சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறுமா? என்ற சந்தேகம் இருந்த நிலையில் ஆர்சிபி, டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளை வெற்றி கொண்டு பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.
எலிமினேட்டரில் கேன் வில்லியம்சனின் போராட்டத்தால் பெங்களுரை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 189 ஓட்டங்கள் அடித்தது. பின்னர் 190 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களம் இறங்கியது. அணி வீரர்களான வார்னர் (2), பிரியம் கார்க் (17), மணிஷ் பாண்டே (21) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் வந்த கேன் வில்லியம்சன் வெற்றிக்காக போராடினார். ஆனால் 45 பந்தில் 67 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். இதனால் ஐதராபாத் அணி 172 ரன்களே எடுத்து 17 ஓட்டங்களால் வெற்றியை கோட்டைவிட்டது. அத்துடன் இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாதது அவமானம் என உணர்கிறேன் என்று கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து கேன் வில்லியம்சன் கூறுகையில்
‘‘டெல்லி கேப்பிட்டல்ஸ் மிகவும் சிறந்த அணி. அவர்கள் விளையாடும் அவர்களுடைய ரிதத்தை காண முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். எங்களுக்கு எதிராக ஒன்றிணைந்து விளையாடும் வாய்ப்பை பெற்றனர். சிறப்பாக விளையாடினர்.
போட்டியின் 2-வது இன்னிங்சில் 190 ஓட்டங்கள் அடிப்பது கடினம். எங்களுக்கு தொடக்கத்திலேயே விக்கெட் வீழ்ந்துவிட்டது. இருந்தாலும் மிடில் ஆர்டர் ஓவர்களில் ஓரளவிற்கு பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தோம். எங்களுக்கு இன்னும் கூடுதலாக வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும்.
இறுதிப் போட்டிக்கு செல்ல முடியாததை உண்மையிலேயே அவமானம் என கருதுகிறேன். ஆனால், குறிப்பாக கடந்த மூன்று வாரங்களாக எங்கள் அணி வீரர்கள் விளையாடியதை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது’’ என்றார்.