01

01

மேலும் 202 பில்லியன் ரூபாவை அச்சிடுவதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை !

202 பில்லியன் ரூபாவை அச்சிடுவதற்கு இலங்கை மத்திய வங்கி டிசெம்பர் (29) நடவடிக்கை எடுத்திருந்தது.

கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதியின் பின்னர் பணம் அச்சிடப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 825 பில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கி 48.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான முறிகளை விநியோகிப்பதற்கு டிசெம்பர் 29ஆம் திகதியன்று நடவடிக்கை எடுத்திருந்த போதிலும் அதில் 33.5 பில்லியன் பெறுமதியான முறிகளையே விற்பனை செய்ய முடிந்துள்ளது.

“வட்டி வீதம் மற்றும் ​நாணய மாற்று விகிதத்தை தொடர்ந்தும் கட்டுப்படுத்துவதன் மூலம் நெருக்கடி மேலும் தீவிரமடைந்து வருகிறது” என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி டப்ளியு. ஏ.விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் புதிய வகை கொரோனா பரவல் – அதிர்ச்சியில் உலக நாடுகள் !

கொரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றியது. பின்னர் உலகம் முழுவதும் பரவிய அந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் உருமாற்றம் அடைந்தது.

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நைஜீரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டன. இதற்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று பெயரிடப்பட்டது.

கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்ததால் அதன் பாதிப்பு தொடர்ந்து இருந்து வரும் நிலையில் கடந்த நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமிக்ரோன் வைரஸ் கண்டறியப்பட்டது.

இது மற்ற உருமாறிய கொரோனா வைரஸ்களை விட மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ஒமிக்ரோன் வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி உள்ளது. இதனால் உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு இருக்கிறது.

கொரோனா வைரஸ், ப்ளூவென்சா தொற்று ஆகிய இரண்டு தொற்றுகள் சேர்ந்து ப்ளோரோனா என்ற புதிய வகை தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இது ப்ளூ காய்ச்சல் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று ஒருவருக்கு ஒரே நேரத்தில் ஏற்படுவதை குறிக்கும்.

மத்திய இஸ்ரேலில் உள்ள பெட்டாச் டிக்வாவில் உள்ள பெய்லின்சன் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவருக்கு ப்ளோரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவர் குணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசுடன் ப்ளூவென்சா தொற்று இணைவதால் கூடுதல் பாதிப்பு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் நிமோனியா ஏற்படலாம் என்றும் சில சமயங்களில் மரணமும் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வகை ப்ளூரோனா வைரஸ் தொற்று குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

காணாமல் போன சிறுமிகள் மூவரும் வீடு திரும்பினர் – நாஹினி சீரியல் நடிகையை பார்க்க யாழ்ப்பாணம் சென்றதாக தகவல் !

நாஹினிதொலைக்காட்சி தொடரில் நடிக்கும் நடிகையை பார்ப்பதற்காக மூன்று சிறுமிகள் வீட்டிலிருந்து வெளியேறிய சம்பவம் குறித்து பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பவர்களை காண்பதற்காக சிறுமிகள் வீட்டிலிருந்து வெளியேறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என தெரிவித்துள்ள பொலிஸார் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் மூன்று சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என குறிப்பிட்டுள்ளனர்.

13,11.7 வயது சிறுமிகள் மூவர் ஹிங்குராங்கொடையிலிருந்து நாஹினி நடிகையை பார்ப்பதற்காக வீட்டிலிருந்து வெளியேறி சென்றுள்ளனர். என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் பேருந்து ஒன்றில் ஏறி யாழ்ப்பாணம் சென்றுள்ளனர் யாழ்ப்பாணத்தில் இடம்தெரியாமல் தடுமாறிய அவர்கள் ஒருவாறு நிலைமையை சமாளித்து அன்று மாலை வீடு திரும்பியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பெற்றோர் ஏற்கனவே பொலிஸரிடம் முறைப்பாடு செய்தமையால் பொலிஸார் சிறுமிகளிடம் விசாரணையை மேற்கொண்டவேளை சிறுமிகள் நாஹினி சிவன்யாவை பார்ப்பதற்காக சென்றமை தெரியவந்துள்ளது.
சிறுமிகள் நடந்துகொண்ட விதம் கவலையளிக்கின்றது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமிகள் சிவன்யாவை பார்க்கசெல்லவேண்டும் என தாங்களே திட்டமிட்டுள்ளனர். பேருந்தில் யாழ்ப்பாணம் சென்று யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியா சென்று சிவன்யாவை பார்க்கலாம்- யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் சிறிய தூரம் என அவர்கள் கருதியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமிகள் மூவரும் தொலைக்காட்சி தொடர்களிற்கு அடிமையானவர்கள் – தொலைக்காட்சி தொடர்களில் தோன்றுபவர்களை நேரில் பார்க்கவேண்டும் என்பதே அவர்களது விருப்பம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் தொடர்ச்சியாக தொலைக்காட்சி தொடர்களை பார்வையிட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமிகள் பாதுகாப்பாக திரும்பி வந்துள்ளமை குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள பொலிஸார் தொலைக்காட்சிகளிலும் ஏனைய இலத்திரனியல் சாதனங்களிலும் பிள்ளைகள் என்ன பார்க்கின்றனர் என்பதை பெற்றோர் அவதானிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நான் பிள்ளைகளை குற்றம்சொல்லமாட்டேன் அவர்கள் சிறியவர்கள் அவர்களிற்கு உலகம் எப்படிப்பட்டது என்பது தெரியாது பெற்றோர் அவர்களை அவதானிக்கவேண்டும் என தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரி இவ்வாறான நாடகங்களை குழந்தைகள் பார்ப்பதற்கு பெற்றோர் அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

தீவகத்தின் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களை முன்னேற்றுவதற்காக வடமாகாண ஆளுநர்ஜீவன் தியாகராஜா நடவடிக்கை !

தீவகப் பகுதிகளில் உள்ள பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களை முன்னேற்றுவதற்காக வடமாகாண ஆளுநர்ஜீவன் தியாகராஜா நடவடிக்கை எடுத்துள்ளார்.

தீவகத்தில் செய்யப்பட்ட பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் கட்டட நிர்மாண பொருட்களை விற்பனை செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலணை ஊர்காவற்துறை காரைநகர் புங்குடு தீவு ஆகிய பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் குறித்த பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளது.

எதிர்வரும் 5ஆம் திகதி வேலணை காரைநகர் 6ஆம் திகதி ஊர்காவற்துறை அதனைத் தொடர்ந்து புங்குடுதீவு நயினாதீவிலும் செயல்படுத்தப்படவுள்ளது.

ஆகவே கூட்டுறவுத்துறை மூலம் தீவிரத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளதாக ஜீவன் தியாகராஜா மேலும் தெரிவித்தார்.

“இந்தியாவால் வடக்கு, கிழக்கை ஒருபோதும் இணைக்க முடியாது.” – கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன

இந்தியப் பிரதமருக்கு ஆவணம் அனுப்புவதால் வடக்கு, கிழக்கை ஒருபோதும் இணைக்க முடியாது என்றும் இதற்கு முஸ்லிம் மக்கள் அனுமதி வழங்கமாட்டார்கள் எனவும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தைச் சுட்டிக்காட்டி தமிழ்க் கட்சிகள் பாரத பிரதமருக்கு ஆவணம் ஒன்றினை அனுப்ப திட்டமிட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் பேசிய அவர் ,

வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகமோ அல்லது முஸ்லிம்களின் தாயகமோ அல்ல என குறிப்பிட்ட அமைச்சர், இரு மாகாணங்களும் ஒரே நாட்டுக்குள்ளேயே அமைந்துள்ளன. எனவே, மாகாணங்களைப் பிரித்து எந்த இனத்தவர்களும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் அனைவரும் ஒரே நாட்டின் பிள்ளைகள்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அன்று இணைந்திருந்தமையினாலேயே இனக்கலவரம் வெடிக்க ஆரம்பித்தது. வன்முறைகள் தொடங்கின.

கடந்த காலத்தில் இடம்பெற்ற இந்தத் துன்பியல் நிகழ்வுகளைத் தமிழ்க் கட்சிகள் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இலங்கையில் 2021ல் 15.86 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்ப்பட்டுள்ளது !

கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது 15.86 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

74 தடவைகள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது ​​1,268 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினுடன் 141 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

151 தடவைகளில் 193 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதுடன், 700 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கையிருப்புடன் 193 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், கடந்த வருடம் 158 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் கையிருப்புடன் 98 சந்தேகநபர்களை 73 சந்தர்ப்பங்களில் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், கடந்த ஆண்டு 16 சந்தர்ப்பங்களில் 69 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் 27 சந்தேக நபர்களையும், 8 சந்தர்ப்பங்களில் 88 கிலோவுக்கும் அதிகமான ஹசீஸ் போதைப்பொருளுடன் 9 சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

“எதிர்காலப் புத்தெழுச்சிக்காக நாம் உறுதியுடன் இருக்க வேண்டும்.” – புதுவருட வாழ்த்துசெய்தியில் ஜனாதிபதி !

மலர்ந்துள்ள புத்தாண்டு, எதிர்காலத்தைப் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கை மற்றும் உறுதியுடனும் பார்க்கத் தூண்டியிருக்கிறது. அதனால், 2022 ஆம் ஆண்டை, மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் வரவேற்போம்.” என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ புதுவருட வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மீதும் எமது சமூகத்தின் மீதும் கடந்த ஆண்டு ஏற்படுத்தியிருந்த தாக்கத்தை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். எதிர்காலப் புத்தெழுச்சிக்காக நாம் உறுதியுடன் இருக்க வேண்டுமென்று நான் நினைக்கின்றேன்.

இந்தச் சவால்களைத் தொடர்வதற்கும் வெற்றிகொள்வதற்கும், மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, புதிய ஆண்டு வாய்ப்பளிக்கும் என்று நான் நம்புகிறேன்.

தொற்றுப் பரவல் காரணமாக முடங்கியுள்ள பொருளாதாரம், இயல்பு வாழ்க்கை என்பன இதன் மூலம் பாதுகாக்கப்படும். அதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை, புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் செயற்படுத்த எம்மால் முடியும். தன்னம்பிக்கை, அர்ப்பணிப்பு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் மூலமே அவ்வாறான எழுச்சியை நோக்கிப் பயணிக்க முடியும். வெற்றிகொண்ட சவால்களைப் போன்றே, பெற்றுக்கொண்ட அனுபவங்களும் இப்புத்தாண்டில் நம்மை ஊக்குவிக்கும்.

உலகளாவிய தொற்றுப் பரவலானது, பொதுமக்களின் அபிலாஷைகளை அடைவதற்கான முன்னேற்றத்தை மோசமாகப் பாதிக்கச் செய்துள்ளது. இவ்வாறான நிலைமையிலும், தேசிய பாதுகாப்பு மற்றும் சகவாழ்வு என்பன நிலைநாட்டப்பட்டுள்ளன. பல புதிய சீர்த்திருத்தங்கள் உருவாக்கப்படுகின்றன. செயலற்றிருந்த அரச மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மீண்டும் செயற்படுத்தவும் அவற்றைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுசெல்லவும் தற்போதைய அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இலங்கை மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தப்பட்டிருந்த பாதக நிலைமைகளைச் சீர்செய்வதற்கு அரசாங்கம் என்ற வகையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், உலகளாவிய ரீதியில் பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றன. தொற்றுப் பரவலுக்கு மத்தியில் நீங்கள் தற்போது அனுபவித்துவரும் சுதந்திரம், இந்நாட்டு மக்களின் மகத்தான தியாகத்தின் பிரதிபலனாகும் என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுக்கொள்கிறேன்.

மக்களைப் பாதிப்படையச் செய்யும் அடிப்படையற்ற அரசியல் போராட்டங்கள், நாட்டை நேசிக்கின்ற பெரும்பான்மையான மக்களால் நிராகரிக்கப்பட்டு உள்ளமையானது, அரசாங்கத்தின் மீது அம்மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை உறுதி செய்துள்ளது.
கடந்த காலம் முதல் தொடர்ந்து பேணப்பட்டு வருகின்ற இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொண்டே புதிய வெளிநாட்டுத் தொடர்புகளையும் கட்டியெழுப்பக் கிடைத்துள்ளமையானது, எமக்குக் கிடைத்த தனித்துவமான முதலீடாகவே நான் பார்க்கிறேன்.

மலர்ந்துள்ள புத்தாண்டை, மக்களுக்கான “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தை அடைந்துகொள்வதற்காக அர்ப்பணித்து, மாற்றத்துடன்கூடிய புத்தாண்டாக மாற்ற அணிதிரளுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்.

மலர்ந்துள்ள புத்தாண்டு, உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியமானதும் தைரியமிக்கதுமான புத்தாண்டாக அமைய வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.

“சம்பள பிரச்சினையை தீர்க்க கூட்டு ஒப்பந்த முறைமை அவசியமாகும்.” – ஜீவன் தொண்டமான்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன பிரச்சினையைத் தீர்ப்பதற்குக் கூட்டு ஒப்பந்த முறைமை அவசியமாகும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நோர்வூட் பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிலரின் அரசியல் நோக்கம் காரணமாகவே பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்ற வேண்டும் எனக் கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தேசத்தின் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் – இந்த வருடம் ஆரோக்கியமானதாக அமையட்டும் !

மலர்ந்துள்ள இந்த 2022 புதிய ஆண்டானது அனைவருக்கும் ஆரோக்கியமான ஆண்டாகவும் – விட்டுக்கொடுப்புடனும் – சக மனிதர்களை புரிந்து கொள்ளும் மனோநிலையை இன்னும் வளர்க்க கூடிய ஆண்டாகவும் – மனிதநேயமும் – ஜீவகாருண்யமும் மேலோங்கி உங்களுடைய கனவுகள் – எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் நிறைவேறக்கூடிய ஆண்டாக அமைய தேசததின் சார்பாக அனைத்து வாசகர்களுக்கும் புதிய ஆண்டு வாழ்கத்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

கடந்த வருடம் எங்களுடைய தேசத்துக்கு நீங்கள் வழங்கிய அன்பும் ஆதரவும் எங்களை இன்னும் சிறப்பாக இயங்க செய்திருந்தது. இந்த வருடத்திலும் அதே ஆதரவு எதிர்பார்ப்புடன் வருடத்தை ஆரம்பிக்கிறது தேசம்.. !