பரீட்சை மீள் மதிப்பீட்டில் பெறுபேறு C யில் இருந்து A யாக மாறிய உயர்தர பெறுபேறு – மொத்தமாக 3000க்கும் அதிகமான மாணவர்களின் பெறுபேறுகளில் மாற்றம் !

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் அண்மையில் வௌியாகியிருந்தன. இப்பெறுபேறின் அடிப்படையில் கண்டி மாணவன் ஒருவனின் பெறுபேறு C யில் இருந்து A யாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கு கணித பாடத்தில் தோற்றிய கண்டி தர்மராஜா கல்லூரியின் மாணவன் ருச்சிர நிசங்க அபேவர்தன அந்த பாடத்தில் C சித்தி பெற்றிருந்தார். அத்துடன் வேதியியல் மற்றும் இயற்பியலில் பாடங்களில் அவர் A தேர்ச்சி பெற்றிருந்தார்.

அதனடிப்படையில், குறித்த மாணவனின் Z மதிப்பெண் 2.0084 ஆகவும், மாவட்ட மதிப்பீடு 68 ஆகவும், நாட்டு மதிப்பீடு 966 ஆகவும் இருந்தது.

இந்நிலையில் மீள் மதிப்பீட்டின் ஊடாக அவரது கணிதப்பாட பெறுபேறு C யில் இருந்து A ஆக மாறியதை அடுத்து குறித்த மாணவனின் Z மதிப்பெண் 2.5538 ஆகவும், மாவட்ட மதிப்பீடு 12 ஆகவும், நாட்டு மதிப்பீடு 124 ஆகவும் மாறியுள்ளது.

மீள் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்பட்ட 48,000 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் 3,329 பெறுபேறுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையை பொறுத்தவரை மாணவர்களின் எதிர்கால கனவுகளுக்கான – தொழில் உலகுக்கான கதவுகளை திறக்கும் திறவுகோலாக உயர்தர பரீட்சையே காணப்படுகின்றது. எனினும் இவ்வாறான பெறுபேறுகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள குழறுபடிகள் ஏற்பட்டு 2S ,  W என எதிர்காலத்தை இழந்த எத்தனை மாணவர்கள் இருந்திருப்பார்கள் என இந்த மாற்றம் சிந்திக்க வைக்கிறது. இந்த மாணவன் மீள் திருத்துவதற்கு விண்ணப்பித்ததால் கிடைத்துள்ளது. ஆனால் விண்ணப்பிக்காமல் இது தான் எனது நிலை என எண்ணி எதிர்காலத்தை தொலைத்த மாணவர்களின் நிலையை பற்றியும் இந்தப்புள்ளியில் இருந்து சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. 3,329 பெறுபேறுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள தகவல் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் மேலும் அச்சத்தை மாணவர்களிடையே தோற்றுவித்துள்ளது.

 

இது போன்றதான பிழைகள் இனிமேல் ஏற்படாது பரீட்சைகள் திணைக்களம் முறையாக செயற்படவேண்டும். குறித்த பிழைகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு எதிராக சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இலங்கையில் கிடைக்கின்ற இலவசக்கல்வியின் தரத்தை கல்வி அமைச்சு உறுதிப்படுத்த வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *