09
09
அர்ஜென்டினா ஜனாதிபதி ஆல்பர்டோ பெர்னாண்டஸ்க்கு எதிர்ப்பு தெரிவித்து அர்ஜென்டினா மக்கள் ஆயிரக்கணக்கனோர் வீதிகளில் இறங்கி போராடி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால், கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் அர்ஜெண்டினா மக்கள், அந்நாட்டு ஜனாதிபதி ஆல்பர்டோ பெர்னாண்டஸ் அறிவித்துள்ள புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அர்ஜென்டினா தலைநகர் புவெனஸ் ஐரிஸ் நகரில் மத்திய சதுக்கத்தில் சாலைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். கைகளில் தேசிய கொடியுடன் சாலைகளில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், “சுதந்திரம், நீதி மற்றும் அரசியலமைப்பு” என்று விண்ணை பிளக்கும் அளவுக்கு கோஷமிட்டனர்.
முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய துணை ஜனாதிபதியுமான கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னரை ஊழல் வழக்குக்கு உட்படுத்தாமல் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் நடப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். கொரோனா வைரஸ் தடுப்புக்காக போடப்படும் ஊரடங்குக்கு எதிராகவும், நீதி நிவாரணம் கேட்டும் அர்ஜென்டினாவில் மக்கள் போராட்டத்தை நடத்தினர். தலைநகர் புவெனஸ் ஐரிஸ்க்கு மட்டுமல்லாமல், கோர்டோபா, ரொசாரியோ, மார் டெல் பிளாட்டா, மெண்டோசா மற்றும் சான் கார்லோஸ் டி பாரிலோச்சே ஆகிய நகரங்களிலும் பெர்னாண்டஸின் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது.
உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்ற கொரோனா வைரஸ் காரணமாக பல இலட்சக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றாளர்களை பாதுகாப்பதற்கான முயற்சிகளையும் உலக நாடுகள் கனிசமாக மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக இலங்கையில் கொரோனா மூன்றாம் கட்ட பரவல் ஏற்பட்டுள்ளதுடன் நாளுக்கு நாள் தொற்றாளர்களுடைய தொகையும் அதிகரித்த வண்ணமுள்ளது. மேலும் தற்போது பரவும் வைரஸ் மிக வேகமாக தொற்றக்கூடியது என இலங்கையின் பல்கலைகழக ஆராய்வு முடிவுகளில் கூறப்பட்டிருந்தது.அதே நேரத்தில் கொரோனா வைரஸால் இறப்பவர்களுடைய தொகையும் இலங்கையில் கனிசமாக அதிகரித்துள்ளது. இது மக்களிடையே கொரோனா தொடர்பான அச்சத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக இருவேறு இடங்களில் இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி களுத்துறை – அகலவத்தையை சேர்ந்த (56-வயது) இ.போ.ச பேருந்து சாரதி ஒருவரே இவ்வாறு நேற்று (08) தற்கொலை செய்து கொண்டார்.
நாகொடை வைத்தியசாலை ஊழியர்கள் பலரை அவர் ஏற்றிச் சென்ற நிலையில் கொரோனா தொற்றலாம் என்ற அச்சத்தில் இருந்தார் என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
கம்பஹா – ஜாஎலவை சேர்ந்த (72-வயது) பெண் நேற்று முன் தினம் (07) தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது மூத்த மகளுக்கும் மருமகனுக்கும் முன்னதாக கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட இவர் கவலையில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
“துரையப்பா விளையாட்டு மைதானத்தினை சர்வதேச தரத்தினை ஒத்தவகையில் நாங்கள் புனரமைக்கவுள்ளோம்” என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தினை இன்று (09.11.2020) காலை பார்வையிட்டதோடு குறித்த விளையாட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஆராய்ந்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு பேசிய அவர்,
“எதிர்வரும் ஆண்டுகளுக்குள் துரையப்பா விளையாட்டு மைதானத்தினை சர்வதேச தரத்தினை ஒத்தவகையில் மைதானத்தை நாங்கள் புனரமைக்கவுள்ளோம்.வடக்கில் சிறந்த ஒரு உதைபந்தாட்ட மைதானம் ஆக தற்போது யாழ் துரையப்பா மைதானம் திகழ்கின்றது.
அத்தோடு இலங்கை பூராகவும் உதைபந்தாட்ட கழகங்களை நாங்கள் புதிதாக ஆரம்பிக்க உள்ளோம். அதேபோல யாழ்ப்பாணத்திலும் புதிதாக கழகம் உருவாக்கப்படவுள்ளது. துரையப்பா விளையாட்டு மைதானத்தில் உள்ளக அரங்கில் உடற்பயிற்சி நிலையம் ஒன்றையும் விரைவில் ஆரம்பிப்பதற்கு நாங்கள் எண்ணியுள்ளோம்.
அதனையும் தயார் படுத்துவதன் மூலம் ஏனைய மாவட்டங்களை போல வடக்கு இளைஞர்களும் தமது உதைபந்தாட்ட திறமையை வெளிப்படுத்துவதற்கு இந்த அரசு குறித்த முயற்சிகளை முன்னெடுக்க உள்ளளோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவினுடைய புதிய ஜனாதிபதியாக ஜோபைடன் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து உலகின் பல பகுதிகளிலுமுள்ள தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக இலங்கையின் எதிர்ககட்சித்தலைவரான சஜித் பிரேமதாஸ குறிப்பிடும் போது “அமெரிக்காவின் இந்த ஆட்சி மாற்றத்திலிருந்து எமது நாட்டுக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய அனைத்து நன்மைகளையும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரத்தில் செய்தியாளர்களிடம் கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது,
“அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பிடன் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டிலிருந்து இலங்கைக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன.
அமெரிக்காவின் முன்னாள் அரசாங்கத்தைவிட, தற்போது அமையவுள்ள அரசாங்கத்தால் உலகுக்கு சாதகமான நிலைமை ஏற்படும் என்றே நாம் நம்புகிறோம். இதனை எமது நாடும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அமெரிக்காவுடன் சிறப்பான கொள்கையுடன் நாம் பயணிக்கவேண்டும்.
இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை மேலும் பலப்படுத்த வேண்டும். நாட்டின் இறையான்மையை பாதிக்காத ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும்.அமெரிக்காவின் இந்த ஆட்சி மாற்றத்திலிருந்து எமது நாட்டுக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய அனைத்து நன்மைகளையும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் பேசிய அவர், “கொரோனாவினால் இன்று பலரது வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. பல தொழில்கள் முடங்கியுள்ளன.
மீனவர்கள், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள், சிறுக்கைத்தொழிலாளர்கள், தினமும் உழைப்பவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று ஒட்டுமொத்த நாடே பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்னமும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கிறோம்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சி என்ற வகையில், ஒட்டுமொத்த மக்களுக்காகவும் நாம் குரல் கொடுப்போம். அதேநேரம், இன்று அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.