உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க போகின்றதாம்? அதை பைடனும் பொறிஸ்சும் தடுக்கப் போகிறார்களாம்? – முதலைக் கண்ணீர்!!!

கொரோனோ பெரும்பாலும் இந்த மேற்கு நாடுகளையெல்லாம் ஒரு உலுப்பு உலுப்பி விட நாளொன்றொக்கு இன்னமும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இறந்துகொண்டிருப்பதே இன்றைய சாதாரண நிலையாக வந்துவிட்டது. அதனை சர்வ சாதாரணமாக கருதும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் கொரோனாவை சீனாவோடு தொடர்புபடுத்தி மக்களின் பழியையும் பாவத்தையும் சீனா மீது திருப்பிவிட்டுவிட்டு இப்போது கூடுதலாகப் பேசுவது உக்ரைன் பற்றி. அமெரிக்காவில் ஜனாதிபதி பைடனும் பிரித்தானியாவில் பிரதமர் பொறிஸ்சும் உள்ளுரில் பெரும் நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருக்க அவர்களுக்கு அவல் கிடைத்தது மாதிரி அமைந்தது உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கப் போகின்றது என்ற கதையாடல்.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கின்ற விவகாரம், ரஷ்யா கிரேமியாவைக் கைப்பற்றியது முதல் இருக்கின்ற ஒரு விசயம். இதனை ஏதோ ரஷ்யா இப்ப தான் படையெடுப்பிற்கு தயாராகின்றது என்று அமெரிக்க பிரித்தானிய ஊடகங்கள் ரீல் விடுகின்றன. இந்நாடுகளின் உளவுத்துறைகளுக்கும் இந்த ஏழு வருடங்களில் தெரியாததெல்லாம் அமெரிக்க ஜனாதிபதி மீதும் பிரித்தானிய பிரதமர் மீதும் நம்பிக்யையீனம் ஏற்பட்ட பின் தான் புதிய புதிய தகவல்கள் தெரிய வருகின்றதாம். இப்போது இவ்விரு நாட்டுத் தலைவர்களும் தங்கள் உள்ளுர் நெருக்கடியை சமாளிக்க உக்ரைனை பந்தாட முற்பட்டு உள்ளனர்.

பிரித்தானிய பிரதமர் தனது வீட்டை திருத்தம் செய்வதற்கு விதிமுறைகளுக்கு விலக்காக நிதியைப் பெற்றுக்கொண்டது, தானே முன்னின்று அமுல்படுத்திய லொக்டவுன் விதிகளை அவரும் அவரது சகாக்களும் அவருடைய உத்தியோகபூர்வ அலுவலகமான நம்பர் 10 டவுனிங் ஸ் ரீற்றில் ஒன்றல்ல இரண்டல்ல 18 முறை மீறியது அம்பலத்திற்கு வந்துள்ளது. இது ஆளும் கொன்சவேடிவ் கட்சிக்கு உள்ளேயே பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் சிரேஸ்ட்ட அரசாங்க பணியாளர் சூ கிரேயின் அறிக்கையை மேலும் இழுத்தடித்து அதில் முக்கியமான விடயங்கள் எதுவும் இடம்பெறாமல் செய்யும் வகையில் ஸ்கொட்லன்ட் யாட் தாங்களும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் முக்கிய தகவல்களை ஆதாரங்களை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நம்பர் 10 டவுனிஸ் ஸ் ரீற் கார்டனில் நடந்த பார்ட்டிகளை நேரடியாக சிசிரிவி இல் அதே நேரத்தில் பார்த்துக் கொண்டிருந்த ஸ்கொன்லன்ட் யாட் உத்தியோகத்தர்கள் யாரும் இதுவரை எந்த விசாரணையையும் மேற்கொள்ளாமல் இருந்தனர். இப்போது உண்மைகள் வெளியே வரப்போகின்றது என்றதும் தங்களையும் ஆளும் குழுமத்தையும் காப்பாற்ற துரித நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை உட்பட்ட ஆசிய நாடுகளில் சட்டத்தை உருவாக்குபவர்கள், சட்டம் ஒழுங்கை நிர்வகிக்க வேண்டியவர்கள், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்கள் எல்லோரும் கூட்டாக இணைந்து ஊழலில் ஈடுபடுவது போன்ற ஒரு நிலையே இன்று ஜனநாயகத்தின் காவலர்களாக தங்களை அறிவிக்கும் பிரித்தானியாவில் நடைபெறுகின்றது.

