28

28

மக்களில் 3-ல் ஒருவரை கொல்லும் கொடிய தன்மை கொண்ட புதிய வகை கொரோனா – அதிர்ச்சியில் வைத்திய நிபுணர்கள் !

கொரோனா வைரஸ் தொற்று டெல்டா, பீட்டா, காமா என உருமாற்றம் அடைந்தது. அண்மையில் தான் டெல்டா அலை ஒருவழியாக ஓய்ந்த நிலையில், ஒமிக்ரோன் என்ற வைரஸ் கடந்த நவம்பர் இறுதியில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் டெல்டாவைவிட மிக அதிக அளவில் பரவும் தன்மைகொண்டதாக உள்ளது. தற்போது உலகம் முழுவதும் இந்த வைரஸ் ஆக்கிரமித்துள்ளது.
வேகமாக பரவினாலும் உயிர்ச்சேதம் அதிக அளவில் இல்லை என்பதால் உலக நாடுகள் பெருமூச்சுவிட்டன. இரண்டு டோஸ், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பாதுகாப்பானவர்கள் என கருதப்படுவதால், பொது முடக்கம் இல்லாமல் உலக நாடுகள் செல்கிறது.
உலக சுகாதார அமைப்பு, ஐரோப்பிய யூனியன் நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வர இருக்கிறது எனத் தெரிவித்தன.
இந்த நிலையில்தான் தென்ஆப்பிரிக்காவில் MERS-Cov என்ற நியோகோவ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாம். இந்த வைரஸ் 3-ல் ஒருவரை கொல்லும் கொடிய தன்மை கொண்டது என சீனாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அல்ல. திரிபு அல்லது வவ்வாலிடம் இருந்து பரவிய புது வகையான வைரஸாக இருக்கலாம் எனவும் கண்டறிந்துள்ளனர். இதனால் உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளன. சீனா ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தது முதற்கட்ட சோதனைதான். முழுமையாக ஆய்வுத் தகவல் வெளியான பின்னர்தான் அதன் பாதிப்பு குறித்து தெரியவரும்.
இருந்தாலும், தற்போதைய நோய் எதிர்ப்பு சக்தி இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pfizer நிறுவனத்தின் Paxlovid மாத்திரைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி !

Pfizer நிறுவனத்தின் Paxlovid மாத்திரைக்கு ஐரோப்பிய ஒன்றிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியுள்ளது.

இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் Paxlovid மாத்திரைகளை கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இத்தாலி, ஜேர்மனி பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே மாத்திரைகளை கொள்வனவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

கொரோனாவினால் மோசமாகப் பாதிக்கப்படும் அபாயமுள்ள முதியவர்களுக்கு சிகிச்சையளிக்க குறித்த மாத்திரை பயன்படுத்தப்படவுள்ளது.

நோய்த்தொற்று அபாயம் அதிகமுள்ள முதியவர்களுக்கு சிகிச்சையளிக்க Pfizer, Merck நிறுவனங்களின் மாத்திரைகளுக்கு அமெரிக்காவும், பிரித்தானியாவும் ஏற்கனவே அனுமதி வழங்கியள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.

எனக்கும் எனது குடும்பத்திற்கு என்ன நடந்தாலும் அதற்கு திலீபன் எம்பியே காரணம் !

எனக்கும் எனது குடும்பத்திற்கு என்ன நடந்தாலும் அதற்கு திலீபன் எம்பியே பொறுப்புக்கூறவேண்டும் என்று ஶ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலத்தின் அபிவிருத்திச் சங்க செயலாளர் வ. சற்குணவதி தெரிவித்துள்ளார்.

குறித்த பாடசாலைக்கு புதிய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நிர்வாகத்திறனற்றவர் என தெரிவித்து பெற்றோர் சமூகத்தால் இன்றையதினம் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த அபிவிருத்திச்ங்கத்தின் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“நாம் இன்றுபோராட்டம் மேற்கொள்ளவிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் அலுவலகத்தில் இருந்து கதைப்பதாக  தொலைபேசி அழைப்பொன்று வந்தது.அழைப்பை ஏற்ப்படுத்திய அவர் ஆர்பாட்டத்தை உடனடியாக நிறுத்துமாறும் இல்லாவிடில் இதற்கான பின்விளைவுகளை சிலநாட்களில் அனுபவிப்பீர்கள் என்று அச்சுறுத்தியிருந்தார்.

குறித்த அதிபர் விடயத்தில் அரசியல் வாதி ஒருவர் தலையிடுகின்றமை எமக்கு தெரியும். ஆனால்  நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தலையிடுகிறார் என்று எமக்கு தெரியாது. ஆனால் இன்று அவரது அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தமையால் எமக்கு சந்தேகம் ஏற்ப்பட்டுள்ளது. எனவே இனிமேல் எனக்கோ அல்லது எனது குடும்பத்திற்கோ எதும் நடந்தாலும் அவரே பொறுப்புக்கூறவேண்டும். என்றார்

முதலாம் தரத்திற்கு மாணவனை பாடசாலையில் சேர்க்க ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் !

பாணத்துறை பிரதேசத்தை சேர்ந்த பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் முதலாம் தரத்திற்கு மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த நபர் சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோரிடம் இருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்றபோது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

விஜயகலா மகேஸ்வரனுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு !

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் புத்திக சி.ராகல முன்னிலையில் இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேகநபரான விஜயகலா மகேஸ்வரன் நீதிமன்றில் ஆஜராகி இருந்தார்.

அவருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரிடமிருந்து இதுவரை அறிவுறுத்தல்கள் கிடைக்கவில்லை என விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து முறைப்பாட்டை ஜூன் 10-ம் திகதி அழைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கடந்த 2018ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக எழுந்த முறைப்பாட்டையடுத்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

“பயங்கரவாததடைச்சட்டம் இலங்கைக்கு தேவையில்லை.” – மனோகணேசன்

பயங்கரவாத தடை சட்டத்தின் திருத்தங்களை உள்ளடக்கிய வர்த்தமானி வெளியாக்கப்பட்டுள்ளது.

இதன்படி தற்போதிருக்கின்ற சட்டத்தின்படி தடுத்து வைத்தல் உத்தரவின் கீழ் உள்ள 18 மாத தடுப்புக் காவல் காலம், 12 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டவரைச் சட்டத்தரணிகள் அணுகுவதற்கும் வழி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேக நபர் தமது உறவினர்களுடன் தொடர்பு கொள்ளவும், அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு நீதவான் ஒருவர் விஜயம் செய்து, அவர் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்கான வாய்ப்புகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மேலும் சந்தேக நபர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காகச் சட்ட மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்கான திருத்தமும் செய்யப்பட்டுள்ளது.

இந்த திருத்தங்கள் சர்வதேச அழுத்தங்களைச் சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி என்றபோதும், அதனையும் ஒரு முன்னேற்றமாகவே தாம் கருதுவதாக மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்ட சூழ்நிலையில் இந்த சட்டம் அவசியம் இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“கோட்டாயாய அரசின் முகவர்களாக மாறியுள்ள கஜேந்திரர்கள்.” – சுரேஷ் பிரேமச்சந்திரன் சாடல் !

“தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசாங்கம் எதை செய்ய நினைக்கிறார்களோ அதனை வடக்கில் நிறைவேற்றுகிறார்கள். அதாவது தற்போது அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு வடக்கின் முகவர்களாக செயற்படுகின்றார்கள் என்றுதான் கூற வேண்டும்.” என ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

13வது திருத்தச் சட்டத்தினை நாம் தமிழரின் தீர்வாக ஒரு போதும் ஏற்கவில்லை அதனை ஏற்க போவதும் இல்லை. ஆனால் தற்போதுள்ள பூகோள அரசியல் நிலையில் தமிழ் மக்களை பாதுகாக்க அதாவது வடக்கில் இராணுவ மயமாக்கல், சிங்கள குடியேற்றங்களைத் தடுத்து தமிழ் மக்களின் உரிமையை பாதுகாப்பதற்காக ஏற்கனவே இந்தியாவின் தலையீட்டில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட அரசியல் சாசனத்தில் உள்ள 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரியே 6 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றின் மூலம் அனுப்பி வைத்துள்ளோம்.

அந்த கடிதத்தின் தொடர்ச்சியாக நாம் டெல்லி சென்று இந்திய பிரதமரை சந்தித்து அடுத்தகட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம். தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மக்கள் மத்தியில் போலிப் பிரசாரத்தினை மேற்கொள்வது போல நாங்கள் 13 வது திருத்தச்சட்டத்தை தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசாங்கம் எதை செய்ய நினைக்கிறார்களோ அதனை வடக்கில் நிறைவேற்றுகிறார்கள். அதாவது தற்போது அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு வடக்கின் முகவர்களாக செயற்படுகின்றார்கள் என்றுதான் கூற வேண்டும்.

குறிப்பாக அரச தலைவர் தேர்தலில் கோட்டாபய போட்டியிடும் போது வடக்கு மக்களின் வாக்களிப்பு எனக்கு தேவையில்லை ஆதனால் தேர்தலை புறக்கணியுங்கள் என்று கூறியிருந்தார். அதனையே அந்த தேர்தலின் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செய்திருந்தார்கள்.

அதாவது அந்த தேர்தலை புறக்கணிக்குமாறு கூறியிருந்தார்கள் தற்போது கோட்டாபய கூறுகின்றார் 13வது திருத்தம் தேவையில்லை அபிவிருத்தி மட்டும் போதும் என, அதேபோல் அரசாங்கத்தில் உள்ளவர்களும் அதனை கூறுகின்றார்கள்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் வடக்கில் அந்தக் கோரிக்கையினையே செயற்படுத்துகின்றார்கள். கட்சியிலிருந்து மணிவண்ணன் பிரிந்து சென்றுவிட்டதால் தமது கட்சியை மணிவண்ணன் கொண்டு சென்று விடுவார் என்பதற்காக கட்சியில் உள்ளோருக்கு ஏதாவது ஒரு வேலையை கொடுக்க வேண்டும் தானே அதற்காகத்தான் 13வது திருத்தச் சட்டத்தினை சவப்பெட்டியில் வைத்து மக்கள் மத்தியில் ஊர்வலமாக கொண்டு செல்கிறார்கள்.

அவர்கள் தமது கட்சியை காப்பாற்றுவதற்காக இவ்வாறு போலி பிரச்சாரத்தினை மேற்கொள்கிறார்கள். மக்களை ஏமாற்றி கோட்டாபய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்படுகின்றார்கள் எனவே மக்கள் போலிப் பிரசாரங்களை நம்ப கூடாது எனவும் தெரிவித்தார்.

“ஒவ்வொருவரும் தலைவராக வேண்டும் என்பதற்காக மக்களை கூறுபோடுகின்றனர்.” – த.கலையரசன்

“அரசியல் ரீதியாக வந்தவர்கள் ஒவ்வொருவரும் தலைவர்களாக வேண்டும் என்பதற்காக மக்களைக் கூறுபோடுகின்ற செயற்பாடுகளே தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது..” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்தியப் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதம் மற்றும் அதற்கொதிரான பிரச்சாரங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கைச்சாத்திடப்பட்ட 13வது திருத்தச்சட்டம் தொடர்பிலான பல விடயங்கள் தற்போது பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பொருத்தமட்டில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கான நிலையான தீர்வினை நோக்கிய பயணத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த அடிப்படையில் நாங்கள் இந்த நாட்டில் சமத்துவான சமஸ்டி அடிப்படையிலான தீர்வினை வலியுறுத்தி வருகின்றோம்.

1987ம் ஆண்டு இலங்கை –  இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பிற்பாடு இந்தப் 13வது திருத்தச் சட்டம் கைச்சாத்திடப்பட்டது. அந்த வேளையில் வடகிழக்கு இணைந்ததான மாகாணசபை இருந்ததை நாம் அனைவரும் அறிவோம். அந்த மாகாணசபை நீண்ட காலம் இயங்க முடியாமல் கலைக்கப்பட்ட வரலாறும் உண்டு. அதன் பின் இணைந்த வடகிழக்கு 2008ம் ஆண்டு வடக்கு வேறு கிழக்கு வோறாகப் பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடைபெற்றது.

இந்த நாட்டில் நீண்டகாலமாக நிலவும் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்பதில் ஆட்சி செய்த எந்த அரசாங்கமும் முழு மனதுடன் செயற்படவில்லை என்பதைத்தான் இந்த நாட்டில் இருக்கும் அரசியல் சூழல் இன்றுவரைக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றது.

நாங்கள் இந்த நாட்டில் சமாதானத்துடன் வாழ விரும்புகின்றோம். ஏனைய சமூகங்களைப் போன்று சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்ற அடிப்படையில் தான் இன்றுவரைக்கும் நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆனால், அண்மைக்கால செயற்பாடுகள் தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்பதனையே காட்டி நிற்கின்றது. இன்று நேற்றல்ல நீண்டகாலமாக எமக்குள் இருக்கின்ற பிரச்சனை ஒற்றுமையின்மையே.

இருக்கின்ற மாகாணசபை அதிகாரங்களைத் தூக்கி எறிந்து விட்டு எமது மக்களுக்கான தீர்வினைப் பெறமுடியாது. இந்திய வல்லரசினூடாக ஏற்படுத்தப்பட்ட இந்த அதிகாரத்தை வைத்தே நாங்கள் எங்களுடைய தீர்வை நோக்கிய பயணத்தை முன்நகர்த்திக் கொண்டு செல்ல வேண்டும்.

இணைந்த வடகிழக்கு பிரிக்கப்பட்டு இன்று கிழக்கு மாகாணம் நாளுக்கு நாள் பறிபோய்க்கொண்டிருக்கின்றது. எங்களுடைய அதிகாரங்கள் இழக்கச் செய்யப்பட்டு கிழக்கு மாகாணத்தின் எமது இனப்பரம்பல் குறைக்கப்படுகின்ற ஒரு சூழலில் எங்களுடைய இனத்தின் ஒற்றுமையையும் இருப்பையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழர்களுக்கும் இருக்கின்றது.

ஆனால் இன்று ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற 13வது திருத்தச் சட்டம் என்கின்ற விடயத்திலே தேசியத்தோடு பயணிக்கின்ற தமிழ் கட்சிகள் ஒப்பமிட்டு இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. எமது தலைவர்கள் ஒரு உறுதியான நிலையான கட்டமைப்போடு இருந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் இந்தப் 13வது திருத்தச் சட்டம் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் செயற்படுகின்றவர்கள் அல்ல. இந்த 13வது திருத்தச்சட்டம் உருவாக்கப்பட்ட போது அதிகாரஙகள் இல்லை என்கின்ற விடயத்தை விலியுறுத்தியவர்கள் எமது தலைவர்களே, இதனை ஏற்றக் கொள்ள வேண்டும். ஆனாலும் இதனை முழுமையாக இல்லாமல் செய்து விட்டு எமது தீர்வு தொடர்பிலான எமது எதிர்கால அரசியலை முன்னெடுக்க முடியாது.

எனவே இதனை அடிப்படையில் வைத்துக் கொண்டு எமக்கான அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையில் சமஷ்டியை நோக்கிய பயணத்தில் சென்று கொண்டிருக்கின்றோம். இதனைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் இதனை விமர்சனம் செய்துகொண்டிருக்கின்றார்கள். மக்கள் மத்தியில் போலிப் பிரச்சாரங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழர்களுக்கு எந்தத் தீர்வையும் வழங்கக் கூடாது என்பதில் இந்த அரசாங்கம் முன்முரமாகக் கடும் தீவிரவாதப் போக்கோடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அண்மைக் காலங்களில் எங்களின் அதிகமான தொண்மையான இடங்கள் சுவீகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நாங்கள் எமது சமூகத்தின் இருப்பு, ஒற்றமை என்ற விடயத்தில் இருந்து மாற முடியாத சூழ்நிலையில் இருக்கின்றோம்.

அதுமாத்திரமல்லாமல் இந்த நாட்டின் தலைவர் கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பிற்பாடு தமிழர் தரப்புடன் பல பேச்சுக்கள் நடாத்தப்பட வேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்திருந்தாலும் இற்றைவரைக்கும் ஆக்கபூர்வமான நடவக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

எனவே இவ்வாறான விடயங்களையெல்லாம் நாங்கள் கருத்திற் கொண்டு எமது சமூகத்தின் எதிர்கால இருப்பு தொடர்பிலும் நாங்கள் முன்நின்று உழைக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். குறிப்பாக கிழக்கு மாகாணம் மிகவும் மோசமாக பொருளாதார ரீதியாக ஏனைய சமூகங்களின் ஆக்கரமிப்புக்குள் உட்பட்ட பிரதேசமாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஒற்றுமை என்று பேசி அரசியல் ரீதியாக வந்தவர்கள் ஒவ்வொருவரும் தலைவர்களாக வேண்டும் என்பதற்காக மக்களைக் கூறுபோடுகின்ற செயற்பாடுகளே தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனை எமது மக்கள் தான் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்காக, இனத்திற்காக, எமது இருப்புக்காகப் போராடுகின்ற கட்சி எது, அதனை எவ்வாறு நாங்கள் வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விடயங்களை ஆராய்ந்து எதிர்காலத்தில் அந்த விடயத்தில் எமது மக்கள் உறுதியாக இருந்து செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் !

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை 20 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிவில் செயற்பாட்டாளர் நாகாநந்த கொடித்துவக்கினால் இன்று(வெள்ளிக்கிழமை) குறித்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக கல்வி அமைச்சர், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

நிலவும் கொரோனா சூழ்நிலை காரணமாக உயர்தர மாணவர்கள் தங்களது கற்றல் செயற்பாடுகளை நிறைவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வி நிபுணர்களாலும் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 7ஆம் திகதி 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பிக்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

“13 ஆவது திருத்தம் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது.” – சி.வி.விக்னேஸ்வரன்

13 ஆவது திருத்தம் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது. ஆனால் சிறிய சிறிய அலுவல்களை பார்த்துக்கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள் ,இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில்,தெளிவு படுத்தும் ஊடகவியாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

எம்மிடம் ஒரு முனை மடிந்த மண் வெட்டி உள்ளது. புது மண்வெட்டி வருவதற்கு காலம் எடுக்கும். இந்த நிலையில், இந்த பழைய மண் வெட்டியை பயன்படுத்தி என்றாலும் சிறிய வேலையை செய்ய வேண்டும். புதிய மண் வெட்டி வரும் வரும் என்று இருப்பதில் அர்த்தம் இல்லை.

இதை போல தான் 13 ஆவது ,திருத்தம். தமிழ் மக்களின் பிரச்சினைகள் இதன் மூலம் தீர்க்கப்படாது.ஆனால் சிறிய சிறிய அலுவல்களை பார்த்துக்கொள்ள முடியும் என்று தான் கூறுகின்றோம். நாம் இப்போது இருக்கும் நிலையில் இராணுவ ஆட்சி வடக்கு கிழக்கில் அதிகரிக்கிறது.சிங்கள குடியேற்றம் நடைபெறுகிறது.

நாம் ஒன்றுமே செய்ய முடியாமால் நிற்கிறோம். இதற்கு இருக்கும் சட்டம் ஒன்றை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.