04

04

ஒமிக்ரோனை விட ஆபத்தான புதிய வகை கொரோனா – அச்சத்தில் பிரான்ஸ் மக்கள் !

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா இன்னும் உலக நாடுகளை வாட்டிக்கொண்டிருக்கின்றது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழு வீச்சில் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், உருமாற்றம் அடைந்து வரும் கொரோனாவுடன் மனித இனம் தொடர்டந்து போராடிக்கொண்டிருக்கின்றது.

டெல்டா, ஆல்பா, டெல்டா பிளஸ், ஒமிக்ரோன் ஆகிய திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒமிக்ரோன் பரவல் காரணமாக தற்போது தொற்று பாதிப்பு உலக நாடுகளில் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இதனால், மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்பட்டு வருகின்றன. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரான்சில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது 46 உருமாற்றங்களை கொண்டுள்ளதாகவும், 12 பேர் இதுவரை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மத்திய ஆப்ரிக்க நாடான கேமரூனில் இருந்து வந்த பயணிக்கு முதன்முறையாக இந்த உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என 12 பேருக்கு இந்த வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது ஒமிக்ரோனை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. ஐஎச்யு பி.1.640.2 என  புதிய திரிபு கொரோனாவுக்கு பெயரிட்டுள்ளனர். எனினும், இதுவரை  உலக சுகாதார அமைப்பு  இது குறித்து எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

“அணு ஆயுத போர் மற்றும் ஆயுத போட்டியில் ஈடுபட மாட்டோம்.” – முன்னணி வல்லரசு நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை !

அணு ஆயுதங்களை முன்னணி வல்லரசு நாடுகள் தயாரித்து வருகின்றன. இதன் மூலம் நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் சூழல் உள்ளது என்ற அச்சம் நிலவி வருகிறது.

போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்ற உலகளாவிய ஒப்பந்தங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் அணு ஆயுதங்களை சண்டையில் பயன்படுத்துவதை தடுப்பதற்கான வழிமுறைகளை வலுவாக்க சர்வதேச சமூகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

அணு ஆயுதங்களை தயாரிப்பதில் அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. தற்போதைய சூழலில் அமெரிக்காவுக்கு சீனா மற்றும் ரஷியாவுடன் மோதல் போக்கு இருந்து வருகிறது.

உக்ரைன் நாட்டு எல்லையில் ரஷியா தனது படைகளை குவித்து இருப்பதற்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. உக்ரைனை தாக்கினால் ரஷியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் அணு ஆயுத போர் மற்றும் ஆயுத போட்டியில் ஈடுபட மாட்டோம் என்று அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய 5 நாடுகள் கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன.

இந்த 5 நாடுகளும் முதல் முறையாக இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், அணு ஆயுத போரை தவிர்ப்பதும், ஆயுத போட்டி அபாயங்களை குறைப்பதும் தங்களின் முதன்மையான பொறுப்புகளாக கருதுகிறோம்.

அணு ஆயுத போரால் வெற்றி பெற முடியாது. அது ஒருபோதும் வெற்றி பெறக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அணுசக்தி பயன்பாடு நீண்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் அணு ஆயுதங்கள் தொடர்ந்து இருக்கும் வரை தற்காப்பு நோக்கங்களுக்காக சேவை செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும். போரை தடுக்க வேண்டும். இதுபோன்ற ஆயுதங்கள் மேலும் பரவுவதை தடுக்க வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சீனா துணை வெளியுறவுத்துறை அமைச்சர் மா ஜாக்சூன் கூறும் போது, ‘இந்த கூட்டு அறிக்கை பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கவும், பெரும் சக்திகளுக்கு இடையேயான போட்டியை ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன் மாற்றவும் உதவும்’ என்று தெரிவித்தார்.

ஒரே பாலினத்தம்பதிகள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள இஸ்ரேல் உச்சநீதிமன்றம் அனுமதி !

இஸ்ரேலில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது தொடர்பான சட்டம் கடந்தாண்டு அமுல்படுத்தப்பட்டது. அதில், ஒரே பாலின தம்பதிகள் மற்றும் தனியாக இருக்கும் ஆண்கள், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கவில்லை.
இது தொடர்பாக ஓரின சேர்க்கையாளர் உரிமை ஆர்வலர்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரே பாலின தம்பதியர் மற்றும் தனியாக இருக்கும் ஆண்கள், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி அளித்த தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், இஸ்ரேல் அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. இதன்மூலம் ஒரே பாலின தம்பதியர் மற்றும் தனியாக இருக்கும் ஆண்கள், அந்த நாட்டிற்குள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.
இஸ்ரேலில் எல்.ஜி.பி.டி.க்யூ. போராட்டத்திற்கு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என சுகாதாரத்துறை மந்திரி நிட்சன் ஹாரோவிட்ஸ் தெரிவித்தார். மேலும், வாடகைத்தாய் மூலம் கர்ப்பம் தரிப்பதில் அனைவருக்கும் சமமான அணுகலை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை அமைச்சகம் வெளியிட்டிருப்பதாகவும் அவர் அறிவித்தார்.