12

12

வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த அரசியல் கைதிகள் ஐவர் விடுதலை !

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படாமல் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த அரசியல் கைதிகள் ஐவர் நேற்று வீடு திரும்பியிருக்கின்றனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது.

2019 ஆம் ஆண்டு பளை வைத்தியசாலை வைத்தியர் சிவரூபனுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் அனைவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு எதிராக வழக்குகள் எவையும் தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை.

குறித்த நபர்கள் குறித்து உறவினர்களால் மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட்ட பல்வேறு தரப்புக்களிடமும் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று அவர்கள் ஐவரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஒப்படைக்கப்பட்டவர்களை பொறுப்பேற்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் அவர்களின் வீடுகளில் ஒப்படைத்திருப்பதாக தெரியவருகிறது.

மூன்றாம் வருட மாணவர்களின் வீட்டிற்குள் புகுந்த நான்காம் வருட மாணவர் தாக்குதல் – யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் தொடரும் வன்முறைக்கலாச்சாரம் !

யாழ்ப்பாணம் விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கி இருந்து கல்வி கற்று வரும் விஞ்ஞான பீடம் மூன்றாம் வருடத்தை சேர்ந்த மாணவர்களின் வீட்டிற்குள் புகுந்த நான்காம் வருட மாணவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த மூன்றாம் வருடத்தினை சேர்ந்த இரு மாணவர்கள் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் நான்காம் வருட மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை, கடந்த ஒருமாத கால பகுதிக்குள் விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மூன்றாவது மோதல் சம்பவம் இதுவாகும். சில வாரங்களுக்கு முன்னர் பகிடிவதை கட்டளையை மீறியதாக முதலாம் வருட மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்ட சிரேஷ்ட மாணவன் ஒருவர் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொலைபேசி காதலனை நம்பி சென்ற 18 வயது யுவதி மீது கூட்டு பாலியல் வன்புணர்வு – யாழில் சம்பவம் !

தவறுதலான தொலைபேசி அழைப்பின்  ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற 18 வயது யுவதியை நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் யுவதியை வீதியில் இறக்கி விட்டு தலைமறைவாகியுள்ளனர்.

நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும்  பாதிக்கப்பட்ட யுவதி நேற்றைய தினம்(செவ்வாய்க்கிழமை) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

“தொலைபேசிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந்திருந்த தவறுதலான தொலைபேசி அழைப்பின் ஊடாக அறிமுகமான இளைஞனுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காத நிலையில் காதலித்து வந்துள்ளனர். அந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த இளைஞன், யுவதியை திருமணம் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும், வீட்டை விட்டு வெளியேறி தன்னுடன் வருமாறும், அதன் போது வீட்டில் இருந்து நகைகள் மற்றும் பணம் என்பவற்றை எடுத்து வருமாறும் கூறியுள்ளார்.

இளைஞனின் ஆசை வார்த்தையை நம்பிய குறித்த யுவதி, தன்னுடைய சங்கிலி உள்ளிட்ட சொற்ப நகைகளையும், 40 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் எடுத்துக்கொண்டு நேற்று காலை இளைஞன் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு நின்றிருந்த குறித்த இளைஞன் அப்பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு, ஐஸ்கிறீம் கடை ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவரும் சிற்றுண்டி சாப்பிட்டு, ஐஸ் கிறீம் குடித்த பின்னர் காலை 10 மணியளவில் இளைஞன், அந்த யுவதியை தன்னுடைய தாய்க்கு அறிமுகம் செய்து வைப்பதாக, வடமராட்சி திக்கம் பகுதிக்கு அழைத்து  சென்றுள்ளார்.

அங்கு ஆள் நடமாற்றம் அற்ற பகுதி ஒன்றுக்கு யுவதியை அழைத்து சென்று ஆசை வார்த்தைகளை கூறி, உறவு கொண்டுள்ளார். பின்னர், தண்ணீர் வாங்கி வருவதாக கூறி அவ்விடத்தில் யுவதியை தனியே விட்டு விட்டு சென்றுள்ளார். இளைஞன் சென்று சில நிமிடங்களில் மூன்று இளைஞர்கள் அவ்விடத்திற்கு சென்று யுவதியை பலாத்காரமாக வன்புணர்ந்து உள்ளனர்.

