04

04

டொனால்ட் ட்ரம் வெற்றி பெற்றால் உலக அமைதிக்கு நல்லது! ஜோபைடன் பெற்றி பெற்றால் அமிரிக்கா மீண்டும் எழுச்சி கொள்ளும்!! அமெரிக்க ஜனநாயகத்தின் எதிர்காலம் உசலாடுகின்றது!!!

அமெரிக்க ஜனநாயகம் உசாலாடிக் கொண்டிருக்கின்றிது. தேர்தல் முடிவுகள் மிகவும் இறுக்கமான போட்டியயை காட்டிக் கொண்டிருக்கையில் அமெரிக்க ஜனநாயகம் உசாலாடிக் கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரேயே அமெரிக்க ஜனாதிபதி தனது வெற்றியயை அறிவித்துக் கொண்டிருக்கின்றார். தேர்தல்களில் குளறுபடிகள் நடந்ததாகவும் வாக்கு எண்ணிக்கையயை நிறுத்தவும் கோரியுள்ளார். போட்டியாளர்கள் இருவரது தரப்பிலும் ஆயிரக்கணக்கான சட்டத்தரணிகள் கடுமையான போட்டி நடைபெறும் மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றதாகக் கூறி சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகின்றனர். மேலும் சில கடுமையான போட்டி நிலவுகின்ற மாநிலங்களில் தபால் மூலமான வாக்குகள் தேர்தல் முடிவின் பின்னரே எண்ணப்படுவது வழமை. அதனாலும் சில மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை தாமதமாகலாம். அதனால் தேர்தல் முடிவடைந்த சில நாட்களிற்கு பின் வரையும் இறுதியான் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

வழமையாக வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளிலேயே தேர்தல் மோசடிகள் பற்றியும் தேர்தலைத் தொடர்ந்து ஏற்படும் கலவரங்கள் பற்றியும் அச்சமும் அசம்பாவிதங்களையும் கேள்விப்பட்டு இருந்தோம். ஆனால் இம்முறை உலக ஜனநாயகத்தின் காவலனாக சுதந்திர உலகின் பொலீஸ்காரனாக தன்னைக் காட்டி வந்த அமெரிக்காவில் ஜனநாயகம் ஊசலாடிக்கொண்டிருக்கின்றது. அமெரிக்காவின் சில மாநிலங்களில் சுறாவளி போன்ற அழிவுகளில் இருந்து தங்களைக் காப்பதற்காக வர்த்தக நிறுவனங்கள் பலகைகளைக்கொண்டு தங்கள் வினாபார நிறுவனங்களைச் சுற்றி மேலதிக பாதுகாப்புக்காக பொருத்தி வருகின்றனர். துப்பாக்கிகள் விற்கின்ற வியாபார நிலையங்களில் துப்பாக்கிகளும் அதற்கான சன்னங்களும் விற்றுத் தீர்ந்துள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக சங்கிலித் தொடர் வியாபார நிறுவனமான Walmart துப்பாக்கிகள் அதற்கான சன்னங்களின் விற்பனையயை சில நாட்களுக்கு முன்னரேயே நிறுத்திவிட்டது. தேர்தல் முடிவுகள் வருகின்ற போது கலவரம் ஏற்படும் என்பது பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி ட்ரம் தனக்கு ஆதரவான வெள்ளையின தீவிர போக்காளர்களைத் தயார் நிலையில் இருக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார். ட்ரம் – பைடன் முதல் சுற்று தொலைக்காட்சி விவாதத்தின் போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார். தன்னிடம் இருந்து வெற்றி பறிக்கப்படும் என்ற போலியான ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியதன் மூலம் தான் தோற்றுப் போனால் மோசடியே காரணம் என்பதை அவர் தனது தீவிர ஆதரவாளர்களுக்கு தெரிவித்ததுடன் அதற்கு எதிராக சண்டையிடவும் ஆயத்தமாக இருக்குமாறு கூறியுள்ளார். அதன்படி டொனால்ட் ட்ரம் தோல்வியடைந்தால் அமெரிக்காவில் பாரிய குழப்பம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக அமையலாம்.

அமெரிக்க உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த 1865க்களின் பின் இன்று அமெரிக்க மக்கள் மிகவும் பிளவுபட்டுள்ளனர். தீவிர வெள்ளைத்துவ வாதம் மிகவும் தளைத்து ஓங்கியுள்ளது. அதன் பிரதிபலிப்பாக சட்டம் ஒழுங்கு என்பதை டொனால்ட் ட்ரம் முன்கொண்டு செல்கின்றார். அதே சமயம் அங்குள்ள சிறுபான்மைச் சமூகங்கள்: கறுப்பினத்தவர், ஸ்பானியர், மாநிறத்தோர் அங்குள்ள சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய நிறுவனங்களால் வஞ்சிக்கப்படுகின்றனர். அடிப்படையில் சட்டம் ஒழுங்கு என்பது மிக முக்கிய அம்சமாக இருந்த போதும், அது வெவ்வேறு சமூகங்களால் முற்றிலும் முரண்பட்ட நிலையிலேயே நோக்கப்படுகின்றது.

முரண்பாடு என்பது சட்டம் ஒழுங்கு மற்றும் கொள்கைகளில் மட்டடுமல்ல மக்களின் அடிப்படை வாழ்க்கைத் தரத்திலும் இந்த மிகமோசமான முரண்பாடு வெளிப்படுகின்றது. அமெரிக்க செல்வத்தில் 40 வீதத்தை ஒரு வீதமான செல்வந்தக் குடும்பங்கள் வைத்துள்ளன. கால்பங்கு செல்வத்தை 90 வீதமான கீழ்நிலையில் உள்ள குடும்பங்கள் பங்கு போடுகின்றன. அதன்படி பார்த்தால் இக்குடும்பங்களிடம் பத்தாயிரம் டொலர்களுக்குக் குறைவான செல்வமே உள்ளது. இக்குடும்பங்கள் வாழ்வதற்கு சொந்தமான கூரை கூட அற்றவர்களாகவே, பெரும்பாலும் வாடகைக் கூரையின் கீழ் வாழ்கின்றனர். ‘அமெரிக்க கனவு’ என்பது மிகப் போலியான ஒரு மாயயை. ஒவ்வொரு ஆண்டும் கடந்து செல்கின்ற போது ஒரு வீதமான செல்வந்தக் குடும்பங்களின் சொத்துக்கள் தொடர்ந்தும் அதகரித்துச் செல்கின்ற போது; 90 வீதமான கீழ்நிலைக் குடும்பங்களின் சொத்துக்கள் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகின்றது.

ஆனால் அமெரிக்காவின் வீடுகளில் கட்டுப்பட்டுக் கிடக்கின்ற $113 ரில்லியன் சொத்துக்களை அமெரிக்காவில் உள்ள 329 மில்லியன் மக்களுக்கு சரியாகப் பங்கிட்டால் ஒவ்வொருவரும் $ 343,000 சொத்துக்களை வைத்திருப்பார்கள். மூவரைக் கொண்ட குடும்பத்தில் அண்ணளவாக ஒரு மில்லியன் டொலர் சொத்துக்கள் இருக்கும். ஆனால் கடைக்கோடியில் வாழும் 90வீதமான குடும்பங்களிடம் உடு துணிகள், படுக்கைத் தளபாடங்கள் ஒரு சில மின் உபகரணங்களைத் தவிர, அவர்களிடம் வாழ்வதற்கு தேவையான அடிப்படை வசதிகளே மட்டுமட்டாகவே இருந்துள்ளது.

உலக செல்வந்தர்களை மிக அதிகமாகக் கொண்டுள்ள அமெரிக்காவில் உள்ள 788 பில்லியனெயர்கள் $ 3,000,000,000,000,000 ($ 3 ரில்லியன்) செல்வத்தை தங்களிடம் குவித்து வைத்துள்ளனர். இவ்வாறான ஒரு செல்வந்தாரன டொனாலட் ட்ரம் மக்கள் பற்றிய எவ்வித கரிசனையும் உடைய மனிதரல்ல. ஒவ்வொருவரும் எப்படியும் செல்வத்தை சேர்த்துக் குவிப்பது, அவரவர் திறமை என்று கருதுகின்ற ஒரு கொழுத்த செல்வந்தன் தான் டொனால்ட் ட்ரம். அதனால் வரி செலுத்தாமல் ஏமாற்றுவது, நிறுவனங்களை திவாலடையச் செய்து கொள்ளை இலபமீட்டுவது எல்லாமே ஒரு வியாபாரத்தின் திறமை எனக் கருதுபவர். அதனை நடைமுறையிலும் செய்து காட்டியுள்ளார். டொனால்ட் ட்ரம் தனது சொத்துக்கள் மற்றும் வரி போன்ற விடயங்களை வெளியிடவில்லை. கொழுத்த செல்வந்தரான டொனால்ட் ட்ரம் செலுத்திய வருமானவரி; ஒரு சாதாரண ஆசிரியர் செலுத்திய வருமான வரியிலும் குறைவானதாக உள்ளது. மேலும் இவர் 13 தடவைகள் தன்னை திவாலடைய வைத்துள்ளது மட்டுமல்ல, அதனை தனது திறமையாகவும் பறை சாற்றுகின்றார். ஆனால் அவருக்குத் தான் வெள்ளையின அடித்தட்டு மக்களில் பலரும் ஆதரவளிக்கின்றனர். அமெரிக்காவில் உள்ள 8 செல்வந்தர்கள் உலகின் எழைகளான 50 வீதத்தினரின் ஒட்டுமொத்தச் சொத்துக்ககுக்குச் சமனானன சொத்துக்களை வைத்துள்ளனர். இந்தப் பின்னணியில் தான் அமெரிக்க தேர்தல் நடைபெறுகின்றது.

