியும் என உறுதி கூறுகின்றேன்.

 

இலங்கையிலுள்ள கலாச்சாரங்களை இங்குள்ள இளைஞர் யுவதிகளைப் பற்றி எவருமே சிந்திப்பதில்லை இலங்கையிலுள்ள கலாசாரங்களை பௌத்த கலாசாரத்துக்கு சமனாக கிழக்கு மாகாண கலாசாரங்களையும் என்னால் பாதுகாக்க முடியும். என உறுதி என உறுதி கூறுகின்றேன்.

 

வெளிநாடுகளுக்குச் செல்லும் இங்குள்ள இளைஞர்கள் ஏமாற்றப் படுகின்றனர். இதற்கான நிரந்தர தீர்வை என்னால் பெற்றுத் தர முடியும் கடந்த காலங்களில் மக்கள் கஷ்ட காலத்தை கடந்து வந்துள்ளதுடன் இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலங்களில் இனவாதம் மதவாதம் அதிகரிக்கின்றது. பிரிவினை உடைய அரசியலை நான் முன்னெடுப் பதில்லை நான் முடியுமா னவற்றை மட்டுமே கூறுவேன்.

 

இங்குள்ள உங்களுடைய திறமைகளை பாவித்து வெளிநாடுகளைப் போல் வியாபாரம் விவசாயம் என்பனவற்றில் முன்னேற்றமடைந்து தொழில்நுட்பத்துடன் கூறிய அறிவைப் பெற்று வீட்டுக்கு உதவுமாறு நான் அழைப்பு விடுகிறேன். இந்த தேர்தலில் வெற்றி பெற உதவுமாறு புதிய தலைவர்கள் உருவாக வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன்.

மட்டக்களப்பில் இருந்தும் தலைவர்கள் உருவாக வேண்டும் அதற்கு நான் உதவி செய்வேன். இது சின்னத்துக்கு வாக்களிக்குமாறும் உங்களிடம் வேண்டுகிறேன் . சிந்தனையுடைய இளைஞர்களை உங்களது எதிர்காலத்தை திட்டமிட அழைப்பு விடுக்கிறேன். என அவரது மேலும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,கட்சி அமைப்பாளர்கள்,ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

“தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நாட்டில் இன, மத, கருத்துச் சுதந்திரம் பேணப்படும்” – அனுரகுமார திசாநாயக்க

“தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நாட்டில் இன, மத, கருத்துச் சுதந்திரம் பேணப்படும்” என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

மாத்தளை நகரில் இன்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் வெற்றிப்பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தேர்தல் தோல்விக்கு அஞ்சுபவர்கள் இன்று பிரசார மேடைகளில் மக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்திவருகின்றனர்.

 

எனது வெற்றி, நாட்டு மக்களின் வெற்றியாகும். தேசிய மக்கள் சக்தியினால் நூற்றுக்கு 3 வீத வாக்குகளை மாத்திரமே பெறமுடியும் என எதிர்த் தரப்பு வேட்பாளர்கள் தெரிவித்தனர்.

 

ஆனால் தற்போது அவ்வாறு அவர்கள் கூறுவதில்லை. தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றால் அசம்பாவிதங்கள் இடம்பெறும் என கூறிவருகின்றனர். அதாவது தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும் என்பதை எதிர்த்தரப்பு வேட்பாளர்கள் நன்கு அறிவார்கள் அதனாலேயே சமூகத்தில் போலி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

 

நாம் எதிர்வரும் 22 ஆம் திகதி நிச்சயமாக வெற்றிபெறுவோம். போலி விமர்சனங்களை கண்டு நாம் அச்சமடைய போவதில்லை. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில மத்திய வங்கி கொள்ளையர்கள் பயப்பட வேண்டும்.

 

கலாசார நிதியத்தில் நிதிமோசடியில் ஈடுபட்டவர்கள் பயப்பட வேண்டும். வீடமைப்பு நிதியத்தில் கொள்ளையடித்தவர்கள் பயப்பட வேண்டும். அதனைவிடுத்து இந்த நாட்டின் அப்பாவி பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை.

 

நாட்டில் ஒற்றுமையும் சமாதானமும் நிறைந்த யுகம் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் உருவாக்கப்படும். தேர்தலில் நாம் வெற்றிபெற்று இந்த நாட்டில் ஊழல் மோசடிகளை முற்றாக ஒழிப்போம்.

 

அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்ளமாட்டோம்.நாட்டில் நடைமுறையில் உள்ள ஊழல்அரசியல் கலாசாரத்தினை நாம் முற்றாக மாற்றுவோம். ஏனைய கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே தேர்தல் வெற்றியையும் நாம் கொண்டாடுவோம்.

 

ஏனைய கட்சிகளுக்கு வாக்களிக்க தீர்மானித்துள்ள மக்களிடம் நாம் ஒருகோரிக்கையினை முன்வைக்கின்றோம்.

 

ஜனநாயகஉரிமைப்படி வாக்களிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது ஆனால் நாட்டில் புதிதொரு மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டுமாயின் தேசிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

 

எமது ஆட்சியில் நாம் யாரையும் கைவிட மாட்டோம் மக்கள் யுகம் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் ஏற்படுத்தப்படும்.

 

யாழில் நான் தெரிவித்த கருத்தினை இனவாத செயற்பாடாக ரணில்விக்ரமசிங்க திரிபுபடுத்தினார். ஆனால் அதற்கு சுமந்திரன் தகுந்த பதிலடி வழங்கினார். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நாட்டில் இன மத சுதந்திரம் பேணப்படுவதுடன் கலாசார விழுமியங்களுக்கு மதிப்பளிப்போம்” இவ்வாறு அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனியார்துறை ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வுதிய திட்டம் – அனுர குமார திசாநாயக்க

தனியார்துறை ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வுதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் யோசனையை தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளதாக, அதன் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கமொன்றின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்த அவர், மேலும் தெரிவிக்கையில்,
ஒய்வுபெற்ற பலர் அவலம் நிறைந்த துன்பகரமான வாழ்க்கையை வாழ்கின்றனர். ஓய்வுபெற்ற பின்னர் அனைவரும் கௌரவமான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவேண்டும்.
நாட்டின் உற்பத்திக்கு தனியார் துறையினர் பெரும் பங்களிப்புச் செய்கின்றனர். ஒவ்வொருவரும் இத்தனை வயது வரைதான் வேலை செய்யவேண்டும் என்றொரு விடயம் உள்ளது. ஓய்வுபெற்ற பின்னர் அனைவரும் கௌரவமான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவேண்டும். எனவே, தனியார் துறை ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டமொன்று எங்களிடம் உள்ளது என அவர் தெரிவித்தார்.

காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலி !

காசாவின்முக்கிய தெற்கு நகரமான கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலானது இன்று (10) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் பல மாதங்களாக நீடித்து வருகின்ற நிலையில் காசா மீது இடைவிடாமல் நடத்தப்படும் தாக்குதல்களால் அங்கு வாழும் பலஸ்தீன மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், இன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் 60 பேர் காயமடைந்துள்ளனர்.

இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளமையினால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இது குறித்து காசா பாதுகாப்பு படை அதிகாரி முகமது அல்-முகைர்  கருத்து தெரிவிக்கையில், “காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது அத்தோடு காணாமல் போன 15 பேரை மீட்பதற்காக எங்கள் குழுவினர் இன்னும் பணியாற்றி வருகின்றனர்.

20 முதல் 40 இற்கும் மேற்பட்ட கூடாரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன இந்த போரின் மிக கொடூரமான படுகொலைகளில் இதுவும் ஒன்று” என அவர் தெரிவித்துள்ளார்.

 

அத்தோடு, கான் யூனிசில் தாக்குதலுக்கு அப்பாற்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் இருந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் செயல்பட்டதாகவும் அவர்களைக் குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மண்டலத்தில் இருந்த இந்த பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழப்பதைத் தடுக்க இஸ்ரேல் தேவையான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிங்கள மக்களும் தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் – அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா

சிங்கள மக்கள் கூட தமது முதல் வாக்கினை தமிழ் பொது வேட்பாளருக்கு அளித்த பின்னர் ஏனைய இரு விருப்பு வாக்குகளையும் தாம் விரும்புபவருக்கு அளிக்கலாம் என அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்.

 

யாழ் . ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”தமிழ் பொது வேட்பாளர் தான் தமிழ் மக்களுக்கு தேவை. சங்கே தமிழர்களின் அடையாளம். அதனால் அனைத்து தமிழ் மக்களும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்

 

தமிழ் மக்களின் குரலை வலுப்படுத்தவேண்டும் முஸ்லீம் மக்களும் மதங்களை தாண்டி தமது முதல் வாக்கினை தமிழ் பொது வேட்பாளருக்கு அளிக்க வேண்டும்.

 

அதேபோன்று மலையகம் மற்றும் தெற்கு உள்ளிட்ட இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்களும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.

 

குறிப்பாக சிங்கள மக்கள் கூட தமது முதல் வாக்கினை தமிழ் பொது வேட்பாளருக்கு அளித்த பின்னர் ஏனைய இரு விருப்பு வாக்குகளையும் தாம் விரும்புபவருக்கு அளிக்கலாம்” இவ்வாறு மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்.

இரத்துச்செய்யப்பட்டது முருகேசு சந்திரகுமாரின் கட்சிப் பதிவு !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான அரசியல் கட்சியின் பதிவு தேர்தல்கள் ஆணைக்குழுவால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

 

சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக் கட்சி 3 வருடங்களுக்கு முன்பு ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலம் முதல் இன்று வரை அந்தக் கட்சியின் கணக்கு அறிக்கையைத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கவில்லை.

 

கணக்கு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு 3 தடவைகள் கடிதம் அனுப்பியும் பதில் அளிக்காத காரணத்தினாலேயே தற்போது தேர்தல்கள் ஆணைக்குழு சமத்துவக் கட்சியின் பதிவை நீக்கியுள்ளது.

 

எம்பிலிப்பிட்டிய உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிப்பின் பின்னர் 2024.08.26ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிட்ட 2399/14 இலக்க அரச இதழில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் சமத்துவக் கட்சியின் பெயர் நீக்கப்பட்டு 77 அரசியல் கட்சிகளின் பெயர்ப்பட்டியலே வெளியிடப்பட்டுள்ளது.

 

இதேவேளை, சந்திரகுமாரின் கட்சி இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சஜித் பிரேமதாச ஆதரவாளர்கள் வெடித்த பட்டாசு – 08 பேர் படுகாயம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவுக்கு சார்பாகக் கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பட்டாசுகள் வெடித்ததால் பொலிஸ் அதிகாரிகள் உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரசாரக் கூட்டத்தை ஆரம்பிக்கும் போது அங்கிருந்த நபர்கள் சிலர் பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுகளை வெடிக்க வைத்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.