பின்னர் யுவதியை அழைத்து சென்ற இளைஞனும் அவ்விடத்திற்கு வந்து நான்கு பேருமாக யுவதியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர். பின்னர் யுவதியிடம் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம், நகைகள், தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்த பின்னர், யுவதியை அழைத்து வந்த இளைஞன் யுவதியை மீட்டும் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று யுவதியின் கிராமத்திற்கு அருகில் வீதியில் இறக்கி விட்டு தலைமறைவாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் யுவதியினால் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், சம்பவம் இடம்பெற்ற பகுதி பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி என்பதனால், முறைப்பாட்டை நெல்லியடி பொலிஸார் பருத்தித்துறை பொலிஸாரிடம் பாரப்படுத்தியுள்ளனர்.

பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் துன்னாலை பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்களை அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்க முயன்ற போது நான்கு பேரும் நேற்றைய தினத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளமை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

அதனால் குறித்த நான்கு இளைஞர்கள் மீதும் பொலிஸாருக்கு வலுவான சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்னர்.

இதேவேளை, கடந்த வருடம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த யுவதியை ஒருவரை முகநூல் ஊடாக அறிமுகமான இளைஞன் அந்த யுவதியை காதலிப்பதாக கூறி முள்ளி பகுதிக்கு அழைத்து சில இளைஞர்கள் இணைந்து கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் பிரபல வைத்தியசாலையின் கவனயீனத்தால் சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண் உயிரிழப்பு !

யாழிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.

புற்றுநோய் காரணமாக கற்பப்பையை அகற்றும் சத்திரச்சிகிச்சை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவரது உடலில் துணி ஒன்று வைத்துத் தைக்கப்பட்டதனால் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அதுவே உயிரிழப்புக் காரணம் என சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை யாக்கருவைச் சேர்ந்த மனோன்மணி குலவீரசிங்கம் (வயது-60) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

“பெண்ணுக்கு கற்பப்பையில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக அதனை அகற்றுவதற்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. அதனால் யாழிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த டிசெம்பர் 10ஆம் திகதி பெண்நோயியல் சத்திரசிகிச்சை வல்லுநர் ஒருவரினால் பெண்ணின் கற்ப்பப்பை அகற்றும் அறுவைச் சிகிச்சை இடம்பெற்றது.

இந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்றிரவு 10 மணியளவில் உயிரிழந்துள்ளார். மந்திகை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் பெண்ணின் சடலம் இன்று உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

சத்திரசிகிச்சையின் போது பெண்ணின் உடலுக்குள் 50 சென்ரிமீற்றர் நீளம் 10 சென்ரிமீற்றர் அகலமுள்ள துணி ஒன்று வைத்து தையலிடப்பட்டமை கண்டறியப்பட்டது. அவரது உயிரிழப்புக்கு அந்த துணியினால் ஏற்பட்ட கிருமித்தொற்றே காரணம் என சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வடக்கு மீதான மாற்றாந்தாய் கவனிப்பை இல்லாது செய்வோம்.” – சஜித் வாக்குறுதி !

“மக்களை மையப்படுத்திய அபிவிருத்தி, சமூகங்களுக்கு இடையிலான நட்புறவு, சமத்துவம் என்பனவற்றின் மூலம் நாம் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம்.” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – கரவெட்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் பேசிய அவர்,

வட மாகாணத்திற்கு தெளிவான – துரித அபிவிருத்தித் திட்டம் அவசியமாகும். நீண்டகாலமாக இந்த மக்களின் வாக்குகளைப் பெற்று, இந்தப் பிரதேச மக்களுக்கு கனவு உலகத்தைக் காண்பித்த தலைவர்கள், தங்களின் கடமைகளையும், பொறுப்புகளையும் வட மாகாணத்திற்கு நிறைவேற்றவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில், நாம் நிச்சயமாக வடக்கு மாகாணத்தில் துரித அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுத்து, நாடுமுழுவதும் ஆரம்பிக்கும் கைத்தொழில் புரட்சியின் பிரதிபலனை வடக்கிற்கும் பெற்றுக்கொடுத்து, கைத்தொழிற் பேட்டைகளின் மூலம், வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தி, வட மாகாணத்திற்கு பாரிய சேவை ஆற்றுவதற்கு திட்டமுள்ளதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில், இந்த அரசாங்கம், நாட்டை மிகவும் கீழ் நிலைக்கு வீழ்த்தியுள்ளது. இரண்டு ஆண்டுகால பலவீனமான ஆட்சியினால், பொருளாதாரத்தையும், சமூக நிலையையும் வீழ்ச்சியடையச் செய்துள்ளது. நன்றாக இருந்த இந்த நாட்டு மக்களை ஏழைகளாக்கியமைதான் இந்த அரசாங்கம் ஆற்றிய ஒரே விடயமாகும்.

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்ப நாம் தயார். மக்களை மையப்படுத்திய அபிவிருத்தி, சமூகங்களுக்கு இடையிலான நட்புறவு, சமத்துவம் என்பனவற்றின் மூலம் நாம் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம்.

நாட்டுக்கு இருக்கும் மிகப்பெரிய பலம் ஒற்றுமையாகும். நாம் அனைவரும், எந்த இனம், எந்த குலம், எந்த சாதி, எந்தப் பின்னணியாக இருந்தாலும், நாடு என்ற அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும்.

ஐக்கியமே நாட்டின் வெற்றியாகும். எனவே, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுங்கள், கட்டம் கட்டமாக தாய்நாட்டைக் கட்டியெழுப்புவோம்.

தாய்நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தில், வட மாகாணத்திற்கு இதுவரையில் கிடைத்த மாற்றாந்தாய் கவனிப்பை நீக்கி, இந்த மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அதியுச்ச அபிவிருத்தி முன்னுரிமையை, எதிர்கால ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தாம் வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் கருப்பின பெண் ஒருவரின் உருவம் பொறித்த நாணயம் – யார் அந்தப் பெண் ..?

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் மாயா ஏஞ்சலோ. கருப்பினத்தை சேர்ந்த இவர் கவிஞர், கலைஞர், சமூக ஆர்வலர் மற்றும் ஆசிரியர் என பன்முகங்களை கொண்டவர். இவர் கடந்த 1969-ம் ஆண்டு “கூண்டில் அடைக்கப்பட்ட பறவை ஏன் பாடுகிறது என்பது எனக்குத் தெரியும்” என்கிற பெயரில் தனது சுயசரிதையை வெளியிட்டார். அந்த புத்தகத்தில் அவர் சிறுவயதில் இருந்து தன்மீது காட்டப்பட்ட இனவெறி, தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவை குறித்தும் அவற்றில் இருந்து மீண்டு வந்து எழுத்துலகில் சாதனை பெண்ணாக உருவெடுத்தது குறித்தும் விரிவாக எழுதியிருந்தார்.

நாணயத்தில் அச்சிடப்பட்ட மாயா ஏஞ்சலோவின் உருவம்இந்த புத்தகத்தின் மூலம் மாயா ஏஞ்சலோ சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற நபராக மாறினார். இவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு அமெரிக்காவின் உயரிய மக்கள் விருதான ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது. இவர் கடந்த 2014-ம் ஆண்டு தனது 86 வயதில் காலமானார். இந்த நிலையில் மாயா ஏஞ்சலோ நினைவாக அவரது உருவம் பொறித்த ¼ டாலர் நாணயத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் கருப்பின பெண் ஒருவரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்காவின் முதல் பெண் நிதித்துறை செயலாளரான ஜெனட் லெயனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெண் எழுத்து: வலியை வென்ற வலிமை காளிங்கராயன் உலகப் | வேலாயுதம் ஆவுடையப்பன்  எண்ணம்

 

இதுகுறித்து அவர் கூறுகையில் “ஒவ்வொரு முறையும் நமது நாணயத்தை மறுவடிவமைப்பு செய்யும் போது, நமது நாட்டை பற்றி நாம் எதை மதிக்கிறோம், ஒரு சமூகமாக நாம் எப்படி முன்னேறி வருகிறோம் என்பதை பற்றி ஏதாவது சொல்ல வாய்ப்பு உள்ளது” என கூறினார்.

“எங்களால் வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியும்.” – அஜித் நிவாட் கப்ரால்

எங்களால் வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் அடுத்த ஒன்பது மாதங்களுக்கான பொருளாதார வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், இந்த ஆண்டில் 5.5 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதாக சிலர் தெரிவிக்கும் கருத்துக்களில் உண்மை இல்லை என்றும்அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த எட்டு வாரங்களில் ஐரோப்பா ஆட்டம் காணும் – உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை !

அடுத்துவரும் ஆறு முதல் எட்டு வாரங்களில், ஐரோப்பாவில் அரைவாசிப்பேருக்கு ஒமைக்ரொன் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிராந்தியம் முழுவதும் மேற்கிலிருந்து கிழக்காக, அலைபோன்று ஒமைக்ரொன் பரவல் இடம்பெறுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் வைத்தியர் ஹென்ஸ் க்ளுஜ் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில், இந்த ஆண்டின் முதல் வாரத்தில் ஏழு மில்லியன் புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்தப் புதிய கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டு வார காலப்பகுதியில், தொற்றுப் பரவல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையை மீட்க எங்களால் முடியும்.” – வெளிநாடுகளுடனும் தொடர்புகளுள்ளதாக கூட்டமைப்பு அறிவிப்பு !

“முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதியாகும் எண்ணத்தில் அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டே அரசாங்கத்தினை விமர்சிக்கின்றார்.” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – களுதாவளை அன்பின் வீடு மற்றும் குறித்த இல்லத்தில் உள்ள விசேட தேவையுடைய குழந்தைகளுக்கு உதவி திட்டங்களை வழங்கி வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“உண்மையிலேயே இந்த நாட்டில் விசேட தேவையுடையவர்கள் மாத்திரமல்ல இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் எதிர்வரும் காலங்களில் நாம் உலர் உணவுப்பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டிய கட்டாயம் வரும் என்பது நாட்டிலுள்ள செய்திகளை பார்க்கும் போது அறியக்கூடியதாக இருக்கின்றது.

இந்த நாட்டிலே இடம்பெறும் அனைத்து விடயங்களையும் பார்க்கின்ற போது, மிகவும் ஆபத்தான ஒரு காலம் எதிர்காலத்தில் வரும் என்பதை அறியக்கூடியதாக இருகின்றது. இலங்கைக்கு சொந்தமான தங்கத்தினை விற்பனை செய்துள்ளனர். அதே நேரத்தில் களவுகளை எடுத்ததாக கூறி, சில நிறுவனங்களின் முதலாளிகளை கைது செய்கின்றனர்.

மின்சார சபை கூறுகின்றது நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்படும் விதம் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. எனினும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மின்சாரம் துண்டிக்கப்படாது என தெரிவிக்கின்றார். இவர்களின் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக மக்களே கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதியாகும் எண்ணத்தில் அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டே அரசாங்கத்தினை விமர்சிக்கின்றார்.

எனினும் அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் இன்னும் அமைச்சுப்பதவிகளை வகித்துக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவாவே செயற்படுகின்றனர். அவர்கள் அரசாங்கத்தினை விட்டு வெளியே வந்து அரசாங்கத்தினை விமர்சித்தால் நாங்களும் அவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியும்.

நாட்டில் ஏற்படப்போகும் பஞ்சத்தில் இருந்து நாட்டை எவ்வாறு மீட்கலாம், மக்களை எவ்வாறு மீட்கலாம் என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சில திட்டங்கள் உள்ளன.

அதுகுறித்து நாங்கள் பலதடவைகள் குறிப்பிட்டிருகின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள நாம் பல நாடுகளுடன் தொடர்புடையவர்கள். அந்த நாடுகளின் உதவிகளை இலங்கை அரசாங்கத்திற்கு எங்களால் எடுத்துக் கொடுக்க முடியும். எங்களுடைய பிரச்சனைகளை அரசாங்கம் தீர்க்குமாக இருந்தால். “ எனக் குறிப்பிட்டுள்ளார்