08

08

உலகமே அமெரிக்க தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது கோல்ப் விளையாடிக்கொண்டிருந்த ட்ரம்ப் !

உலகமே நேற்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவது யார்? என தொலைக்காட்சி, இணையதளத்தில் குவிந்திருந்த நிலையில் தற்போதைய ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப் எங்கு இருந்தார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
வெற்றியை தீர்மானிக்கும் பென்சில்வேனியா வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படும் சிறிது நேரத்திற்கு முன்னதாக திட்டமிடப்படாத பயணமாக டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார்.
அவர் வெர்ஜினியா மாநிலத்தின் ஸ்டெர்லின் பகுதியில் உள்ள டிரம்ப் தேசிய கோல்ப் மைதானத்திற்கு சென்றுள்ளார். பென்சில்வேனியா வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஜோ பைடன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டபோது அவர் கோல்ப் விளையாடிக்கொண்டிருந்தார்.
அமெரிக்க தேர்தல் முடிவுகளை உலகமே கவனித்துக்கொண்டிருந்த போது ’கோல்ப்’ விளையாடிய டிரம்ப்
அவர் வழக்கமாக பயன்படுத்தும், ‘மேக் அமெரிக்கா கிரேட் ’ என்ற வாசகம் அடங்கிய தொப்பியை அவர் தனது தலையில் வைத்துக்கொண்டு கோல்ப் விளையாடினார்.
கோல்ப் விளையாடி முடித்த உடன் வெள்ளைமாளிகை நோக்கி வந்த டிரம்பிற்கு அவரது ஆதரவாளர்கள் ‘நாங்கள் உங்களை நேசிக்கிறோம்’ என கோஷமிட்டனர். அதேபோல் ஜோ பைடன் ஆதரவாளர்களோ டிரம்பை நோக்கி ‘தோல்வியாளர்’ என கோஷமிட்டனர்.

“கமலா ஹரிஸின் வெற்றி தெற்காசியப் பெண்களுக்கும் உலகம் முழுவதிலும் உள்ள பெண்களுக்குப் பெருமை தருகிறது“ – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ட்வீட் !

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடனுக்கும் துணை ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள கமலா ஹரிஸிற்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வாழ்த்துக்களை தன்னுடைய டுவிட்டர் பக்கம் மூலமாக  தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்க மக்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர், “கமலா ஹரிஸின் வெற்றி தெற்காசியப் பெண்களுக்கும் உலகம் முழுவதிலும் உள்ள பெண்களுக்குப் பெருமை தருகிறது. மன்னர்கள் பைத்தியக்காரர்களாக மாறும்போது ஜனநாயகமும் அதன் செயற்பாடுகளுமே மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரே பாதுகாப்பாகும்.

ஜனநாயக நிறுவனங்கள் அவற்றின் சுதந்திரத்திற்கும் சட்டப்படியான அவற்றின் செயற்பாட்டிற்கும் வருகின்ற சகல அச்சுறுத்தல்களையும் கடுமையாக எதிர்த்துநின்று வெற்றிகொள்ள வேண்டும். அதை அமெரிக்கா நிரூபித்திருக்கிறது.

அமெரிக்க மக்களே, உங்களால் நாம் பெருமையடைகின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரம் இலங்கையினுடைய ஜனாதிபதி கோட்டாபாயராஜபக்ஷ , பிரதமர் மகிந்த ராஜபக்ஷ , எதிர்க்கட்சித்தலைவர் சஜித்பிரேமதாஸ போன்றோரும் ஜோபைடனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் சோகம் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சி – தாயும் 16வயது மகளும் உயிரிழப்பு !

திருகோணமலை – ஆனந்தபுரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்ததில் 16 வயது யுவதியொருவர் உயிரிழந்த நிலையில் இறுதிக் கிரியை இன்று (8.11.2020) இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமியின் தாயாரும் இன்று (08.11.2020) பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை- ஆனந்தபுரி பகுதியினைச் சேர்ந்த என். நாகேஸ்வரி (31வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு நஞ்சருந்திய தாய் உட்பட 4 பேர் கடந்த 06 திகதி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் மகள் என். விதூசிகா (16 வயது) அன்றைய தினமே உயிரிழந்திருந்தார்.அவரது இறுதிச்சடங்கு இன்று இடம்பெற்றுள்ளது.

இதைவேளை அவரது தாயார் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில், திருகோணமலை- ஆனந்தபுரி பகுதியைச் சேர்ந்த என்.வைஸ்னவீ (12வயது) ,என். ஐஸ்வர்யா (08 வயது) மற்றும் என். கஜவீர் (02 வயது) ஆகியோர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் நஞ்சு அருந்தியமைக்கான காரணம் குடும்ப தகராறே காரணம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் குறித்து உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை பாதுகாத்த பெருமை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையே சாரும்” – இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் குற்றச்சாட்டு !

“ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை பாதுகாத்த பெருமை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையே சாரும்” என என கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய அரசாங்கத்தின் கால் நடை மற்றும் சிறுபயிர் செய்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கடுக்காமுனை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

“இப்பொழுது சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சில வாதப்பிரதிவாதங்களை , அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நீதி அமைச்சரிடம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டதை கேலிகூத்தாக எடுத்து பேசி வருகின்றமையினை ஊடகங்கள் வாயிலாக எம்மால் அறிய முடிகின்றது.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியிடம் பேசலாம், பிரதமரிடம் பேசலாம், நீதி அமைச்சரோடும் பேசவேண்டும் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீதி அமைச்சருக்கும் பங்கு இருக்கின்றது, அவர் நாட்டினுடைய நீதித்துறைக்கு பொறுப்பானவர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நான் அன்று தொடக்கம் இன்றுவரை குரல் கொடுத்தவனாகவே இருந்து வருகின்றேன், அவர்களது விடுதலைக்காக தொடர்ந்தும் குரல்கொடுப்பேன்.

300க்கும் மேற்பட்ட உயிர்கள் பயங்கரவாத தாக்குதலால் கடந்த ஏப்ரல் 21 இல் வெடித்து சிதறி பலியாகினர். அந்தப் பயங்கரவாதத்தை தடுக்காமல் இருந்த அரசாங்கத்தை, மக்கள் விடுதலை முன்னணியினர் அந்நேரத்தில் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்த போது ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை பாதுகாத்த பெருமை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையே சாரும்.

ஒவ்வொரு முறையும் அரசாங்கத்திற்கு வாக்களிக்கும் பொழுதும், அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களிக்கும் பொழுதும், பத்து அல்லது இருபது அரசியல் கைதிகளை விடுதலை செய்தால்தான் வாக்களிப்போம் என்ற நிபந்தனைகளை முன்வைத்து இருந்தால் கடந்த 4, 1/2 வருடங்களில் பல்வேறுபட்ட பிரச்சினைக்கான தீர்வினை கடந்த அரசாங்கத்திடமிருந்து எமது தமிழ் மக்களுக்காக பெற்றுக்கொடுத்திருக்க முடியும்”  எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்”

“டிவில்லியர்ஸ் இந்த சீசனில் இல்லாமல் இருந்திருந்தால் பெங்களூர் அணியின் நிலைமை படுமோசமாகியருக்கும். தோல்விக்கான பொறுப்பை கோலி ஏற்று தலைமையிலிருந்து விலக வேண்டும்” – கவுதம் கம்பீர்

“டிவில்லியர்ஸ் இந்த சீசனில் இல்லாமல் இருந்திருந்தால் பெங்களூர் அணியின் நிலைமை படுமோசமாகியருக்கும். தோல்விக்கான பொறுப்பை கோலி ஏற்று தலைமையிலிருந்து விலக வேண்டும்” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்காக 2 முறை கோப்பையை பெற்றுத் தந்தவருமான கவுதம் கம்பீர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அந்தப்பேட்டியில் அவர் தொடர்ந்தும் கூறியதாவது::-

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைவராக விராட் கோலி 8 ஆண்டுகள் பணியாற்றி விட்டார். ஆனால் இன்னும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை. 8 ஆண்டு தலைமைத்துவம் என்பது என்பது ரொம்பவே அதிகம். பெங்களூர் அணி நிர்வாகம் தலைமைத்துவத்தை மாற்றுவதற்கு இதுவே சரியான தருணமாகும். கோப்பையை வெல்லாமல் எந்த தலைவராவது, எந்த வீரராவது ஒரே அணியில் இவ்வளவு காலம் நீடித்திருக்கிறார்களா? என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

Eight years is long time': Gautam Gambhir wants RCB to remove Virat Kohli  as skipper, Sports News | wionews.com

எனவே இதற்கான பொறுப்பை கோலி தான் எடுத்துக் கொள்ள வேண்டும். விராட் கோலியுடன் எனக்கு எந்த பகைமையும் கிடையாது. பெங்களூர் அணியால் கோப்பையை வெல்ல முடியாததற்கு நானே பொறுப்பு என்று அவர் திறந்த மனதுடன் சொல்ல வேண்டும். நீங்கள் தான் தலைவர். வெற்றியின் போது கிடைக்கும் பாராட்டுகளை ஏற்றுக்கொள்ளும் போது, தோல்வியால் எழும் விமர்சனங்களையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக ஆர்.அஸ்வின் 2 ஆண்டுகள் இருந்தார். அவர் சோபிக்கவில்லை என்றதும் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். நாம் டோனி, ரோகித் சர்மா குறித்து பேசுகிறோம். டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 3 முறை கோப்பையை வென்று தந்திருக்கிறார். ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 4 தடவை கோப்பையை கைப்பற்றி இருக்கிறார். அதனால் தான் அவர்கள் நீண்ட காலமாக அந்தந்த அணிகளின் தலைவர்களாக தொடருகிறார்கள். ரோகித் சர்மா 8 ஆண்டுகளில் சாதிக்கவில்லை என்றால் நிச்சயம் கழற்றி விட்டிருப்பார்கள். ஒவ்வொரு வீரருக்கும், ஒவ்வொரு வகையிலான அளவுகோல் இருக்கக்கூடாது. தலைவராக இருப்பவர் களத்தில் சாதகமான முடிவுகளை கொண்டு வர வேண்டும். அது தான் முக்கியம்.

‘நாங்கள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறோம். அதற்கு நாங்கள் தகுதியான அணி’ என்று நீங்கள் (பெங்களூர்) சொல்லலாம். என்னை பொறுத்தவரை பெங்களூர் அணி பிளே-ஆப் சுற்றுக்கு ஒரு போதும் தகுதியான அணி கிடையாது. டிவில்லியர்ஸ் இந்த சீசனில் இல்லாமல் இருந்திருந்தால் பெங்களூரு அணியின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். லீக் சுற்றில் கிடைத்த 7 வெற்றிகளில் அவரது அபாரமான பங்களிப்பால் 2-3 வெற்றிகள் கிடைத்தது. இல்லாவிட்டால் வெளியேறியிருக்கும். கடந்த ஆண்டை போலவே இந்த சீசனிலும் ஒருங்கிணைந்த அணியாக அவர்கள் செயல்படவில்லை.
என  கம்பீர் அந்தப்பட்டியில் கூறினார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான செயலில் இறங்குகிறார் புதிய ஜனாதிபதி !

அமெரிக்காவில் அதிகரித்துவரும் கொரோனாவைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முதல் பணியாக புதிய மருத்துவ வல்லுர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு திங்கள்கிழமை அமைக்கப்படும் என்று ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோபைடன் மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனாவைரஸ் அதன் பிறப்பிடமான சீனாவை விட, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில்தான் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை அமெரிக்காவில் கரோனா வைரஸால் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.43 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனாவைரஸ் 2-வது கட்ட அலை பரவியதுபோன்று, தற்போது நாள்தோறும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் குறைவில்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்தல் வெற்றிக்குப் பின் ஜனாதிபதியாக பதவி ஏற்க இருக்கும் ஜோ பைடனும், துணை ஜனாதிபதியாக பதவி ஏற்க இருக்கும் கமலா ஹாரிஸும் மக்களுக்கு வில்மிங்டனில் உள்ள டெலாவேர் நகரில் சனிக்கிழமை இரவு உரையாற்றினர்.

ஜனாதிபதியாக பதவி ஏற்க இருக்கும் ஜோ பைடன் கொரோனாவைரஸ் பரவல் குறித்து மக்களிடம் பேசுகையில், “நான் அமெரிக்க மக்களுக்கு உறுதியளிப்பது என்னவென்றால், என்னுடைய முதல் பணி, கொரோனாவைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தி, அதிலிருந்து மக்களைக் காப்பதாகும். இதற்காக திங்கள்கிழமை புதிய மருத்துவ வல்லுநர்கள், தொற்றுநோய் தடுப்பு வல்லுநர்கள் கொண்ட ஆலோசகர்கள் குழு அமைக்கப்படும். அதில் யார் இடம் பெறுவார்கள் என்பதும் அன்று அறிவிக்கப்படும்.

கொரோனா வைரஸால் அமெரிக்காவில் இதுவரை 2.40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துவிட்டார்கள். தொற்றுநோயைத் தடுக்க புதிதான அடிப்படை அறிவியல் திட்டங்களை உருவாக்க வேண்டும். அதுமட்டும்தான் நாம் நமது வாழ்க்கையைத் திரும்பப் பெற வழியாகும்.

நாங்கள் புதிதாக அமைக்கும் மருத்துவ ஆலோசகர்கள் குழு கொரோனா பரவலைத் தடுப்பதற்கான திட்டத்தைத் தயாரிக்கும். 2021ஆம் ஆண்டு ஜனவரி 20-ம் திகதியிலிருந்து அந்தத் திட்டம் செயல்படத் தொடங்கும். எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாது.டொனால்ட் ட்ரம்ப், தன் ஆட்சியில் அமைக்கப்பட்ட மருத்துவ வல்லுநர்கள் குழுவின் அறிவுரைகளையும் கேட்கவில்லை, வைரஸ் பரவலைக் தடுக்கவும் இல்லை” எனத் தெரிவித்தார்.

“2019ம் ஆண்டு A/L பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை Z Score அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவுசெய்வதில் பாரிய அநீதி இடம்பெற்றுள்ளது” – அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றச்சாட்டு !

2019ம் ஆண்டு A/L பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை Z Score அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவுசெய்வதில் பாரிய அநீதி இடம்பெற்றுள்ளது என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவிற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரத்கரவே ஜீவரத்ன தேரரினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

“கடந்த 2019ம் ஆண்டு A/L பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை Z Score அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவுசெய்வதில் பாரிய அநீதி இடம்பெற்றுள்ளது.

A/L பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களுமே உயர்கல்வியைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களாவர். எனினும் அரச பல்கலைக்கழகங்களின் வரையறுக்கப்பட்டுள்ள தன்மை காரணமாக நீண்டகாலமாகவே குறிப்பிட்டளவான மாணவர்களே அரச பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகின்றனர்.

2019ம் ஆண்டில் 181,000 மாணவர்கள் A/L பரீட்சைக்குத் தோற்றியிருந்த போதிலும், சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் மாத்திரமே பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்டனர். எஞ்சிய 141,000 மாணவர்களுக்கு உயர்கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பு வரையறுக்கப்பட்டுள்ளது.

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும் எண்ணிக்கை 10 ஆயிரத்தினால் அதிகரிக்கப்பட்டிருப்பதாக நீங்கள் கூறியிருப்பினும், அது நம்பக்கூடியதாக இல்லை. ஏனெனில் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையில் அதிகரித்திருந்தால், அதற்காக ஒதுக்கப்படும் நிதி உள்ளிட்ட வளங்களின் அளவிலும் அதிகரிப்பு ஏற்பட வேண்டும்.

ஆனால் 2020ம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்டதை விடவும் 4000 கோடி ரூபா குறைவாகவே 2021ம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. எனவே 2019ம் ஆண்டு A/L பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் Z Scoreயின் அடிப்படையில் பாதிப்பை எதிர் கொண்டுள்ள மாணவர்களுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இதுபற்றி கலந்துரையாடுவதற்கு எமக்கு சந்தர்ப்பமளிக்க வேண்டும்” என  அதில் கோரப்பட்டுள்ளது.

“முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பது, தவறு என்ற நிலைப்பாட்டில் ஆரம்பம் முதல் இருக்கிறேன்” – நீதியமைச்சர் அலிசப்ரி !

கொரோனாத்தொற்றினால் இறந்து போகும் முஸ்லிம்களின் சடலத்தை அடக்கம் செய்யும் விவகாரம் தொடர்பில் முஸ்லீம்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றது. குறிப்பாக கடந்த பாராளுமன்ற அமர்வுகளில் கூட எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாஸ, ரிசாட்பதியுதீன் போன்றோர் இது தொடர்பான கருத்துக்களை பதிவு செய்து முஸ்லீம்களின் உடல்கள் அவர்களின் மதமரபுகளின்படி அடக்கம் செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர் அலி சப்ரி,

“கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதை தடுப்பதற்கான, அத்தனை முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறோம். முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பது, தவறு என்ற நிலைப்பாட்டில் ஆரம்பம் முதல் இருக்கிறேன்.

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதை தவிர்ப்பது பற்றி ஜனாதிபதியுடன் தனிப்பட்ட முறையில் உரையாடியுள்ளேன்.ஜனாஸாக்களை எரிப்பதை தடுக்குமாறு கோரி நீதிமன்றில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. நாங்களும் மறுபக்கம் முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

சுகாதாரத் தரப்பினரின் முழு சம்மதத்துடன், கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்களை புதைப்பதால், பாதிப்பில்லை என்ற பொது நிலைப்பாட்டுக்கு முதலில் வந்து, அதன் பின்னர் கொரோனா தகனம் செய்ய மாத்திரம் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.

ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான, சட்ட ரீதியான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து இடம்பெறுகிறது.

எதிரணி இதனை அரசியல் ரீதியில் கையாளமுயல்கிறது. சமூக வலைத்தளங்களில் எம்மீதும் குற்றஞ் சுமத்துகின்றனர். எம்மால் முடிந்த சகல முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறோம்” என்றார்

“இலங்கை மீதான இந்தியாவின் தலையீடு இனத்தின் பாதுகாப்புக்கு அவசியமானது” – மாவை சேனாதிராஜா

தமிழினத்தின் விடுதலைக்கு தமிழ்த் தேசத்தின் பாதுகாப்புக்கு இந்தியாவின் தலையீடு அவசியம் என்ற அடிப்படையில் அவர்கள் அக்கறையைச் செலுத்தியுள்ளதை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (07.11.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

“கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அரசியல், இராஜதந்திர நகர்வுகள் மிகத் தீவிரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. சீனாவின் தலையீடுகள், அதற்கு எதிரான நாடுகளின் தலையீடுகள் என பல நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக இந்தியாவின் உரித்து, இந்தப் பிரதேசத்தின் பாதுகாப்பில் தங்கியுள்ளது என்பதில் அவர்கள் அக்கறையாகவுள்ளனர்.

இலங்கையின் பாதுகாப்பு, குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்களின் பாதுகாப்பு, இந்தியாவின் பாதுகாப்புக்கு மிக முக்கியமானதாக இருக்கும். இருக்கின்றது என்றெல்லாம் அவர்கள் கருதுவதால், கூடிய அக்கறை செலுத்துவதாக செய்திகள் மூலம் அறியமுடிகிறது.

ஆனபடியால், இந்தியாவின் தலையீடு இனத்தின் விடுதலைக்காகவும் தமிழ் மக்களுடைய, தமிழ்த் தேசத்தின் பாதுகாப்புக்காக, அவர்களுடைய அக்கறையைச் செலுத்தியுள்ளதை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம். ஏற்கனவே அவ்வாறு பல விடயங்களைப் பேசக்கூடியதாக இருந்திருக்கிறது. அப்படி மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில் இந்திய அரசுடன் பேச்சுக்களில் ஈடுபட விரும்புகின்றோம்.

அது இந்திய அரசாங்கத்தின் ஒரு தேவைப்பாடாகவும், எங்களுக்கு அதிக தேவைப்பாடாகவும், ஒரு நிகழ்ச்சி நிரலாகவும் இருக்கிறது. எனவே, அவ்வாறான பேச்சு இடம்பெற வேண்டும் என நாங்களும் விரும்புகின்றோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுக நகரில் சீனா ஒரு பில்லியன் நிதி முதலீடு !

கொழும்பு துறைமுக நகரில் மேலும் ஒரு பில்லியன் முதலீட்டை சீனா மேற்கொள்ளவுள்ளது. இந்த நிதி முதலீட்டைச்  ஹொங்கொங்கை தளமாகக் கொண்டு இயங்கும் ஐ.எப்.சி. எனப்படும் சர்வதேச நிதி மையம் (international financial centre) செய்யவுள்ளது.

தற்போது சர்வதேச நிதி மையத்தின் முதலீடுகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்காக காணப்படுகின்ற சட்டவாக்க வரைவுகளை இலங்கை அரசாங்கத்தின் தரப்பில் முன்னெடுக்கப்படுகின்றது. இதனையடுத்து இம்மாத இறுதிக்குள் அதற்கான பாராளுமன்ற அங்கீகாரம் பெறப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு பாராளுமன்ற அங்கீகாரம் பெறப்பட்டவுடன் சர்வதேச நிதி மையம் தனது முதலீடுகளை 2021ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து முன்னெடுக்கவுள்ளது. இந்த முதலீடுகள் துறைமுக நகரத்தின் ஒட்டுமொத்த திட்டங்களினதும் முன்னோடித் திட்டத்திற்கானதாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சீனா இலங்கையின் கொரோனா வைரஸ் தொற்று முடக்கத்தால் சரிந்திருந்த இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக குறிப்பிட்டளவிலான நிதியை வழங்க முன்வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.