“ஒவ்வொருவரும் தலைவராக வேண்டும் என்பதற்காக மக்களை கூறுபோடுகின்றனர்.” – த.கலையரசன்

“அரசியல் ரீதியாக வந்தவர்கள் ஒவ்வொருவரும் தலைவர்களாக வேண்டும் என்பதற்காக மக்களைக் கூறுபோடுகின்ற செயற்பாடுகளே தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது..” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்தியப் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதம் மற்றும் அதற்கொதிரான பிரச்சாரங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கைச்சாத்திடப்பட்ட 13வது திருத்தச்சட்டம் தொடர்பிலான பல விடயங்கள் தற்போது பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பொருத்தமட்டில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கான நிலையான தீர்வினை நோக்கிய பயணத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த அடிப்படையில் நாங்கள் இந்த நாட்டில் சமத்துவான சமஸ்டி அடிப்படையிலான தீர்வினை வலியுறுத்தி வருகின்றோம்.

1987ம் ஆண்டு இலங்கை –  இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பிற்பாடு இந்தப் 13வது திருத்தச் சட்டம் கைச்சாத்திடப்பட்டது. அந்த வேளையில் வடகிழக்கு இணைந்ததான மாகாணசபை இருந்ததை நாம் அனைவரும் அறிவோம். அந்த மாகாணசபை நீண்ட காலம் இயங்க முடியாமல் கலைக்கப்பட்ட வரலாறும் உண்டு. அதன் பின் இணைந்த வடகிழக்கு 2008ம் ஆண்டு வடக்கு வேறு கிழக்கு வோறாகப் பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடைபெற்றது.

இந்த நாட்டில் நீண்டகாலமாக நிலவும் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்பதில் ஆட்சி செய்த எந்த அரசாங்கமும் முழு மனதுடன் செயற்படவில்லை என்பதைத்தான் இந்த நாட்டில் இருக்கும் அரசியல் சூழல் இன்றுவரைக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றது.

நாங்கள் இந்த நாட்டில் சமாதானத்துடன் வாழ விரும்புகின்றோம். ஏனைய சமூகங்களைப் போன்று சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்ற அடிப்படையில் தான் இன்றுவரைக்கும் நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆனால், அண்மைக்கால செயற்பாடுகள் தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்பதனையே காட்டி நிற்கின்றது. இன்று நேற்றல்ல நீண்டகாலமாக எமக்குள் இருக்கின்ற பிரச்சனை ஒற்றுமையின்மையே.

இருக்கின்ற மாகாணசபை அதிகாரங்களைத் தூக்கி எறிந்து விட்டு எமது மக்களுக்கான தீர்வினைப் பெறமுடியாது. இந்திய வல்லரசினூடாக ஏற்படுத்தப்பட்ட இந்த அதிகாரத்தை வைத்தே நாங்கள் எங்களுடைய தீர்வை நோக்கிய பயணத்தை முன்நகர்த்திக் கொண்டு செல்ல வேண்டும்.

இணைந்த வடகிழக்கு பிரிக்கப்பட்டு இன்று கிழக்கு மாகாணம் நாளுக்கு நாள் பறிபோய்க்கொண்டிருக்கின்றது. எங்களுடைய அதிகாரங்கள் இழக்கச் செய்யப்பட்டு கிழக்கு மாகாணத்தின் எமது இனப்பரம்பல் குறைக்கப்படுகின்ற ஒரு சூழலில் எங்களுடைய இனத்தின் ஒற்றுமையையும் இருப்பையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழர்களுக்கும் இருக்கின்றது.

ஆனால் இன்று ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற 13வது திருத்தச் சட்டம் என்கின்ற விடயத்திலே தேசியத்தோடு பயணிக்கின்ற தமிழ் கட்சிகள் ஒப்பமிட்டு இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. எமது தலைவர்கள் ஒரு உறுதியான நிலையான கட்டமைப்போடு இருந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் இந்தப் 13வது திருத்தச் சட்டம் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் செயற்படுகின்றவர்கள் அல்ல. இந்த 13வது திருத்தச்சட்டம் உருவாக்கப்பட்ட போது அதிகாரஙகள் இல்லை என்கின்ற விடயத்தை விலியுறுத்தியவர்கள் எமது தலைவர்களே, இதனை ஏற்றக் கொள்ள வேண்டும். ஆனாலும் இதனை முழுமையாக இல்லாமல் செய்து விட்டு எமது தீர்வு தொடர்பிலான எமது எதிர்கால அரசியலை முன்னெடுக்க முடியாது.

எனவே இதனை அடிப்படையில் வைத்துக் கொண்டு எமக்கான அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையில் சமஷ்டியை நோக்கிய பயணத்தில் சென்று கொண்டிருக்கின்றோம். இதனைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் இதனை விமர்சனம் செய்துகொண்டிருக்கின்றார்கள். மக்கள் மத்தியில் போலிப் பிரச்சாரங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழர்களுக்கு எந்தத் தீர்வையும் வழங்கக் கூடாது என்பதில் இந்த அரசாங்கம் முன்முரமாகக் கடும் தீவிரவாதப் போக்கோடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அண்மைக் காலங்களில் எங்களின் அதிகமான தொண்மையான இடங்கள் சுவீகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நாங்கள் எமது சமூகத்தின் இருப்பு, ஒற்றமை என்ற விடயத்தில் இருந்து மாற முடியாத சூழ்நிலையில் இருக்கின்றோம்.

அதுமாத்திரமல்லாமல் இந்த நாட்டின் தலைவர் கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பிற்பாடு தமிழர் தரப்புடன் பல பேச்சுக்கள் நடாத்தப்பட வேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்திருந்தாலும் இற்றைவரைக்கும் ஆக்கபூர்வமான நடவக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

எனவே இவ்வாறான விடயங்களையெல்லாம் நாங்கள் கருத்திற் கொண்டு எமது சமூகத்தின் எதிர்கால இருப்பு தொடர்பிலும் நாங்கள் முன்நின்று உழைக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். குறிப்பாக கிழக்கு மாகாணம் மிகவும் மோசமாக பொருளாதார ரீதியாக ஏனைய சமூகங்களின் ஆக்கரமிப்புக்குள் உட்பட்ட பிரதேசமாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஒற்றுமை என்று பேசி அரசியல் ரீதியாக வந்தவர்கள் ஒவ்வொருவரும் தலைவர்களாக வேண்டும் என்பதற்காக மக்களைக் கூறுபோடுகின்ற செயற்பாடுகளே தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனை எமது மக்கள் தான் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்காக, இனத்திற்காக, எமது இருப்புக்காகப் போராடுகின்ற கட்சி எது, அதனை எவ்வாறு நாங்கள் வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விடயங்களை ஆராய்ந்து எதிர்காலத்தில் அந்த விடயத்தில் எமது மக்கள் உறுதியாக இருந்து செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *