12

12

நாம் அணுகுண்டை தயாரிக்க நேரிடும் – இஸ்ரேலை எச்சரிக்கும் ஈரான் !

ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், தாம் அணுகுண்டுகளை தயாரிப்போம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் உதவியாளர் கமால் கராசி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அணுகுண்டை உருவாக்கும் முடிவு இதுவரை எங்களிடம் இல்லை. ஆனால் ஈரானின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ, அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினாலோ தங்கள் இராணுவக் கோட்பாட்டை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஈரானின் நடவடிக்கைகளுக்கு சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தலைவர் ரபேல் கிராஸி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது, ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் குண்டுகளை வீசியது.

சுமார் 5 மணி நேரம் நடந்த இந்தத் தாக்குதலில் 99 சதவீதமான குண்டுகளை அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடுவானில் இடைமறித்து அழித்தன.

இஸ்ரேல் – ஈரானின் இந்தத் தாக்குதல், 3 ஆம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் எழுந்திருந்த நிலையில், சர்வதேச சமூகங்களின் அழுத்தத்தால் பதற்றம் சற்று குறைவடைந்திருந்திருந்தது.

இந்நிலையில், மீண்டும் ஈரான் மதத் தலைவர் ஆலோசகர் விடுத்துள்ள ‘அணுகுண்டு தயாரிப்போம்’ என்ற எச்சரிக்கை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வரலாற்றில் ஒரு இனப்படுகொலையாளன் – கொலம்பிய ஜனாதிபதி கஸ்டவோ பெட்டிரோ சாடல் !

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வரலாற்றில் ஒரு இனப்படுகொலையாளன் என பதிவுசெய்யப்படுவார் என கொலம்பிய ஜனாதிபதி கஸ்டவோ பெட்டிரோ சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் அப்பாவி சிறுவர்கள் பெண்கள் முதியவர்கள் மீது ஆயிரக்கணக்கில் குண்டுகளை வீசுகின்றார் இதன் காரணமாக அவர் கதாநாயகனாக மாற முடியாது.  என அவர் பதிவிட்டுள்ளார்.

மில்லியன் கணக்கில் யூதர்களை கொலை செய்த  நாஜிகளுடன் இஸ்ரேலிய ஜனாதிபதியை ஒப்பிட்டுள்ள  அவர்  எந்த மதத்தினரையும் நீங்கள் கொலை செய்தாலும் இனப்படுகொலை  இனப்படுகொலைதான் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

முன்னதாக கொலம்பிய ஜனாதிபதியை இஸ்ரேல் பிரதமர் ஹமாஸ் ஆதரவாளர் என குறிப்பிட்டிருந்தார்.

இஸ்ரேலின் தாக்குதலால் தகர்க்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளின் கீழ் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உடல்கள் !

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலால் தகர்க்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளின் கீழ் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உடல்கள் உள்ளன என காசாவின் சிவில் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த பல மாதங்களாக நாங்கள் மிகச்சாதாரணமான இயந்திரங்களை பயன்படுத்தி இடிபாடுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் இதனால் எங்கள் முயற்சியும் நேரமும் வீணாகியுள்ளது  என ஹமாசின் சிவில் பாதுகாப்பு பிரிவின் பேச்சாளர் மஹ்மூத் பசால் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தாக்குதலை மேற்கொண்டதும் மருத்துபிரிவினரும் காசாவின்  சிவில் பாதுகாப்பு பிரிவினருமே முதலில் அங்கு செல்கின்றனர்.

அவர்கள் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளவர்கள் – உடல்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடுவார்கள்.

இடிபாடுகளிற்குள் சிக்குப்படுபவர்களை மீட்பதற்கு அவசியமான இயந்திரங்களை காசாவிற்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு ஐநாவும் மனிதாபிமான அமைப்புகளும் ஆதரவளிக்கவேண்டும் என என ஹமாசின் சிவில் பாதுகாப்பு பிரிவின் பேச்சாளர் மஹ்மூத் பசால் தெரிவித்துள்ளார்.

அல்சிபா மருத்துவமனையிலிருந்து இஸ்ரேலிய படையினர் விலகி 40நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னமும் மருத்துவமனைக்குள் பாரிய மனித புதைகுழிகளுக்குள் இஸ்ரேலிய படையினர் புதைத்த உடல்களை இன்னமும் மீட்டு வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.