“அணு ஆயுத போர் மற்றும் ஆயுத போட்டியில் ஈடுபட மாட்டோம்.” – முன்னணி வல்லரசு நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை !

அணு ஆயுதங்களை முன்னணி வல்லரசு நாடுகள் தயாரித்து வருகின்றன. இதன் மூலம் நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் சூழல் உள்ளது என்ற அச்சம் நிலவி வருகிறது.

போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்ற உலகளாவிய ஒப்பந்தங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் அணு ஆயுதங்களை சண்டையில் பயன்படுத்துவதை தடுப்பதற்கான வழிமுறைகளை வலுவாக்க சர்வதேச சமூகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

அணு ஆயுதங்களை தயாரிப்பதில் அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. தற்போதைய சூழலில் அமெரிக்காவுக்கு சீனா மற்றும் ரஷியாவுடன் மோதல் போக்கு இருந்து வருகிறது.

உக்ரைன் நாட்டு எல்லையில் ரஷியா தனது படைகளை குவித்து இருப்பதற்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. உக்ரைனை தாக்கினால் ரஷியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் அணு ஆயுத போர் மற்றும் ஆயுத போட்டியில் ஈடுபட மாட்டோம் என்று அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய 5 நாடுகள் கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன.

இந்த 5 நாடுகளும் முதல் முறையாக இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், அணு ஆயுத போரை தவிர்ப்பதும், ஆயுத போட்டி அபாயங்களை குறைப்பதும் தங்களின் முதன்மையான பொறுப்புகளாக கருதுகிறோம்.

அணு ஆயுத போரால் வெற்றி பெற முடியாது. அது ஒருபோதும் வெற்றி பெறக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அணுசக்தி பயன்பாடு நீண்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் அணு ஆயுதங்கள் தொடர்ந்து இருக்கும் வரை தற்காப்பு நோக்கங்களுக்காக சேவை செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும். போரை தடுக்க வேண்டும். இதுபோன்ற ஆயுதங்கள் மேலும் பரவுவதை தடுக்க வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சீனா துணை வெளியுறவுத்துறை அமைச்சர் மா ஜாக்சூன் கூறும் போது, ‘இந்த கூட்டு அறிக்கை பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கவும், பெரும் சக்திகளுக்கு இடையேயான போட்டியை ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன் மாற்றவும் உதவும்’ என்று தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *