13ஆவது திருத்தச் சட்டத்தில் இரண்டு கட்டங்களாக துரித திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என அரசாங்கம் அறிவித்துள்ளது. 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்களுக்கு மத்தியில் எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், நாட்டில் நிலவும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக கவனம் செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர். ஜி.எல். பீரிஸ், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நீதியமைச்சர் அலி சப்ரி ஆகியோர் நேற்று (சனிக்கிழமை) ‘நீதிக்கான அணுகல்’ நடமாடும் சேவைத் திட்டத்தின் கீழ் உரையாற்றியதோடு யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் குழுவையும் சந்தித்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நட்டஈடு வழங்குவதும் அவர்களுக்கு காணிகளை வழங்குவதும் இந்த சந்திப்பின் நோக்கமாகும்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, 13ஆவது திருத்தச் சட்டத்தில் இரண்டு கட்டங்களாக துரித திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர். ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
அத்தோடு, அதற்கேற்ப குழுவொன்று நியமிக்கப்பட்டு 1979ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் கொண்டுவரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.