டொனால்ட் ட்ரம்மின் நான்கு ஆண்டுகள் என்பது எப்போதும் மோசமானதாக மட்டும் பார்க்கப்பட வேண்டியதில்லை. உலக சமாதானத்தின் அடிப்படையில் நோக்கினால் அமெரிக்காலில் வந்த அண்மைய ஜனாதிபதிகளில் டொனால்ட் ட்ரம் மட்டுமே யுத்தத்தை உருவாக்கவில்லை என்பது மட்டுமல்ல ஏற்கனவே யுத்த பிராந்தியங்களுக்கு அனுப்பட்ட இராணுவத்தையும் திருப்பி அழைத்து வருகின்றார். நாடுகளின் பாதுகாப்பை அந்தந்த நாடுகளே பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் நேட்டோவிற்கான நிதிப்பங்களிப்பையும் குறைத்துள்ளார். இந்த நடவடிக்கைகள் ஒரு வகையில் உலக பொலிஸ்காரனாக அமெரிக்கா தன்னை கட்டமைத்ததை கட்டுடைக்கின்ற நடிவடிக்கையின் முதற்படியாக உள்ளது.

சர்வதேச இராணுவத் தலையீடுகளைக் குறைப்பது, ரஸ்யாவுடனான நல்லுறவு வடகோரியாவுடனா உறவு என்பன ஓரளவு உலகில் இராணுவப் பதட்டத்தை ஒப்பீட்டளவில் குறைத்தே வருகின்றது. இருந்தாலும் சவுதிய அரேபியா யேர்மன் நாட்டில் யுத்தத்தைத் தொடுத்திருந்த நிலையில் அந்நாட்டுடன் பல பில்லியன் டொலர் பெறுமதியான இராணுவத் தளபாடங்களை வெறும் வியாபார ரீதியில் மேற்கொண்டிருப்பதும் சுட்டிக்காட்டத் தக்கது. டொனால்ட் ட்ரம் எவ்வித உள்ளுணவும் அற்ற லாபமீட்டுவதை மட்டுமே நோக்காகக் கொண்ட வியாபாரி; என்ற வகையில் வேறுநாடுகளின் விவகாரங்களில் இராணுவ ரீதியாகத் தலையிட்டு பொருளாதாரச் செலவை ஏற்படுத்த விரும்பவில்லை; என்பது அவரிடம் உள்ள முக்கிய வரவேற்கத் தக்க குணாதிசயம். சீனாவோடு உள்ள வர்த்தகப் போட்டியும் கூட, ஒரு வகையில் ஒரு ஒப்பந்தத்திற்கு செல்லும் போக்கே அல்லாமல் யுத்தத்தை நோக்கி நகரும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. டொனால்ட் ட்ரம் இற்கு அமெரிக்காவை உலக பொலிஸ்காரனாக உருவாக்கும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் தன்னுடைய நேட்டோ நட்பு நாடுகளுடனேயே பகைத்துக் கொண்டு ரஸ்யாவோடு உறவாடவும் தயாராக இருப்பதால், டொனால்ட் ட்ரம்மின் காலம் உலகில் ஒப்பீட்டளவில் அமைதியேற்படும் எணக் கொள்ளலாம்.

மேலும் டொனால்ட் ட்ரம் ஒரு இறுக்கமான அரசியல் தலைவரல்ல என்பதும் அவருக்கு ஒரு இறுக்கமான அரசியல் கொள்கை இல்லாமல் இருப்பதும் அமெரிக்காவுக்கு எதிரான வல்லரசுகளான சீனா, ரஸ்யா போன்ற நாடுகளுக்கு ஒரு வரப்பிரசாதம். அதானால் டொனாலட் ட்ரம் மீண்டும் ஜனாதிபதியாவதை இந்நாடுகள் விரும்புகின்றன. ஆனால் நேட்டோ நேச நாடுகளுக்கு டொனால்ட் ட்ரம் வெற்றி பெறுவதில் எவ்வித விருப்பும் கிடையாது. சர்வதேசத்தில் அமெரிக்காவின் தலைமைக்குக் கீழ் குட்டிச் சண்டியர்களாக திரிந்தவர்களை டொனால்ட் ட்ரம் ஓரம்கட்டிவிட்டு ரஸ்யா, சீனா, வடகொரியா என புதிய உறவுகளை ட்ரம் தலைமையிலான அமெரிக்கா ஏற்படுத்தி வருவது அவர்களுக்கு அதிருப்தியயை ஏற்படுத்தி உள்ளது. மத்திய கிழக்கில் கூட அரபு நாடுகளுக்கு இஸ்ரேலுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட உறவு ட்ரம்மின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு மைல்கல். இவ்வெளியுறவுக் கொள்கை பலஸ்தீனியர்களுக்கு கொடுக்கப்பட்ட மிகப் பலமான அடி. டொனாலட் ட்ரம் எவ்வித உள்ளுணவும் அற்ற லாபத்தை மட்டுமே நோக்காக் கொண்டவர் என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த உதாரணம். பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியர்களிடம் தங்கள் நிலத்தை மட்டுமல்ல எதிர்காலத்தையும் இழந்து வருகின்றனர். இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்குமான உறவானது, மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ஒரு நகர்வே. ஈரானை சர்வதேசத்தில் இருந்து ஓரம்கட்டவே அமெரிக்கா முயற்சிக்கின்றது. ஆனால் இந்த முரண்பாடு ஒரு யுத்தமாக அண்மைக்காலத்தில் வெடிப்பதற்கான வாய்ப்புகள் அவ்வளவிற்கு இல்லை.

டொனால்ட் ட்ரமின் தலைமை உலக சமாதானத்திற்கு சாதகமாக இருப்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் அமெரிக்காவிற்கு அது சாதகமாக இருக்க வாய்ப்பில்லை. அமெரிக்க மக்கள் டொனால்ட் ட்ரம் அமெரிக்காவை தலைசிறந்தது ஆக்குவார் என்பதற்காக வாக்களிக்கின்றனர். ஆனால் டொனால்ட் ட்ரம்மின் தலைமை அமெரிக்காவை பெரும்பாலும் தலைகுனியச் செய்தே வருகின்றது. டொனாலட் ட்ரம்மின்: கதையாடல்கள், வாய்கூசாமல் சொல்கின்ற பொய்கள், கொரொனாவை கட்டுப்படுத்த முடியாமை, சுற்றுச்சூழல் பற்றிய கொள்கைகள், விஞ்ஞாபூர்வமான உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பது, செல்வந்தர்களுக்கு வரிச் சலுகைகள், சிறுபான்மையினங்களுக்கு எதிரான துவேசத்தை வளர்த்துவிடுவது, மக்களைக் கூறுபோடுவது என்பன அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு ஏற்புடையதாக இல்லை. இது அமெரிக்காவின் எதிர்காலத்தை பெரும்பாலும் பாதிக்கும்.

மேலும் நாட்டின் குடிவரவைக் கட்டுப்படுத்தவது என்ற பெயரில் சட்ட விரோதக் குடியேற்றக்கரர்களுக்கு எதிராக எடுக்கின்ற நடவடிக்கைகள் மனிதாபிமானத்துக்கு முரணானவை. இனக்குரோதமாகவும் இந்நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் அமெரிக்கா இதுவரை தலைமை தாங்கிய சுயாதீன கட்டுப்பாடற்ற பொருளாதாரக் கொள்கைகளுக்கு மாறாக, தற்பாதுகாப்பு பொருளாதாரக் கொள்கையயை நோக்கி நகர்த்தப்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் மீண்டும் அமெரிக்காவிற்குள் வருவதை இப்பொருளாதாரக் கொள்கை ஊக்குவிக்கின்றது. இதுவும் அமெரிக்காவை சர்வதேசத்தில் இருந்து தனிமைப்படுத்தவே வழிவகுக்கும். உலகமயமாதல் தற்போது வளர்ச்சியடைந்த நாடுகளில் வேலையின்மையயை ஏற்படுத்துவதால், உலகமயமாதலுக்கு எதிர்நிலையயை டொனால்ட் ட்ரம் எடுத்து வருகின்றார். இது அமெரிக்காவில் தொழில் வாய்ப்பை உடனடியாக உருவாக்க உதவுகின்றது. அத்துடன் சர்வதேச நாடுகளில் அமெரிக்காவின் சுரண்டலை இது தடுப்பதற்கும் உதவும். ஆனால் உடனடியாக பாதிக்கப்பட்ட நாடுகளில் வேலையின்மை ஒரு பிரச்சினையாகும். இந்நாடுகள் சுயசார்புப் பொருளாதாரக் கொள்கைகளை நோக்கி தள்ளப்படுவார்கள். ஒருவகையில் சர்வதேசத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை தளர்த்துவதாகவே டொனாலட் ட்ரம்மின் பொருளாதாரக் கொள்கைகள் அமைகிறது. இது இன்று தனது பொருளாதார ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் சீனாவிற்கு மிகுந்த வரப்பிரசாதமாக அமையும்.

ஆகையால் டொனால்ட் ட்ரமின் அமெரிக்கா உலக நாடுகளின் சமாதானத்திற்கு சாதகமாகவும் அமெரிக்காவின் வீழ்ச்சிக்கு காரணமாகவும் அமையும். மாறாக டெமோகிரட் கட்சியின் ஜோ பைடனின் வெற்றி கட்சிபேத மற்று அமரிக்காவின் வல்லாதிக்கத்தை தொடர்ந்தும் நிலைநாட்டுவதாகவும் நேட்டோ நேச நாடுகளின் அணியயை வலுப்படுத்தி, உலக பொலிஸ்காரனா தன்னைக் கட்டமைப்பதுமாகவே அமையும். இது அமெரிக்காவில் எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலுமே அமெரிக்க அரச இயந்திரம் அவ்வாறு தான் செயற்படுத்தும். ஜோ பைடன் அவ்வாறான ஒரு அரசியல் கட்டமைப்பின் படைப்பே. டொனால்ட் ட்ரம் அவ்வாறான ஒரு அரசியல் கட்டமைப்பால் உருவாக்கப்படாததால், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றார். அதனால் ஜோபைடன் அமெரிக்காவின் எழுச்சியயை மீளக் கட்டமைப்பதற்கான முயற்சிகளில் இறங்குவார். அமெரிக்காவை ஒற்றுமைப்படுத்துவது, அங்குள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் சற்று குறைப்பதன் மூலம் பதட்டத்தை தணிப்பது, இனங்களிடையே சுமூக உறவை ஏற்படுத்தி ‘நாங்கள் அமெரிக்கர்’ என்ற உணர்வை ஊட்டுவது, இதன் மூலம் சமூகப் பதட்டத்தை கட்டுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் இறங்குவார். மேலும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மனித உரிமைகள் போன்ற விடயங்களை முன்நிறுத்துவதன் மூலம், சர்வதேச சமூகத்தில் அமெரிக்காவின் தலை நிமிரச் செய்ய முயற்சிப்பார்.

இந்தப் பின்னயிலேயே எதிர்கால அமெரிக்க – சர்வதேச நிலைமைகள் அமையும்.

இலங்கை மக்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள வேண்டுகோள் !

நாட்டை மீண்டும் திறந்து வழமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமாயின், அனைவரும் சுகாதார நியமங்களை முறையான கடைப்பிக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப்பரவல் தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏன் ஏற்படவில்லை என எண்ண வேண்டும். அவர்கள் தொற்றாளர்களுடன் இருந்தாலும் அவர்களுக்கு தொற்று ஏற்படுவதில்லை அதற்கு காரணம் அவர்கள் முறையாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றுகின்றனர்.

அதனை அனைவரும் கடைப்பிடிக்கும் நிலையில் நாட்டை தடையின்றி கொண்டு செல்ல முடியும். அப்படியாயின் மக்கள் தொழிலுக்கு செல்லமுடியும் கடைகளை திறக்க முடியும் தொழிற்சாலைகளை செயற்படுத்த முடியும் நாட்டை மீண்டும் திறக்க முடியும்.

ஆகவே முக்கியமாக கைகளை சுத்தப்படுத்துதல் முககவசம் அணிதல் உள்ளிட்ட விடயங்களை பின்பற்ற வேண்டும்.

அதனோடு காய்ச்சல் ஏற்படுமாக இருந்தால் உடனே தனிமைப்படுத்தலில் இருப்பதோடு சுகாதார தரப்பினருக்கு அறிவித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தினால் மாத்திரமே மக்கள் வீடுகளில் இருக்கின்றனர் இல்லாவிட்டால் யாரும் கவனத்தில் கொள்வதில்லை. ஆகவே நாட்டை தொடர்ந்தும் கொண்டு செல்ல அனைவரும் உரிய சுகாதார நியமங்களை கடைபிடிக்க வேண்டும்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதென சர்வதேச நீதி தினத்திற்கு முன்னர் அறிவிக்க வேண்டும்” – கலாநிதி சுரேன் ராகவன் நீதி அமைச்சரிடம் கோரிக்கை !

“அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதென சர்வதேச நீதி தினத்திற்கு முன்னர் அறிவிக்க வேண்டும்” என கலாநிதி சுரேன் ராகவன்,  நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரியிடம்  கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (04.11.2020) ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்;

இலங்கையின் சிறைகளில் அரசியல் கைதிகளாக தற்போது உள்ளோர் எத்தனை பேரென்றும் அவர்கள் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பான பூரண விளக்கத்தினை எதிர்வரும் சர்வதேச நீதி தினத்திற்கு (ஜூலை. 17.2021) முன்னதாக தெரிவிக்கும்படியும் தேவைப்பட்டால் நாடாளுமன்ற விவாதமொன்றையும் இதுதொடர்பில் ஒழுங்கு செய்யுமாறும் கலாநிதி சுரேன் ராகவன் நீதி அமைச்சரிடம் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

யுத்த காலத்தில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளில் பலர் படிப்படியாக முன்னைய ஆட்சிக் காலங்களில் விடுவிக்கப்பட்டிருந்தாலும் தற்போது எஞ்சியிருப்பவர்களையும் சட்டத்தின் முன்னிறுத்தியோ அல்லது பொது மன்னிப்பு அளித்தோ சமூகத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுப்பதற்கு தேவையான கோரிக்கையினை முன்வைக்க வேண்டிய பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினரான தனக்கு இருப்பதாகவும் அதனாலேயே இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் நல்லிணக்கமொன்றை ஏற்படுத்தும் நோக்கில் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய குழுவொன்றினை நியமித்து அக்குழுவினுடைய ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றுக்கொண்டு இப்பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் நீதி அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளார்.

NEWS RELEASE 04.11

அமெரிக்கா தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் வெற்றி !

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிக வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். டிரம்ப் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை சாரா மெக் பிரைட் (வயது 31) வெற்றி பெற்று உள்ளார். ஜோ பிடனின் ஜனநாயக கட்சியை சேர்ந்தவரான இவர் டெலாவேரில் வெற்றி பெற்றுள்ளார். வழக்கறிஞரான திருநங்கை சாரா மெக் பிரைட் ஒரின சேர்க்கையாளர் விவகாரத்தில் ஆதரவாக செயலாற்றியுள்ளார்.
இந்த தேர்தல் வெற்றி குறித்து தெரிவித்துள்ள சாரா மெக் பிரைட், “நாம் செய்து முடித்து விட்டோம். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம். வாக்களித்த அனைவருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயக கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான டாக்டர்.அமி பெரா, பிரமிளா ஜெயபால், ரோ கண்ணா மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

“அரசியல் தேவைகளுக்காக மட்டும் முஸ்லிம் அரசியல்வாதிகளை வளைத்துப்போடும் கோட்டாபய அரசாங்கம் , முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கைவிடவில்லை” – பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் காட்டம் !

“அரசியல் தேவைகளுக்காக மட்டும் முஸ்லிம் அரசியல்வாதிகளை வளைத்துப்போடும் கோட்டாபய அரசாங்கம் , முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கைவிடவில்லை” – என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று (04.11.2020) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

” சிறுபான்மையின மக்களை அடக்கி ஒடுக்கி, அவர்கள் தொடர்பில் பெரும்பான்மையின மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைத்து தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், தொடர்ந்தும் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான போக்கை கடைப்பிடித்து வருகின்றது.

கொரோனா வைரஸ் தாக்கம் என்ற நெருக்கடியான சூழ்நிலையிலும்கூட இனவாதத்தையும், குறுகிய அரசியல் நோக்கங்களையும் ஆட்சியாளர்கள் கைவிடுவதாக இல்லை.உலகில் ஏனைய நாடுகளில் அனைவரும் ஓர் சமூகமாக இணைந்து இந்த சவாலை எதிர்கொள்கின்றனர். ஆனால் இங்கு சமூகங்கள் பிரிக்கப்படுகின்றன, பழிவாங்கப்படுகின்றன.

முதலாம் அலையின்போது முஸ்லிம் மக்களே வைரஸை பரப்புகின்றனர் என்ற விம்பம் உருவாக்கப்பட்டது, அதுமட்டுமல்ல கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்குகூட அனுமதி மறுக்கப்பட்டது. பலவந்தமாக சடலங்கள் எரிக்கப்பட்டன. திடீரென உயிரிழந்தவர்களின் சடலங்கள்கூட கொரோனா சந்தேகத்தில் எரிக்கப்பட்டன. இது முஸ்லிம் மக்களின் மத விவகாரங்களுக்கு முரணானச் செயலாகும்.

கொரோனா தொற்றாளர் ஒருவர் உயிரிழந்தால் அவரின் சடலத்தை அடக்கம் செய்யலாம் இல்லாவிட்டால் எரிக்கலாம் என இரண்டு நடைமுறைகளையும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. விஞ்ஞானப்பூர்வமான ஆய்வுகளின் பின்னரே இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. ஆனால் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையைக்கூட கருத்திற்கொள்ளாமல் முஸ்லிம் மக்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்தும் சடலங்களை இந்த அரசாங்கம் எரித்துவருகின்றது.

தேர்தல் காலத்தில் ராஜபக்சக்களாலும் அவர்களின் சகாக்களாலும் கொடூரமானவர்கள் என சித்தரிக்கப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளிடம், 20 ஐ நிறைவேற்றுவதற்கு உதவிபெற்றுள்ளனர். அதாவது அரசியலுக்காக தாங்கள் எதையும் செய்வோம் என்ற செய்தி இதன்மூலம் வழங்கப்பட்டுள்ளது.

மறுபுறத்தில் சமூகத்தை வதைக்கும் இந்த அரசாங்கத்துக்கு முஸ்லிமபாராளுமன்ற உறுப்பினர்கள் நேசக்கரம் நீட்டியமை வேதனையளிக்கின்றது.  குறைந்தபட்சம் கொரோனாவால் ஒருவர் மரணித்தால்கூட அவரின் சடலத்தை அடக்கம் செய்வதற்கான அனுமதியை பெற்றுக்கொடுத்திருக்கலாம். அதனை செய்யாமல் ஆதரவு வழங்கிவிட்டு தொடர்ந்தும் கையேந்தும் நிலைமை காணப்படுகின்றது. அதேவேளை, முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கை, பண்பாடுகளுக்கு மதிப்பளித்து, உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகைளையும் கருத்திற்கொண்டு சடலங்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியும் வழங்கப்படவேண்டும்.” – என்றார்.

“நாங்கள் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறோம்.எதிர்க்கட்சியினர் வெற்றியை திருடப் பார்க்கிறார்கள்” – ஜனாதிபதி டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிக வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். டிரம்ப் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார்.  இந்நிலையில் தேர்தல் நிலவரம் தொடர்பாக ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

நாம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளோம். டெக்சாஸ், ஜார்ஜியா மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளோம். டெக்சாஸில் 7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று இருக்கிறோம். பென்சில்வேனியாவில் மிகப்பெரிய வெற்றி பெற உள்ளோம்.ஒப்பிட்டு பார்க்க முடியாத வெற்றியை நாம் பெற்று இருக்கிறோம். மீண்டும் ஆட்சி மீண்டும் ஆட்சியை அமைக்கவும், கொண்டாடவும் நாங்கள் தயாராகி வருகிறோம்.

தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு- வாக்கு எண்ணிக்கையை நிறுத்த டிரம்ப் திட்டம்

இது புதிய சாதனை. என் மனைவிக்கும், குடும்பத்திற்கும் நன்றி. நாங்கள் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறோம்.

இந்த தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. எதிர்க்கட்சியினர் வெற்றியை திருடப் பார்க்கிறார்கள். தேர்தலுக்குப் பின்னரும் வாக்களிக்க முயற்சி நடக்கிறது. தேர்தலுக்குப் பின்னரும் வாக்களிக்க முயற்சி நடக்கிறது. இதனை தடுக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவதற்காக உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பென்சில்வேனியா உள்ளிட்ட 3 முக்கியமான மாநிலங்களில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். இழுபறியில் உள்ள இந்த மாநிலங்களில் முடிவுகள் வெளியாகவில்லை.

 

“பேத்தியை, மகன் என அடையாளம் காட்டும் ஜோபைடன் இன்னும் சில மணி நேரத்தில் உங்கள் அதிபராகலாம்”- பிரித்தானியாவின் டெய்லி மெயில் பத்திரிகை கிண்டல் !

அமெரிக்க ஜனாபதிபதி தேர்தலில் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அடுத்த அமெரிக்க ஜனாபதிபதியாகும் வாய்ப்புள்ள ஜோ பைடன் பேசும்போது தடுமாறுவதுண்டு. அது முதுமை காரணமாக இருக்கலாம். என்றாலும், சில நேரங்களில் அவர் செய்யும் சொதப்பல்களை அழகாக வீடியோவாக எடுத்து ஊடகங்கள் வெளியிட்டு விடுவதுண்டு.
அப்படி நேற்று ஜோ பைடன் செய்த ஒரு சொதப்பல் வீடியோ வெளியாகியுள்ளது. “இதோ, இவர்தான் எனது மகன் பியூ பைடன் என்று கூறி, ஒரு பெண்ணை தன் ஆதரவாளர்களுக்கு அறிமுகம் செய்தார் ஜோ பைடன். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஜோவின் மகன் பியூ பைடன் 2015ஆம் ஆண்டே இறந்துபோய்விட்டார். ஒரு வேளை, இவர்தான் பியூ பைடனின் மகள் என்று சொல்வதற்கு பதிலாக, பியூ பைடன் என்று மாற்றி சொல்லிவிட்டாரா? என்று பார்த்தால், அந்த பெண் பியூ பைடன் மகளும் இல்லை.
பின்னர், இல்லை இது என் பேத்தி நடாலி என்றார், ஆனால் அது நடாலியும் இல்லை, அது ஜோபைடனின் இன்னொரு மகனான ஹண்டரின் மகள் பின்னேகன்(20). கடைசியாக, ஒரு வழியாக, பொறுங்கள், தப்பான ஆளை காட்டிவிட்டேன், இதுதான் நடாலி, என் மகன் பியூ பைடனின் மகள் என்றார் ஜோபைடன். இதேபோல், தேர்தல் பிரச்சாரத்தின்போதும் பலமுறை உளறினார் ஜோ.
பேத்தியை, இவர்தான் என்னுடைய மகன் என தவறாக அடையாளம் காட்டும் இவர், இன்னும் சில மணி நேரத்தில் உங்கள் அதிபராகலாம் என கிண்டல் செய்துள்ளது பிரித்தானியாவின் டெய்லி மெயில் பத்திரிகை.

“ஒவ்வோர் ஆண்டும் சுமார் 700 மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்கின்றமை மோசமான வளர்ச்சியாகும்” – ஜீ.எல்.பீரிஸ்

“ஒவ்வோர் ஆண்டும் சுமார் 700 மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்கின்றமை மோசமான வளர்ச்சியாகும்” என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மருத்துவ பீடங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்கவின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர்,

மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதேவேளை மருத்துவக் கல்வியின் தரத்தை உறுதிப்படுத்தவும் நாடு முழுவதுமுள்ள மருத்துவமனைகளுக்கு போதிய மருத்துவர்களை உருவாக்க ஒரு பொறிமுறையை விருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

இவ்வாண்டு நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர் எண்ணிக்கை 10,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்படும் மாணவர் எண்ணிக்கை 371ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 700 மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்கின்றனர். இது ஆசியாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மோசமான வளர்ச்சியாகும் என்றார்.

கொரோனா தடுப்பூசியை அமீரக துணை அதிபர் உடலில் செலுத்தி பரிசோதனை !

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டில் கடந்த ஜூலை மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலில் அபுதாபி மற்றும் அல் அய்ன் பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து அளித்து சோதனை செய்யும் திட்டம் முதலில் தொடங்கியது. அமீரகத்தில் உள்ள தனியார் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆதரவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பூசி பரிசோதனை திட்டம் தொடங்கப்பட்டு 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு உடலில் செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அமீரகத்தில் பரிசோதனை செய்யப்படும் கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்கனவே சீனாவின் வுகான் நகரத்தில் உள்ள சைனா நேசனல் பயோடெக் குழுமத்தின் சார்பில் வெற்றிகரமாக 2 கட்டமாக  பரிசோதனை செய்யப்பட்டது.

அடுத்தபடியாக 3-வது கட்ட பரிசோதனை அமீரகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், அமீரக மந்திரிகள் உள்பட பலருக்கு தடுப்பூசி உடலில் செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் 42 நாட்களில் 17 முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

சோதனை முயற்சியில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களின் ரத்த மாதிரி முடிவுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று துபாயில் உள்ள சுகாதார மையத்திற்கு வருகை புரிந்த அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமிற்கு கொரோனா தடுப்பூசி மருந்து உடலில் செலுத்தப்பட்டது. முன்னதாக அவர் மருத்துவ நிபுணர்களிடம் அந்த மருந்தினை குறித்து கேட்டறிந்தார்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட அவர் கூறும்போது, “அனைவரும் சுகாதார பாதுகாப்பு, சிறந்த உடல் நலத்தை பெற வேண்டும் என விரும்புகிறேன். அமீரகத்தில் தடுப்பூசியை கிடைப்பதற்கு இடைவிடாமல் உழைத்துக்கொண்டு இருக்கும் அனைவருக்கும் பாராட்டுகள். அவர்களது அர்ப்பணிப்புடன் கூடிய பணி நம்மை பெருமையடைய செய்கிறது. அமீரகத்தில் எப்போதும் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.

இந்த கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றி பெற்றால் அமீரகத்தில் பெரிய வர்த்தக ரீதியிலான கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கப்படும் என அமீரக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரியா தலைநகர் வியன்னா தேவாலய பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு !

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் தேவாலயம் அருகே 6 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது.

வியன்னாவின் தேவாலயப் பகுதியில் 6 இடங்களில் கண்மூடித்தனமாக மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் உட்பட 04 பேர் பலியாகினர். பொதுமக்களில் பலர் படுகாயமடைந்தனர்.

தற்போது இந்த தாக்குதலுக்கு உலகின் மிக கொடூரமான பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது. மேலும் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி அபுதாங் அல்பேனி எனவும் அறிவிக்கப்பட்டு அவரது புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தில் பயங்கரவாதி அல்பேனி, தானியங்கி துப்பாக்கி, கூரிய ஆயுதம், பிஸ்டல் ஆகியவற்றை கையில் வைத்திருக்கிறார்.