18

18

அமெரிக்காவில் 5G தொழில்நுட்பம் – விமான நிறுவன அதிகாரிகள் அச்சம் !

அமெரிக்காவில் தொலைபேசி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் 5 G தொழில்நுட்பத்தால் விமான சேவைகள் பாதிக்கும் என்று விமான நிறுவன அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 5 G தொழில்நுட்ப சிக்னல்களால் விமானத்தின் ஆல்டிமீட்டர் போன்ற கருவிகள் செயல்படுவது பாதிக்கப்படும் என்று அவர்கள் ஐயம் தெரிவித்துள்ளனர்.

5 G அலைக்கற்றையின் ஊடுருவலால் கருவிகள் பாதிக்கப்பட்டால் விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் விமான நிறுவன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

செயற்கை நிலவை உருவாக்கி சீனா சாதனை !

மின் செலவை குறைப்பதற்காக செயற்கை சூரியனை சீனா அண்மையில் உருவாக்கி உலக நாடுகளை பிரமிப்பில் ஆழ்த்தியிருந்தது.  இந்த நிலையில் உலகில் முதன் முறையாக  செயற்கை நிலவை சீனா உருவாக்கி சீனா இன்னும் புதிய பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த திட்டத்தின் தலைவரும், சீன சுரங்கம் மற்றும் தொழில்நுட்ப பல்கலை விஞ்ஞானியுமான லி ருய்லின் தெரிவித்த போது,

நிலவைப் போலவே செயற்கை நிலவை உருவாக்கியுள்ளோம். நிலவில் ஈர்ப்பு விசை இல்லை என பலர் நினைக்கின்றனர். அது தவறு.

புவியீர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கு  நிலவில் உள்ளது. இதற்கு அங்கு நிலவும் காந்த அலைகள் தான் காரணம். இத்தகைய குறைந்த ஈர்ப்பு விசையை விமான சோதனையில் தற்காலிகமாக உருவாக்க முடியும்.

ஆனால் செயற்கை நிலவில் இத்தகைய ஈர்ப்பு விசையை நாம் விரும்பும் காலம் வரை நீட்டித்துக் கொள்ளலாம். இதனால் சீனா, பிற நாடுகளைப் போல ஈர்ப்பு விசையற்ற விமானங்களில் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்காமல் ஆய்வுகளை சுலபமாக மேற்கொள்ளலாம். மேலும், 2 அடி விட்டமுள்ள இந்த சிறிய செயற்கை நிலவில், இயற்கை நிலவில் உள்ளது போன்ற எடை குறைந்த மணல், கற்கள் துாசிகள் நிரப்பப்பட்டுள்ளன .

இதில் மேற்கொள்ளப்படும் சில சோதனைகளில், முடிவுகள் சில வினாடிகளில் தெரிந்து விடும். அதேவேளை ஒரு சிலவற்றின் முடிவுகளை அறிய பல நாட்கள் ஆகும் என தெரிவித்துள்ளார்.

 

சீனாவில் பிறப்பு விகிதம் ஐந்தாவது ஆண்டாகவும் சரிவு !

உலகிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்டுள்ள நாடு சீனா. ஆனால், அங்கு சமீபகாலமாக குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதை சரிக்கட்ட சீன தம்பதிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கி, இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அந்நாட்டு அரசு கடந்த கடந்த ஆகஸ்டு மாதம் அறிவித்தது.
மேலும், சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு, பேறுகால விடுமுறை உள்ளிட்ட சலுகைகளை மாகாண அரசுகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், சீனாவில் 2021-ம் ஆண்டு மக்கள் தொகை அறிக்கையை அந்நாட்டின் தேசிய புள்ளிவிவரத் துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:
கடந்த 2021-ல் சீனாவின் மக்கள் தொகை 141 கோடியே 26 லட்சமாக உயர்ந்துள்ளது. இது, 2020ல் 141 கோடியே 20 லட்சமாக இருந்தது. இதன்படி கடந்த ஒரு ஆண்டில் மக்கள் தொகை ஆறு லட்சம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில் குழந்தை பிறப்பு விகிதம் ஒரு கோடியே ஆறு லட்சமாகக் குறைந்துள்ளது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது என தெரிவித்துள்ளது.
சீனாவில் பிறப்பு விகிதம் சரிந்து வருவது பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். வேலை செய்யும் திறன் உள்ளோர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் விகிதாச்சாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.