இலங்கையில் ஜனாதிபதி சந்திரகா குமாரதுங்கா ஒரு இனவாதியாக இருக்கவில்லை. ஓராளவு லிபரலான தலைவராகவே இருந்தார். ஆனால் அவருடைய காலத்திலேயே நாட்டில் ஊழல்கள் அதிகரித்திருந்தது. அதற்கு அவருடைய தனிப்பட்ட பழக்கவழக்கங்களும் காரணமாக இருந்தது. இதே நிலையிலேயே பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் உள்ளார். இவரும் கொன்சவேடிவ் கட்சியாக இருந்தாலும் லிபரல் போக்குடையவர். ஆனால் தனிப்பட்ட முறையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு நேர்மையற்றவர். அரசியல் கொள்கையுடையவரும் அல்ல. மதில் மேல் புனையாக இருந்து எந்தப் பக்கம் சரிந்தால் தனக்கு அரசியல் ஆதாயம் வருமோ அப்பக்கம் சாய்பவர். ஜரோப்பாவில் இருந்து பிரித்தானியா பிரிய வேண்டும் என்ற அவரது முடிவும் அவ்வாறே எடுக்கப்பட்டது.

கோவிட் காலத்தில் அவருடைய விவேகமற்ற போக்குகளே பிரித்தானியா தனது சனத்தோகை விகிதாசாரத்தைக் காட்டிலும் பல்லாயிரக் கணக்காணோரை கோவிட்இல் பலிகொள்ளக் காரணம். மேலும் கோவிட் கால நெருக்கடிக்கு கடன் பெறப்பட்ட 200 பில்லியன் பவுண்களில் 10 வீதம் (20 பில்லியன் பவுண்கள்) லஞ்சம் மற்றும் ஊழலில் வீணடிக்கப்பட்டது. முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு அங்கிகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தங்களை தங்கள் ஆளும் குழுத்திற்குள் வழங்கி இந்த 20 பில்லியனை இந்த ஆளும் குழுமத்தை அண்டிப்பிழைப்பவர்கள் சுரட்டிக்கொண்டனர். இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் நடைபெறும் அதே மாதரியான லஞ்சம் ஊழல் பிரித்தினிய ஆட்சிபீடத்திலும் மிகச் சர்வசாதாரணமாக்கப்பட்டு உள்ளது.

20 பில்லியனை ஒரு காலாண்டில் ஏப்பம் விட்ட பொறிஸ் ஜோன்சன் தலைமையிலான அரசு வரும் ஏப்ரல் மாதம் முதல் சராசரி ஊதியமீட்டும் பல மில்லயன் கடும் உழைப்பாளர்களின் வரியை அதிகரித்து 12.5 பில்லியன் பவுணை அறவிடவுள்ளது.

இந்த நெருக்கடியில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள இன்னும் சில தினங்களில் பிரித்தானிய பிரதமர் உக்ரைன் சென்று போர்பறை முழங்க உள்ளார். கடந்த காலங்களில் அமெரிக்க – பிரித்தானிய கூட்டு மேற்கொண்ட யுத்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியே காரணமாக இருந்தது.

தற்போது கூட உக்ரைன் ஆட்சித் தலைவர் அமெரிக்க பிரித்தானிய நாடுகளின் போர் முழக்கத்தை தனக்கு விளங்கவில்லையென்றே தெரிவித்து வருகின்றார். ரஷ்யாவுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடுடைய அவர் ரஷ்யாவை வலிந்து யுத்ததிற்கு இழுக்க வேண்டாம் என்றே கேட்டுக்கொண்டுளார். ரஷ்யா உக்ரைன் நாட்டின் எல்லையோரமாகக் படைகளைக் குவிப்பது ஒன்றும் புதிதல்ல என்று குறிப்பிடும் அவர், ரஷ்யா தன் நாடுமீது உடனடியாகப் படையெடுக்கும் நிலையில்லை என்ற பாணியிலேயே நடந்துகொள்கின்றார்.

உக்ரைனில் அவ்வாறான ஒரு யுத்தப் பதட்டம் காணப்படவில்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யாவும் தனது படையணிகளை உக்ரைனில் குவித்திருந்த போதும் இது கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஒரு விடயமே என்றும் உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லையென்றுமே தெரிவித்து வருகின்றது. நேட்டோ தனது பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயற்படுவதனாலேயே தாங்கள் உக்ரைன் எல்லையில் படைகளைக் குவிப்பதாக ரஷ்யா தெரிவிக்கின்றது.

ஆனாலும் விளாடிமீர் பூட்டினுக்கு சோவியத் ரஷ்யாவை மீண்டும் கட்டியெழுப்பும் கனவு இல்லையென்று சொல்வதற்கில்லை. அதனை அவர் படைபலத்தின் மூலம் சாதிக்க முயற்சிக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் கலங்கிய குட்டையில் தங்கள் இருப்பைக் காப்பாற்றுவதற்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் மீண்டும் கை கோர்த்துள்ளன. உக்ரைனில் ஆயதங்களை இவர்கள் குவிக்கின்றனர்.

ஆமை புகுந்த வீடு உருப்படுகிறதோ இல்லையோ அமெரிக்காவும் பிரித்தானியாவும் தலையிட்ட எந்த நாடும் உருப்படவில்லை. காலனித்துவ காலத்திற்குப் பின்னான நவகாலனித்துவ காலத்தில் அப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா என இவர்கள் தலையீடு செய்த நாடுகள் அத்தனையும் இவர்கள் தலையீடு செயவதற்கு முன்பிருந்த நிலையைக் காட்டிலும் மிக மிக மோசமான நிலைக்கே சென்றுள்ளன. அந்நாடுகளில் சாதாரண உயிர்வாழ்வே தற்போது மிக மோசமானதாக்கப்பட்டு உள்ளது.

இவ்விரு நாடுகளினதும் மிக நெருங்கிய நேசநாடான சவுதியரேபியாவின் மன்னன் துருக்கியில் உள்ள தங்கள் தூதராலயத்தில் வைத்து ஒரு ஊடகவியலாளனை கண்டதுண்டமாக வெட்டி படுகொலை செய்ததையே கண்டுகொள்ளாமல் தங்களை இன்னமும் மனித உரிமைக்காவலர்களாகக் காட்டிவருகின்றனர். சவுதியரேபியா, அமெரிக்க பிரித்தானிய ஆயதங்களைப் பயன்படுத்தி யேர்மன் நாட்டினை கடந்த சில ஆண்டுகளாகவே சின்னா பின்னமாக்கி வருகின்றது. அது பற்றி இந்நாடுகள் வாயே திறக்கவில்லை. இப்போது உக்ரைனை சின்னா பின்னமாக்க தயாராகிக் கொண்டுள்ளனர்.

இப்போது உலகின் பொருளாதார தொழில்நுட்ப படைப்பலச் சமநிலையில் பாரிய மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கையில் ஆண்ட பரம்பரைதான் ஆழ வேண்டும் என்ற திமிருடன் தொடர்ந்தும் இந்நாடுகள் உலகின் அமைதியைக் குலைத்து யுத்தத்தை உற்பத்தி செய்து வருகின்றனர். ரஷ்யாவுக்கு எதிராக இவ்வளவு துள்ளும் பிரித்தானியாவில் தான் ரஷ்யாவின் சட்ட விரோதப் பணத்தின் பெரும்பகுதி குவிந்துகிடக்கின்றது. அதைப் பற்றியும் பிரித்தானியா மௌனமாகவே உள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *