30

30

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க போகின்றதாம்? அதை பைடனும் பொறிஸ்சும் தடுக்கப் போகிறார்களாம்? – முதலைக் கண்ணீர்!!!

கொரோனோ பெரும்பாலும் இந்த மேற்கு நாடுகளையெல்லாம் ஒரு உலுப்பு உலுப்பி விட நாளொன்றொக்கு இன்னமும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இறந்துகொண்டிருப்பதே இன்றைய சாதாரண நிலையாக வந்துவிட்டது. அதனை சர்வ சாதாரணமாக கருதும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் கொரோனாவை சீனாவோடு தொடர்புபடுத்தி மக்களின் பழியையும் பாவத்தையும் சீனா மீது திருப்பிவிட்டுவிட்டு இப்போது கூடுதலாகப் பேசுவது உக்ரைன் பற்றி. அமெரிக்காவில் ஜனாதிபதி பைடனும் பிரித்தானியாவில் பிரதமர் பொறிஸ்சும் உள்ளுரில் பெரும் நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருக்க அவர்களுக்கு அவல் கிடைத்தது மாதிரி அமைந்தது உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கப் போகின்றது என்ற கதையாடல்.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கின்ற விவகாரம், ரஷ்யா கிரேமியாவைக் கைப்பற்றியது முதல் இருக்கின்ற ஒரு விசயம். இதனை ஏதோ ரஷ்யா இப்ப தான் படையெடுப்பிற்கு தயாராகின்றது என்று அமெரிக்க பிரித்தானிய ஊடகங்கள் ரீல் விடுகின்றன. இந்நாடுகளின் உளவுத்துறைகளுக்கும் இந்த ஏழு வருடங்களில் தெரியாததெல்லாம் அமெரிக்க ஜனாதிபதி மீதும் பிரித்தானிய பிரதமர் மீதும் நம்பிக்யையீனம் ஏற்பட்ட பின் தான் புதிய புதிய தகவல்கள் தெரிய வருகின்றதாம். இப்போது இவ்விரு நாட்டுத் தலைவர்களும் தங்கள் உள்ளுர் நெருக்கடியை சமாளிக்க உக்ரைனை பந்தாட முற்பட்டு உள்ளனர்.

பிரித்தானிய பிரதமர் தனது வீட்டை திருத்தம் செய்வதற்கு விதிமுறைகளுக்கு விலக்காக நிதியைப் பெற்றுக்கொண்டது, தானே முன்னின்று அமுல்படுத்திய லொக்டவுன் விதிகளை அவரும் அவரது சகாக்களும் அவருடைய உத்தியோகபூர்வ அலுவலகமான நம்பர் 10 டவுனிங் ஸ் ரீற்றில் ஒன்றல்ல இரண்டல்ல 18 முறை மீறியது அம்பலத்திற்கு வந்துள்ளது. இது ஆளும் கொன்சவேடிவ் கட்சிக்கு உள்ளேயே பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் சிரேஸ்ட்ட அரசாங்க பணியாளர் சூ கிரேயின் அறிக்கையை மேலும் இழுத்தடித்து அதில் முக்கியமான விடயங்கள் எதுவும் இடம்பெறாமல் செய்யும் வகையில் ஸ்கொட்லன்ட் யாட் தாங்களும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் முக்கிய தகவல்களை ஆதாரங்களை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நம்பர் 10 டவுனிஸ் ஸ் ரீற் கார்டனில் நடந்த பார்ட்டிகளை நேரடியாக சிசிரிவி இல் அதே நேரத்தில் பார்த்துக் கொண்டிருந்த ஸ்கொன்லன்ட் யாட் உத்தியோகத்தர்கள் யாரும் இதுவரை எந்த விசாரணையையும் மேற்கொள்ளாமல் இருந்தனர். இப்போது உண்மைகள் வெளியே வரப்போகின்றது என்றதும் தங்களையும் ஆளும் குழுமத்தையும் காப்பாற்ற துரித நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை உட்பட்ட ஆசிய நாடுகளில் சட்டத்தை உருவாக்குபவர்கள், சட்டம் ஒழுங்கை நிர்வகிக்க வேண்டியவர்கள், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்கள் எல்லோரும் கூட்டாக இணைந்து ஊழலில் ஈடுபடுவது போன்ற ஒரு நிலையே இன்று ஜனநாயகத்தின் காவலர்களாக தங்களை அறிவிக்கும் பிரித்தானியாவில் நடைபெறுகின்றது.

இலங்கையில் ஜனாதிபதி சந்திரகா குமாரதுங்கா ஒரு இனவாதியாக இருக்கவில்லை. ஓராளவு லிபரலான தலைவராகவே இருந்தார். ஆனால் அவருடைய காலத்திலேயே நாட்டில் ஊழல்கள் அதிகரித்திருந்தது. அதற்கு அவருடைய தனிப்பட்ட பழக்கவழக்கங்களும் காரணமாக இருந்தது. இதே நிலையிலேயே பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் உள்ளார். இவரும் கொன்சவேடிவ் கட்சியாக இருந்தாலும் லிபரல் போக்குடையவர். ஆனால் தனிப்பட்ட முறையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு நேர்மையற்றவர். அரசியல் கொள்கையுடையவரும் அல்ல. மதில் மேல் புனையாக இருந்து எந்தப் பக்கம் சரிந்தால் தனக்கு அரசியல் ஆதாயம் வருமோ அப்பக்கம் சாய்பவர். ஜரோப்பாவில் இருந்து பிரித்தானியா பிரிய வேண்டும் என்ற அவரது முடிவும் அவ்வாறே எடுக்கப்பட்டது.

கோவிட் காலத்தில் அவருடைய விவேகமற்ற போக்குகளே பிரித்தானியா தனது சனத்தோகை விகிதாசாரத்தைக் காட்டிலும் பல்லாயிரக் கணக்காணோரை கோவிட்இல் பலிகொள்ளக் காரணம். மேலும் கோவிட் கால நெருக்கடிக்கு கடன் பெறப்பட்ட 200 பில்லியன் பவுண்களில் 10 வீதம் (20 பில்லியன் பவுண்கள்) லஞ்சம் மற்றும் ஊழலில் வீணடிக்கப்பட்டது. முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு அங்கிகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தங்களை தங்கள் ஆளும் குழுத்திற்குள் வழங்கி இந்த 20 பில்லியனை இந்த ஆளும் குழுமத்தை அண்டிப்பிழைப்பவர்கள் சுரட்டிக்கொண்டனர். இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் நடைபெறும் அதே மாதரியான லஞ்சம் ஊழல் பிரித்தினிய ஆட்சிபீடத்திலும் மிகச் சர்வசாதாரணமாக்கப்பட்டு உள்ளது.

20 பில்லியனை ஒரு காலாண்டில் ஏப்பம் விட்ட பொறிஸ் ஜோன்சன் தலைமையிலான அரசு வரும் ஏப்ரல் மாதம் முதல் சராசரி ஊதியமீட்டும் பல மில்லயன் கடும் உழைப்பாளர்களின் வரியை அதிகரித்து 12.5 பில்லியன் பவுணை அறவிடவுள்ளது.

இந்த நெருக்கடியில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள இன்னும் சில தினங்களில் பிரித்தானிய பிரதமர் உக்ரைன் சென்று போர்பறை முழங்க உள்ளார். கடந்த காலங்களில் அமெரிக்க – பிரித்தானிய கூட்டு மேற்கொண்ட யுத்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியே காரணமாக இருந்தது.

தற்போது கூட உக்ரைன் ஆட்சித் தலைவர் அமெரிக்க பிரித்தானிய நாடுகளின் போர் முழக்கத்தை தனக்கு விளங்கவில்லையென்றே தெரிவித்து வருகின்றார். ரஷ்யாவுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடுடைய அவர் ரஷ்யாவை வலிந்து யுத்ததிற்கு இழுக்க வேண்டாம் என்றே கேட்டுக்கொண்டுளார். ரஷ்யா உக்ரைன் நாட்டின் எல்லையோரமாகக் படைகளைக் குவிப்பது ஒன்றும் புதிதல்ல என்று குறிப்பிடும் அவர், ரஷ்யா தன் நாடுமீது உடனடியாகப் படையெடுக்கும் நிலையில்லை என்ற பாணியிலேயே நடந்துகொள்கின்றார்.

உக்ரைனில் அவ்வாறான ஒரு யுத்தப் பதட்டம் காணப்படவில்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யாவும் தனது படையணிகளை உக்ரைனில் குவித்திருந்த போதும் இது கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஒரு விடயமே என்றும் உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லையென்றுமே தெரிவித்து வருகின்றது. நேட்டோ தனது பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயற்படுவதனாலேயே தாங்கள் உக்ரைன் எல்லையில் படைகளைக் குவிப்பதாக ரஷ்யா தெரிவிக்கின்றது.

ஆனாலும் விளாடிமீர் பூட்டினுக்கு சோவியத் ரஷ்யாவை மீண்டும் கட்டியெழுப்பும் கனவு இல்லையென்று சொல்வதற்கில்லை. அதனை அவர் படைபலத்தின் மூலம் சாதிக்க முயற்சிக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் கலங்கிய குட்டையில் தங்கள் இருப்பைக் காப்பாற்றுவதற்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் மீண்டும் கை கோர்த்துள்ளன. உக்ரைனில் ஆயதங்களை இவர்கள் குவிக்கின்றனர்.

ஆமை புகுந்த வீடு உருப்படுகிறதோ இல்லையோ அமெரிக்காவும் பிரித்தானியாவும் தலையிட்ட எந்த நாடும் உருப்படவில்லை. காலனித்துவ காலத்திற்குப் பின்னான நவகாலனித்துவ காலத்தில் அப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா என இவர்கள் தலையீடு செய்த நாடுகள் அத்தனையும் இவர்கள் தலையீடு செயவதற்கு முன்பிருந்த நிலையைக் காட்டிலும் மிக மிக மோசமான நிலைக்கே சென்றுள்ளன. அந்நாடுகளில் சாதாரண உயிர்வாழ்வே தற்போது மிக மோசமானதாக்கப்பட்டு உள்ளது.

இவ்விரு நாடுகளினதும் மிக நெருங்கிய நேசநாடான சவுதியரேபியாவின் மன்னன் துருக்கியில் உள்ள தங்கள் தூதராலயத்தில் வைத்து ஒரு ஊடகவியலாளனை கண்டதுண்டமாக வெட்டி படுகொலை செய்ததையே கண்டுகொள்ளாமல் தங்களை இன்னமும் மனித உரிமைக்காவலர்களாகக் காட்டிவருகின்றனர். சவுதியரேபியா, அமெரிக்க பிரித்தானிய ஆயதங்களைப் பயன்படுத்தி யேர்மன் நாட்டினை கடந்த சில ஆண்டுகளாகவே சின்னா பின்னமாக்கி வருகின்றது. அது பற்றி இந்நாடுகள் வாயே திறக்கவில்லை. இப்போது உக்ரைனை சின்னா பின்னமாக்க தயாராகிக் கொண்டுள்ளனர்.

இப்போது உலகின் பொருளாதார தொழில்நுட்ப படைப்பலச் சமநிலையில் பாரிய மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கையில் ஆண்ட பரம்பரைதான் ஆழ வேண்டும் என்ற திமிருடன் தொடர்ந்தும் இந்நாடுகள் உலகின் அமைதியைக் குலைத்து யுத்தத்தை உற்பத்தி செய்து வருகின்றனர். ரஷ்யாவுக்கு எதிராக இவ்வளவு துள்ளும் பிரித்தானியாவில் தான் ரஷ்யாவின் சட்ட விரோதப் பணத்தின் பெரும்பகுதி குவிந்துகிடக்கின்றது. அதைப் பற்றியும் பிரித்தானியா மௌனமாகவே உள்ளது.

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் – வரலாறு படைத்தார் ஆஷ்லே பார்டி !

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஆஷ்லே பார்டி வெற்றிபெற்று மகுடம் சூட்டியுள்ளார்.

44 ஆண்டுகளுக்குப் பின்னர் குறித்த தொடரில் பட்டத்தை வென்ற முதல் அவுஸ்ரேலிய வீராங்கனை என்ற பெயரையும் ஆஷ்லே பார்டி வென்றுள்ளார்.

மெல்போனில் நடைபெற்றுவரும் ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்துபெற்ற குறித்த தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டி இன்று இடம்பெற்றது.

இதில் அமெரிக்க வீராங்கனையான டேனியல் காலின்ஸை எதிர்கொண்ட ஆஷ்லே பார்டி போட்டியின் முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார்.

இதனை அடுத்து விறுவிறுப்பாக இடம்பெற்ற இரண்டாவது செட், டை பிரெக்வரை நீடிக்க அதனையும் போராடி ஆஷ்லே பார்டி 7-6 என கைப்பற்றினார். முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற டேனியல் காலின்ஸை 6-3, 7-6 என்ற கணக்கில் தோற்கடித்து மூன்றாவது பட்டத்தை வென்றார்.

ஆப்கானிஸ்தான் மக்களை வாட்டும் பசி – தங்களது குழந்தைகளை விற்கும் பெற்றோர் !

ஆப்கானிஸ்தானில் மனிதாபிமானம் குறைந்து வருவதாக ஐநாவின் உலக உணவு திட்ட தலைவர் டேவிட் பீஸ்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ஆப்கானிஸ்தானில் மக்கள் உயிருடன் வாழ்வதற்காக தங்களது குழந்தைகளையும், அவர்களின் உடலையும் விற்கும் நிலைமையில் இருக்கின்றனர். ஆப்கானில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் பசியால் வாடுகின்றனர். எனவே சர்வதேச நாடுகள் அவர்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும்.
ஆப்கானிஸ்தான் கடந்த சில வருடங்களாக வறட்சி, பொருளாதார இழப்பு, கொரோனா பெருந்தொற்று, ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட இழப்புகள் என பல்வேறு பாதிப்புகளை சந்தித்துள்ளது.  அந்நாட்டில் சுமார் 2.4 கோடி மக்கள் உணவு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில் 97 சதவீத மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் சென்றுள்ளனர்.
தாலிபான்களுடன் நடைபெற்ற சண்டையினால் கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் மிகவும் வறுமையான நாடாகத்தான் இருக்கிறது. ஆப்கான் மக்கள் குழந்தைகளை விற்க முன்வருகின்றனர்.
தங்களைவிட யாரால் குழந்தைக்கு கூடுதல் உணவளிக்க முடிகிறதோ அவர்களுக்கு குழந்தைகளை கொடுக்க பெற்றோர்கள் காத்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.  அவர்களுக்கு உலக நாடுகள் உதவி வழங்குவதை விரைவுப்படுத்த வேண்டும். ” இவ்வாறு டேவிட் பீஸ்லி தெரிவித்தார்.

“வடக்கு மக்களின் மக்களின் காலடிக்கு சேவைகளை வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம்.” – யாழில் நீதியமைச்சர் !

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு, காலடியில் அரச சேவையை வழங்குவதற்கு நீதி அமைச்சு தயாராக உள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து பேசிய அவர்,

வடக்கில் 5 நாட்கள் நீதி அமைச்சின் நடமாடும் சேவை இடம்பெற்றது. 2,850 பேர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.  இவர்களில் அரைவாசி பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 1,525 பேருக்கான முடிவுகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

41 பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காண முடியாது. அவை எமது அமைச்சுக்கள் வரவில்லை. வடக்கில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த நடமாடும் சேவையை நாம் முன்னெடுத்துள்ளோம். அடுத்து கிழக்கு மாகாணத்திலும் அதன் பின்னர் தெற்கு மாகாணத்திலும் இந்த சேவையை முன்னெடுக்கவுள்ளோம். சுமார் 500 அலுவலர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் மக்கள் பிரச்சினைகளை அவர்கள் அறிய கூடியதாக இருக்கும். போரால் பாதிக்கப்பட்ட மாகாண என்ற அடிப்படையில் மக்களின் காலடிக்கு சேவைகளை வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம்.

இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் உதவிகளை மேற்கொண்டுள்ளனர்.- என்றார்.

“13ஆவது திருத்தச் சட்டத்தில் இரண்டு கட்டங்களாக துரித திருத்தங்கள்.” – ஜீ.எல்.பீரிஸ்

13ஆவது திருத்தச் சட்டத்தில் இரண்டு கட்டங்களாக துரித திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என அரசாங்கம் அறிவித்துள்ளது. 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்களுக்கு மத்தியில் எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் நிலவும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக கவனம் செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர். ஜி.எல். பீரிஸ், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நீதியமைச்சர் அலி சப்ரி ஆகியோர் நேற்று (சனிக்கிழமை) ‘நீதிக்கான அணுகல்’ நடமாடும் சேவைத் திட்டத்தின் கீழ் உரையாற்றியதோடு யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் குழுவையும் சந்தித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நட்டஈடு வழங்குவதும் அவர்களுக்கு காணிகளை வழங்குவதும் இந்த சந்திப்பின் நோக்கமாகும்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, 13ஆவது திருத்தச் சட்டத்தில் இரண்டு கட்டங்களாக துரித திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர். ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அத்தோடு, அதற்கேற்ப குழுவொன்று நியமிக்கப்பட்டு 1979ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் கொண்டுவரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நீக்கப்படுகிறதா மாகாணசபை முறைமை..? – சுமந்திரன் கூறியுள்ள பதில் !

தற்போதைய நிலைமைகளை ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு தெளிவுபடுத்தும் முகமாக அறிக்கையொன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் தயார் செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் மத்தயகுழு கூட்டம் இன்று (30) வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற நிலையில் அதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணிகள் சுவிகரிக்கப்படும் பிரச்சனை தற்போது பூதாகாரமாக மாறியிருந்கின்றது. இது தொடர்பாக சில பொதுஅமைப்புக்கள் ஏனைய கட்சிகளுடன் இணைந்து பொது வேலைத்திட்டத்தினை உடனடியாக அமுல்ப்படுத்தவேண்டும் என கலந்துரையாடியுள்ளோம். இந்நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து எமது நிலங்கள் அபகரிக்கப்படுவதை தடுப்பது எமது பிரதான கடமையாக கருதுகின்றோம்.

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் எழுத்துமூலான அறிக்கையை உயர்ஸ்தானிகர் அலுவலகம் வெளியிடும். மார்ச் 3 ஆம் திகதி இலங்கை தொடர்பாக ஒரு ஆய்வு இடம்பெறும். அதற்கு உதவியாக இன்றைய சூழலை அவர்கள் அறியும் முகமாக தமிழரசுக்கட்சி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடனும் ஏனைய பங்காளி கட்சிகளுடனும் இணைந்து ஆவணமொன்றை தயார் செய்கின்றோம். ஏற்கனவே தயார் செய்யப்பட்ட ஆவணமும் இரா. சம்பந்தனிடம் உள்ளது. அது நாளை மறுநாள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு பகிரப்படும். மிக விரைவில் அதற்கு இணக்கம் காணப்பட்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கடிதமாக இரா. சம்பந்தனின் ஒப்பத்தோடு அனுப்பி வைக்கப்படும்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் நீதி அமைச்சரையும் வெளிவிவகார அமைச்சரையும் சந்திக்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. இதன்போது சிங்கள பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தியான மாகாண சபை முறைமை புதிய அரசியல் அமைப்பில் இல்லை என்கின்ற விடயம் தொடர்பாக கேட்டேன். அவர்கள் அதனை அடியோடு மறுக்கின்றார்கள். அவ்வாறான பிரேரனை வரவில்லை எனவும் தெரிவித்தனர். அத்துடன் அந்த செய்தி தவறானது என அமைச்சர்கள் எனக்கு கூறினார்கள். இதில் பத்திரிகை சொல்வது உண்மையா அமைச்சர்கள் சொல்வது உண்மையாக என்பது எனக்கு தெரியாது.

அத்துடன் வெள்ளிக்கிழமை காலையில் பயங்கரவாத தடைச்சட்டம் மறுசீரமைக்கப்படுகின்றது என ஒரு திருத்தம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அது கண்துடைப்பு நாடகம் என்றுகூட சொல்ல முடியாது. ஏனெனில் அதில் எதுவுமே இல்லை. அதில் உள்ள ஒவ்வொரு விடயத்தினையும் எடுத்து பார்த்தால் அதில் ஒரு மாற்றமும் கிடையாது. ஆகவே வெளிவிவகார அமைச்சர் பீரிசிடம் ‘ரிபோம்’ (Reform) என்ற ஆங்கில வார்த்தைக்கு அகராதியில் புதிய விளக்கம் கொடுக்கப்படவேண்டியுள்ளது என தெரிவித்திருந்தேன். அவர் சிரித்து விட்டு எங்கோ ஒரு இடத்தில் ஆரம்பிக்க வேண்டும் என என்னிடம் தெரிவித்தார். எனினும் இது தொடர்பில் ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகராலயத்திற்கு நான் அறிவித்துள்ளேன் என்பதை அவருக்கு தெரிவித்தேன். இது தொடர்பாக உயர்ஸ்தானிகரின் அறிக்கையிலும் வரும் என நான் எதிர்பார்க்கின்றேன்.  இலங்கை அரசாங்கம் இவ்வாறான மோசமான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது என்பதனையும் அவருக்கு தெரிவித்தபோது அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

தமிழரசுகட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் இரா. சும்பந்தன் மற்றும் சாணக்கியன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருக்காத நிலையில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றிருந்தது.

“13வது திருத்தம் எமது மக்களை ஏமாற்றும் பொய். அதில் எனக்கு உடன்பாடில்லை.” – சிறீதரன்

“13வது திருத்தத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.” யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று (30.01.2022) வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

13வது திருத்தச்சட்டத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில் எமது மக்களை ஏமாற்றும் வகையில் பொய்யாக பிணையப்பட்டுள்ள சில விடயங்கள் அதில் இருக்கின்றது.

மேலும் அதிலே தெளிவாகவும் சொல்லப்படவில்லை. அத்தோடு இது தொடர்பாக எங்களது கூட்டத்தில் ஆராய்ந்திருந்தோம். இந்தியாவிடம் நாங்கள் 13ஐ பற்றி கேட்கத்தேவையில்லை.

ஏற்கனவே இந்திய பிரதமர் மோடி கூட்டுறவு சமஸ்டி வேண்டும் என தெரிவித்துள்ளார். அதேபோன்று இம்முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது ஈழத்திற்கான வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என்று திமுகாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே ஜெயலலிதாவால் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டிருந்தது. இவ்வளவு நடந்த பின்பும் நாங்கள் அதை கேட்பது காலத்திற்கு பொருத்தமானதா என்று எனக்கு தோன்றவில்லை.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கை தொடர்பாக அவர்களிடம் தான் கேட்க வேண்டும். என்னுடைய கோரிக்கை 13வது திருத்தத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அடுத்தவர்களிடம் ஒப்பிட வேண்டாம் இது என்னுடைய கோரிக்கையாகும் என்று தெரிவித்தார்

13 ஐ இல்லாது செய்யக்கோரி முன்னணியினர் சவப்பெட்டியுடன் ஊர்வலம் – கிட்டுபூங்கா பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் !

13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டிருந்தது. 

இன்று முற்பகல் 10.30 அளவில் நல்லூரில் உள்ள திலீபனின் நினைவு தூபிக்கு அருகிலிருந்து ஆரம்பித்த இந்த பேரணி கிட்டு  பூங்காவரையில் முன்னெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் உரையாற்றியிருந்தார்.

13 ஆம் திருத்தச் சட்டத்தினுள் முடக்கும் சதிக்கு எதிரான கிட்டுபூங்கா பிரகடனம்

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிப்போம்’ என்ற நோக்கத்துடன்; தமிழ் மக்களினதும், வெகுசன அமைப்புக்களினதும் பங்குபற்றலுடன் நடைபெறும் தமிழ் தேசிய அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் போராட்டத்தில், 2022 தை 30 இன்று, கிட்டு பூங்காவில் நாம் அனைவரும் திரண்டுள்ளோம்.

சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் தமிழ்த் தேசமானது – தனது அடிப்படையான அரசியல் உரிமைகளான வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம் அதன் இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வில் எப்போதுமே உறுதியாக இருக்கும் என்ற செய்தியைச் சிங்கள தேசத்திற்கும், இலங்கைத் தீவின் மீது கரிசனை கொண்டிருக்கும் சர்வதேச சக்திகளுக்கும் இத் தொடர் போராட்டம் வலியுறுத்திக் கூற விரும்புகின்றது.

சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களின் ஏகோபித்த வாக்குகளால் ஆட்சிப்பீடம் ஏறியுள்ள இன்றைய அரசாங்கத்தால் இலங்கைக்கான நான்காவது அரசியலமைப்பு கொண்டுவரப்படவுள்ளது. அதை இந்த வருடத்துக்குள் நிறைவேற்றவுள்ளதாக இவ்வரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டும் உள்ளது. அது இறுக்கமான ஒற்றையாட்சிக்கு உட்பட்டதாகவே அமையும் என்பதையும், அரசாங்கம் உறுதிப்படக் கூறியுள்ளது.

May be an image of one or more people, people standing and outdoors

இந்த அரசியலமைப்பை ஒரு தலைப்பட்டசமாக நிறைவேற்றுவதற்குரிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் இந்த அரசாங்கம் கொண்டுள்ளது. இலங்கையில் கொண்டுவரப்பட்ட மூன்று அரசியலமைப்புக்களும் இதே போன்றதொரு சிங்கள பெரும்பான்மைப் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டே நிறைவேற்றப்பட்டிருந்தது. அச்சந்தர்பங்களிலெல்லாம் தமிழ்த் தலைமைகள் அந்த ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்களை எதிர்த்திருந்ததுடன், வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம் அதன் இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தி வந்ததன் விளைவாகவே, தமிழர்களுக்கு இனப்பிரச்சினையொன்று உண்டு என்னும் விடயத்தைத் தக்கவைக்கக்கூடியதாக இருந்தது.

குறிப்பாக, சிங்கள அரசு தமிழருடைய உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து, இங்கு பயங்கரவாத பிரச்சினை மட்டுமே உள்ளதாகக் கூறி, போரை முடிவுக்குக் கொண்டு வந்து 13 வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும், இன்றுவரை தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை தொடர்ந்தும் இருக்கிறது என்கின்ற நிலையை நாம் தக்கவைத்திருப்பதற்கான ஒரேயொரு காரணம், இந்த நாட்டின் பிரதான சட்டமாக இருக்கும் மூன்று அரசியலமைப்புக்களையும் தமிழ் மக்கள் நிராகரித்திருந்தமையேயாகும்.

இவ்வாறிருக்க, 1980 களில் இலங்கையை மையமாகக் கொண்டிருந்த அமெரிக்க – இந்திய பூகோளப்போட்டி காரணமாகவே இந்தியா தனது நலனை அடைவதற்காக தமிழர்களின் இனப்பிரச்சினையைக் கையிலெடுத்திருந்தது. 1987 இல் இலங்கையானது, இந்திய நலன்சார்ந்து செயற்பட தயாரான நிலையில், இந்தியா தனது தேசிய பாதுகாப்பு நலன்களை உறுதிப்படுத்தி, சிங்கள தரப்புடன் உடன்பட்ட பின்னர், எந்த ஒற்றையாட்சிக் கெதிராக தமிழ்த் தரப்பை பயன்படுத்தியதோ, அதே ஒற்றையாட்சிக்குள்ளான 13 ஆம் திருத்தத்தையே தமிழ்க்களுக்கான தீர்வாக இலங்கை அரசு முன்வைத்திருந்த நிலையில், தமிழ்த் தரப்பை இந்தியா கைவிட்டிருந்தது.

இந்நிலையில் அப்போதிருந்த தமிழ்த் தரப்புகளாலும் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டம் நிராகரிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நேர்மையான தலைமைத்துவத்தின் காரணமாக ஒற்றையாட்சிக்குள் முடக்கும் செயற்பாடுகள் அனைத்தும் தடுக்கப்பட்டிருந்தது. 2005 இன் பின்னர், இந்திய சீனா பூகோளப்போட்டி மீண்டும் இலங்கையில் உருவாகியிருந்த பின்னணியிலேயே ஒரு இனப்படுகொலையூடாக போராட்டம் மௌனிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர், இந்தியா மீண்டும் தனது ஆதிக்கத்திலுள்ள தமிழ்த் தரப்புக்களைப் பயன்படுத்தி, தமிழ் அரசியலை ஒரு துருப்புச்சீட்டாகக் கையாண்டு இலங்கை அரசோடு பேரம்பேசி வருகின்றது.

இலங்கை, சீனாவின் விவகாரத்தில் இந்திய நலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் செயற்படுமானால், இந்திய ஆதிக்கத்துக்குட்பட்ட தமிழ் தரப்புக்களைப் பயன்படுத்தி, தமிழரின் அரசியலை ஒற்றையாட்சிக்குள்ளான 13ஆம் திருத்தத்திற்குள் முடக்குவதற்கும் இணங்கியுள்ளது.

இந்தப் பின்னணியிலேயே, இந்திய ஆதிக்கத்துக்குட்பட்ட தமிழ்த் தரப்புகளான இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலைக் கழகம் (ரெலோ), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டி.பி.எல்.எவ்;) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும்; தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எவ்.), தமிழ்த் தேசியக் கட்சி உள்ளிட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் இணைந்து 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி கூட்டாக கையொப்பமிட்ட கடிதத்தை 18-01-2022 அன்று இந்திய தூதுவரிடம் கையளித்துள்ளனர்.

இதன்மூலம், 13 ம் திருத்தச்சட்டத்திலுள்ள சரத்துக்கள் புதிய அரசியலமைப்பிலும் உள்வாங்கப்படும் பட்சத்தில், இந்திய ஆதிக்கத்துக்குட்பட்ட வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், புதிய ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்குவதனூடாக, தமிழ் மக்கள் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்ற நிலைமையையே உருவாக்கி, நாட்டிலுள்ள அனைத்து இனங்களும் ஏற்றுக்கொண்ட ஒரு அரசியலமைப்பை உருவாக்கிவிட்டதாகவும், இனப்பிரச்சினை இதனூடாக தீர்க்கப்பட்டு விட்டதாகவும் உலகுக்கு பறைசாற்றுவதற்கு தயாராகிறார்கள்.

இந்த ஆபத்திலிருந்து தமிழ்த் தேசத்தை மீட்டெடுப்பதற்கு, தமிழ்த் தேச மக்கள் அணிதிரள்வதன் ஊடாகவே தடுத்து நிறுத்த முடியும் என்னும் யாதார்த்தத்தை விளங்கிக் கொண்டு, இந்தத் தொடர் போராட்டம் பின்வருவனவற்றை பிரகடனப்படுத்துகிறது :

• தமிழ்த் தேச மக்கள் தொடர்ச்சியாக ஒற்றையாட்சியை நிராகரித்து, தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கின்ற ஒரு தீர்வை 70 வருடங்களுக்கு மேலாக வலியுறுத்தி வந்திருக்கின்ற நிலையிலே, 2009 இல் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரும், ஒற்றையாட்சியை நிராகரித்தும், தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தைக் கோரியும் ஒவ்வொரு தேர்தல்களுடாகவும் தங்களது ஏகோபித்த ஆணையை வழங்கி வந்திருக்கிறார்கள்.

• வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசமும் – அதன் இறைமையும், சுயநிர்ணய உரிமையையும் அங்கீகிக்கப்படுகின்ற தீர்வுக்குப் பதிலாக – ஒற்றையாட்சிக்குள் இருக்கக்கூடிய ஒரு கட்டமைப்பாக (13 ஆம் திருத்தச் சட்டமாகவோ அல்லது வேறு வடிவத்திலோ) இருக்குமானால் அவ்வகையான செயல், தமிழ் மக்களுடைய ஆணைக்குத் துரோகம் இழைக்கும் வகையிலேயே அமையும் என்ற விடயத்தை இப்போராட்டம் பிரகடனப்படுத்துகிறது.

• தமிழ் மக்கள் – காலம் காலமாக வழங்கிவரும் தமிழ்த் தேச அங்கீகாரத்துக்குரிய ஆணையை மீறி, ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆம் திருத்தத்தையோ அல்லது வேறு எந்தவொரு திருத்தத்தையோ வலியுறுத்துகின்ற தரப்புக்கள், அம்முயற்சியை கைவிட வேண்டுமென இப்போராட்டமூடாக வலியுறுத்துகிறோம்.

• இந்திய அரசானது இலங்கையோடு நல்லுறவை பலப்படுத்திக்கொள்வதையோ அல்லது தனது பூகோள -அரசியல் நலன்களைப் பேணுவதையோ அல்லது தென் ஆசிய பிராந்திய வல்லரசாக தன்னை நிலைநிறுத்திக்கொள்வதையோ ஈழத்தமிழ் மக்கள் எதிர்க்கவில்லை. இந்தியாவை எமது நட்புசக்தியாகவே கருதுகின்றோம். இந்தியாவின் தேசிய நலன்களைப் பேணுவதில் எமக்கு மிகுந்த விருப்பமும் அக்கறையும் ஈடுபாடும் உண்டு. ஆனால் தமிழ் மக்கள் தமது நட்பு சக்தியாக கருதும் இந்தியா, தனது பூகோள நலன்களைப் பூர்த்திசெய்வதற்காக தமிழ் மக்களைப் பலிக்கடாவாக்கி, தமிழ் மக்களின் நலன்களை முற்றாகப் புறக்கணிக்கும் செயற்பாட்டை நிறுத்துமாறு கோருகின்றோம்.

• தமிழ்மக்கள் 70 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில், தமிழ்த் தேச அங்கீகாரத்தையும் – அதனுடைய தனித்துவமான இறைமையையும் – சுயநிர்ணய உரிமையையும் முழுமையாக அனுபவிக்கக் கூடிய ‘சமஸ்டி’ அடிப்படையிலான தீர்வை அடைய இந்திய அரசும் ஏனைய நட்பு நாடுகளும் இலங்கையை வலியுறுத்த வேண்டும் என்றும் இப்போராட்டம் கோருகின்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

(அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்)

தமிழ்த் தேசியப் பேரவை

(படங்கள் – குமணன் – முல்லைத்தீவு ஊடகவியலாளர்)

கோப்பாய் பொலிஸ் உத்தியோகஸ்தர்களுடன் நல்லுறவை பேணி சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்தவருக்கு விளக்கமறியல் !

வீட்டின் மீது தாக்குதல் நடாத்தியதுடன், வீட்டில் இருந்தவர் மீதும் தாக்குதல் நடாத்தி அவருக்கு படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 03 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை, குறித்த சம்பவம் பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர்களால் சமாதானமாக முடிக்க முற்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைக்கபெற்றதன் அடிப்படையில் பொறுப்பதிகாரி நேரடியாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, சந்தேக நபரை கைது செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உரும்பிராய் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கோண்டாவிலில் உள்ள வீடொன்றினுள் புகுந்து வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டு, வீட்டில் இருந்தவர் மீதும் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளார்.

குறித்த தாக்குதலில் தலையில் காயமடைந்த நபர் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது காயத்துக்கு 16 இழைகள் போடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வைத்திய சாலை பொலிஸார், சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸார் தாக்குதலாளியையும், தாக்குதலுக்கு இலக்கானவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு, முறைப்பாட்டினை பதிவு செய்யாது நாட்களை கடத்தி வந்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைக்கப்பெற்றதனை நேரடியாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்து நீதவான் முன்னிலையில் முற்படுத்தினார்.

அதனை அடுத்து சந்தேக நபரை எதிர்வரும் 03 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அதேவேளை குறித்த சந்தேகநபர், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சில பொலிஸ் உத்தியோகஸ்தர்களுடன் நல்லுறவை பேணி வருபவர் எனவும், கடந்த ஆண்டு தன்னுடன் முரண்பட்டுக்கொண்ட இளைஞன் ஒருவரை சில பொலிஸ் உத்தியோகஸ்தர்களை மது போதையில் வாகனத்தில் அழைத்து சென்று, இளைஞனை வாகனத்தில் கடத்தி தாக்கியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அந் நபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சில பொலிஸ் உத்தியோகஸ்தர்களுடன் நல்லுறவை பேணி சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வருபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

அதேவேளை, முன்னர் இருந்த பொலிஸ் பொறுப்பதிகாரி பதவி நிலையிலிருந்து தரமிறக்கப்பட்டு, களனி பொலிஸ் பிராந்தியத்துக்கு சூப்பர் நியூமரரி நிலை (Supernumerary position) என்ற வகையில் இடமாற்றப்பட்டுள்ளார்.

முறைப்பாடுகளை தட்டிக்கழித்தல், கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் அச்சுறுத்தல், கையூட்டுப் பெறல், உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பட்டே இடமாற்றம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சிறுமி ஹிஷாலினியின் மரணம் – ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் !

சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக அடுத்த வாரம் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பான வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகக் கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளான சிறுமி ஹிஷாலினி கடந்த ஜூலை மாதம் 3ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த ஜூலை மாதம் 15ஆம் திகதி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரது தந்தை, சகோதரர் மற்றும் குறித்த சிறுமியை பணிக்கு அமர்த்திய தரகர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அதுவரையில் வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மீதும் இந்த விடயத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், வீட்டில் சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையில் சில எழுத்துகள் அடையாளம் காணப்பட்டன.

இதனையடுத்து சிறுமி ஹிஷாலியின் சடலம் இரண்டாவது பிரேதப் பரிசோதனைகளுக்காகக் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி மீளத் தோண்டி எடுக்கப்பட்டது. இரண்டாவது பிரேதப் பரிசோதனை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதோடு அன்றைய தினம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.